POST: 2019-11-05T08:29:01+05:30

===========================================================================
உகரம் ஏப்ரல் 2019 இதழில் முனைவர் ஔவை நடராசன் அவர்களைப் பற்றி கவிஞர் முத்துலிங்கம் அவர்கள் எழுதிய வாழ்த்துப்பாடல்
===========================================================================
“ஔவை நடராசன் அருந்தமிழ் மகராசன்”.
==================================
– கவிஞர் முத்துலிங்கம்

ஔவை நடராசன் அறிவுக்கடல் – அவர்
ஆற்றும் உரையெலாம் தாழை மடல்
நவ்வை இல்லாத அவர் நெஞ்சம் – எந்
நாளும் தமிழ்மயில் ஆடும் திடல்!

சுரதா கவிதையின் இனிப்பையெல்லாம் – அவர்
சொற்பொழிவில் அன்று நாங்கள் கண்டோம்
சுரதாவால் எம்.ஜி.ஆர் அறிமுகத்தை – ஔவை
துரைநடராசனும் அன்று கண்டார்
தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டுத் துறைச் செயலர் – பதவியில்
தமிழறிஞர் ஔவையை முதன்முதலாய்
அமர்த்தியவர் பொன்மனச் செம்மலன்றோ!
அறிஞரை மதிப்பதில் அவர்போல் உண்டோ ?
வள்ளுவர் இலக்கியப் பேரவையில் – சிவகங்கை
மீரா நடத்திய தமிழ்விழாவில்
தெள்ளிய இவர்உரை கேட்டு நின்றோம் – அந்தத்
தினம் முதல் இவரின் அன்பரானோம்.
அரங்கில் இவர்செய்த பொழிவையெல்லாம் – இங்கே
அழகிய நூலாக்கி வைத்திருந்தால் – தமிழ்ச்
சுரங்கத்தைப் போல் அவை மிளிர்ந்திருக்கும் – இலக்கியச்
சுவைஞருக்குப் பலன் அளித்திருக்கும்
இளைய தலைமுறைக் கவிஞர்களைச் சிறந்த
எழுத்துத் திறமை உடையவரை
உளமாரப் போற்றி உயர்த்தியவர் – நம்
உள்ளத்தை அவர்பால் கடத்தியவர்!
தமிழின் பல்கலைக் கழகத்திற்கு – நம்
தமிழ்வேந்தர் ஔவையைத் துணைவேந்தர்
அமர்த்திய முதல்வர் ஜெயலலிதா – அட
அதைவிட பத்மஸ்ரீ விருது பெரிதா?
இன்றைக் கிருக்கும் அறிஞர்களில் – அட
இவருக் கீடானோர் எவருமில்லை
கொன்றையந் தீங்குதல் போல் இனிக்கும் – இவர்
குளிர் தமிழ் நம்மை மயக்கும் முல்லை !

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *