தின செய்தி நாளிதழில் இன்று (03.05.2020) வெளியான கட்டுரை
6. அருந்தமிழும் அன்றாட வழக்கும்
தமிழாக்கம் செய்த சொற்கள்..!
– முனைவர் ஔவை ந.அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,
தமிழ்நாடு
===============================================
மணிமேகலை
மணிமேகலைக் காப்பியத்தைத் தொடக்கமுதல் படிக்கும்போது, வடசொற் கலப்பும், புத்தமதக் குறியீடுகளும் பல்கியிருத்தலைக் காணலாம். சமயக் கணக்கர் தந்திறம் கேட்ட காதை, பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை, தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை என்ற மூன்றும் பிறமொழிச் சொற்களே பெருகிய சமயப் பாடல்களாக உள்ளன.
வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தோடு புணர்ந்த சொல்லா கும்மே
என்ற தொல்காப்பிய விதிப்படித் தமிழ்மொழிக்குகந்த நெறியில் சொற்களைச் சாத்தனார் அமைத்திருப்பது கருதத்தக்கது. தேசநாம சாதி, சாமானியம், திட்டாந்தம், அநன்னுவயம், கெளடிலச் சாமம், விசேடியம், பித்தியக்கம், விசேடனம், உபயதன்மனிகலம், தன் மாத்தி காயம், பிக்குணி, சேரியம் போன்ற சொற்களை இதற்குச் சான்றுகளாகக் கொள்ளலாம்.
தண்டமிழாசானாகிய சாத்தனார் பெருமளவில் அயன்மொழிக் குறியீடுகளைத் தழுவினாரே என்று குறை காண்பதற்குத் தீர்வு போல “மொழி பெயர்த்து, அதர்ப்பட யாத்தல்” என்ற தொல்காப்பியத்துக்கிணங்கத் தமிழாக்கம் செய்த சொற்களும் தொடர்களும் பல இடம் பெற்றுள்ளன. பெளத்தர் கூறும் “சத்தியத்தை வாய்மை’’ எனவும், “துவாதச நிதானங்களை”ப் பன்னிரு சார்புகள் எனவும், “தருமத்தை” அருளறம் எனவும், “புத்ததன்மசங்க”த்தை “முத்திறமணி’’ எனவும், “தருமசக்கரத்தை அறக்கதிராழி” எனவும், “சயித்தியத்தைப் புலவோன் பள்ளி” எனவும், “ஏது பிரபவ தர்மம் என்பதனை ஏது நிகழ்ச்சி’’ எனவும், நிருவாணத்தைப் பெரும்பேறு எனவும் தமிழாக்கியுள்ளார்.
இன்பம் வீடே பற்றிலி காரணம்
ஒன்றிய உரையே வாய்மை நான்காவது
பேதைமை செய்கை உணர்வே அருவுரு
வாயில் ஊறே நுகர்வே வேட்கை
பற்றே பவமே தோற்றம் வினைப்பயன்
இற்றென வகுத்த இயல்பு ஈராறும்
என நால்வகை வாய்மைகளையும், பன்னிரு சார்புகளையும் தமிழாக்கிக் காட்டினார். இவ்வாறே, “பிரமாணத்தை அளவை’’, “பாரி சேடத்தை மீட்சி’’, ‘‘சம்பவத்தை உண்டாநெறி”, ‘‘விபரீதத்தைத் திரிதல்’’, ‘‘சந்தேகத்தைக் கவர்கோடல்’’, ‘‘பிரத்தியக்கப் பிரமாணத்தைக், கண்கூடு அல்லது காட்சி”, ‘‘அனுமானப் பிரமாணத்தைக் கருத்தளவு”, ‘‘ஆபாசத்தைப் போலி” என்றெல்லாம் தமிழ்ச் சொற்கள் ஆளப்பட்டிருப்பதையும் குறிப்பிடலாம். அயன்மொழியை ஆளும் அதே நேரத்தில் இயன்றளவு தமிழாக்கம் செய்யும் எண்ணமும் அந்நாளைய நூலாசிரியர்க்கு இருந்தது எனலாம். சாத்தனார் ஒலி வரம்புக்கும் வழிகாட்டினார். பாலி, வடமொழி கற்ற பன் மொழித் தமிழர். எனவே, மணிமேகலைக் காப்பியத்துள் வரும் சாதுவனை, மற்றவர் பாடை மயக்கறு மரபிற் கற்றனன் ஆதலின் என்றபடிப் பிறமொழி வல்லாளனாகப் படைத்துக் காட்டினார். பாலி, பிராகிருதம் என்னும் இருமொழிகள் வடமொழித் தொடர்புடையனவாகவிருந்தும் வடமொழிக்குரிய முக்கூட்டு உருபுகளை நீக்கித் திராவிட மொழிகள் பயன்படுத்தும் உருபுகளைக் கையாள்கின்றன என்ற கருத்தும் நோக்கத்தக்கது.
பக்தி இலக்கியங்கள்
பதினோராம் நூற்றாண்டு முதல் பதினாறாம் நூற்றாண்டு வரையில் சைவ சித்தாந்தம், வைணவம், அத்வைதம் ஆகிய மூன்று சமயத் துறையினரும் தம் கொள்கைகளைப் பரப்பியபோது, தமிழில் பிற சொற்களைக் கலந்தனர். இந்த அயற்சொற்கள் பெரும்பாலும் திரியாமலே தமிழில் புகுந்தன. சில சொற்களே தமிழொலிக்கு ஏற்பத் திரிந்தன. வட மொழிக் கலப்புத் தமிழில் மிகுந்த காலமாகப் பக்தி இலக்கியக் காலத்தைக் கருதலாம். கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்தோ, அதற்குச் சிறிது முன்னரோ வடமொழியின் கலப்பும் முதன்மையும் தொடங்கின.
தென்னகம் வடமொழிக் கல்வியின் மையமாயிற்று. இரண்டாம் இராசசிம்மனின் அவைக்களத்தில் தண்டி முனிவர் இடம் பெற்றிருந்தார். பின் சங்கரரும், இராமானுசரும் அக்காலத் தமிழ் நாட்டிலிருந்து தமது சமயநுணுக்கக் கோட்பாட்டினைப் பரப்ப இந்திய நாட்டின் பிற மாநிலங்களுக்குச் சென்றனர். சங்கரரும் பிறரும் ‘திராமிட சாரியர்’ (Dramidacarya என்பவரைக் குறிப்பிட்டுள்ளனர். இக்காலத் தொடக்கத்தில் செப்புப் பட்டயங்கள் வட மொழியில் வரையப்பட்டன. வடமொழியில் காணப்படும் சைவ வைணவ நூல்களில் சில தென்னகத்திலிருந்தே தோன்றியிருக்கலாம்.
வடமொழியின் செல்வாக்கால் சபை, கணம், சதுர்வேதி, மங்கலம், அர்ச்சன், ஈச்சுரன், விட்டுணு போன்ற வட சொற்கள் தமிழ் வடிவம் பெற்றன. இக்காலத்து மன்னர்கள் தம் பெயர்களில் வட மொழியைப் புனைந்தனர். நிருபதுங்கன் இராசராசன், இராசேந்திரன், குலோத்துங்கன் என்ற பெயர்கள் தமிழகத்தில் நிலவலாயின. வடமொழி பிராகிருத மொழி வல்லாண்மையைக் கொள்கை நிலையில் எதிர்த்தாலும், சொற்கலப்பை, சிலகோட்பாடுகளை மறுக்க முடியாமல் இருந்தனர். சான்றாக வடமொழியும் தென்மொழியும் மறைகள் நான்கும்
ஆனவன்காண் – அப்பர் தேவாரம்.
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் – அப்பர்.
செந்தமிழோடு ஆரியனைச் சீரியனை – அப்பர்.
தமிழ்ச் சொல்லும் வடசொல்லும்
தாள்நிழல் சேர – சம்பந்தர் தேவாரம்.
மன்னு மறைநான்கும் ஆனானைப் புல்லாணித்
தென்னர் தமிழை வடமொழியை – நாலாயிரம்.
என்னும் வரிகளைக் காணும்போது, வடமொழிப் பரிவும், கொள்கைக் கலப்பும் அந்நாளில் இருந்தன என உணரலாம். சங்க நூல்களை நான் ஆராய்ந்தாலும், என் தமிழுணர்வைச் சமயநூல்களில் கலந்திட முடியாமல் இருந்தேன் என்று என் பாட்டனார் உரைவேந்தர் ஒளவை துரைசாமி கூறியதோடு, ‘அறைகடல் வரைப்பில் பாடை அனைத்தும் வென்று ஆரியத்தோடு உறழ்தரு தமிழ்த் தெய்வத்தை உள் நினைந்து ஏத்தல் செய்வாம்’ என்று சீகாளத்திப் புராணமுடையாரும், மறைக் கத வினைத் திறந்தது கன்னித் தண்டமிழ்ச் சொற்களோ மறுபுலச் சொற் களோ எனப் பாடி மகிழ்வதையும் கருத வேண்டும்’ என்றார்.
– முனைவர் ஔவை ந.அருள்,
தொடர்புக்கு: dr.n.arul@gmail.com

Add a Comment