POST: 2020-06-22T09:36:22+05:30

தின செய்தி நாளிதழில் இன்று (22.06.2020) வெளியான முனைவர் ஒளவை நடராசன் அவர்களின் கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி – 40)

‘‘எளியோர் கண்ணீரைத் துடைப்பதில் இறைவன் இருக்கிறான்..!’’

ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்

நூற்றிரண்டு ஆண்டுகள் வாழ்ந்த நுண்ணறிவாளர் மூதறிஞர் பேராசிரியர் அடிகளாசிரியரவர்கள் உரை நூல்கள், பதிப்பு நூல்கள், படைப்பிலக்கிய நூல்கள், ஆராய்ச்சி நூல்கள் என்ற வகையில் அறுபத்தெட்டு நூல்களைப் படைத்த அறிஞராவார். அத்தகைய அறிஞர் தமிழக முன்னாள் முதல் அமைச்சர் மாண்புமிகு எம்.ஜி.இராமச்சந்திரன் மேல் இயற்றிய இலக்கியத்தின் பெயரே ‘பல்துறைப் பலவினம்’ என்பதாகும். அச்சுவாகனம் ஏறாத இவ்விலக்கியத்தைப் பற்றிய பல்வேறு சிந்தனைகளை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவர் அவர்கள், தமிழ்மொழிக்குச் செய்துள்ள தொண்டுகளுள் மாபெருந் தொண்டாக அமைந்திருப்பது தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக் கழகம் நிறுவியதாகும். அவர் அவ்வாறு நிறுவிய தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் சுவடிப்புலத்தில் அவரும் பேராசிரியராகப் பணியாற்றினார். புரட்சித் தலைவரின் சத்துணவுத் திட்டத்தைக் கேட்டுப் பெரிதும் நெகிழ்ந்தார். சிறார்களுக்கு அன்னமிடுவதே சீரிய பணி என்றும் உருகினார். புரட்சித் தலைவரைப் போற்றிய பேராசிரியரின் நூல்கள் 2019ஆம் ஆண்டில் நாட்டுடமையாக்கப்பட்டன. அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழியல் துறை பேராசிரியர் முனைவர் ஆர்.சிவபெருமான் புரட்சித் தலைவர் நூற்றாண்டு மலரில் இதனைக் குறித்துள்ளார்.

‘‘அற்றார்தம் அழிபசியைத் தீர்த்தல் தானே
அரும்பொருளை வைக்கின்ற இடமா மென்ற
கற்றார்சொல் திருக்குறளைக் கற்றாய் போலும்,
கருணைமிகும் எம் அமைச்ச! இராமச் சந்திர!
அற்றாரின் அழிபசியை மதியத் தின்கண்
அகற்றுதற்கு நீயெண்ணி, அருமை சான்ற
உற்றார்போல் நல்லுணவை உண்பிக் கின்றாய்;
உலகத்தில் பண்ணன் இன்றும்
உதித்திட்டானோ!”

மேற்பாடலின் கீழ் குறிப்பு என்னுந் தலைப்பின் கீழ் அடிகளாசிரியரவர்கள், ‘‘தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களை இதுவரை நான் கண்டதில்லை. அவர்களும் என்னைப் பார்த்ததில்லை. எனினும், அவர்கள் செய்து வரும் அரும் பணிகளை எண்ணி மகிழ்வேன். அவ்வெண்ணமே இப்பாடலை எழுதத் தூண்டிற்று. இங்கே பண்ணன் என்பான் சிறுகுடிக்கிழான்பண்ணன் என்பவனாவான். இவன் பெரிய உணவுக் கொடையாளி; இவனைச் சிறப்பித்துச் சோழன் கிள்ளிவளவனே பாடியுள்ளார்” என்று எழுதியுள்ளார்.

இந்தநிலையில், 18.07.1982 அன்று சென்னை இராஜாஜி மண்டபத்தில் நடைபெற்ற முசுலிம் மகளிர் சேவா சங்கத்தினர் ஏழை விதவைப் பெண்களுக்கு உதவி வழங்கும் விழாவில் புரட்சித்தலைவர் ஆற்றிய உரையின் ஒரு பகுதியைக் காண்போம்

‘‘இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களை நான் மனதாரப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். இங்கே நபிகள் (ஸல்) அவர்களைப் பற்றி மாண்புமிகு அமைச்சர் கிருஷ்ணசாமி கூறினார்கள்.

இசுலாத்தின் ஈகைப் பண்பு மிக உயர்ந்த கொள்கையாகும். உருவ வழிபாடற்ற ஒரு முறையைக் கடைப்பிடிக்கும் இசுலாமிய சமுதாயம் எந்த அளவு ஒற்றுமையாக இணைந்திருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பார்க்காதவர்கள் இருக்க முடியாது.

திருக்குரானில் சொல்லப்பட்டிருக்கிறதை ஒன்றிரண்டை நான் குறிப்பிடுவது எனக்கு நினைவுபடுத்திக் கொள்வதாக அமையும். மறந்தவர்களுக்கும் நினைவுபடுத்துவதாக அமையும் என நான் கருதுகிறேன்.

ஒவ்வொருவரும் தனது சொத்தில் மொத்தத்தில் என்று நான் அடைமொழியாகச் சேர்த்துக் கொள்கிறேன். இரண்டரை சதவிகிதத்தை ஏழை, எளியவர்களுக்கு ஒதுக்கித் தரவேண்டும் என்பது ஒரு சித்தாந்தமாகக் கூறப்பட்டிருக்கிறது.

நோன்பிருப்பதை வெறும் நோன்பு என்று மட்டும் எடுத்துக்கொள்ளாமல் அவர் உண்ணாமலிருக்கும் பகல் நேர உணவான அந்த வேளை உணவு இன்னொருவருக்குப் பயன்படப்போகிறது என்கிற சித்தாந்தத்தை நாம் மறந்துவிடக்கூடாது. நாங்கள் இசுலாமிய சமுதாயத்தைப் பாராட்டக் காரணம் ஏழை பணக்காரன் என்பது இயற்கையாக ஆண்டவன் படைப்பில் இல்லை. அவரவர் பொறுப்புதான். அவரவர் செய்கின்ற துணிச்சலான காரியத்தினால்தான் அந்த இடத்தை எய்துகிறார்கள். அதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் சட்டப்படி ஒதுக்கிக் கொடுக்க வேண்டும். ஒரு இசுலாமியனாக இருப்பானானால் அதைச் செய்தாக வேண்டும் என்றிருப்பதை எண்ணி எண்ணிப் பாராட்ட வேண்டும்.

அந்தக் கொள்கையைச் சொன்னவர்களுக்குக் கடைப்பிடிப்பவர்களுக்கு, கடைப்பிடித்து வருபவர்களுக்குத் தலைகுனிந்து கைக்கூப்பி வணக்கம் தெரிவிக்க விரும்புகிறோம். இங்கே ஏழைகளுக்குத் துணிகள் கொடுக்க இருக்கிறார்கள். மானத்தை மறைக்க இலவசமாகத் துணிகள் கொடுக்க இருக்கிறார்கள். என்றைக்கு அவரவர்களால் வாங்க முடிகிறதோ அன்றுதான் இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு அடையாளமே தவிர, இன்னொருவருடைய கையை எதிர்பார்த்து வாழும் வரையில் இந்தியா பரிபூரண சுதந்திரம் அடைந்ததாக யாருமே சொல்ல மாட்டார்கள்.

அமரர் காந்தி சொன்னதில்லை. நேரு சொன்னதில்லை, இந்திராகாந்தி அம்மையாரும் சொன்னதில்லை. லால்பகதூர் சாஸ்திரி சொன்னதில்லை. அபுல்கலாம் ஆசாத் சொன்னதில்லை. மூதறிஞர் இராஜாஜி சொன்னதில்லை. அய்யா அவர்கள் சொன்னதில்லை. அமரர் அண்ணா சொன்னதில்லை. இதை நான் எதற்காகக் குறிப்பிடுகிறேனென்றால், இந்த வாய்ப்பை நாம் பெற்றாக வேண்டும்.

எந்த ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த நம்பிக்கைக்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் சமத்துவத்தோடு, சரி நிகராக வாழ்க்கையிலே ஒரு மனிதன் அவசியத் தேவைகளையாவது பிறருடைய தயவில்லாமல் பெற்று வாழ்கின்ற நிலைமையை உருவாக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம். அந்தக் கடமையை இன்னும் யாரும் முழுமையாகச் செய்துவிடவில்லை என்பதை இங்கே சுட்டிக் காட்டுகிறேன்.
இங்கே மாண்புமிகு அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமி அவர்கள் பேசும்போது, 63 இலட்சம் குழந்தைகளுக்குச் சத்துணவு வழங்கும் காரியத்தை முதலமைச்சர் செய்துள்ளார் என்று சொன்னார். யாருடைய பணம்? என்னுடைய தனிப்பட்ட பணமல்ல. மக்களுடைய பணம், மக்களுடைய வரிப்பணத்திலிருந்து, மக்களுக்குச் செலவு செய்கின்ற பணம் இதை உண்டு வளருகின்றவர்கள் எந்த ஒரு தனிமனிதனுக்கும் கட்டுப்பட்டவர்களல்ல கட்டுப்பட வேண்டியவர்களல்ல. அவர்கள் நன்றிக்கடன் செலுத்த எந்தத் தனிப்பட்ட மனிதனையும் தேடிச் செல்ல வேண்டிய அவசியமில்லை.

இந்தப் பணம் தமிழக மக்களுடைய பணம் என்றால் தமிழக மக்கள் தமிழ்நாட்டின் சொத்து. எனவே, தமிழ்நாட்டிற்குத்தான் இந்தக் குழந்தைகள் வளர்ந்து எதிர்காலத்தில் நன்றியைச் செயல் மூலம் காண்பிக்க வேண்டுமே தவிர, யாருக்கும் அடிமையாகக் கைகட்டி நன்றி காட்டவேண்டிய அவசியமில்லை. நாங்கள் ஒரு குழு அமைத்திருப்பது உங்களுக்குத் தெரியும். அதில் ஒரு செய்தி வந்திருக்கிறது. 12, 13 வயதுச் சிறுவர்கள் சில வீட்டில் வேலை செய்கிறார்கள். எதற்கு வேலை செய்கிறார்கள் என்றால், சம்பளத்திற்காக அல்ல. ஒரு வேளைச் சாப்பாட்டிற்காக, தாய் தந்தையர்கள் வேலைக்குப் போகும்போது ஒரு வேளை உணவுக்காக வேறு வீடுகளுக்கு அனுப்புகிறார்கள்.

இந்த வயதில் ஒரு வேளை உணவுக்காக வேலை செய்துகொண்டு எங்களுக்கு எங்கே சாப்பாடு என்று கேட்கிறார்களாம். இல்லை உங்களுக்கு இல்லை. குழந்தைகளுக்குத்தான் என்று சொன்னால், நீங்கள் எம்.ஜி.ஆரிடம் சொல்லுவதில்லை. எம்.ஜி.ஆரிடம் சொல்லுங்கள், எங்களுக்கும் சாப்பாடு கிடைக்கும் என்கிறார்களாம்.

இதை நான் குறிப்பிடக் காரணம் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை பெரியது. ஆனால், அரசுக்கு இருக்கும் சக்தி மிகமிகச் சிறியது.

ஒரு கொள்கையை எடுத்து நிறைவேற்றும்போது திட்டங்களைப் பிரித்துப் பார்க்க முடியாது. முஸ்லிம் சமுதாயக் குழந்தைகள் பகலில் உண்ணக்கூடாது என்று சொன்னால், அவர்களுக்காக மாற்றி வைக்க வேண்டியிருந்தது. மாலை 7 மணிக்கு மேல் அவர்களுக்குச் சமைத்துக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பது உங்களுக்குத் தெரியும்.

அதற்காக அந்தத் தாய்மார்கள் சமையல் செய்பவர்கள் 3 மணி நேரம் அதிகமாக இருந்து அந்தக் குழந்தைகளுக்கு உணவு ஊட்டி விட்டு செல்ல வேண்டி இருக்கிறது. அதற்காக அவர்கள் ஓவர்டைம் கேட்கவில்லை. கேட்கமாட்டார்கள்.

ஆனால், இப்போது எங்கு பார்த்தாலும் ஒரு நாட்டிற்குத் தொண்டு செய்பவர்கள் வேலை செய்யும்போது பல பிரச்சினைகளில் ஏலம் போடுகிறார்கள். தன்னுடைய கடமையை ஏலம் போடுகிறார்கள். தன்னுடைய நாட்டிற்குச் செய்ய வேண்டிய தியாக உணர்வை விலை பேசுகிறார்கள்.

அவைகளையெல்லாம் நீக்க வேண்டுமானால் படித்தவர்கள், விவரம் தெரிந்தவர்கள் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். சாதாரண மக்களுக்கு அல்ல, அப்படிப்பட்ட பணியிலிருப்பவர்களுக்குக் கூட எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். இன்றைக்கு
500 தாய்மார்களுக்குத் துணிகளை இந்த அமைப்பு வழங்க இருக்கிறது. 100 ஆண்டுக்காலம் பணி செய்யும் அமைப்பு இதனைச் செய்கிறது என்றால், இதிலும் பாதிப்பங்கு சுமார் 20 லிருந்து 30 ஆயிரம் ரூபாயைத் தமிழக அரசு ஏற்றுக் கொடுக்கிறது.

கொடுக்கிறது என்றால், இந்தத் தாய்மார்களுக்கு மாதம் 15 ரூபாய் தருகிறது என்றார்கள். அந்தப் பணத்துடன் அரசு முதியோர்களுக்குத் தரும் ஓய்வூதியத்தைப் பெற்றுக் கொடுங்கள் என்று மாவட்ட ஆட்சித்தலைவரிடம் சொன்னேன். உடனே மற்றவர்கள், சங்கத்திலிருப்பவர்களுக்கு 50 ரூபாய் எங்களுக்கு 35 ரூபாய் 25 ரூபாய்தானா என்று போட்டிக்கு வந்துவிடக்கூடாது.

சில சந்தர்ப்பங்களில் சிலருக்கு ஒரு ரூபாய், 2 ரூபாய்கூட கிடைக்கலாம். இருக்கின்ற சூழ்நிலையை வைத்து, நமக்கிருக்கிற சக்தியை வைத்து வாழ்க்கையை எப்படி நடத்திக் கொள்ள வேண்டுமோ அப்படி நடத்திச் செல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று அமரர் அண்ணா எங்களுக்குச் சொன்னதன் விளைவாகத்தான் இன்றைய தினம் முசுலிம் பெரியவர்களைச் சந்திக்கும்போது நெஞ்சாரத் தழுவ முடிகிறது. அது ஒரு மதத்தினுடைய கோட்பாடு-நம்பிக்கையாக இருந்தாலும் அது எங்களுக்கும் பொருந்துகிறது. ஏனென்றால், எங்களுக்கும் ‘ஒன்றேகுலம்தான் ஒருவனே தேவன்தான்’.

எங்கெங்கே அன்பைக் காணுகிறோமோ, பண்பைக் காணுகிறோமா அங்கெல்லாம் இறைவனைக் காணுகிறோம். ஆகவேதான், ஒரு மனிதன் வேறுபட்ட உணர்ச்சிக்கு காழ்ப்புணர்ச்சிக்கு ஆளாக இடமில்லாமல் இருக்க வேண்டுமென்றால், உணவு பிரச்சினை இருக்கக்கூடாது. இருக்க வீடில்லை என்ற பிரச்சினை இருக்கக்கூடாது. செய்ய தொழில் இல்லை என்ற பிரச்சினை இருக்கக்கூடாது.
அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 லிருந்து வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள குழந்தைகளுக்கும் இந்த உணவுத் திட்டத்தை நகரத்திற்கும் விரிவாக்க திட்டமிட்டிருக்கிறோம். நாம் ஆரம்பித்திருக்கிற திட்டம் ஆங்காங்கே செயல்படும் அனுபவத்தை வைத்து நகரங்களிலும் செயல்படுத்த இருக்கிறோம்.

சில இடங்களில் தாய்மார்கள், ஏழைக் குழந்தைகளையும் அனுப்பிவிட்டுப் பெரியவர்களும் வந்து அமர்ந்து விடுகிறார்கள். இந்தத் துயரத்தையும் கவனிக்க வேண்டும். குழந்தைகளுக்கு உணவு கொடுப்பது என்பது எளிதான காரியம் அல்ல. ஏழை, பணக்காரன் என்ற எல்லைக்கு அப்பாற்பட்டு, சாதி மதத்திற்கு அப்பாற்பட்டுக் காரியத்தைச் செய்தால் மற்ற மாநிலமும் சத்துணவுத் திட்டத்தினைப் பின்பற்றும்.”
தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…
– ஔவை நடராசன், தொடர்புக்கு: thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *