POST: 2020-04-20T11:15:38+05:30

தினசெய்தி நாளிதழில் இன்று (20.04.2020) வெளியான முனைவர் ஔவை நடராசன் கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி – 31)
**************************************************************

‘‘கட்சிகளை விட நாடே பெரியது..!’’
===========================
ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்

இரு மனங்கள் ஒரு குடும்பமாவது ஒரு பெரிய வளையத்தின் தொடக்கமாகும். இந்த வளைவு மொழி, இனம், நிறம் என்றெல்லாம் நெளியும். நெளிவுகளை இணைத்துக்கொண்டுதான் நெளிவுகள் வட்டமாகும். விட்டுக்கொடுப்பதும், எட்டிப்பிடிப்பதும், கட்டி அணைப்பதுமாக உலக வாழ்வு ஒருமைப்பாட்டிற்கு உரம் சேர்க்கிறது. வேறுபாடுகளைப் பிரிக்கும் மாறுபாடுகளாக நிலைக்காத பெருமிதம் கொண்ட இனத்தில் தமிழ் இனத்திற்கு தகுதியான ஓர் இடமுண்டு.

“தனி நபரைவிடக் குடும்பம் முக்கியமானது; குடும்பத்தைவிட வாழ்கின்ற நகரம் முக்கியமானது நகரத்தைவிட நாடு முக்கியமானது; ஓர் அரசியல் கட்சியைவிட நாடு பெரிது. முக்கியமானது” என்று அறிஞர் அண்ணா அவர்கள் விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள். நாட்டுச் சுதந்திரமில்லையெனில் அரசியல் கட்சிகள் வாழமுடியாது; வளர முடியாது. இந்தக் கருத்தை எடுத்துக் கூறிய அறிஞர் அண்ணா அவர்கள் காட்டிய வழியில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டு வருகிறோம் என்பார் புரட்சித் தலைவர். இதனை தில்லி உரையிலும் அவர் மேற்கோளிட்டு குறிப்பிட்டிருக்கிறார்.

இதுதான் உலகம் என்ற தொடக்கத்தையும் மொழிப் பெருமை என்ற முழக்கத்தையும் 5000 ஆண்டைய தமிழ் இலக்கியங்களில் மணி இழையாகும். இந்த நோக்கத்தில் தமது அரசியலை, இயக்கத்தை, மொழி உணர்வை ஒருமைப்பாடு என்ற பூமாலையில் புரட்சித்தலைவர் தொடுத்துக் காட்டிய தில்லிப் பேருரையின்(12/11/1980) சிந்தனை ஓட்டமாக மின்னுகிறது.

இதோ அந்த உரை…

“இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை அளித்தமைக்காக மாண்புமிகு பிரதமர் அவர்கட்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாதிரிக் குழுக் கூட்டத்தில் பல்வேறு வகையான கருத்துகள் வெளியிடப்படுவதனால் மிக்க பயன் உண்டு. என்னுடைய கருத்தையும் வெளியிட இந்த வாய்ப்பினை நான் பயன்படுத்திக் கொள்வதில் தவறு ஏதுமில்லை என்று கருதுகிறேன்.

தேசிய ஒருமைப்பாட்டுக் குழுக் கூட்டம் இப்பொழுது முதன் முறையாகக் கூடுகிறது. ஆனால், எங்களுடைய கருத்தைக் குழுவின் முன் எடுத்து வைக்கவும், அவை குறித்து விரிவாக விவாதம் நடத்தவும் போதுமான கால அவகாசம் இல்லை. இந்தப் பிரச்சனைகள் குறித்து விரிவாக எடுத்துச் சொல்ல எனக்கு நேரம் இருக்காது. என் முன் உள்ள காலமின்மையை நான் உணருகிறேன். எனக்குக் கிடைத்துள்ள சிறிதளவு கால அவகாசத்தில் சில கருத்துகளை மட்டும் வலியுறுத்தி விளக்கிடப் பெரிதும் விழைகிறேன். அப்படிக் கூறுவதன் மூலம், என்னுடைய கருத்துகளை எடுத்துக் கூறுகின்ற வாய்ப்பினை நல்லமுறையில் பயன்படுத்துவதாகவே நான் கருதுகிறேன். இங்கே எழுப்பப்பட்ட பல்வேறுபட்ட பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதிக்கும் வகையில் நம் அனைவருக்கும் முழுமையான அளவில் வாய்ப்புகள் எதிர்காலத்தில் அளிக்கப்படும் என நம்புகிறேன்.

தேசிய ஒருமைப்பாடு என்று நான் கூறும்பொழுது, அது ஏதோ நாட்டின் பல்வேறு மாநில அரசுகளுக்கிடையே ஏற்படுத்தக்கூடிய நிலவவேண்டிய ஓர் ஒற்றுமை நிலையைக் குறிப்பதாகவோ, மத்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையே அமையக்கூடிய உறவுகள் குறித்துக் குறிப்பிடுவதாகவோ என்னைப் பொறுத்தவரையில் அந்த மாதிரிப் பொருளில் அத்தொடர் பயன்படுத்தப்படுகிறது என்று நான் கருதவில்லை. தேசிய ஒருமைப்பாடு என்பது அப்படிப்பட்ட ஒரு கருத்தினை உள்ளடக்கியதா என்பதை நான் சந்தேகிக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரையில், நமது நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் நெஞ்சத்திலே இந்த ஒருமைப்பாட்டு உணர்வு வேரூன்றி நிலைக்க வேண்டும் என்பதே என் கருத்தாகும். இதுவே, என்னுடைய இதயக் கிடக்கையாகும். தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற வகையில், இந்தக் கருத்தைச் சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது என்றே கருதுகிறேன். இந்தக் கருத்தை நான் வலியுறுத்தும்பொழுது, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு கருணாநிதி அவர்கள் இதே கருத்தை இங்கு எடுத்துக் கூறியதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

ஓர் அரசியல் கட்சியின் சார்பாக நான் என்னுடைய கருத்தை இங்கே எடுத்துச் சொல்லவில்லை. அவைவருக்கும் பொதுவான ஒரு கருத்தைத்தான் நான் இங்கே எடுத்து வைக்கிறேன் என்பதை இங்கே குழுமியுள்ள உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன். தேசிய ஒருமைப்பாடு என்று கூறும்பொழுது, சாதிப் பாகுபாடு குறித்தோ, வகுப்புவாரிச் சக்திகள் என்ற கருத்தில் மட்டுமோ அதை எடுத்துக் கொள்ளலாகாது என்பதை நான் வலியுறுத்திக் கூறவிரும்புகிறேன். அந்தக் கருத்தில் அதை எடுத்துக் கொள்வது மட்டும் போதாது. அதற்கு மேலும் முக்கியமான ஒரு கருத்தினை அது உள்ளடக்கியுள்ளது.

இன்றைய நமது சமுதாயத்தில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் நம் சமுதாயத்தில் மண்டிக் கிடக்கின்றன. பல்வேறு மாநிலங்களிடையே பொருளாதார மட்டத்தில் ஒன்றோடொன்று மாறுபட்ட பல்வேறு விதமான அளவுகோல் இருக்கக்கூடாது. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வாழுகின்ற மக்கள் சமுதாயத்திற்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டும். தேசிய ஒருமைப்பாட்டுணர்வு வேரூன்றி ஓங்கி வளரவேண்டுமெனில் அப்படிப்பட்ட வேறுபாடற்ற சூழ்நிலையை நாம் உருவாக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றுவதற்கு முன், திராவிட முன்னேற்றக் கழகம்; அதற்கு முன்னால் திராவிடக் கழகம் என்பது வரலாறு. அந்தக் காலத்தில் அடிப்படையான சில சமுதாயக் கருத்துகள் அரசியல் கோட்பாடுகள்-சமுதாயத்தில் வர்க்க பேதமற்ற சமத்துவ நிலை அனைவருக்கும் சமத்துவமான வாய்ப்புகள் என்ற இலட்சியக் கோட்பாடுகள் மலர்ந்தன. இப்படிப்பட்ட அடிப்படை இலட்சியங்கள் இன்றும் தொடர்ந்து நிலவி வருகின்றன. இந்தக் கோட்பாடுகளை நாம் தொடர்ந்து ஏற்றுக்கொண்டு செயலாற்றி வருகின்றோம். இந்த அடிப்படைக் கருத்துகளைவிட்டு, நாங்கள் என்றும் விலகி பாதை மாறிச் சென்றதில்லை.

ஒரு காலகட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகமானது பிரிவினையைப் பற்றி பேசியிருக்கலாம். அதைப்பற்றி நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். ஜனாப் ஜின்னா அவர்கள் பிரிவினைக் கோரிக்கையை வலியுறுத்திக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், அந்த மாதிரி ஓர் உணர்வு தமிழகத்திலும் இருந்தது உண்மைதான். ஆனால், அறிஞர் அண்ணா அவர்கள், பல ஆண்டுகளுக்கு முன்பேயே, இந்தப் பிரிவினைக் கோரிக்கையைத் தன்னுடைய கட்சி கைவிட்டுவிட்டது என்று எந்தவிதச் சந்தேகத்திற்குமிடமின்றி திட்டவட்டமாக அறிவித்தார்.

நாடு முழுமையான அளவில் சுதந்திரம் பெற்ற பிறகுதான், மாநிலங்கள் தங்கள் விருப்பப்படி வாழமுடியும் என்றும் அறிவித்தார். அறிஞர் அண்ணா அவர்கள் இந்தக் கருத்தினை திட்டவட்டமாக எடுத்துக் கூறினார்கள். அதை இங்கே எடுத்துச் சொல்வது என்னுடைய கடமையென நான் கருதுகிறேன். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், எங்களில் யாருக்குமே இந்தப் பிரிவினை உணர்வு என்பது கிஞ்சிற்றும் கிடையாது.

அதுமட்டுமல்ல அறிஞர் அண்ணா அவர்கள் மேலும் ஒரு கருத்தை எடுத்துக் கூறினார்கள். “தனி நபரைவிடக் குடும்பம் முக்கியமானது; குடும்பத்தைவிட வாழ்கின்ற நகரம் முக்கியமானது நகரத்தைவிட நாடு முக்கியமானது; ஓர் அரசியல் கட்சியைவிட நாடு பெரிது. முக்கியமானது” என்று அறிஞர் அண்ணா அவர்கள் விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள். நாட்டுச் சுதந்திரமில்லையெனில் அரசியல் கட்சிகள் வாழமுடியாது; வளர முடியாது. இந்தக் கருத்தை எடுத்துக் கூறிய அறிஞர் அண்ணா அவர்கள் காட்டிய வழியில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டு வருகிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். எங்களால் முடிந்த தியாகத்தை நாங்கள் என்றும் செய்வோம். அறிஞர் அண்ணாவின் கருத்துகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கவே நாங்கள் விழைகிறோம். அறிஞர் அண்ணாவின் அடிச்சுவட்டை ஒற்றி அவர் காட்டிய வழியில் தொடர்ந்து நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், ஆதி திராவிட நல முன்னேற்ற நலன்களில் நாங்கள் மிகுந்த ஈடுபாடு கொண்டு இருக்கிறோம். அவர்கள் நல்வாழ்வுக்கான முன்னேற்றத்திற்காகப் பெரிய பெரிய திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறோம். ஆனால், அதே சமயத்தில் ஆதி திராவிடக் கிராமம் – ஆதி திராவிடக் காலனி என்று தனியாக ஒன்று இருக்கக்கூடாது என நாங்கள் விரும்புகிறோம். கிராமம் என்று பேசும்பொழுது எங்களுக்கு விவசாயிகளின் கவனம்தான் வருகிறது. தனியாக ஒரு குடியிருப்பு என்றால், ஆதி திராவிடர்களை மற்றச் சமூகத்தினரிடமிருந்து தனியாகப் பிரித்து வைக்கிறோம் என்றுதான் பொருள்படும். அப்படிச் செய்வதன்மூலம், சமுதாயத்திலே பல்வேறு சமூகத்தினரிடையே இனவேறுபாடுகளை நாம் தொடர்ந்து உருவாக்கிக்கொண்டு வருகிறோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

நம்முடைய வாழ்க்கை முறையில் நீண்ட நாட்களாகப் பீடித்துக் கொண்டுவரும் சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வைப் போக்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். ஆதி திராவிடர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுகின்ற மக்கள், ஆதி திராவிட மக்களாகவே மட்டும் இருப்பது கண்டு நான் மிகவும் வேதனைப்படுகிறேன். ஆதி திராவிடர்கள் முன்னேற்றத்திற்கு ஆதி திராவிட மக்கள்தான் பாடுபட முடியும் என்று சொல்வது தவறு. அவர்களது முன்னேற்றத்தில் மற்றவர்கள் அந்த அளவு அக்கறை கொள்வதில்லை. அந்த மாதிரியான கருத்துகள் இங்கே எடுத்துச் சொல்லப்படும்பொழுது அந்த மாதிரி ஒரு சூழ்நிலை நிலவுகிறது என்பதை நினைத்து நமக்கு வருத்தம்தான் ஏற்படுகிறது.

8 மாதங்களுக்கு முன்னால் தமிழ்நாட்டில் ஒரு பெரிய கிளர்ச்சியே நடந்தது. அடித்தட்டு சமுதாயத்தின் ஒரு பிரிவினர்; அவர்கள் சமூகத்தில் கீழ்மட்டத்தில் உள்ளனர். இன்னொரு பிரிவினர்; அந்த சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரது சடலம் இன்னொரு பிரிவினர் வசிக்கும் தெரு வழியாக எடுத்துச் செல்வதைத் தடுக்க ஒரு கிளர்ச்சியே நடைபெற்றது. சடலத்தைத் தூக்கி வந்தவர்கள் அப்படியே கீழே போட்டுவிட்டு உயிர் தப்பினால் போதும் என்று ஓடிவிட்டனர். இப்படி ஒரே சமுதாயத்தில் உள்ள இருவேறு பிரிவினரிடையே நிகழும் கொடுமையான செயல்களின் விளைவுகளை அவர்களுக்கு நாம் எடுத்துக்கூறக் கடமைப்பட்டுள்ளோம்.

இந்து, இசுலாமியர் பிரச்சனை குறித்தும் நாம் பேசி வருகிறோம். தமிழ்நாட்டில் இந்து, இசுலாமியர் என்ற பிரச்சனையே இல்லை. குறிப்பாகச் சொல்லப் போனால், எங்களுடைய ஆளுநர் அவர்கள் இசுலாமிய சமூகத்தைச் சேர்ந்தவர். காவல் துறைத் தலைவர் ஓர் இசுலாமியர். உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்கள் ஓர் இசுலாமியர். நான் நடித்த ஒரு திரைப்படத்தில்கூட ஒரு பாடல் காட்சியில் “மேரா நாம் அப்துல்ரகுமான்” என்று நான் ஓர் இசுலாமியன் என்ற பொருள்பட பாடியிருப்பேன். தமிழ்நாட்டில் இப்பிரச்சனையே இல்லை. இந்து, இசுலாமியர் என்கிற இனப்பாகுபாட்டில் நாங்கள் ஈடுபடுவதே இல்லை. சமூகத்தின் எல்லாப் பகுதியினரும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற இலட்சியப் பாதையில் எங்களை நாங்களே ஈடுபடுத்திக் கொண்டு, அப்பயணத்தை நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டுள்ளோம்.

இந்தச் சந்தர்ப்பத்தில் என் மனத்தில் எழுகின்ற அச்சத்தையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஆதி திராவிட மக்களின் நலனுக்கு நாம் அதிகம் செய்கிறோமோ இல்லையோ அதைப் பற்றி வெகுவாகப் பேச மட்டும் நாம் தயங்குவதில்லை. ஆதி திராவிடர்களுக்கு இன்ன இன்ன நன்மைகள் செய்கிறோம் என்று நாம் அதிகமாகப் பேசிக் கொண்டிருப்பதாலேயே ஒருக்கால் சாதி இந்துக்களின் கசப்புணர்ச்சியை நாம் சம்பாதித்துக் கொண்டு வருகிறோமோ என்றுகூட அச்சப்பட வேண்டியுள்ளது.

மேலும், சில விஷயங்களை நான் குறிப்பிட ஆசைப்படுகிறேன். அவற்றைப் பற்றி விரிவாகப் பேச நேரமில்லை. நமது நாட்டில் மொழி அடிப்படையில் மொழிவாரி மாநிலங்களை உருவாக்கியபிறகு, மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது என்று சொல்வது எந்த அளவு நியாயமான வாதம் என்று எனக்குப் புரியவில்லை. இதைப்பற்றி நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். பல பிரச்சினைகள் நம்மை எதிர்நோக்கியுள்ளன. இப்பொழுது நாம் தேசிய ஒருமைப்பாட்டைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். என்னுடைய மதிப்புக்குரிய நண்பர் திரு. கருணாநிதி அவர்கள் அதைப்பற்றி பேசியுள்ளார்கள். மொழி குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்துகள் எனௐக்கு ஒப்புதலானவே.

அதேபோல், பொருளாதார முன்னேற்றத்தில் கூட அதற்குத் தேவையான அடிப்படை அமைப்பு முறை உருவாக்கப்பட வேண்டும். நாடு முழுமைக்கும் ஒரே கல்வித்திட்டம் இருக்க வேண்டும் என்று அவர் சொன்னார். அந்தக் கருத்தைத்தான் அவர் வெளிப்படுத்தினார் என நினைக்கிறேன். அந்த மாதிரி செய்தால் அதற்கு எந்தவிதமான மாறுபட்ட அபிப்பிராயமும் இருக்க இடமில்லை. ஆனால், கல்வியளவில் இந்த மாதிரி செய்யப்படும்பொழுது கல்வியறிவு பெறும்பொழுதே மாணவர்கள் தொழில் குறித்துச் சில விஷயங்களையும் தெரிந்து கொள்வது அவசியம். பள்ளிகளிலேயே இதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.”

தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…

– ஔவை நடராசன், தொடர்புக்கு: thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *