சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் நூல் வெளியீட்டு விழா
நாள் : 14.03.2020,
சிறப்புரை : முனைவர் ந.அருள்
பெருமதிப்பிற்குரிய காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் அவர்களே,
அன்பார்ந்த தமிழ் வளர்ச்சி மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோவியார் அவர்களே,
மருத்துவ மாமணி, சிவகடாட்சம் அவர்களே,
நூலாசிரியர் திருமதி சாந்தகுமாரி கடாட்சம் அவர்களே,
வாழ்த்துப்பாடல் பாடிய அண்ணன் டி.கே.எஸ். கலைவாணன் அவர்களே,
வருகை புரிந்திருக்கும் அருளாளர் ஆர்.எம்.வி., கிருஷ்ணா சுவீட்ஸ் முரளி, நல்லி குப்புசாமி, கவிஞர் ஏர்வாடி இராதாகிருஷ்ணன், திரு. அமுதா, இலக்கியவீதி இனியவன், வி.ஜி.பி. அண்ணாச்சி, பேராசிரியர் சாரதா நம்பி ஆரூரன், டாக்டர் மணிமேகலைக் கண்ணன், இந்தி மொழிபெயர்ப்பாளர் கண்ணன், திரு. ஏ.சி. முத்தையா, பேராசிரியர் சித்சபேசன், வானதி இராமநாதன், புதுகைத் தென்றல் ஆசிரியர், நடிகை ஸ்ரீபிரியா மற்றும் அவையிலுள்ள பெருமக்களே,
கல்லூரியில் பயிலும்போது, இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக என்று கேள்வி கேட்பார்கள். ஆங்கிலத்தித்தில், with reference to the context என்பார்கள்.
நூலாசிரியரின் சிறப்பு,
நூல் சொல்லுகிற பொருளின் சிறப்பு,
தலைமை தாங்குபவருடைய சிறப்பு,
நடத்துகிற இடத்தின் சிறப்பு,
என்று நான்கு அடுக்குகளிலும் பெருமை கொண்ட விழா இது.
விருந்தோம்புகிற பண்பாட்டிற்கு உலகத்துக்கே எடுத்துக் காட்டாய்த் திகழ்வது செட்டிநாட்டு இல்லம்தான்.
அரச குடும்பத்தின் அன்பின் பிழம்பாகிய சீதை ஆச்சி அவர்களின் இல்லத்தில், இந்த விழா நடைபெறுவதே பொற்குடத்திற்குப் பொட்டு வைத்தாற்போல அமைகிறது. நான் சிறுவனாய் இருந்தபோதே அவர்கள் அளித்த விருந்துதான் என்னை இப்போது இப்படி ஆக்கியிருக்கிறது.
மக்களுடைய பண்பாடு, கலையார்வம், இலக்கியம், பழக்க வழக்கங்கள் இவைகளினூடே கூட்டுக் கலவைக்குத்தான் திருவிழாக்கள் என்று பெயர். நிலவு என்பது நிலா என்று மாறுவதுபோல விழைவு என்பது விழா என்றாயிற்று. மக்களுடைய விருப்பம்தான் விழாக்களாகும்.
பழைய தமிழிலக்கியங்களில், ‘விழவு மலி மூதூர்’ என்று ஒரு ஊரின் பெருமையைக் குறிப்பிடுவார்கள். சிலப்பதிகாரத்தில் புகார்க்காண்டத்தில், காவிரிப் பூம்பட்டினத்தில் ‘இந்திர விழைவு ஊர் எடுத்த காதை’ என்று அமைந்திருப்பதைப் பார்த்து நாம் பெருமைப்பட வேண்டும். இன்று காவிரிப் பூம்பட்டினமும் இல்லை – இந்திர விழாவும் இல்லை. ஆனால் பாருங்கள் நண்பர்களே, இளங்கோவடிகளின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும் என்று அரசு ஒருநாள் முடிவெடுக்கச் சொன்னது. தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரும், நானும் பல குறிப்புகளைப் படித்த பிறகு, முடிவாக இந்திர விழாவின் நிறைவு நாட்களாக ஏப்பிரல் 24 இருக்கும் என்று முடிவெடுத்து அன்றைய நாளில் கடற்கரையில் அமைந்துள்ள இளங்கோவடிகள் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கும் வழக்கத்தைத் தொடங்கினோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்க விரும்புகிறேன்.
கோயில் விழாக்கள் மட்டும்தான் உண்டு. நாள்தோறும், மதுரையில் விழாக்கள் நடைபெறும் என்பார்கள். இதே மைலாப்பூரில், திருஞான சம்பந்தர் மாதந்தோறும், நடைபெறும் விழாக்களைச் சுட்டிக்காட்டி ‘இதை நீ காணாமல் இருக்கிறாயே’ என்று ‘தைத்பூசம் காணாதே போதியோ’ என்று குறிப்பிடுகிறார். மாதந்தோறும் ஒரு திருவிழாவை அவர் குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலும், தமிழ்நாட்டுத் திருவிழாக்கள், பௌர்ணமி (நிறைமதி) நாளில் தான் கொண்டாடப்பெறும். தீபாவளி மட்டுந்தான் தேய்பிறையில் அமாவாசையில் வருகிறது. அதிலிருந்தே இது தமிழ் விழா இல்லை என்று தெரிகிறதா? விழா என்றால், விருந்து உண்பது என்பது பொருள். இன்னொரு பொருள், சாறு என்பதும் விழாதான். ஆங்கிலத்தில் Feast என்பதுதான் Festival ஆயிற்று.
உன் காலில் சக்கரமா கட்டியிருக்கிறது? என்று எங்கள் பாட்டி அடிக்கடிச் சொல்வார்கள். ‘எப்போதும் ஊர் சுற்றுகிறாயே’ என்ற பொருளில். ஆனால், சாந்தகுமாரி சிவகாட்சம் அம்மையார், காலில் இளவயதில் சதங்கை கட்டினார்களோ இல்லையோ, மருத்துவத் திலகம் டாக்டர் சிவகடாட்சம் அவர்களின் கைப்பிடித்த நாளிலிருந்து,
‘சுற்றாத நாடுகளில்லை,
படிக்காத ஏடுகளில்லை,
எழுதாத வேலைகளுமில்லை’
உலகம் சுற்றிய மாதரசி சாந்தகுமாரி அவர்கள், ஒவ்வொரு நாட்டைப் பற்றியும் எவ்வளவு ஊன்றிப் பார்த்திருக்கிறார்கள் என்பது, அவர் எழுத்தின் திறமையையும், பெருமையையும் பறைசாற்றுகின்றன. அவர்கள் எழுதிய சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் 32 தலைப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில், 17 வெளிநாடுகள் 15 இந்தியாவிலுள்ள பிற மாநிலங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜப்பான் மட்டுமே ஆறுமுறை இந்நூலில் அங்கிங்கெனாதபடி இடம்பெற்றுள்ளது. நூலாசிரியர், மிக அற்புதமான, இதுவரை நான் படித்திராத, 45 மேற்கோள்களை மிக அழகாக நூலில் பரவியுள்ளார்கள். எமர்சன், காளிதாஸ், பாரதி, நபிகள் நாயகம், கௌதம புத்தர் என்று மேற்கோள்கள் அணிவகுத்துள்ளன.
ஒரு சிறந்த கணவர் எப்படி அமைய வேண்டும் என்று நூலில் 284-வது பக்கத்தில் உள்ள மேற்கோள் நம்முடைய எண்ணங்களைச் சுழல வைக்கும். அந்த மேற்கோளின் நாயகர்தான் நம்முடைய மருத்துவர் சிவகடாட்சம். அந்த மேற்கோள் மாபெரும் திரை இயக்குநர் ஆல்பிரட் இட்ச்காக் சொன்ன மேற்கோள் ஆகும்.
“மனைவி பேசாத ஒவ்வொரு வார்த்தையையும் புரிந்து கொள்பவனே முழுமையான கணவன்”.
அதேபோல், காஷ்மீரைப் பார்த்துவந்து அவர்கள் வருணிக்கின்ற பக்கங்கள் நம்மை சிலிர்க்க வைக்கின்றன. அதுவும் கவிஞர் காளிதாஸ் காஷ்மீரை வருணிக்கின்ற மேற்கோள் நம்மை வியக்க வைக்கின்றது. அந்த மேற்கோள்,
“காஷ்மீர் சொர்க்கத்தைவிட அழகாக இருக்கிறது. உயர்ந்த பேரின்பத்தை வழங்குகின்ற கொடையாளியாகத் திகழ்கின்றது. இங்கே இருக்கும்பொழுது தேன் ஏரியிலே குளிக்கின்ற இன்பத்தை அடைகின்றேன்.”
சாந்தகுமாரி நூல் எழுதும்பொழுது பயணக் கட்டுரைகளிலும், இலக்கிய வரிகள் மிகுந்து உள்ளது. சான்றாக, காஷ்மீரைப் பார்த்தவுடன், ‘நிலமங்கை பனிப்போர்வையை அணிந்திருந்தாள். பாறைகள்மீது பனி, சாக்லேட் கேக்கின் மீது பரவியிருக்கும் கிரீம் போல அழகு காட்டி அசத்தியது’ என்ற வரிகளே நம்மை அசத்துகிறது. அதேபோல், எமர்சன் சொன்ன மேற்கோள், ‘பூமி மலர்கள் மூலமாகச் சிரிக்கிறது’ நம் நினைவுக்கு வருகிறது. அதேபோல், பிரான்சில் உள்ள லூர்துமாதாவின் திருவிழாவைக் கண்டபிறகு, அவர்கள் நிறைவாக எழுதுகிற வரிகள் அனைத்துச் சுற்றுலாப் பயணிகளுக்கும், ஒரு கல்வெட்டு வரிகள் போல் அமைகிறது. ‘உலகின் பல நிகழ்வுகளைப் பகுத்தறிவு என்ற பூதக்கண்ணாடி கொண்டு பார்க்காமல், பக்தி என்னும் அளவுகோல் கொண்டு கவனித்தால், அளவில்லாத பயனை அடையலாம்’.
128-ஆவது பக்கத்தில், டாக்டர் சிவகடாட்சம் ஒளிப்படத்தை அவ்வளவு அழகாக கங்கை நதிக்கரையில் படம் பிடித்துள்ளார்கள். அந்தப் படத்தைப் பார்த்த பின்னர் திரை இயக்குநர்கள் எல்லாம் வருங்காலங்களில் டாக்டரை நடிக்க வைப்பது உறுதி.
சாந்தகுமாரி அவர்கள் ஒரு பயணத்தை எவ்வளவு அழகாக விரும்புகிறார் என்பதை துபாய்க்குச் சென்றவுடன் ‘வாவ், துபாய்’ என்று கூவத் தோன்றியது. ‘நாகரிகம் கருதி வாயை மூடிக் கொண்டாலும், மனம் மானாய்த் துள்ளியது’ என்ற அந்த துள்ளல் வரிகள் நம்மை ஈர்க்கின்றன.
நான்கூட ஆறாவது ஏழாவது வகுப்பில் செஞ்சிக்கோட்டை பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அது கல்லூரிக் காலத்தில்தான் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றது. ஆனால், இந்த்த் திருவிழா நடைபெறப் போகிறது என்றால் அவ்வளவு அழகாகத் திட்டமிட்டு டாக்டரும், சாந்தகுமாரியும் சென்று பார்த்து வருவது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. நூலில் மிக இயல்பாக, சிவா என்றும் சாந்தி என்றும் தங்களை அவர்கள் விளித்துக் கொள்வது அருமையாக உள்ளது.
ஜப்பானில் உள்ள ‘சாகா லைட் ஃபேன்டசி’ விழாவைப் பார்த்து அவர்கள் சொல்கிறார்கள், ‘சாகா நகரத்தை 1.8 மில்லியன் வண்ணமயமான எல்.இ.டி. பல்புகளால் அலங்கரித்திருப்பார்கள்’ என்று. இங்கே நம் எதிரில் 2 விளக்குகளே நம் கண்ணைக் கூச்ச் செய்கின்றன. 1.8 மில்லியன் விளக்குகள் என்றால் எண்ணிப் பாருங்கள் நண்பர்களே.
உலகம் சுற்றும் மாதரசி சாந்தகுமாரி அவர்களைத் தமிழக சுற்றுலா நிறுவனம் ஒரு மதிப்புறு அறிவுரைஞராக நியமிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆவலாகும்.
வெளியிலே திருவிழாக்களைக் கண்டு மகிழ்வதும் – புல்வெளியில் தங்கியிருந்து பொதுவாக உண்பதும் அயல்நாட்டு வழக்கம். what we do inside – they do outside, what we do outside – they do inside என்று வேடிக்கையாகச் சொல்வார்கள். நண்பர்களே நான் இலண்டனில் சேக்ஸ்பியர் பிறந்தநாளைக் கண்டு மகிழ்ந்தவன். என்னதான் நாம் பாரதிக்கு விழா எடுத்தாலும், அந்த இலண்டன் நிகழ்வு போல அமையாது.
அற்புதமாக நூலாசிரியர் எழுதியிருப்பதையெல்லாம் நான் பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறேன். அவருக்கு இன்னும் பல விருதுகள் வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கின்றன என்று சொல்லி அமைகிறேன்.
எங்களிடம் சொல்லிக்காட்டும்போது நாங்களெல்லாம் வியப்படைவோம். அப்படித்தான் தமிழகத்தின் சுற்றுலாத் தலங்கள் எல்லாம் வரும். இன்றைக்குகூட ரொம்ப வேதனையான செய்தி. 11 நாடுகளில் 90 விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது மட்டுமல்ல… லூவர் அருங்காட்சியமே இன்று மூடப்பட்டிருக்கிறது. இன்றைக்கு இத்தாலியே காணோம். யாரும் வர முடியாத சூழலிலும், நம்மால் மட்டும் தமிழர்களால்தான் எந்த நேரத்திலும் விழாவை நாம் சிறப்பாக எடுப்பதற்கு என்றைக்கும் அணியமாக இருக்கின்றோம்.
நல்ல விழாக்களை நாம் எப்போதும் அறமாக காப்போம். ஐயா சொன்னதுபோல கரம் குவிவது பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள். நாம் படித்ததே, கரம் குவிவால் உள் மகிழும் கோன் கழலே என்றுதான் படித்திருக்கிறோம்.
ஆகையால், இந்த நூலை எழுதிய மாதரசியை நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். அதைவிட அவரின் கணவர் டாக்டர் சிவகடாட்சம் அவர்கள், எல்லாவற்றிற்கும் உறுதுணையாக உற்றுழி உதவி உறுபொருள் கொடுத்து என்பது போல, அவர்கள் செல்லுகிற தன்னுடைய மருத்துவ மாநாடுகளின்போதெல்லாம் இந்த விழாவுக்காக நாம் செல்வோம் என்று திட்டமிட்டு அவர்கள் செல்வதற்காக அந்த குடும்பத்தையும், அது ஒரு நல்லதொரு குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் போல அவர் ஆற்றி வருகின்ற இந்த சுற்றுலா மாட்சியை அரசு கண்டிப்பாக போற்றும். நான் குறிப்பாக சொல்லி விடை பெற விரும்புகின்றேன்… அவர்களுக்கு மாபெரும் விருதுகள் காத்திருக்கின்றன….
நன்றி. வணக்கம்.

Add a Comment