POST: 2019-12-09T10:40:34+05:30

===============================================
தினசெய்தி நாளிதழில் இன்று (09.12.2019) வெளியான முனைவர் ஔவை நடராசன் அவர்களின் கட்டுரை
===============================================
****************************************************************
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு
மணி மகுடம்
****************************************************************
(பகுதி- 12)

புரட்சித்தலைவர் நட்பு திறமைக்கு கிடைத்த பரிசு..!
••••••••••••••••••••••••••••••••••••••••••

நெல்லையில் இளம் சங்க இலக்கியப் புலமையோடும் சான்றாண்மையோடும் வளர்ந்த பெருந்தகைதான் பொதுப்பணித்துறையின் ஆட்சி மேலாளராக இருந்து ஓய்வு பெற்ற கவிஞர் புத்தனேரி சுப்பிரமணியம்.

புத்தனேரியார், அறுபதாண்டுகளுக்கு முன்னரே செந்தமிழ்ச் செல்வி இதழில் தென்னாட்டு வீரன் என்ற நெடுங்கதை எழுதியவர்.

பொன்னியின் செல்வன் பிறக்காத காலத்தில், இந்தச் செந்தமிழ் வரலாற்று கதையை எழுதியவர் புத்தனேரியார்.

அன்பும் பண்பும் நட்பும் பணிவும் பூண்ட புத்தனேரியார் இயலிசைப் புலமையோடு கலைத்துறையிலும் நாடகம், நாட்டிய நாடகம், கதை வடிவம் முதலிய துறைகளில் வல்லவராக விளங்கினார். நடிப்புக் கலை வித்தகர்களாகிய டி.கே.எஸ். தோழர்களோடு உடன் இருந்து பல கலைப் பணிகளை ஆற்றியவர்.

புரட்சித்தலைவருக்கு அவர் நட்பு பூண்டது, அவருடைய திறமையால் கிடைத்த பரிசாகும்.
“காவிரித் தந்த கலைச்செல்வி” என்ற நாட்டிய நாடகத்தை எழுதி இயக்கியவர் புத்தனேரியார். நான், தலைமைச் செயலகத்தில் இருந்தபோது கடற்கரை சாலையில் செல்லும்போது பொதுப்பணித்துறையின் அலுவலகத்தில் பெரியதொரு அறையில் அவர் அமர்ந்து பணிகள் ஆற்றுவதை நான் பலமுறை கண்டு உரையாடியிருக்கிறேன்.

புரட்சித்தலைவரோடு பலமுறை தோட்டத்து இல்லத்திலும் நான் அவரைக் கண்டிருக்கிறேன். “கடையெழு வள்ளல்களின் ஒரு வள்ளலைப் பற்றிய திரைக்கதை எழுத வேண்டும் புத்தனேரியாரால்தான் அதைச் செய்ய முடியும்” என்று புகழ்ந்து சொன்னார் புரட்சித்தலைவர். புரட்சித்தலைவரை எந்த அளவுக்கு நெருக்கமாகத் தெரியுமோ அதனைப்போலவே, புரட்சித்தலைவி அவர்களையும் நன்கு அறிந்திருந்தவர் புத்தனேரியார் என்பதில் மிகையொன்றும் இல்லை. அவரோடு, பல இலக்கியக் கலந்துரையாடல்களிலும் பங்கு பெற்றிருக்கிறார்.

நான் அண்ணன் என்று மதிப்போடு அழைத்து வந்த புத்தனேரியாருக்கு, கலை, பண்பாட்டுத்துறை இயக்குநர் என்ற பொறுப்பை அளித்துத் தலைமைச் செயலகத்தில் புரட்சித்தலைவர் தம் ஆணையால் அமர வைத்து அழகு பார்த்தார் என்பது காலகாலத்துக்கும் மறத்தற்கரிய ஒன்றாகும். எல்லோரும் போற்றத்தக்க வகையில்
பெருமிதமாகப் பணியாற்றிய புத்தனேரியார், ஓராண்டும் நீட்டிப்பு பெறாமல் ஓய்வு பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அருளாளர் ஆர்.எம்.வீ. அவர்கள். புத்தனேரியாரை பலமுறை அழைத்துப் பல செய்திகளைக் கூறியதை நான் நன்கறிவேன். புத்தேனேரியாரின் படைப்பான காவிரி தந்த கலைச்செல்வி பெரிய அரசியல் திருப்பத்தையே தந்தது என்பது காலம் குறித்துவைத்திருக்கும் முக்கியப் பதிவாகும். நெல்லையைச் சார்ந்த, இளமையில் புலமை வளம் வாய்ந்த தமிழ்ச் செம்மலான புத்தனேரியார் அறிஞர்கள் கா.சு.பிள்ளை, சேதுப்பிள்ளை, கவிமணி அவர்களோடு நெருங்கிப் பழகியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகத்தின் வளர்ப்புச் செல்வமாக புத்தனேரியார் கட்டுரைகள் கவிதைகள் வாராத செந்தமிழ்ச்செல்வி இல்லை எனலாம். எடுத்துக்காட்டாக….

“தமிழை அழிக்கும் பகைக் கூட்டம்
பொல்லாப் பகைக் கூட்டம்
புகழ்பெற்ற செந்தமிழின்
செல்வத்தைக் கொள்ளையிடும்
திட்டத்தால் ஏடுகளைக்
கடத்திமறைப்பார்கள்;
கருத்தைச் சிதைப்பார்கள்
கடலில் எறிவார்கள்;
கனலில் எரிப்பார்கள்”
என்ற மறத்தற்கரிய வரிகளைக் குறிப்பிடலாம்.

புத்தனேரியார், பொதுப்பணித்துறையில் பணியாற்றுவதற்காக சென்னை வந்த பிறகு, அவருடைய எழுத்துப்பணிகளுக்கு அவருடைய சில சூழல் குறுக்கிட்டன போலும்.

புத்தனேரியாரின் தகுதிகளைப் போற்றிய புரட்சித்தலைவர் அவருக்கு பல வாய்ப்புகளை வழங்க நினைத்தபோதும், காலச் சூழலால் நிறைவேறாமல் போயிற்று.

நான் பலமுறை அவரை ஔவை தி.க.சண்முகம் அவர்களோடு கண்டு மகிழ்ந்திருக்கிறேன்.
புத்தனேரியாரின் மறைவு, ஓய்வு பெற்ற சில ஆண்டுகளிலேயே திடுமென நேர்ந்தது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ், கவிதை வளர்ச்சி என்ற தலைப்புகளில் உரையாற்றச் சென்று மகிழ்ச்சியோடு, தாம் தங்கியிருந்த அஜந்தா உணவகத்தின் அறைக்கு வந்து வீட்டாருக்கு தொலைபேசி எடுத்து பேச முயன்ற நிலையிலேயே சரிந்து விழுந்து உயிர் பிரிந்தார்… அவரின் மறைவு அத்தனை எளிதில் ஆற்றுப்படுத்த இயலாத துயரமாகும். கலையுலகத்திற்குத் திலகமாகத் திகழ்ந்து மேலும் பல பணிகளை ஆற்றவல்ல நுண்ணறிவாளரின் மறைவைப் பலமுறை நினைவு கூர்ந்து நெக்குருகியிருக்கிறோம். எந்த நோயும் நோக்காடும் இல்லாமல் நல்ல நிலையில் இருந்த அவருடைய மறைவு நம்மால் மறக்க முடியாத மறைவாயிற்று.

புத்தனேரியார், மரபுக் கவிதைகளை நூற்றுக் கணக்கில் எழுதியவர்.
சங்க இலக்கியப் புலமையோடு குற்றாலக் குறவஞ்சி, முக்கூடற் பள்ளு முதலிய நூல்களின் நலங்களை எடுத்துக்கூறி, அந்த சந்த அமைப்பிலேயே கவிதைகளை எழுதினார்.
ஆயிரம் நூல்களைக் கொண்ட அவருடைய நூலகத்தை நான் கண்டிருக்கிறேன்.
அவருடைய மறைவுக்குப் பிறகு, அவர் குடும்பத்தார் பெருமிதத்தோடு நூற்றுக் கணக்கான நூல்களை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்திற்காக என் வழியாக வழங்கினார்கள்.
என்னை கனிந்த மனத்தோடு தம்பி என்றழைத்த அந்த தமிழ் நம்பியை நான் நினைகூர்வது என் கடமையாகும். புத்தனேரியார் கட்டுரைகளை தொகுப்பதும் தென்னாட்டு வீரன் நெடுங்கதையை படிப்பதும் தமிழுலகம் செய்ய வேண்டிய பதிப்புப் பணியாகும்.
ஆரவாரமில்லாமல் அமைதி தெளிக்க வாழ்ந்த அவரின் வாழ்வின் சிறப்பு குறிக்கத்தக்கது.

வித்தகராய் விளங்கிய வித்வான்
—————————————————-

பல்கலை வித்வான் வே.இலட்சுமணன் அவர்களை எப்போதும் வெற்றிலைபாக்கு
குழைந்த வாயோடுதான் காணலாம். அந்தப் பல்கலையாளர் புரட்சித்தலைவருக்கு நெருங்கிய நண்பராக இருந்தார். ஆரூடம், சோதிடம், மந்திரம், தந்திரம் இலக்கியப் புலமை ஆகிய இயல்புகளெல்லாம் அவரிடத்தில் ததும்பி வழிந்தன.

நான் தலைமைச் செயலகத்தில் இருந்தபோது, ஓய்வு வேளைகளில் திரு.மணியன் அவர்களோடு வே.இலட்சுமணன் அவர்களின் இல்லத்திற்குச் சென்றிருக்கிறேன். ஒருநாள் என் கையைக் காட்டு என்றார். எல்லோரும் போலக் கை நீட்டியவர்களுக்கு ஊக்கம் தருகின்ற வகையில் இது இராஜாவின் கை என்றார். சிரித்துக்கொண்டே சொன்னேன். “இது நடராஜாவின் கை. இராஜாக்கள் படுகிற பாடு தெரியாதா? தஞ்சை சரபோஜி மன்னரின் குடும்பத்தார் பலர், எப்படியெல்லாம் அல்லல் படுகிறார்கள்?” என்று நான் சொன்னேன்.

வித்வான் அவர்கள் பரிகாரம் சொல்வதில், பெரும் வல்லவர். திண்டுக்கல் அருகில் நாற்பது கல் தொலைவில் ஒரு சிற்றூரில், அங்காளியம்மன் இருக்கிறாள். அவளுக்கு மிளகாய் பூசை செய்ய வேண்டும் இதுபோலப் பல நிகழ்வுகளைச் சொல்வார். நம்பியவர்கள் நிலை எனக்குத் தெரியாது. நம்பாதவர்களுக்கு நல்வாழ்வு விளைந்தது.

தமிழ் இலக்கியங்களில், சிற்றிலக்கியப் புலமை அவர்பால் தலைசிறந்து விளங்கியது. புரட்சித்தலைவரின் படப்பிடிப்பில், பல நிலைகளில், படப்பிடிப்பின்போதே, கதை, உரையாடல்களை மாற்றித் தந்ததை நான் கண்டு வியந்திருக்கிறேன். வித்துவான் வே.இலட்சுமணன், சொன்னால் பலிக்கும் என்ற ஆர்வத்தோடு, புரட்சித்தலைவரின் நெருங்கிய நண்பராக நின்ற வித்வான் அவர்களை நினைவு கூர வேண்டும். வித்வான் அவர்களுக்கு அருளாளர் ஆர்.எம்.வீ. பெரிய தூணாக இருந்தார்.

புரட்சித்தலைவரின் உடல் சீர்குலைந்த நேரத்தில், “நோய் உளான், வாய் உளான்” என்ற சொற்றொடருக்கு ஏற்ப மந்திரம், தந்திரம் என்று பல சித்தர்களும் துறவிகளும் மடி கட்டிக்கொண்டு முன் நின்று பல்வேறு வடிவங்களையும் கை மருந்துகளையும் தந்து வந்த காலமது.

தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *