POST: 2020-02-15T10:37:08+05:30

===============================================
பாரதியார் 138ஆம் பிறந்தநாள் பெருவிழாவில் பாரதி இலக்கியக் கழகத்தில் வந்த அனைவருக்கும் விருந்து நூலாக வழங்கிய “பாரதி 366”
===============================================

பதிப்புரை
***********

நாட்டுக்குப் பெருமையூட்டும் உயர்ந்த தொழில் நிறுவனமான ஸ்ரீராம் குழுமத்தின் அங்கமான பாரதி கலை இலக்கியக் கழகத்தினர் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக மகாகவி பாரதியார் படைப்புகளைப் பரப்பும் முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். பாரதியாரின் பல்வகைச் சிறப்பைப் பல பரிமாணங்களில் கொண்டாடி பேச்சால், எழுத்தால், தொண்டால் பாரதியத்தைப் பரப்பி வரும் பாரதி ஆர்வலர்கள், தக்க அறிஞர்கள் பலருக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டுகிறோம்.

சென்ற ஆண்டு “பாரதியார் பதில்கள் 100” என்ற நூலை முனைவர் ந. அருளைக் கொண்டு எழுத வைத்து எழுநூறு படிகளையும் பாரதியார் பிறந்த நாள் விழாவிற்கு வந்த அனைவருக்கும் இலவசமாக வழங்கினோம். எங்களுக்கு ஊக்கம் தரும் வகையில் படிகளைக் கேட்டு நூற்றுக்கணக்கான கடிதங்கள் தொடர்ந்து வந்தன. எங்களுக்குப் பெருமையாக இருந்தது. எனவே இந்த ஆண்டும் அதே நூலை மூன்று மடங்கு பெரிதாக 366 கேள்விகளாகச் சேர்க்கச் சொல்லி இந்த ஆண்டு “லீப் வருடம்” என்பதால் நான் சொன்ன ” 366 – நாளும் நினைவோம் – பாரதியார்” என்ற நூலை வெளியிட்டு வழங்குகிறோம்.

முனைவர் ஔவை அருள் எங்களுக்காக இந்தப் பணியில் மும்முரமாக உழைத்ததைப் பாராட்டுகிறேன். முனைவர் அருள் என்னுடைய துணைவராகப் பாரதியார் கலை இலக்கியக்கழகத்தில் பங்கேற்றுள்ளார். முனைவர் அருள் வழங்கும் இந்த நூல் எளிய இனிய தமிழில் பள்ளிப் பிள்ளைகளும் படித்து மகிழத் தக்க வகையில் வெளியிடப்பெறுகிறது.

இந்த நூல் பாரதியாரைப் பற்றிய உணர்வையும், எழுச்சியையும் உருவாக்கும் என்பது எங்கள் நம்பிக்கையாகும். அயர்வில்லாமல் அல்லும், பகலும் என்னோடு உடன் உழைத்து இந்த நற்பணிக்குப் பொலிவூட்டிய செயற்செம்மல் திரு. பிரதாப்புக்கு என் நல்வாழ்த்துக்கள், பாரதி இலக்கியக் கழகத்தில் அவர் தொண்டு தொடர்ந்து வளமூட்டுகிறது. மகாகவி பாரதியாரின் 138 – ஆம் பிறந்த நாள் நினைவாக, ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம், கேள்வி – பதில் வடிவத்தில் வெளியிடப்படும் இந்நூல் விலையில்லாமல் விருந்தினர் அனைவருக்கும் கையுறையாக வழங்கப்பெறுகிறது.

“காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம் கலை வளர்ப் போம் கொல்லருளை வளர்ப்போம் ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம் உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்”

– மகாகவி பாரதியார்

ஸ்ரீராம் நிறுவனங்கள் சென்னை
ஜி.சுந்தரேசன், தலைவர்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *