POST: 2020-06-15T08:55:36+05:30

தின செய்தி நாளிதழில் இன்று (15.06.2020) வெளியான முனைவர் ஒளவை நடராசன் அவர்களின் கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி – 39)

‘‘சத்துணவுத் திட்டம் சமுதாயப் புரட்சித்திட்டம்..!’’

ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்

உயிர்களின் பசியொழிப்பே மணிமேகலை வலியுறுத்தும் பேரறமாகும். இவ்வறத்தை இந்நூல்போல் வற்புறுத்தும் வேறு நூல் தமிழில் இல்லை. பசியின் கொடுமை மிகப் பெரிது. குடிமை, பெருமை, கல்வி, நாண், தோற்றம் என்ற நல்லவை யாவும் பசித்தீ முன் அழிந்தொழியும். எதனைத் துறந்த துறவியும் பசியைத் துறத்தல் முடியாது. பசி, யாரையும் வாட்டிப் பண்பு திரிக்கும் ஆதலின்,
‘‘பசிப்பிணி என்னும் பாவியது தீர்த்தோர்
இசைச்சொல் அவனைக் கென்நா நிமிராது” (1239-40)

‘‘மண்டிணி ஞானத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே” (1254-5)
என்று சோற்றுக்கொடையின் சிறப்பும் அக்கொடையாளியரின் உலகப் புகழும் இந்நூலால் பறைசாற்றப்படுகின்றன. சோற்றை ஆருயிர் மருத்துவர் என்றம் சாத்தனார் புகழ்வர். பசி நோயிலிருந்துதான் ஏனைப்புற நோய்களும் அகநோய்களும் பிறப்பன. உடற்பிணி மருத்துவர்களாலும், அகப்பிணி அறிஞர்களாலும் சமுதாயக் கேடுகள் ஒழியமாட்டா. எனை நோய்க்கும் பிறப்பிடமாம் பசிப்பிணி தீர்க்கும் அற மருத்துவர்கள் சமுதாயத்திற் பெருக வேண்டும்.
‘‘மக்கள் தேவர் எனவிரு சார்க்கும்
ஒத்த முடிவின் ஓரறம் உரைக்கேன்
பசிப்பிணி தீர்த்தல் என்றே அவரும்
தவப்பெரு நல்லறம் சாற்றினர்” (1421-4)
எனப் பழுத்த துறவி அறணவர் உயிர்வாழும் உலகிற்கெல்லாம் பொதுவறம் சாற்றுவர். தனியாகும் பசியொழிக்கப் பாடுபடுதல் வேண்டும். அதன் ஒழிப்பை முதற்கடமையாக அரசும் எண்ண வேண்டும். ஓருயிர் பசித்துக்கிடத்தல் கூடாது, கூடாது. வரப்புயர என்றாற்போல் பசியொழிய என்றால் ஏனைத் தீயவை தீயெல்லாம் ஒழியும் என்பதுவே சாத்தனார் சமுதாயக்கொள்கை.
‘‘பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வன்னும் சுரக்கென” (70-1)
முரசோன் விழா அறைகின்றான். பசி நீங்கப் புறப்பிணி நீங்கும்; புறப்பிணி நீங்க அகப்பகை நீங்கும் என்று சாத்தனார் நாட்டிற்கு வழி காட்டுவர். மக்கட்கு அடிப்படை வேண்டுகை உணவு, உடை, வீடு என்ற மூன்றுமே என்றும், அவற்றை எவ்வகையானும் அமைத்துக் கொடுப்பதுவே நல்லரசின் முதற் கடன் என்றும் இன்று பல்லரசுகளும் ஒப்புக் கொள்கின்றன. அக்கடனைச் செவ்வண் முடித்துக் குடிப்பசி களையப் பாடுபடுகின்றன.
‘‘அறமெனப் படுவது யாதெனக் கேட்பின்
மறவா திதுகேன் மண்ணுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டதில்……” (3383-5)
சாத்தனார் பன்னூறு ஆண்டுகட்கு முன் கண்டு காட்டிய கனவு இது; அறுதியிட்டுரைத்த அறம் இது. மக்கட்கும் அரசுகளுக்கும் காட்டிய வழி இது. தமிழ்ப் புலவன் கண்ட கனவு அறிவியல் பெருகிய இவ்விருபதாம் நூற்றாண்டிலும் கனவாகவே நிற்கின்றது. உயிர் பசி நீங்கும் நனவுதான் என்றோ?
என்று வ.சுப.மாணிக்கம் எழுதினார்.
“பசிக்கிறவனுக்கு மீனைக் கொடுக்காதே அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக்கொடு” என்றும் “சோறு போட்டுச் சோம்பேறியாக்காதே” – பொன்மனச் செம்மல் சத்துணவுத் திட்டம் கொண்டு வந்த பொழுது இப்படியெல்லாம் சிலர் பழிப்புரை பேசினார்கள். அவர்களுக்கெல்லாம் ஒட்டு மொத்தமாக இந்தச் சத்துணவுத் திட்டம் மிகப் பெரிய பொருளாதாரத் திட்டம் என்றோ நான் ஓர் அரசியல் மேதை என்றோ உலகிற்குச் சொல்லவோ இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. என்னுடைய இளம் பருவத்தில் பசியின் கொடுமையை அனுபவித்தவன். என் தாய் பத்துப்பாத்திரம் தேய்த்துக்கூடப் பசியாற உணவும் படிப்பும் கொடுக்க இயலவில்லை. இந்தக் கொடுமையைக் கணிசமான அளவில் குறைக்க வேண்டும் என்கிற இலட்சியத்தை நிறைவேற்றவே இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தேன். இது என் ஈரமான இதயத்தின் வெளிப்பாடேயன்றி என் அரசியல் சாணக்கியத்தனம் இல்லை.
இதனால் அரசுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை இழப்பு என்றாலும் எனக்குக் கவலையில்லை” என்று விளக்கமளித்தார் வள்ளல்.
வறுமையை ஒழிப்போம் என்றுதான் நான் தொடங்கினேன். ஆனால், வறுமையைக் காட்டிலும் என்னையும் என் கட்சியையும் ஒழித்துவிட்டார்கள் என்று அமெரிக்க குடியரசுத் தலைவர் ரீகன் குறிப்பிட்டார். ஆனால், புரட்சித்தலைவருக்கு தொட்டதெல்லாம் வெற்றிதான். கொடிது கொடிது இளமையில் வறுமை என்பதை நெருப்பு வரியாகத் தவித்த துயரம் புரட்சித் தலைவர் நெஞ்சத்தை கலக்குவதாகும். அந்தக் கலக்கத்தில் பிறந்ததுதான் சத்துணவுத் திட்டம்.
இளம்பிள்ளைகள் பசியில்லாமல் பட்டினியில்லாமல் மகிழ்ச்சியோடு படித்து முன்னேற வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்திற்காகத்தான் சத்துணவுத் திட்டத்தை நான் தொடர்கிறேன் என்று பலமுறை உருக்கமாகக் கூறுவார்கள். பசியைப் போக்குவதில் அவருடைய கை எந்தத் திசை நோக்கியும், எந்தத் தொலைவைக் கடந்தும் நீளும் கரமாகும். கொடுத்துச் சிவந்த கரம், கோடிக்கணக்கான இளம்பிள்ளைகளுக்கு கிடைத்த வரம். அந்த வகையில், தன்னைத் தாயாகவும், தந்தையாகவும் எண்ணி உருக்கத்தோடு ஆற்றிய உரைகள் பல.
அவற்றில் ஒரு கட்டுரையைத்தான் நீங்கள் படிக்க இணைத்திருக்கிறேன்.

திருச்சி மாவட்டம் பாப்பாக்குறிச்சியில் 01/07/1982 அன்று நடைபெற்ற இலவச சத்துணவுத் திட்டத்தை தொடங்கி வைத்து புரட்சித்தலைவர் ஆற்றிய உரையில்…
‘‘இன்றைய தினம் நடைபெற்றுக் கொண்டிருக்கிற இந்த நிகழ்ச்சி வெறும் விளம்பரத்திற்காகவோ நாங்கள் எத்தகைய திட்டங்களையெல்லாம் அறிமுகப்படுத்துகிறோம் பார்த்தீர்களா என்று சொல்லி மக்களுடைய தேவைகளைப் புரிந்து கொள்ளாமல் அவர்களுக்கு என்னென்ன அவசியத் தேவை இருக்கின்றனவோ அவைகளை அலட்சியப்படுத்திவிட்டு, அவர்களைத் திசை திருப்பி விடுவதற்காகவோ இந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. நடத்தப்படவில்லை என்பதை முதலிலே நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
நான் பேசுவதாக இருந்தாலும் எங்கள் கட்சிக்காரர் பேசுவதாக இருந்தாலும்கூட அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு அந்தக் குழந்தைகளை, இன்றைய நாட்டின் சூழ்நிலையில் நீங்கள் அனுப்பாதீர்கள். காரணம், அவர்கள் திணிக்கின்ற, ஒருவரையொருவர் வேறுபடுத்துகின்ற கருத்துகளை அந்தப் பசுமையான உள்ளத்தில் பதிய வைத்துவிடக் கூடாது என்பதுதான்.
இந்தக் குழந்தைகள் உணவுக்கு வகையில்லை என்பதை மட்டுமல்ல, உணர்வுக்கும்கூட – நல்ல உணர்வுக்கும்கூட – இந்த நாட்டுக்குத் தேவையான சமத்துவ உணர்வுகளுக்குக் கூட தகுதிக் குறைந்தவர்களாக வளர்க்கப்படுவார்களேயானால் எதிர்காலத்தில் இந்த நாட்டின் நிலைமை என்னவாகும் என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
குழந்தையிலேயே ஒழுங்காக, ஒழுக்கமாக, சுத்தமாக, சீர்மையாகத் தூய்மையாகத் துப்புரவாகத் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள அவர்களுக்கு உபதேசம் செய்யாமல் நடைமுறைப் பழக்கவழக்கங்கள் அவர்களுக்குச் சிறுபருவத்திலேயே வந்தாக வேண்டும். அப்படிப்பட்ட நிலைமையை உருவாக்க வேண்டுமென்பதுதான் எங்கள் ஆசை. பசியையும் போக்க வேண்டும், பண்பையும் வளர்க்க வேண்டும்.
கட்சியைத் தயவு செய்து தள்ளி வையுங்கள். 60 இலட்சம் ஏழைக் குழந்தைகளுடைய வயிற்றைப் பாருங்கள். அவர்கள் வாழ்வைப் பாருங்கள். இராமச்சந்திரனைப் பார்க்காதீர்கள். அவர் எந்தக் கட்சி என்ற பார்க்காதீர்கள். எதிர்க்கட்சியா? எதிரிக்கட்சியா என்று தயவு செய்து கவனிக்காதீர்கள். தமிழகம், தமிழ் மக்கள், அதில் இருக்கின்ற வறுமைக்கோட்டிற்குக் கீழேயுள்ள வேலையில்லாமல் இருக்கின்ற ஒரு வேளை உணவு கூட நிம்மதியாகக் கொடுக்க முடியாமல் இருக்கின்ற அந்த வறுமைக் கோட்டிற்குக் கீழேயுள்ள தாய்மார்கள். கண்ணீர் வடிக்கிறார்களே, அதைத் துடைக்கின்றோம் என்கிற நிலைமையில் ஒத்துழைக்க முன்வாருங்கள் என்று நான் சொல்லிக்கொள்வேன்.
குழந்தைகளுக்குச் சொந்தக்காரர்கள் வேலைக்குப் போவார்களேயானால் என் குழந்தை இப்போது என்ன செய்து கொண்டிருக்கும் உணவுக்கு என்ற அந்த நினைப்பே இல்லாமல் அங்கே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும் இந்த நாட்டுக்குச் சொந்தக்காரர்கள்தான் அந்தக் குழந்தையும் ஒரு காலத்தில் இந்த நாட்டின் முதலமைச்சராக வரலாம். ஏன்? குடியரசுத் தலைவராகவே வரலாம். அப்படிப்பட்ட குழந்தைகள் இந்த நாட்டுக்குச் சொந்தக்காரர்கள். அவர்கள் கொடுக்கின்ற வரிப்பணம், நாம் கொடுக்கின்ற வரிப்பணம் அவர்களுக்கு உணவாகப் போகிறது. ஆகவே, அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அங்கே சாப்பிடுகிறவர்கள் என்கின்ற எண்ணத்தோடு உரிமையோடு நிம்மதியோடு இருக்கின்ற நிலைமையை உருவாக்க முயலுகிறோம்.
இந்த நல்ல காரியத்துக்கு யாரும் எதிர்ப்புச் சொல்ல முடியாது. நியாயமும் இல்லை. காரணமும் இல்லை. ஆகவே, இதுவரை எதிர்ப்புக் கருத்துகள் அதிகமாகச் சொல்லப்படவில்லை. நடக்குமா என்றுதான் சந்தேகப்படுகிறார்களே தவிர, இது நடக்கக் கூடாதது. வேண்டாதது என்று யாரும் சொல்லவில்லை. ஆகவே, நடத்த முடியும் என்பதைத் திட்டமிட்டுக் காண்பித்துவிட்டோம்.
நான் உண்மையிலேயே பெருமைப்படுகின்றேன். இந்த உணவையும் கொடுத்துப் பண்பையும் கொடுத்துக் குழந்தையிலிருந்து அவர்களுக்கு உடற்பயிற்சியையும் கற்றுக் கொடுத்தோமானால் எதிர்கால சந்ததிகள் எந்த நாட்டு விளையாட்டுக்காரர்களோடும் போட்டி போடக் கூடிய அளவுக்கு அவர்கள் வளர முடியும்.
அறிவியிலிலே அவ்வாறு போட்டிபோட வேண்டுமென்றாலும் அங்கே போட்டிபோட அந்தத் திறமையைப் பெற முடியும் என்பதை மகிழ்ச்சியோடு சொல்லி, அங்கே தூரத்திலே கை ஆட்டுகிறவர்களுக்கு என் நன்றியைச் சொல்லி இந்த வாய்ப்பைத் தந்ததற்கு நான் நன்றி கூறி இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்க என் தாய் எனக்கு இந்த ஆயுளைத் தந்ததற்காக என் அன்னையை நான் வணங்கி இது வெற்றி பெறவேண்டும். இது மக்களுக்கு நல்லதாக அமைய வேண்டும் என்று கூறி இதைத் தொடங்கி வைக்கின்றேன்.”
வள்ளற் பெருமான் பசியால் ஏற்படும் முப்பத்தாறு துன்பங்களை பட்டியலிட்டு எழுதியிருப்பதைப் படிக்கும்போது நம் நெஞ்சம் உருகும். பசியாற்றுவதற்காகவே சத்திய தரும சாலையை தொடங்கிய பெருமை வள்ளலார் வடலூரில் தொடங்கிய அமைப்பாகும். அன்று தொடங்கிய பசியாற்றுவித்தல் இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…
– ஔவை நடராசன், தொடர்புக்கு: thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *