POST: 2020-06-27T10:06:34+05:30

வானவில் இதழில் வெளிவந்த மருத்துவர் ஔவை மெய்கண்டான் அவர்களின் கட்டுரை

(முனைவர் ஔவை நடராசன் அவர்களின் தம்பி)

பாரதியின் சொல்வன்மை
=========================

பாரதி, தன் பாடல்களில் பழைய சொற்களைப் புத்துயிர் பெற வைத்தும், தமிழில் புதிய சொற்களை உருவாக்குவதும் தன் கனவாகவும் இலட்சியமாகவும் கொண்டு இருந்தார்.

உதாரணமாகத், “தொழும்பன்” என்ற சொல் அவர்தம் பாடல்களில் காணலாம். சத்ரபதி சிவாஜி தம் சைனியத்திற்குக் கூறியதாக உள்ள நெடும் பாடலில்,

“சூரர்தம் மக்களைத் தொழும்பராய் புரிந்தனர் ” (வரி : 58)
என்றும்,
“மானமொன் றிலாது மாற்றவர் தொழும்பராய்
ஈனமுற் றிருக்க எவன்கொலோ விரும்புவன்?” (வரி : 67, 68)
எனப் பாடுகிறார்.

“நம்ம ஜாதிக்கு அடுக்குமோ?” என்ற பாடலில், “சுதந்திரம் என்கிற பேச்சு எங்கள் தொழும்புகளெல்லாம் வீணாய்ப் போச்சு” எனத் திலகரிடம் கேட்பது போல் கூறுவார்.

தொழும்பு, தொழும்பன் என்ற சொற்களுக்கு ‘அடிமை’ என அர்த்தம் சொல்கிறது தமிழ்ச் சொல் அகராதி. தேவாரத்திலும், திவ்வியப்பிரபந்தத்திலும் காணப்படும், மக்களிடையே அதிகளவில் வழக்கத்தில் இல்லாத சொல்லை பாரதி எடுத்தாள்கிறார். தொழுபவன், தொழுது நிற்பவன் என இறைவனை வணங்குவது பற்றிய சொல்லாகத்தான் இருந்திருக்கிறது.

ஆலயந் தொழுவதும், ஆண்டவனைத் தொழுவதும் சாலவும் நன்று எனக் குழந்தைகளுக்கும் கற்பிக்கப்பட்டுள்ளது.

‘எனக்குத் தொழில் கவிதை’ என்ற சொல்லும், ‘தொழுது செய்யும் பணி’ என்பதே! – பாரதி சொன்னது.

தொழுதகை உள்ளும் படைஒடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து (குறள் : 828)

என வள்ளுவரும் கூறியிருக்கிறார்.

தொழுபவன் என்ற சொல் சிறிது திடமும், நிறமும் மாறி, அடிமைத்தனத்தையும், அச்சமும் பேதைமையையும், அடிமைச் சிறுமதியையும் ஆட்கொண்ட பொழுது, அவப்பெயராக இந்தத் ‘தொழும்பன்’ என்ற சொல் பாரதியால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தாயுமானவர், ‘தொழும்பர் உளக்கேற்றும் விளக்கே!’ என இறைவனை வணங்கும் பக்தர்களைக் குறிக்கிறார்.
பாரதி, தொழும்பன் என ‘அடிமை’யாகவே கையாள்கிறார்.

பாரதி, இவ்வாறு சிறந்த சொற்களைத் தேடி, தகுந்த இடங்களில் பயன்படுத்தியதால் தான் அவர் பாடல்கள் கருத்துச் செறிவுடன், கவிநயம் மாறாமல் காலத்தால் அழியாமல் நிலைத்துள்ளன. அவர் கூறிய, ‘பாலித்திடல் வேண்டும்’ என்பதன் உட்கொள்கையான தூய்மையாக்கப்பட வேண்டும் என்பது, இந்தப் புது சொல்லால் புத்துயிர் பெறுகிறது. நாட்டின் அடிமை நோயினை “பராதீன வெம்பிணி” என்கிறார்.

மகாத்மா காந்தி பஞ்சகம் என்ற பாடலில்,

“விடிவிலாத் துன்பஞ்செயும் பராதீன
வெம்பிணியகற்றிடும் வண்ணம்
படிமிசைப் புதிதாச் சாலவும் எளிதாம்
படிக்கொரு சூழ்ச்சிநீ படைத்தாய்!”

என குறிக்கிறார். ஐந்து பத்திகள் (Stanza) கொண்டதால் இப்பாடல் பஞ்சகம் எனப்படுகிறது. பராதீனம் என்பது சுதந்திரமின்மை என்ற பொருள் தருகிறது என்பதை அகராதி மூலம் தான் அறிந்து கொள்ள முடிகிறது.

தாதாபாய் நௌரோஜி பற்றிய பாடலில்,

வில்விறலாற் போர்செய்தல் பயனிலதாம்

என அதனை வெறுத்தே உண்மைச்
சொல்விறலாற் போர்செய்வோன் பிறர்க்கன்றித்
தனக்குழையாத் துறவி யாவோன்

என அவர் எண்பது அகவை அடைந்தபோது பாடிய பாடலில் குறிக்கின்றார். விறல் என்பது வீரம் என்ற பொருளுடன் சங்க இலக்கியங்களில் தான் கையாளப்பட்டுள்ளது. வீரம், வெற்றி என்று அர்த்தங்கள் சொல்லப்படுகின்றன.

இறல் எனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு (குறள் : 180)

என்பது திருக்குறள். ‘விறல் கோள் அணி’ என்றே இலக்கணக் கூறு ஒன்றும் உள்ளது.

“விறல் விசயனே வில்லுக்கு இவன் என்றும்” எனத் தேவாரம் பாடும் ; விறலோன் மார்பம் புல்லேம்யாம் என்பது புறப்பொருள் வெண்பாமாலை ;
பெருவிறல் பாணர்த்தாகி எனப் புறநானூறும் (புறநானூறு 42, 12)

பாடும்.

‘வீரம்’ என்ற பொருளில் கூறப்படும் ‘விறல்’ எனும் இச்சொல் பல காலங்கள் பழக்கமொழிந்த நிலையில், பாரதியாரால் புத்துயிர் பெற்றுள்ளது.

வீமன் வளர்த்த ‘விறல்’ நாடு என்றும், சீக்கியர்களை ‘விறற்சிங்கங்கள்’ எனவும் பாடியுள்ளார்.

பாரதி தன் பாடல்களுக்கு, சொற்களைத் தேர்ந்தெடுப்பது பற்றி, பின்வருமாறு கூறுகிறார்.

“சொல்லினுக்கு எளிதாகவும் நின்று சொல்லை வேறிடம் செல்ல வழிவிடாள்” எனப் பராசக்தியைப் பாடுகையில் கூறுகிறார். அவ்வாறு சொல்லுக்குள் பெருஞ்சுடரையும், அறிவொளியையும் புகுத்திப் பாடுவதில் புதுமை காண, பாரதி பாடுபட்டிருக்கிறார்.

“வாழ்க திலகன் நாமம்” என்ற கவிதையில்,

ஏழுமனிதர் அறிவை யடர்க்கும் இருள் அழிகவே
எந்தநாளும் உலகமீதில் அச்சம் ஒழிகவே

என்னும் பாடல் வரி மூலம், ஏலு மனிதர்’ எனக் கையேந்தி இரக்கும் மனிதர்கள்’ என ஏசுகிறார். ‘எல்’ என்ற சொல்லில் இருந்து தான் ‘ஏற்பது இகழ்ச்சி’ எனப் பிச்சை எடுப்பதை இகழ்கிறது தமிழ்ப்பாடல். ‘ஏல்’ என்ற சொல்லுக்குப் பல அர்த்தங்கள் சொல்லப்பட்டாலும், பாரதியார் அடிமை இந்தியாவின் சோர்வுற்ற மனிதர்களையும் சுட்டிக்காட்டும் எண்ணத்தில் தான் தன் புலமையறிவைப் பயன்படுத்தி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்துகிறார்.

ஏலாதி என்ற நூலில், மக்களுக்கு இருக்க வேண்டிய அனைத்து நல்ல குணங்களைப் பற்றிப் பாடப்பட்டிருக்கும். பாரதி பாடல்களில் இன்னுமொரு வித்தியாசம் உண்டு. நதிகளில் அனைத்திலும் சிறந்ததாக, சிந்து நதியை அவர் என்றும் போற்றுவது. ‘சிந்து நதியின் மிசை நிலவினிலே ; தோணிகள் ஓட்டி விளையாடி மகிழ’ விரும்புகிறார். பஞ்சாப்-ஐ ‘பாஞ்சாலம்’ எனக் குறிக்கிறார் அவர்.

“சிந்துவெனும் தெய்வத்திருந்தி ” என்பவர், ‘மற்ற அதிற்சேர் ஐந்து மணியானும் அளிக்கும் புனல் நாடு’ எனப் புகழ்கிறார். கங்கையை அதிகம் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. காசியிலேயே இருந்த நம் கவிஞர், கங்கை நதிப்புரத்து கோதுமையை வியாபாரத்திற்குப் பயன்படுத்த விழைகிறார். அவரின் சொல் விளையாட்டு பெரிதும் அர்த்தம் கொண்டது. அவருக்கு ‘சிந்து வின் மேல் இருந்த பற்று, காதல் வாஞ்சை, இந்து மக்களின் புண்ணிய நதியான, சிவனின் தலையில் தோன்றி, இமயமலை அழகினை அள்ளிப் பருகி, மகாபாரதத் தாயாக வலம் வரும் வற்றாத ஜீவநதியின் மேல் கொண்ட பற்றினைப் போன்றது என்பது வியக்கத்தக்கதாக உள்ளது. – தமிழகத்து நதிகளைப் பட்டியலிட்டுப் பாடி, ‘செழிப்புறச் செய்யும் செம்புனலாறுகள்’ எனக் குதூகலிப்பவர், புண்ணிய நதியான கங்கையிடம் மரியாதையாகத் தள்ளி இருந்து வணங்கியிருக்கிறார் என அவரை ஆழமாக அறிந்து படித்துத்தான் புரிந்து கொள்ள முடியும். அதேபோல அவருக்கு ‘பாரத நாடு’ என்ற சொல்லை விரும்பிய அளவிற்கு ‘இந்திய நாடு’ என்ற சொல் இனிக்கவில்லை.

வள்ளுவர் வாக்கினை எடுத்து, முயற்சி என்ற தாளாண்மையையும், உதவுதல் என்ற வேளாண்மையையும் வ.உ.சி. வாழ்த்தாக வகைப்படுத்துகிறார்.

“துயருண்டோ துணிவுள்ளோர்க்கே!” என்ற அவர் வாக்கியம், பெல்ஜியம் வாழ்த்துப் பாடலில் பாடுவது, யாருக்கும், எவருக்கும் பொருந்தும், மனத்தெளிவு தரும், மயிர்க்கூச்செறிய வைக்கும் வாக்கியம்.

பாரதி, கண்ணனை வேண்டுகையில், இன்று இங்கு எம்மை அதம்புரி! இல்லையேல் வென்றியும் (வெற்றியும்) புகழும் தரல் வேண்டும்!” என முறையிடுகிறார். “இப்பொழுதே அழித்து விடு! இல்லையேல் வெற்றி கொடு!” என உரிமையுடன் உரைக்கையில், ‘அதம்’ என்ற அதிகாரப்பாணிச் சொல்லால் அலங்கரிக்கிறார். “தீக்குள் விரலை வைத்துத் திருவருள் கண்ணனைத் தீண்டும் இன்பம் உணரச் செய்வது தான் ” அவன் பக்திப் பரவசப் பாடல்களின் உச்சம் என உரைக்கலாம்.

கண்ணனின் குழல் பாட்டில், “காதிலே அமுது ; உள்ளத்தில் நஞ்சு” என்பதும், “தீயில் வளரும் சோதியானது, அவளின் எண்ண ம்” என்பதும் அவர் பாடல்களில் வரும் கனல் வார்த்தைகள்.

சரஸ்வதி பாடலில், பல்வேறு தேசங்களும் கல்வி ஒளியில் சிறந்திட, பாரத நாடு ஞானம் பெற்றது. ஆனால் ஓங்கு கல்வி உழைப்பை மறந்திட்டோம், புன்மை தீர்ப்ப முயல்வதற்கு, ஏழைகளுக்குக் கல்வி தர இயம்புகின்றார். எப்படியாவது பெருதொழில் வளரக் கல்வி நிலைநாட்டக் கட்டளையிடுகிறார்.

‘வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்’ எனத் தொடங்கும் பாடலில், ஊணர் தேசம் என யவணர் தம் தேசம் உதய ஞாயிற்று ஒளி பெறும், சேண் அகன்று ஓர் சிற்றடிச் சீனம் ; செல்வப் பாரசீகப் பழந்தேசம், தோணல் அத்த துருக்கம், மிசிரம், சூழ்கடற்புறத்தினில் இன்றும் காணும் பற்பல நாட்டிடை எல்லாம் கல்வித் தேவையின் ஒளி மிகுந்துள்ளதாகப் பறைசாற்றுகிறார். நம் நாட்டில் “தொழில் சார்ந்த கல்வி” பெருக வேண்டும் எனப் பாடுபட வேண்டுகிறார். பாரதியார் ஊண் என்பதற்கு உணவு எனப் பொருள் கொண்டாரா? அல்லது HUNS (என்ற) ஹீணர்கள் என்ற பழங்குடியினர்கள் கொண்ட ஹுணர்களைப் பற்றிச் சொன்னாரா எனப் புரியவில்லை. அவர்களின் நாடு என கிரேக்க, ரோமானிய நாடுகளைக் குறித்துள்ளார். ‘சேண கன்றதோர் சிற்றடி சீனம்’ என உயரமும், பரப்பும் கொண்ட உயர்நிலையில் சிற்றடி (சிற்றடியே என இறைவனடியைப் புலவர்கள் கூறுவது போல) உள்ள சீனநாடு, பழங்கால நாகரீக வளர்ச்சியில் சிறந்திருந்த பாரசீக நாடு, தோள்வலிமை கொண்ட துருக்கியர், மிசிரம் என எகிப்து நாட்டினைக் குறித்துள்ளார். இவ்வாறு மேலை நாடுகள் எல்லாம் கல்வியில் உயர்ந்து தொழிலில் மேம்பட்டு உள்ளதால், நம் மக்கள் ஞானம் மட்டும் அறிந்து, தொழிற்கல்வி பெறாததை வருத்தமுற்றுக் ‘கலைமகள் வாழ்த்தில் கவிதையாகக் காட்டுகிறார்.

வெண்ணிலவை, “வானக்கடலிடை விழிக்கு இன்பம் அளிக்கும் தீவு” எனவும், “வானக்குளத்து உள்ள வெண்தாமரை” எனவும் அழகிய சொற்கால் வாணிக்கும் பாரதி, ‘அன்புக்கு அழிவில்லை காண்’ என மிக எளிமையாக உயர்பொருள் வாக்கியங்களும் வடித்தவர்.

அவர் கவிதைகளில் உள்ள சொற்கள் ஒவ்வொன்றும் உணர்ந்து உள்வாங்குகையில் மாணிக்கக் கற்களாய் மதிமயக்குபவை ; பாரதியின் புதிய ஆத்திசூடி, புதுப்பொருள் கொண்டு பொலிவுடன் திகழும் ; எக்காலமும் போற்றப்பட வேண்டிய சொல்மாலை, அவரின் பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு கண்ணன் பாட்டு என முப்பெரும் பாடல் தொகைகளுக்குள், இன்னும் பல முத்துக்களையும், வண்ண மலர் வார்த்தைகளையும் நம் தேடலின் ஆழம், கண்ணோட்டம், சிந்தனையைச் சார்ந்து கண்டெடுக்கலாம். படிக்கப் படிக்க இன்னும் பல புதிய உயிர்ச் சொற்களைக் கண்டறியலாம் பாரதியிடம். அவற்றின் பொருளுணர்ந்து தமிழ்மொழிப் பற்றுள்ளோர் பயன்படுத்தி உயர்வதே பாரதிக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் என நம்புவோம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *