தினசெய்தி நாளிதழில் 15.03.2020 அன்று வெளியான கட்டுரை
நாதசுர நாதம் – ஊதுகுழல் – உயர்ந்த கதை
========================================
நாகசுரம் , நாயனம் , நாதசுரம் , மங்கல இசை என்றெல்லாம் அழைக்கப்படுகிற ஊதுகுழலுக்கு பழங்கதைகளும் உள்ளன. இந்த மங்கலமான இசையை மையமாகக் கொண்டுதான் கோயில் விழாக்கள் எல்லாம் நடந்தன. கோயில்களில் வாத்தியக்காரர்களுக்கு முதல் மரியாதை தரும் பழக்கம் இன்றும் உண்டு. என்றாலும் பழங்காலத்துச் செல்வந்தர் வீட்டுத் திருமணங்களில் நாயனம் – தவில் வாசிக்கும் குழுவினர் திருமண வீட்டைத் தாண்டி தொலைவில் ஒரு நீள் பந்தலிட்டு அங்கே இருந்துதான் வாசிக்கவேண்டும், என்றெல்லாம் மதிப்புக்குறைந்த நிலைகள் இருந்தன.
நாட்டுப்புறப்பாடல் திலகமாகவும் – மேதையாகவும் விளங்கிய பல்கலைச்சுரங்கம் – கொத்தமங்கலம் சுப்பு எழுதிய ‘தில்லானா மோகனாம்பாள்’ – திரைக்காவியம் மட்டுமல்ல – நடன நாதசுர ஓவியம், சிக்கல் சண்முகசுந்தரம் இல்லை – சிவாஜி சண்முகசுந்தரம் எந்நாளும் மறக்க முடியாத மாபெரும் நாதசுர மேதையாகும். .பேரறிஞர் அண்ணா அவர்கள் உடல் நலிவுற்றிருந்து ஒரு நிகழ்ச்சிக்குச் செல்லும்போது மதுரை சேதுராமன் சகோதரர்கள் நலம்தானா – உடலும் உள்ளமும் நலந்தானா என்று வாசித்தபோது பேரறிஞர் அண்ணா ஒரு கனம் நின்று கலங்கினார்.
ஒரு புராணக் கதையிலிருந்து தொடங்கலாம்…
திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்ட முசுகுந்த மாமன்னன் தேவருலகம் சென்று அசுரர்களை எதிர்த்து இந்திரனுக்காகப் போரிட்டு வெற்றிபெற்று, இந்திர உலகை, மீட்டு இந்திரனுக்கு உதவி செய்தார். அதற்காக இந்திரன் பூசித்து வந்த தியாகராசமூர்த்தியைப் பரிசாகப் பெற்றுக் கொண்டு வந்த போது, தியாகராசமூர்த்தியின் வழிபாட்டு நேரத்தில் திமிரி, பாரி, முகவீணை என்ற துளைக்கருவிகளையும் யாழ் முதலிய நரம்புக்கருவிகளையும், தவில் ,மத்தளம், பஞ்சமுக வாத்தியம் என்ற தோற்கருவிகளையும் கருவிகளில் வல்ல கந்தர்வர்களையும் சேர்த்துப் பெற்று வந்து திருவாரூரில் வழிபட்டதாகவும், அது , முதற்கொண்டு இக்கருவிகளைத் தேவலோகத்திலிருந்து வந்த கந்தருவ மரபினரே இன்றளவும் தியாகராசர் பூசை வேளையில் இசைத்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நாளில் சிற்றார்ப் புறங்களிலே வழக்கத்திலிருக்கும் தேவேந்திர மேளம் என்பதே நையாண்டி மேளமாகும்.
நாதசுரத்தின் தொன்மை:
வங்கியம் என்று சிலப்பதிகாரத்திலும், எழில் என்று மணிவாசகராலும், கூறப்படும் தொன்மையான துளைக்கருவியே நாதசுரம் ஆகும்.
தமிழ் முனிவராகிய அகத்தியர் அருளிய மகாபரதம் என்னும் கூத்திலக்கணமே ஆடற்கலைக்கும் முதல் நூலாகும்.
நாளடைவில் கூத்திலக்கணம் மறைந்தது அதன் சில பகுதிகளை மட்டும் மேற்கோளாக சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் கூறுகிறார்.
வங்கியம் என்னும் குழலைப் பற்றியும், ஆம்பற் குழலுக்குக் கூறும் விளக்கழம் இன்றய நாதசுரத்திற்கும் பொருந்துகிறது. வங்கியம் செய்வதற்கு உகந்தவை மூங்கில், சந்தனம், வெண்கலம், செங்காலி, கருங்காலி என்ற ஐந்து மரங்களாகும். இவ்வங்கியத்தை ஊதுமிடத்து வளைவாய் சேர்ந்த துளையை முத்திரை என்று நீக்கி, முன்னிருக்கும் ஏழு தளைகளில் ஏழு விரல் பற்றி வாசிக்க வேண்டும். ஏழு விரலாவன, இடக்கையின் பெருவிரலும், சிறு விரலும் நீக்கி மற்றைய மூன்று விரலும் வலக்கையிற் பெருவிரல் ஒழிந்த நான்கு விரலும் என அவர் கூறுவது நாயன நல்லிசைக்குப் பொருந்துகின்றது.
நாதசுரம், தவில், மத்தளம் முதலிய கருவிகளைச் செய்வதற்கு 42 ஆண்டு வளர்ந்த மரத்தினால் செய்வது உத்தமம், 42 ஆண்டு மேற்பட்ட மரத்தில் செய்வது மத்திமம். 42-க்கு கீழ்ப்பட்ட மரத்தில் செய்வது அதமம் ஆகும் என்றும் கூறுவர்.
சோதிடம் சொல்பவர்கள் உத்தம கருவிகளில் பயில்வோருக்குக் கீர்த்தியும், அதிக சம்பத்தும் அட்டமா சித்திகளும் உண்டாகும். மத்திம கருவியில் பயில்வோருக்கு வரவுக்கு மேல் செலவு ஆகும். அதமக்கருவி மிகுந்த வறுமை உண்டாகுமாம் என்றெல்லாம் சொல்வதும் உண்டாம். சோதிடம் பொய் என்பது தெரியவில்லையா..!
நாதசுரம் இன்றைய நிலையில்:
நாதசுரம், நாகசுரம், நாயனம் என்று பல பெயரில் அழைக்கப்படும் நாதசுரம் 50 ஆண்டுக்கு முன்பு வரை ஒரு நாதசுரம், ஒரு தவில், ஒரு ஒத்து ( சுருதிக்கருவி ) ஒரு தாளத்துடன் நால்வர் கட்டிக் குழுவாக இசைத்து வந்தனர்.
திருவீழிமிழலை சகோதரர்கள் இரு நாதகரம் இரு தவில், ஒரு ஒத்து ஒரு தாளம் என்ற அமைப்பை ஏற்படுத்தினர். இரு சகோதரர்கள் ஒரே ஆசிரியரிடம் ஒரே பாட முறையைப் பயின்று இணைந்து வாசித்த இனிமையைக் கண்டு பிறகும் பின்பற்றினர். வெவ்வேறு ஆசிரியரிடம் பயின்று வெவ்வேறு பாட முறைகளைப் பயின்றவர்களும் இன்று இணைந்து வாசித்து வருகின்றனர்.
கருவி செய்யும் மரம் 42 வயதுதான் என்பதை அறிவதற்கு அம்மரத்தைச் சீவி விளக்கிற் கொளுத்தினால் அது தீபம் போல ஏரியுமாம். 42-க்கு மேற்பட்ட அல்லது கீழ்ப்பட்ட வயதுள்ள மரங்கள் அப்படி எரியாதாம்.
தற்காலத்தில் நாதசுரம்:
நாதசுரம் ஆச்சாமரத்தில் கடைந்து செய்யப்படுகிறது. அதன் நடுப்பாகமாகிய உடல் மேல் பாகம் சிறுத்தும் அடிப்பாகம் வரவரச் சற்றுப் பெருத்தும் இருக்கும். அதன் மேலும் கீழும் இரண்டு அணைவுகள் பொருத்தப்படும். வெண்கலத்தால் அளவுகள் செய்வது முன்னைய வழக்கம். இப்போது உடலாகிய நடுப்பாகம் செய்யப்படும் மரத்தாலேயே அதனைச் செய்கிறார்கள்.
மேல் அணைவு ஏறத்தாழ நான்கு அங்குலம் நீளத்தில் அமையும். அந்த அணைவிற் செருகி உதட்டில் வைத்து வாசிப்பதற்கு உதவியாக இருக்கும் கருவி நாக்கு அல்லது சீவாளி எனப்படும். கொருக்குத் தட்டையை இரண்டு அங்குல நீளத்துக்கு தாக்கி நெல் வேக வைக்கும்போது அதனுடன் சேர்த்துப் பதமாக வேக வைத்து எடுத்து கிட்டிப் பலகையில் கொடுத்து நன்றாக நெருங்குமாறு செய்து, ஈரம் உலர்ந்த பின் அதன் அடிப்பாகத்தை முறுக்கிய நூலால் ஐந்தாறு சுற்று இழுத்துக் கட்டியமைப்பது சீவாளி ஆகும். இதை நேரே அணைசிப் பொருத்தி வாசிக்க இயலாது. அணைவுக்கும் சீவாளிக்கும் இடையிலே கெண்டை, என்ற கருவி வேண்டும். செப்புத் தகட்டினால் ஒரு அங்குல நீளத்திற்கு மேற்பாகத்தைக் காட்டிலும் அடிப்பாகம் விரிந்திருக்கும் சிறு குழாய் வேண்டும். அதன் இரு நுனிகளிலும் தேங்காய் ஒட்டினால் செய்த இரு வளையங்களைச் சேர்த்து வரிந்து கட்டப்பட்டிருக்கும் இந்தக் கெண்டை அணைசோடு பொருத்தப்படும். அக்கெண்டையின் மேல் சீவாளியைச் செருகி வாசிக்கப்படுகிறது.
வாசிக்கும் போது உதட்டின் இறுக்கத்தால் சீவாளியின் வாய் சில சமயங்களில் ஒட்டிக் கொள்ளும். அதைத் திறக்கச் சுமார் நாலு அங்குல நீளமுள்ள தந்தத்தால் செய்யப்பட்ட கருவி வேண்டும்.
மேல் அணைவுக்கு கீழே சுமார் நாலு அங்குல இடைவெளி விட்டு அங்குலத்திற்கு ஒன்றாக 7 துளைகள் வரிசையாக இடப்பட்டிருக்கும். இத்துளைகள் மூலமே ஏழு சுரங்களும் எழுப்பப்படுகின்றன. இவற்றிற்குக் கீழே 4 அங்குலம் தள்ளி இடம் விட்டு ஒரு துளையும் அதன் இரு பக்கங்களிலும் இரண்டு துளைகள் இருக்கும். கீழ் அலைசு இணையும் போல் அடிப்பாகம் 6 அங்குல விட்டமுள்ளதாக இருக்கும். அதன் வாய் விரிந்து இருப்பதால் நாதசுரஞ்லி நெடுந்தொலைவு கேட்கும்.
நாதசுரத்தில் திமிரி, பாரி என இரு வகை உண்டு. திமிரி அளவில் சிறியது, பாரி பெயருக்கேற்பப் பெரியதாயிருக்கும். திமிரியில் 3 கட்டை சுருதிக்கு குறையாமல் 5 கட்டை வரை வாசிக்கலாம். இப்போது இது பெரும்பாலும் வழக்கத்தில் இல்லை.
பாரியில் 21/2, கட்டை சுருதிக்கு மேற்படாமல் 1 கட்டைச் கருதி வரை வாசிக்கலாம். இதன் ஒலி நயம் செவிக்கு இழைந்த இன்மையோடு அமையும். ஏழு சுரங்களை 3 நிலைகளிலும் வாசிப்பதற்கு ஏற்றவாறு வீணையில் மெட்டுக்களும் – தந்திகளும் உண்டு, அந்த நிலைக்குரி அமைப்புகளில் விரலை வைத்து இசையை எழுப்பலாம். நாதசுரத்தில் அந்த அமைப்புகள் இல்லை. காற்றினை அழுத்தமாகவும் மென்மையாகவும் செலுத்துதலால் ஏழு துளைகளிலிருந்தே எழு சுரங்களையும் 2 1/2 நிலை வரை வாசிக்கப்பட்டு வருகிறது. உதட்டின் பிடிப்பால் -1/2 சுரமும் கமகங்களும் வாசிக்கப்படுகின்றன.
விடியற்காலம் 4 மணி முதல் 5 மணி வரை முறையே, வசந்தா, பூபாளம், பிலகரி, கேதாரம், தன்யாசி, அசாவேரி, சுத்தசாவேரி, ஆரபி, சுருட்டி, சீரரிகம், மணிரங்கு, முகாரி, மந்தாரி, பூரிகல்யாணி, கல்யாணி ஆகிய இவ்விராகங்களையும் மாலை 6 மணிக்கு மேல் மற்ற இராகங்களையும் சூழலுக்கு ஏற்றவாறு வாசிக்கப்படுவது மரபு.
திருவிழாக் காலங்களில் கோயிலில் இருந்து புறப்பாடு நிகழும்போது மல்லாரி வாசிக்க வேண்டும். இது நாட்டை ராகத்தில் பல தாளங்களில் அமைந்த ஒரு வகை அமைப்பு. இதற்கு சாகித்தியம் இருப்பதாகத் தெரியவில்லை.
மேலும் ஒவ்வொரு திசையிலும் வாசிக்கப்பட வேண்டிய வண்ணம், இராகம், பல்லவி, கீர்த்தனை, பதம், இராகமாலிகை இவைகள் கோயிலுக்குள் புகும்போது வாசிக்கப்பட வேண்டியவை என்றும், வாசித்து நிறுத்த வேண்டிய ராகம் இவை என்ற ஒரு நல்ல அமைப்பும் உண்டு. அவ்வாறே திருவிழாவில் ஒவ்வொரு நாளிலும் வாசிக்க வேண்டிய இராகம் பல்லவி என்றும் ஒரு முறை இருந்தது. திருவாரூர் தியாகராசர் திருவிழாவிலும், சிதம்பரம் கோவிந்தராசப்பப் பெருமாள் விழாவிலும் இம்முறை இன்றும் மாறாமல் உள்ளன.
தவில்:
தவில் நாதகரத்தோடு இணைந்து வாசிக்கப்படும். தாளவாத்தியம் மரத்தில் கடயப்பட்டு உருளை வடிவமாய் மத்ய பாகம் பருத்தும் இருக்கும். பெரும்பாலும் பலாமரத்திலும் அபூர்வமாக பூவா மரத்திலும் செய்கிறார்கள்.
கட்டையின் உயரம் 151/8 அங்குலம் இதன் நடுப்பாகம் 41 1/2 அக்குல சுற்றளவு இருக்கும். இதன் வலந்தலை உள்வாய் விட்டம் 8 3/8 அங்குலம் வலந்தலை தொப்பி உள்வாய் விட்டம் 8 1/4 அங்குலம் வலந்தலையும் தொப்பியும் . தோலால் போர்த்தப்பட்டு இருக்கும். இவ்விரு வளையங்களையும் நடுபாகமாகிய மரத்துடன் தோலால் ஆகிய நாடாவால் இழுத்து கட்டப்பட்டு இருக்கும்.
தொப்பியைப் பதப்படுத்த கற்சிலைகளில் படிந்துள்ள மெழுகை எடுத்து ஆமணக்கெண்ணை சேர்த்து பதமாக்கி தொப்பியின் மத்தியில் 24 அங்குல விட்டத்திற்கு காகித களத்துக்கு பூசப்படும்.
தொப்பிப் பகுதியில் இடக்கையால் ஒரு கழி கொண்டும் மற்றப் பகுதியை வலக்கை விரல்களால் அடித்து வாசிப்பார்கள். அந்த கழியை தொப்பிக்கழி என்று அழைப்பார்கள். இதை திருவாத்தி மரத்தில் 3 அங்குல நீளத்துக்கும் அடிப்பாகம் 5/8 அங்குலமும் நுனி 1/2 அங்குலத்திற்கு திரளையாக செய்வார்கள்.
தவில் கட்டப்பட்டிருக்கும் நாடாவை இணைக்கும் வளையத்திற்கு வெண்டயம் என்று பெயர். இது பஞ்ச போக செயற்கையால் ஆனது , இது பெரும்பாலும் தஞ்சை மாவட்டம் நாச்சியார் கோயிலில் செய்யப்படுகிறது. தவிலின் தொப்பியை ஒத்தின் சுருதிச் சேர்த்துப் பின் வாசிக்க வேண்டும். இதில் லய வின்யாசங்களைத் திறம்படச் செய்யலாம்.
நாதசுரத்தில் இராகம் வாசிக்கும் போது சாதாரணமாக சதஸ்ரகதியை அமைத்து வாசிப்பதும் இராகம் ஒரு கட்டத்தை அடையும்போது பஞ்ச கதிகளில் தனி ஆவர்த்தணமும் ஜதிகளும் வாசிப்பது உண்டு. மல்லாரி வாசிப்பதற்கு முன் கண்ட, கதியில் அலாரிப்பு வாசிக்க வேண்டும்.
இதனுடன் ஒத்து நாதசுர அமைப்பிலேயே மரத்தினால் செய்த ஒரே துணையுடன் இருக்கும் தானம் பஞ்ச லோகத்தால் 3 அங்குல விட்டமாக கனமாக நாச்சியார் கோயில் செய்யப்படுகிறது.
நாதசுர மேதைகள்:
20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து நாதசுரம் வாசித்து நற்புகழ்பெற்ற திருவாளர்கள். செம்பொன்னார் கோவில் ராமசாமி, கொரநாடு நடேசன், நீடாமங்கலம் சிங்காரம்.
தவில் மேதைகள்
வழுவூர் முத்துவீரு, திருவழுந்தார் சக்திவேல், அம்மாபேட்டை பக்கிரிசாமி, திருக்கடவூர் சின்னையா, திருச்செங்காட்டாங்குடி ருத்திராபதி, காட்டுமன்னார் கோவில் ரெங்கன், நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம், நீடாமங்கலம் சண்முகசுந்தரம், இலுப்பூர் பஞ்சாபி, பழநிவேல், நாச்சியார்கோவில் ராகவன், காளையார் கோவில் ரெங்கன், மன்னார்குடி பெரியபக்கிரி,
தற்காலத்தில்
அரித்துவாரமங்கலம் பழநிவேல், திருவாளப்புத்தார் கலியமூர்த்தி, மன்னார்குடி ராஜகோபால், மன்னார்குடி மாஸ்டர் வாசுதேவன், வலையப்பட்டி சுப்ரமணியம், தேன்கனிக்கோட்டை மணி இப்படி இன்னும் எத்தனையோ பேர் இந்த வாத்தியத்தில் மேதைகளாக இருக்கிறார்கள், விரிவஞ்சி இத்துடன் நிறுத்தினோம்.
நாதசுரத்தில் புரட்சிப் புழமை:
ஒத்தை நாதசுரத்தை இரட்டையாக வாசித்து புஜ மரபை திருவீழிமிழலை சகோதரர்கள் ஏற்படுத்தினர். ஒத்து, தவிலுக்கு பதில் தம்புரா சுருதி,மிருதங்கத்துடன் வாசித்து இனிமை சேர்த்தவர் திருவாவடுதுறை ராஜரெத்தினம், திருவெண்காடு சுப்ரமணியம் ஆண்களே வாசித்ததை மாற்றியவர் மதுரை ஸ்ரீமதி பொன்னுத்தாய், சேலம் ஜெயலக்ஷ்மி வாய்பாட்டுத் தவிலை பக்க வாத்தியமாக அமைத்தார். குன்னக்குடி வைத்திநாதன் வயலின். வலையப்பட்டி சுப்ரமணியம் – தவில் ஒரு புரட்சி. இசை வேளாள சமூகத்தினர் மட்டும் வாசித்ததை பழனி நரசிம்ம அய்யர் நாதசுரம் மன்னை கணேசய்யர் தவிலும் மரபு மாற்றம். சேக் சின்ன மௌலானா வாசிப்பதில் மத மாற்றம்.
நாதசுரத்திற்கு இலக்கியம்:
கலைமாமணி கொத்தமங்கலம் சுப்புவின் ‘தில்லானா மோகனாம்பாள்’ சிக்கல் சன்முகசுந்தரத்தை சாதனையாளர்களுக்குப் படைத்து நாகசுரத்துக்கு ஒரு இலக்கியம் அமைத்தார். கொஞ்சும் சலங்கையும் , தில்லானா மோகனாம்பாளும் திரைப்படமாக வந்து இறவாப் புகழை நாதசுரத்துக்கு அளித்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனையும் – நளினத்திலகம் பத்மினியையும் – ஞானத்திலகம் ஏ.வி.எம். இராஜனையும் – சாரங்கபாணி – டி.எஸ்.பாலையா – கே.ஏ.தங்கவேலு – ஆச்சி மனோரமா – ஜெமினி கணேசன் – சாவித்திரி கணேசன் ஆகியோர் இசைக்கு இலக்கியம் படைத்தனர். முடிசூடா மன்னராக காலம் கைகுவித்துப் போற்றிய நாதசுரச்சக்கரவர்த்தியாக விளங்கிய திருவாவடுதுறை இராசரத்தினம் பிள்ளை எப்போதும் இசையுலகம் மறப்பதற்கில்லை.
இசை அறிஞர் தஞ்சாவூர் பி.எம்.சுந்தரம் எழுதிய, “ மங்கல இசை மன்னர்கள் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாதசுர மற்றும் தவில் கலைஞர்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு ஒரு களஞ்சியமாகவே விளங்குகிறது.
நாதசுரம் வாசிப்பது அரிதான செயலாகும். கோடை வெயில் ஆடிக் காற்று. பெய்யும் மழை மூடு பனி ஆகிய பருவக் கொடுமை முதலிய காலத்தால் சிக்குண்டு நின்று கொன்டே. பின்புறமாக நடந்து கொண்டே பல மணி நேரம் மிகுந்த மூச்சிழைப்போடு வாசிக்கப்படுவது. இத்தனையும் பொறுத்துக் கொண்டு குறைந்த ஊதியத்தைப் பெற்று அன்று தொட்டு இன்று வரை அந்த மரபைக் காப்பாற்ற நாதசுரத்தின் பெருமையைப் பெருக்கிட வாய்ப்பினைப் பெற்றவர்கள் இசை வேளாள மரபினர். அனைவரும் இந்தக் கலையைக் கற்கலாம் என்றாலும், இதுவரைக் காத்து வந்த பெருமையும் சிறப்பும் போற்றுதற்குரியது.
இப்போது இந்தக் கலைகள் கைபட்டவர்களின் புதுமையால் நாதசுரம் – செனாய் – புல்லாங்குழல் – கிளாரினெட் – சாக்சபோன் என்றும் தவில் – பறை – மேளம் என்பன மத்தளம் – மிருதங்கம் – தவில் முரசாக – தனிக்கருவி இசையாகவே அமைகிறது.
வளர்க நாதசுரக் கலை !
– முனைவர் ஔவை ந.அருள், தொடர்புக்கு: dr.n.arul@gmail.com

Add a Comment