POST: 2020-06-01T09:25:47+05:30

தின செய்தி நாளிதழில் இன்று (01.06.2020) வெளியான முனைவர் ஒளவை நடராசன் அவர்களின் கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி – 37)

‘‘பொன்மனத்துக்கு புகழ் சேர்த்த வெள்ளையானை விருது..!’’

ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்

நான் தமிழ்ப் பல்கலைக்கழத்தில் பணியாற்றியபோது, எனக்கு வேடிக்கையான ஒரு சிந்தனை தோன்றியது. அதை வேடிக்கை என்று சொல்லக்கூடாது. புரட்சித்தலைவர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தைப் பற்றி தொடக்கம் பெற்ற நாளில் பேசியபோது, இவ்வளவு பரந்து விரிந்த இடத்தில், தமிழகத்துக்குப் பெருமை தருகின்ற வகையில், ஒரு யானையும் எடுப்பான குதிரையும்கூட வாங்கி நாள்தோறும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தைச் சுற்றிவருமாறு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சொன்னார். ஏதோ பேச்சு வந்தபோது அப்படி குறிப்பிட்டார்களே தவிர, அதைப் பற்றிய நினைவை பிறகு தொடரவில்லை. சாரணர் இயக்க மாபெரும் அணிவகுப்பில், வெள்ளி யானை விருது பெற்ற நிகழ்ச்சியை படித்ததால் இந்த நினைவு வந்தது.
எனினும், நான் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்குப் பத்தாண்டுகள் கழித்து வந்தபோது, செட்டிநாட்டரசருக்குக் கடிதம் எழுதி, ஓர் அழகிய பந்தயக் குதிரையைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்துக்கு வழங்க வேண்டுமென்றும், அதேபோல, கேரள மாநில முதலமைச்சருக்கு மடல் எழுதி, ஒரு யானையைப் பரிசாகத் தர வேண்டுமென்றும் கேட்டிருந்தேன்.

பணியாற்றுபவர்களுக்கே போதிய சம்பளம் தர முடியாத இடரான நிலையில், ஆனை கட்டி வைத்து பல்கலைக்கழகத்தில் ஒரு கவளம் கூட தர முடியாத கவலை உருவாக வேண்டுமா என்று சொல்லி அந்த எண்ணத்தை அப்படியே விட்டுவிட்டேன். இளைஞர்களை, பள்ளி மாணவர்களை, கல்லூரி மாணவர்களை ஓர் அணிவகுப்பாக நிறுத்திக் காண்பதில் புரட்சித்தலைவருக்கு மனத்தில் பெரிய மகிழ்ச்சி விளையும்.
புரட்சித்தலைவர் தன் வாழ்க்கையில் வருந்தியதாக ஒன்றைக் குறிப்பிட வேண்டும் என்றால், இளம் பருவத்தில் பள்ளியில் கல்வி பயில முடியாமல், அரிய வாய்ப்பை இழந்துவிட்டேன் என்றுதான் பலமுறை சொல்லி வருந்தினார். எனவே, பள்ளி மாணவர்கள் அணிவகுத்து நிற்கும் காட்சியைக் காணும்போது அவருக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி ஏற்படும். பள்ளி மாணவர்கள் சாரணர் இயக்கத்தில் சேர்ந்து அவர்களுக்கே அமைந்த சீருடை அணிந்துகொண்டு அணிவகுப்பு நடத்துவதைக் கண்டு அவர் பெரிதும் மகிந்தார்.
புரட்சித்தலைவருக்கு இளைஞர்கள் மீது பெரிய விருப்பம். அதுவும் பள்ளி மாணவர்களைப் பார்த்தால், அவர்கள் மீது பரிவைக் கொட்டுவார். நூற்றுக் கணக்கான பள்ளிப் பிள்ளைகளுக்கு ஏன் கல்லூரி மாணவர்களுக்கு ஆயிரக்கணக்கில் கல்விக் கட்டணம் கட்டியதை நான் முன்னரே குறிப்பிட்டுள்ளேன். மாணவர்களைப் போலவே, மரஞ்செடி கொடிகளையும், வீட்டு, வன விலங்குகளையும் விரும்பி வளர்க்கும் பழக்கம் அவருக்கிருந்தது.
யானையின் தலைமேல் அமர்ந்துகொண்டு புரட்சித்தலைவர் நடித்துப் பாடிய ‘நல்ல நேரம்’ திரைப்படத்தை ஒருமுறை நினைவுகூர்ந்தார்.

யானை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்று ஒருமுறை கேட்டார். தமிழ் இலக்கியத்தில் அதிகமாகப் பேசப்பட்ட உயர்ந்த விலங்கு யானைதான். யானையின் மந்தைகளையே மன்னர்கள் வைத்திருந்ததாகவும், புலவர்களுக்கு யானையைப் பரிசளித்ததாகவும் பாடல்கள் உள்ளன. அண்டிரன் என்ற வேந்தன் நாட்டில், “ஓர் இளம் பிடி பத்துச் சூலு ஈனுமோ” என்றே புறநானூற்றில் ஒரு வரி உண்டு. அண்மையில் ஒரு நகைச்சுவையான செய்தியைப் படித்தேன் என்று அவரிடம் சொன்னேன்.

ஒரு சர்க்கஸ் நடந்து கொண்டிருந்தது. அந்த சர்க்கஸில் பெரிய யானை ஒன்று, துடிப்பான இளைஞன் கட்டளையிட யானை அதற்கு இணங்கி, வலம் வந்ததும், மண்டியிட்டதும் துதிக்கையால் மாலையிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தன. அப்போது, ஒரு பள்ளி மாணவன் கேட்டானாம், இந்த யானை இப்படி இளைஞன் சொல்வதைக் கேட்கிறதே, இது எதனால் என்று வினவினான்.
ஜப்பானியச் சிறுவன், மனிதன் அவ்வளவு ஆற்றலுடையவன், அவனைவிட எத்தனை மடங்கு பெரிய விலங்கைக்கூட அவன் கட்டுப்படுத்திவிடுவான். அதற்கு இந்தக் காட்சிதான் ஒரு சாட்சி என்று சொன்னான். சீன நாட்டு சிறுவன், யானையைக் கட்டுப்படுத்துபவன் கையில் ஒரு மின் கம்பி இருக்கிறது. அந்த மின் கம்பி யானையின் அருகில் வர வர அதன் உடல் நடுங்கும், மதம் ஒடுங்கும். அப்போது, எந்த ஆணையிட்டாலும் அது கேட்டுப் பணியும் என்று சொன்னான். ஆனால், இந்திய நாட்டு இளைஞனைக் கேட்டபோது அவன் சொன்ன விடை, எல்லோரையும் வியக்க வைத்தது. யானை பெரிய விலங்கே தவிர, தன்னுடைய ஆற்றலைத் தெரியதாத விலங்கு அது. தன்னுடைய பலம் மட்டும் தெரிந்திருந்தால், சர்க்கஸ் இங்கே நடக்குமா என்று கேட்டானாம்.
இந்தப் பொருளில் இல்லையென்றாலும் யானையின் இயல்பை ஒரு திருக்குறள் காட்டுகிறது என்று கூறியபோது, புரட்சித்தலைவர் அந்தக் குறளைத் திருப்பிச் சொல்லச் சொன்னார். அந்தக் குறள்,
வலியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலி தாக்குரின் (திருக்குறள் 599)

அப்போது அவர் கேட்ட வினா, யானைக்கும் புலிக்கும் போர் நடந்தால், யானை வெல்லுமா? புலி யானையைக் கொல்லுமா? எது வெல்லும் எதைக் கொல்லும் என்று புலவர்களே மாறி மாறி குறிப்பிட்டார்கள் என்று நான் சொன்னேன்.

இவ்வளவும் நீட்டிச் சொல்வதற்கு காரணம் என்னவென்றால், சாரணர் இயக்கத்தில் நடைபெற்ற அணிவகுப்பைப் புரட்சித்தலைவர் கண்டு பேசிய உரையைத்தான் நாம் தொடர்ந்து படிக்க இருக்கிறோம்.

புரட்சித்தலைவருக்குச் சாரணர் இயக்கத்தின் மாபெரும் விருதான ‘வெள்ளை யானைப் பரிசை’ அவருக்கு அந்த அணிவகுப்பு நிறைவில் வழங்கினார்கள். யானை வடிவம் கொண்ட சங்கிலியை அணிந்து கொண்ட புரட்சித்தலைவர், யானையைப் பற்றி நினைவு கூர்ந்து பேசியதோடு மட்டுமல்லாமல், சாரணர் இயக்கத்தின் கடமை, திறமை, நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்ற உறுதிப்பாடு, நம்பிக்கை நல்லெண்ணம் இவைகளை வற்புறுத்திப் பேசினார்.

அந்த உரை…

‘‘தியாகம் செய்கிறவர்கள், தியாகத்திற்கு மட்டும்தான் சொந்தக்காரர்கள் என்கிற வரலாறு மாற்றப்படும்போதுதான் சாரணர் இயக்கத்தின் முதல் கொடி பறக்கவிடப்படும். எனக்குத் தகுதி இருக்கிறதோ இல்லையோ, தகுதி உள்ளவர்கள் எனக்கு வெள்ளி யானை பரிசு அளித்துள்ளனர்.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். என்னைப் பொறுத்தவரை இருக்கும்போது என்ன விலை மறைந்த பிறகு என்ன விலை என்று தெரியாது. ஆனால், இந்த வெள்ளி யானையைத் தந்திருப்பதன் மூலமாக என் கடமைக்கு ஒரு பாலம் அமைத்து, நான் செல்லும் பாதையை எச்சரிக்கையாக, சரியாகச் செல்ல வேண்டும் என்று தரப்பட்டது என்று கருதுகிறேன். எனக்கு அளிக்கப்படும் பரிசுப் பொருட்களை உடனே சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்துவிடுவேன்.

ஆனால், இங்கு அளிக்கப்பட்ட வெள்ளி யானைப் பரிசை மட்டும் இன்னும் கழற்றவில்லை. இதனால் இதற்கு எவ்வளவு மரியாதை தருகிறேன் என்பதை அறியலாம். இதனால், மற்றவற்றிற்கு மரியாதை இல்லை என்று பொருள் அல்ல. அறிவாற்றலும், கடமை ஆற்றலும் உணர்த்துவதால் இதனைப் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அப்படியே வைத்துள்ளேன்.
இந்தியா ஒரு நாடு என்பதும், அனைவரும் ஒரு குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் உங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. நாம் அனைவரும் ஒருகுலம் என்பதைக் காட்டும் வகையில் இங்கே பரவியுள்ளார்கள். இங்கே இளைஞர்களாக உள்ள நீங்கள் குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சாரணர் இயக்கத்தில் 4 ஆண்டுக் காலத்தில் 70 ஆயிரத்திலிருந்து ஒன்றரை இலட்சம் பேராக உயர்ந்திருப்பது கண்டு மகிழ்ச்சியடைகிறேன். அது மட்டுமல்ல இந்தியா முழுமையும் கணக்கிட்டுப்பார்த்தால் 7 இலட்சம் பேர் உள்ளனர். இதில் இந்த ஒன்றரை இலட்சம் எந்த விகிதாசாரம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
இது பெருமைக்குரியது என்றாலும் அனைத்து மாநிலங்களிலும் இதைப் பின்பற்றவேண்டும் என்பதுதான் நம் ஆசையாகும். நடை, நடத்தை என்பதை நாம் பிரித்துப் பார்க்கக்கூடாது. நடைதான் நடத்தையாகிறது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். ஏனெனில் நடை ஒழுங்காக இல்லை என்றால் அவர் குடித்துவிட்டார் என்கிறோம்.

குடித்துவிட்டார் என்றால் நடத்தை கெட்டவர் என்கிறோம். அதுபோல, ஒழுங்காக நடைபோடுவதும் ஒழுங்காகப் பணியாற்றுவதும், நாட்டில் உள்ள அனைவருடைய இன்றியமையாத கடமை-பொறுப்பு என்பதை உணரவேண்டும்.
இன்னொன்றையும் சொல்கிறேன். நாம் பிறரைத்தான் விமர்சனம் செய்கிறோமோ தவிர நம்மை அல்ல. தன்னைத்தானே விமர்சனம் செய்து கொள்வதில்லை. முதலில் நம்மைத் திறனாய்வு செய்த பின்னர்தான் மற்றவர்களைத் திறனாய்வு செய்யவேண்டும். அதுபோல நம்மை வலிவாக-உறுதியாக வைத்துக்கொண்டால்தான் மற்றவர்களுக்கு ஆலோசனைக் கூறமுடியும்.

ஓடுவதிலும், தாண்டுவதிலும், நீந்துவதிலும், எங்கு உதவி தேவையோ அங்கே உதவி தரும் வகையில் கயிற்றின் உதவியினால் பள்ளத்திலிருந்து மேலே வரவும், இங்கேயுள்ள சாரண சாரணியர் ஒவ்வொருவரும் பழக்கப்படுகிறீர்கள். உங்களை நான் பணிந்து கேட்டுக்கொள்வேன். எந்த வயதிலும் இந்தப் பயிற்சியை தேகப் பயிற்சியை நல்ல பழக்கத்தை கைவிட்டு விடாதீர்கள் என்பதுதான். நான் இன்னொன்றையும் கூறுவேன். நாட்டு மக்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுப் பார்த்தால், சாரணர் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதை அதிகப்படுத்த வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள குழந்தைகள் அதில் ஈடுபட வேண்டும். அதனால்தான் நாங்கள் உதவி செய்கிறோம். இந்த எண்ணிக்கை வளர வேண்டும் என்பதுதான் என் ஆசை.
பெரியவர்கள் சொல்ல முடியாததை ஒரு மாமன்னன் இளம் வயதில் சொன்னான் என்று தமிழ் இலக்கியத்தில் சொல்லுவார்கள். அதுபோல் நீங்கள் அதிகமான பேர்களுக்கு கல்லாத முதியோர்களுக்கு கல்வி சொல்லிக்கொடுக்க வேண்டும்.
எனக்குத் தங்க யானை தர வேண்டும் என்று சிலம்புச் செல்வர் ம.பொ.சி. விரும்பினார். வேண்டுமானால் கிடைத்தால் போட்டுக் கொள்ளலாம். தமிழகத்தில் ஏழைக் குடிமக்களுக்கு இன்னும் தங்கத்தாலி கொடுக்க முடியவில்லை. அதை நினைவுப்படுத்தத்தான் வேறு வகையில் நினைவுபடுத்தினார் என்று நினைக்கிறேன். அவருக்குச் சொல்லிக்கொள்வேன். எங்களால் ஆன கடமையைச் செய்வோம் அதை அதிகப்படுத்துவோம். உருவத்தில் சிறிய – கருத்தில் பெரிய யானையைத் தந்தார்கள். துணிந்து சொல்லுங்கள் என்று சிலம்புச் செல்வர் ம.பொ.சி. கூறினார். அண்ணாவின் கொள்கைப்படி எங்கள் கடமையைத் தொடருவோம்.”

தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…
– ஔவை நடராசன்,
தொடர்புக்கு: thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *