POST: 2020-04-02T11:10:57+05:30

கல்வி உலகத்தின் கலங்கரை விளக்கம் !
=============================================

07.11.1920 – 29.03.2020

கல்வி நெறித் திலகம் பெரும் துணை வேந்தர் சை.வே.சிட்டிபாபு தன் பழுத்த வயதில் மறைந்தார் என்ற செய்தி நம் மனத்தை நெகிழ்விக்கிறது.

நூறாண்டுகள் வாழ்ந்த நுண்ணறிஞர் என்று கல்வி உலகம் அவர் திசை நோக்கி கை தொழுது வணங்கும்.

கடல் மடை திறந்தது போல் ஆங்கில உரையாற்றிய அழகை ஆயிரம் கல்லூரி அரங்குகள் கேட்டு மகிழ்ந்தன.

தமிழுக்கு எழுச்சி தோன்றியதும், தமிழில் பாங்குற பேசும் பேராற்றல் அவர்பால் நிரம்பி வழிந்தது.

கல்வி உலகத்தில் கலங்கரை விளக்கமாக இருந்த தமது தோற்றத்தாலும் தெளிந்த புலமையாலும் அவரை அறிஞர்கள் அனைவரும விரும்பினர்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராகவும் அருந்தொண்டுகள் ஆற்றினார்.

நாவலரும் அரசர் முத்தையாவேலும் துணை வேந்தரை அரவணைத்ததை எவரும் மறக்க முடியாது.

அமெரிக்க நாட்டில் கல்வி கருத்தரங்குகளில் அவர் பங்கு கொண்டதை பலர் பாராட்டினர்.

அமெரிக்க நாட்டுச் சிறுமி, பள்ளி வகுப்பில் துணை வேந்தரின் உரையைக் கேட்டதும் இந்தியாவின் மக்கள் தொகைக்கு என்ன விளக்கம் தர வேண்டும் என்று கேட்டாராம்.

சிரித்துக்கொண்டே, நான் இயக்குநரே தவிர, தயாரிப்பாளர் இல்லை என்று நகைச்சுவையாகக் கூறினார்.

தன்னுடைய உரைகளை முடிக்கும்போது, தாகூரின் பொன் வரிகளை அடுக்கிப் பேசி முடிப்பதைக் கேட்டு வியப்படையாதவர்கள் இல்லை.

அன்பும், அறிவும், பரிவும், செறிவும் நிறைந்த நிறைகுடமாக நூறாண்டுகளைத் தொட்டு வாழ்ந்த பெருந்தகையை நினைத்து நாம் பேதுற்றுள்ளோம்.

சிட்டிபாபுவின் சீர்த்தியும் புகழும் என்றும் கல்வி உலகத்தில் சிந்தனை ஒவ்வொன்றிலும் செழித்து நிற்கும்.

— முனைவர் ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *