===============================================
தினசெய்தி நாளிதழில் (04.11.2019) அன்று வெளியான முனைவர் ஔவை நடராசன் அவர்களின் கட்டுரை
===============================================
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணிமகுடம் !
***********************************************************************
மனத்தை நெகிழ்த்திய மன்னன்..!
***********************************************
(பகுதி-7)
=========
நான் மொழிபெயர்ப்புத்துறையில் இருந்தபோது, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட, நூற்றுக்கணக்கான ரகசிய அறிக்கைகளைத் தமிழாகத் தருவார்கள். புரட்சித்தலைவர் எந்த அளவிற்கு, நுணுக்கமாகச் செயல்படுவார் என்பதற்கு, அது ஒரு சான்று.
திருச்செந்தூர் கோவிலில் ஒரு கொலை நடந்தது பற்றி, உங்களுக்குத் தெரியும். அது பற்றி விசாரிப்பதற்கு, நீதிபதி பால் தலைமையில், ஒரு கமிஷன் நியமிக்கப்பட்டது. நீதிபதி பால் கமிஷன் என்று, அதற்குப் பெயர். பால் கமிஷனின் முடிவு எழுதித் தரப்பட்ட ஒரு வாரத்திலேயே, மொழிபெயர்ப்புத்துறைக்கு வந்துவிட்டது. அந்த நேரத்தில், அது ஒரு பரபரப்பான சம்பவம் பற்றிய அறிக்கை.
உடனடியாக, அதனைத் தமிழில் மொழிபெயர்த்தோம். மொத்தமாக, மூன்று படிகள் இருக்கும். ஒரு படி முதலமைச்சரிடத் திலும், இன்னொரு படி தலைமைச் செயலாளரிடத்திலும் இருக்கும். மூன்றாவது படி, மொழி பெயர்ப்புத்துறை இயக்குனரிடத்தில் இருக்கும்.
இயக்குனர், துணை இயக்குனர், இரண்டு உதவி இயக்குனர்கள், மொழிபெயர்ப்பு அலுவலர்கள் ஐவர், அவர்களின் கீழ் மொழிபெயர்ப்பாளர்கள் என்று ஒவ்வொரு பிரிவும், தனித்தனியாக இருக்கும். இதுதான், மொழிபெயர்ப்புத்துறையில் இருக்கும் வழக்கம். அந்த அடிப்படையில்தான், அறிக்கைகள் மொழிபெயர்க்கப்படும். மொழிபெயர்ப்பு அலுவலர் தாண்டி, உதவி இயக்குனர், அதன்பின் துணை இயக்குனர் பார்த்து, அறிக்கையைச் சரிபார்ப்பார்கள். இயக்குனர் நெட்டோட்டமாகப் பார்த்தபின்பு, அதனை, அச்சிற்கு அனுப்புவது வழக்கம். அதேபோன்று, பால் கமிஷன் அறிக்கை வேலைகளும் முடிந்தன. அறிக்கை, அச்சிற்கு அனுப்பப்பட்டது. வேலைகளை முடித்தவுடன், நான் மருத்துவமனையில் இருந்தேன். அப்போது, எனக்கு, நீரிழிவு நோய், மிகக்கடுமையாக இருந்தது. அதனால், நான்கு நாட்கள் விடுமுறையில் சென்றிருந்தேன்.
ஒரு வெள்ளிக்கிழமை மாலை என்று நினைக்கின்றேன். பால் கமிஷன் அறிக்கை அம்பலம். முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டார் என்ற பரபரப்பான செய்தியைப் பார்த்தேன். அது அரசின் மிக முக்கியமான ரகசிய அறிக்கை. உண்மையிலேயே, நான் பயந்துவிட்டேன். மொழிபெயர்ப்புத் துறையில் இருந்து போயிருக்குமோ? என்று யோசித்தேன்.
காவல்துறையின் தலைமை அலுவலர், என்னைச் சந்தித்தார். இது எவ்வாறு நடந்திருக்கும்? என்று என்னிடம் கேட்டார். அந்தச் செய்தியை, நான் இன்னும் பார்க்கவில்லை. நீங்கள் ஒரு முறை படியுங்கள் என்று, அவரிடம் கேட்டேன். இந்த நகைகளைச் சரிபார்த்தபோது என்று, அந்த அறிக்கையில் இடம்பெற்றிருக்கும். அப்போது, சரிபார்ப்பு அதிகாரி என்ற தொடரை, அந்த அதிகாரி வாசித்தார். நான் துணுக்குற்றேன். ஏனென்றால், Verification Officer என்ற வார்த்தையை, முதலில் மொழிபெயர்த்தபோது, சரிபார்க்கும் அதிகாரி என்று எழுதியிருந்தார்கள். அதனை, சரிபார்ப்பு அதிகாரி அல்லது சரிபார்வை அதிகாரி என்று எழுத வேண்டுமென, நான் சொல்லியிருந்தேன்.
இது என்னுடைய மொழிபெயர்ப்புதான் என்று, அந்த அதிகாரியிடம் சொன்னேன். ஏனென்றால், நீதிபதியே ஒரு படியைத் தந்திருப்பாரோ என்று, காவல்துறையினர் நினைத்தார் கள். அவர்களுக்கு, யார்மீது சந்தேகப்படுவது என்று பொருளே இல்லை. நீதிபதியின் ஆங்கில அறிக்கையை, கலைஞர் மொழிபெயர்த்து, வெளியிட்டுவிட்டார் என்று நினைத்தார்கள். ஏனென்றால், கலைஞரின் மொழியாற்றல் நாடறிந்தது. இல்லை, இது மொழிபெயர்ப்புத்துறை செய்த மொழியாக்கம் என்று நான் சொன்னேன்.
அந்த அதிகாரிகூடச் சொன்னார். இது உங்கள் துறையை அல்லவா, பெரிய துன்பத்திற்கு ஆளாக்கும் என்றார். துன்பத்திற்கு ஆளாக்கட்டும், உண்மை என்பது இதுதான் என்று நான் சொன்னேன். சரி என்று, மேற்கொண்டு ஆகவேண்டிய வேலை களைப் பார்க்க, காவல்துறையினர் கிளம்பிவிட்டனர். இதன்பின்னும், காவல்துறைக்குப் பல ஐயங்கள் முளைத்தன. ஏனென்றால், தலைமைச் செயலரிடத்தில் ஒரு படி இருக்கும். இன்னொரு படி, தலைமைச் செயலகத்தில் உள்ள ரகசியக் காப்பு ஆவணங்களைப் பாதுகாக்கும் பிரிவில் இருக்கும். ஒருவேளை, அச்சகத்தில் இருந்தபோது, யாரேனும் எடுத்துக் கொடுத்துவிட்டார்களா? என்ற ஐயமும், அவர்களுக்கு இருந்தது. பால் கமிஷன் அறிக்கையின் மொழிபெயர்ப்பு, இரண்டு பகுதிகளாக இருந்தது. முதல்பகுதியின் கடைசி சில பக்கங்கள் தான், பத்திரிகைகளில் வெளியாயிற்று.
இந்த நிலையில், என்னிடம் பேசினார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். இதுபற்றி, என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்? என்றார். அச்சகத் துறையையோ, செயலகத்துறையையோ, நான் சந்தேகப்படுவதற் கில்லை. மொழிபெயர்ப்புத்துறையில் இருந்துதான் போயிருக் கிறது. ஏனென்றால், அந்தப் பகுதி முழுமையாக, அவருக்குக் கிடைக்கவில்லை. எந்த அளவிற்கு, திருத்தி அனுப்பினோமோ, அதுதான் போயிருக்கிறது. ஆகவே, இது மொழிபெயர்ப்புத் துறையில் இருந்துதான் போயிருக்க வேண்டும் என்றேன் நான். மொழிபெயர்ப்புத்துறை இயக்குனர், உதவி இயக்குனர்கள், துணை இயக்குனர் இவர்கள்தான், அந்த அறிக்கையின் படியை, கடைசியாகப் பார்த்தவர்கள். காவல்துறையின் மூலம், இவர்களை வேவு பார்க்கச் சொல்லலாம் என்றேன் நான். சரி, சரி. நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார் முதலமைச்சர். இவ்வளவு கவனக்குறைவாகப் போய்விட்டதே என்று ஒரு கடும்சொல்கூட, அவர் பேசவில்லை.
மூன்று நாள் கழித்து, என்ன நடந்தது என்று பாருங்கள். உதவி இயக்குனர் சதாசிவம் என்பவர் கைது செய்யப்பட்டார். அதில் எந்த வியப்பும் இல்லை. அந்த உதவி இயக்குனரை, காவல்துறையினர் போய்க் கேட்டிருக்கிறார்கள். அவரை, துன்புறுத்தினார்களா என்று தெரியவில்லை. அப்போது அவர் சொல்லியிருக்கிறார். என்னுடைய துறையின் இயக்குனர்தான், முன்னாள் முதலமைச்சருக்கு பெரிதும் வேண்டியவர். அடிக்கடி, அவருடன் தொலைபேசியில் பேசுவதை, நான் பார்த்திருக்கிறேன். எனவே, அவர்தான், இதைக் கொடுத்திருக்க வேண்டும். இதுபற்றி, முன்னாள் முதலமைச்சரிடம் பேசினார் என்று ஏதேதோ சொல்லியிருக்கிறார். முன்னாள் முதலமைச்சர், எனக்கு வேண்டியவர் என்பதில், எந்த ஐயமும் இல்லை. ஆனால், மறந்தும் தொலைபேசியில், இப்படிப்பட்ட தகவல்களைப் பெற வேண்டும் என்று நினைக்கவே மாட்டார். இப்படிப்பட்ட செயலை, எந்நாளும் அவர் செய்யமாட்டார் என்று நூறு முறை சொல்வேன்.
என்ன நடந்திருக்கிறது என்று பார்த்தால், ஆச்சர்யப் படுவீர்கள். இந்த மூன்று நாட்களுக்குள், எப்படியோ, காவல்துறை வேவு பார்த்து, பல தகவல்களைத் திரட்டியிருக்கிறது. சதாசிவம், தமிழ் முதுகலைப்பட்டம் பெற்றவர். விருத்தாசலத்திற்குப் பக்கத்திலுள்ள, ஒரு சிற்றாரைச் சார்ந்தவர். வேலை வேண்டும் என்று அலைந்தவர். செய்தித்துறையில் தமிழ் முதுகலை படித்தவர்களுக்கு வாய்ப்பு தந்ததினால், தனக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
எளிய பையன். பாவம், மிகவும் வருந்துகிறான் என்று முரசொலி செல்வம், அவரது பெயரைப் பரிந்துரைத்தார். அவர், எனக்கும் மிக வேண்டியவர். அதன்பின், அவருக்கு மொழி பெயர்ப்புத் துறை வேலை கிடைத்திருக்கிறது. தம் பிள்ளை களுக்கு, செல்வம், கனிமொழி, தமிழரசன் என்று அவர் பெயர் வைத்தார். முன்னாள் முதலமைச்சர்தான், இந்த வாழ்க்கையைத் தந்தவர் என்று அவர் நன்றியுணர்ச்சியோடு இருந்தது, எனக்கும் தெரியும்.
ஒருநாள் இரவு, அவர் ஒரு நபரோடு பேசியதை, காவல்துறை பதிவு செய்துவிட்டது. இதையெல்லாம், நான் எதிர்பார்க்க வில்லையே! என்னைக் கண்டுபிடித்து விடுவார்களே! நான், சும்மாதானே, கொண்டுவந்து காண்பித்தேன். எனக்குத் தெரியாமலேயே, மறுநாளைக்குள், அதனைப் படி எடுத்து விட்டார்களே எடுத்த இடத்திலேயே, நான் அதைக் கொண்டு போய், வைத்துவிட்டேனே என்று இவர் சொல்லியிருக்கிறார்.
இப்போது நினைத்தாலும், நான் மனம் நெகிழ வேண்டிய விஷயம். மொழிபெயர்ப்புத்துறையில் இவ்வாறு நடந்ததே என்று ஒருமுறைக்கூட, முதலமைச்சர் எம்.ஜி.ஆர், என்னைப் பார்த்துக் கேட்கவில்லை. அவர் மனத்தில் ஐயம் வந்திருந்தால், அப்படி ஆகியிருக்கும். ஆனால், அப்படிப்பட்ட தெளிவோடு இருந்தார் முதல்வர் என்று, அவரை எண்ணிப் பெருமைப்படுகிறேன்.
ஆனால், மொழிபெயர்ப்புத்துறை, அவ்வை நடராஜன் துறைதானே! என்று நம்பியவர்கள் பலர் உண்டு. அதனை வாய்ப்பாகக் கொண்டு, பல கதைகள் கட்டியவர்களும் உண்டு. அத்தனை வாயிலும், மண் விழுமாறு செய்து, முதல்வர் நடந்து கொண்டதை, நான் நினைத்துப் பார்க்கிறேன்.
அதற்கு, அடுத்த ஆண்டே, உலகத் தமிழ் மாநாட்டில் மிகப்பெரிய வாய்ப்பு தந்து, என்னைப் போற்றியதை, ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதேபோல, அவர் மறைவதற்கு, ஒராண்டுக்கு முன்னால், என்னைப் பதவியில் இருந்து அகற்றியபோது, எனக்கு ஏற்பட்ட அனுபவங்களைச் சொல்லி யிருக்கிறேன். அப்போது, அவர் எந்தளவிற்கு, நிலைகுலைந்து போயிருந்தார் என்பதையும் சொல்லியிருக்கிறேன்.
தொடர்வோம் பொன்மனச் செம்மலின் நினைவுகளை…
….. ஔவை நடராசன்
தொடர்புக்கு : thamizhavvai@gmail.com

Add a Comment