ஔவை – 85
==========
என்றென்றும் அன்புடன் மலேசியாவிலிருந்து..
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
…..திரு.கு.வே.ச.நல்ல குமார், மலேசியா
முனைவர் ஒளவை நடராசன் அவர்கள் ஒரு மிகப்பெரிய அறிவுச்சோலையாவார். 25ஆண்டுகளுக்கு முன்னர், அவரின் புதல்வர் முனைவர்.அருள் அவர்களின் வாயிலாக மாமேதை ஔவையின் அறிமுகம் எனக்குக் கிட்டியதற்கு நான் வரம் பெற்றிருக்க வேண்டும். அவருடன் கலந்துரையாடி அவரின் கருத்துக்களை அறிந்துகொள்வதற்கான மிகப்பெரிய வாய்ப்பையும் நான் பெற்றேன். அவர்தம் ஆழ்ந்த நீரோடைப் போன்ற செழுமிய சிந்தனைகளும், தெளிவான நுணுக்கமான உரையாடல்கள் நம்மை முக்காலங்களையும் உணரச் செய்யும். அவரின் கல்விப் பின்னணியும் தமிழிலக்கியம் மற்றும் நேர்த்தியான ஆங்கிலத் திறமும் ஒரு பொருண்மையின் பல கருத்துகளை பல வடிவங்களில் நம்மை சிந்திக்கச் செய்தன. எனவே தான், அவரின் சிந்தனைகளும் உரைகளும் எப்பொழும் மிகத் தெளிவாகவும் இக்காலத்திற்கும் பொருத்தமாக அமைந்திருக்கிறது.
1990ஆம் ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில், தமிழ்நாட்டின் தொழிற்துறை மேம்பாட்டை அதிகரிப்பதற்கு துணை புரியும் உட்கட்டமைப்பு முறைகளை கொண்டு வருவதில் முனைவர் அருளும், நானும் செம்மாந்த முனைப்புடன் ஈடுபட்டிருந்தோம். நிருவாகம் மற்றும் கொள்கை சார்ந்த சில இடர்ப்பாடுகளைக் கடக்க வேண்டிய சிக்கலான தருணங்களில், முனைவர் ஒளவை ஐயா அவர்கள் நாங்கள் வெற்றிக்கனியை பறிப்பதற்கான பாதையைக் காட்டும் ஒளி விளக்காகவும் எங்களுக்கு ஊக்கமளிக்கும் ஆற்றல் சிகரமாகத் திகழ்ந்தார்.
ஔவை அவர்களின் இல்லத்திற்குச் செல்வதற்கான பேறும் எனக்குக் கிட்டியது. முனைவர் அருளின் தாயார் மருத்துவர் தாரா நடராசன் அவர்களின் கனிவான விருந்தோம்பல் பண்பினால் நான் நெகிழ்ந்து போனேன். அன்பு மற்றும் பரிவின் முழு உருவம் அவர்கள் என எவ்வித ஐயமுமின்றி பறைசாற்றுவேன். அனைத்திற்கும் மேலாக, தெளிவான சிந்தனையும் கூரிய நோக்கமும் உடைய ஒப்பில்லா மாதரசியார் தாரா அவர்களின் வாழ்க்கையில் பெருமைக்குரிய மூன்று புதல்வர்களை அவர் ஈன்றெடுத்தார். தன் குடும்பத்தையும் தான் மேற்கொள்ளும் மருத்துவப் பணியையும் ஒன்றை ஒன்று பாதிக்காத வகையில் சிறப்பாக நடத்திச் சென்ற அவர், மதுரை மருத்துவ கல்லூரியின் தலைசிறந்த தலைவர் எனும் உச்சத்தை அடைந்ததோடு மட்டுமல்லாமல் தன் இரு புதல்வர்களை பன்னாட்டு திறன் வாய்ந்த வெற்றிகரமான மருத்துவர்களாகவும் உருவாக்கினார். அவ்வண்ணமே, தன் தாத்தா மற்றும் தந்தையின் வெற்றிச் சுவடுகளை பின் தொடர்வதற்கு முனைவர் அருளுக்கும் பேறு ஊக்கமளித்தார். முனைவர் அருள், தற்காலத்திற்கு ஏற்றவாறான நடை உடையதொரு தமிழறிஞராக திகழ்வதில் வியப்பேதுமில்லை. ஒளவை குடும்பம் கல்வி மற்றும் நுண்ணறிவுசார் வளத்தின் ஆற்றல் வள இல்லமாகும்.
மறைந்த என் தந்தை திரு. சங்கபூஷன் கே.வி.சதாசிவம் அவர்களின் முத்து விழாவில் கலந்து கொள்வதற்காக சிவகங்கை மாவட்டத்தின் சுண்டக்காட்டிலுள்ள என் மூதாதையர் இல்லமான குமார விலாசத்திற்கு டாக்டர்.ஒளவை நடராசன் மற்றும் மருத்துவர் தாரா நடராசன் இருவரும் வருகை புரிந்ததையும் பின்னொரு நாளில் மலேசியாவிற்கும் அவர்கள் வருகை புரிந்த்யும் நான் இங்கு நினைவுகூறுகிறேன். அவர்கள் இருவரும் பொழிந்த எங்கள் குடும்பத்தினர் அனைவரின் நெஞ்சிலும் நீங்காத நினைவுகளாக இடம்பெற்றுள்ளன. இதனால் எங்களிடயே நிலவிய இணக்கமான உறவுமுறை மேலும் வலுவடைந்தது. மறைந்த என் தந்தை மற்றும் மலேசிய இந்திய காங்கிரசின் முன்னாள் தலைவர் மற்றும் நல்வாழ்வுத் அமைச்சருமான மற்றும் சிறப்புமிக்க ஆர்வர்டு பல்கலைக்கழகத்தின் ஒப்பற்ற மாமணியும் புகழ்மிக்க மருத்துவத் திலகமாக மிளிர்ந்து கொண்டிருக்கும் என் அண்ணன் டத்தோ டாக்டர்.எஸ்.சுப்பிரமணியம் (மேனாள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மலேசியா
துணைத்தலைவர் உலக நல்வாழ்வு நிறுவனம்
மேலை பசிபிக் உலக நல்வாழ்வு மண்டலத் தலைவர்
அமெரிக்க அதிபர் ஒபாமா நன்னறிப்பிரிவு எபோலா நோய்த்தடுப்பு குழுவின் சீர்மிகு உறுப்பினர்
நுண்மதி ஆய்வுத் தகைமையர் ஆர்வர்டு பல்கலைக்கழக மக்கள் நல்வாழ்வு ஆய்வுப் பள்ளி, அமெரிக்கா) ஆகிய இருவரும் டாக்டர் ஒளவை ஐயா மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளனர்.
நான் ஒருமுறை தம்பி அருளுக்கு ஒரு கடிதம் வரைந்தேன். 2005ஆம் ஆண்டில் ஒரு கடிதம் வரைந்தேன். டாக்டர் ஒளவை ஐயா அவர்களை இந்த நூற்றாண்டின் தலை சிறந்த ஒப்பற்ற தமிழ்ப் பண்டிதராக நான் கருதுகிறேன் என குறிப்பிட்டிருந்தேன். அந்த கருத்தில் தற்போதும் எவ்வித மாற்றமுமில்லை. உலகெங்கும் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களை சந்தித்துள்ள/சந்தித்த/சந்திக்கின்ற உலகளாவிய தமிழறிஞர் அவர் என்பதே அதற்குச் சான்றாகும். ஔவை ஐயா அவர்கள் தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு மலேசிய தமிழர்களை ஊக்குவிக்கும் வகையில் கோலாலம்பூரில் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான ஒரு மாநாட்டை நாம் நடத்த வேண்டுமென நான் அப்போதே வலியுறுத்தினேன். மேலும், தமிழர்களுக்கான உலக மாநாட்டை நடத்துதல் என்பது மலேசிய தமிழர்களுக்கு பெருமையளிக்குமொரு நிகழ்வாகவும் இருக்கும் எனவும் நான் கோடிட்டுக் காட்டினேன்.
முனைவர் ஒளவை ஐயா அவர்களின் தமிழுணர்வும் நடுநிலைத்தன்மையும் தமிழ்நாட்டில் மொழி அரசியல் புயலை கடந்துச் செல்ல அவருக்கு உதவின. டாக்டர்.ஒளவை நடராசன் அவர்கள் தமிழ்நாடு மட்டுமின்றி பிற பகுதிகளிலும், தன் அறிவார்ந்த பேச்சாலும் செறிவார்ந்த மதிநுட்பத்தாலும் உலகளாவிய புலம் பெயர்ந்த தமிழர்களிடையே ஒரு நெருக்கமான உறவு முறையையும் பிணைப்பையும் உருவாக்கியுள்ளார்.
ஔவை ஐயா நல்ல உடல் நலத்தோடும் நீண்ட வாழ்வுடனும் தமிழுலகிற்கு ஊக்கமளிக்கும் வகையிலான சிந்தனைகளை தொடர்ந்து வழங்க வேண்டுமென்று நான் வணங்கும் குலதெய்வத்தை வேண்டுகிறேன்.

Add a Comment