உச்சத்தில் ஏற்றி மெச்சும் உறவாளர் !
==================================
ஔவை அகவை 85 – திரு.செயப்பிரகாசு.
அன்பு மடல் அகவை 58.
நண்பர் கண்ணன் வரைந்திருந்த வாழ்வுரை மடல் பார்த்தேன்.நானும் பகிர்கிறேன்.
கம்பன் கழகம் நடத்திய கல்லூரிப் பேச்சு போட்டி காலத்தில் தான் ஔவை நடராசன் எனும் தமிழ் மேதையைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவரின் அருகில் எப்போதும் இளைஞர் கூட்டம் இருக்கும்.என் தமிழ்ப் பேச்சு அவருக்குப் பிடிக்க என்னையும் அருகில் பாசமாக வைத்துக் கொண்டார். செயப்பிரகாசம் என்று அழைத்துப் பல இலக்கியக் கூட்டங்களுக்குப் பரிந்துரை செய்தார். என் பேச்சின் திறனைப் பலரிடம் பேசிப் பெருமிதம் கொள்வார்.இந்தப் பண்பு தான் அவர் மீது எனக்கும் பலருக்கும் காதல் வரக் காரணம்.பல மேடைகளில் என் பேச்சைக் கேட்டு ஒரு மேடையில் “சிந்தனைத் தென்றல்” என்ற பட்டத்தை வழங்கி என்னைத் தன் இதயத்தில் வைத்துக் கொண்டார்.துணை வேந்தர்,அரசு செயலாளர்,தமிழறிஞர்களின் தலைமகன் என்ற அடுக்குகளில் அவர் இருக்கிறாரே என்று நான் விலகி நின்றால் அவரது கரங்கள் மயில் தோகைபோல்(ராசா எனத்) தோள் தழுவும்.
மொழி,இலக்கியம்,அரசியல்,மனிதம் எதன்மீதும் நமக்கிருக்கும் அறியாமையை நீக்கும் அகல் விளக்கு தான் அவ்வை. அவர் தலைமையில் இளைஞர் கூடி ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது.
உட்லன்சு உணவகத்தில் உப்புமா சாப்பிட்டுக் கொண்டே நான் சொன்ன “செயல்” என்ற பெயரை சிலாகிதத்து முன் மொழிந்தார். 1986ம் ஆண்டு ஜேப்பியார் நடத்திய தமிழக அளவிலான கல்லூரிப் பேச்சுப் போட்டியில் என் பேச்சுக்கு முதல் பரிசு வழங்கி என்னை உச்சம் உயர்த்தி தாயென அழகு பார்த்தார். நான் பாரதிராஜாவின் உதவியாளர் என்ற நிலையில் நான் அழைத்த போது வந்து படம் பார்த்து எனக்கு பரிவைத் தந்தார். தன் பிள்ளை போல என்னையும் இதயம் தாங்கி உள்ளார் எனத் தம்பி அருள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.இந்த ஆண்டு நான் பெறப் போகும் தமிழ் முனைவர் பட்டத்தை அவரிடம் காட்டி வாழ்த்துப் பெறப் போகிறேன்.
வருகிறேன் ஆசானே!
உங்கள் மாணவன்
திரைப்பட இயக்குநர்
வீ.செயப்பிரகாசம்.

Add a Comment