POST: 2019-09-13T10:14:09+05:30

===============================================
கலைமகள் (ஜுலை, ஆகஸ்டு, செப்டம்பர்) இதழில் வெளிவந்த கட்டுரை
===============================================
உலகம் போற்றும் பிரெஞ்சு அகாதெமி
*****************************************************

அறிமுகம்

பண்பாடு, நாகரிகம், பெருமிதம், அறிவார்வம், நல்லிணக்கம், ஒருமைப்பாடு என்ற ஆறு தூண்களும் எழுந்து அமைந்த எழில் நாடுதான் பிரான்ஸ்.
எல்லோரும் சமம், எல்லோருக்கும் உரிமை, எல்லோரும் உடன் பிறந்தவர்கள் என்ற மூன்று மணிமொழிகளை மறை மொழிகளாக ஒலித்த பெருமை பிரெஞ்சு புரட்சியின் விளைவாகும். எப்கிரிகாயிர் என்பவரால் திட்டமிட்டு 25.10.1795-ஆம் ஆண்டு அமைக்கப் பெற்ற ஆய்வரங்கம் தான் பிரெஞ்சு கலைக்கழகம் ஆகும். இந்த நிறுவனத்தின் இலச்சினையாக ரோமானிய ஞானக் கலைமகள் மினர்வா வடிவம் இலங்குகிறது. மொழி, கலை, அறிவியல் தொல்பொருள் மேம்பாட்டுக்கா கப் பிரெஞ்சு அரசின் அரவணைப்போடு அமைந்த இந்த நிறுவனத்தை உலக நாடுகளெல்லாம் நம் ஆய்வரங்கத்துக்கு இதுதான் தாய்க்கழகம் என்று சுட்டிக் காட்டு வார்கள். 1968-இல் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் பிரெஞ்சு அகாதெமியைப் போல உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை உருவாக்குவோம் என்று பேரறிஞர் அண்ணா முழக்கம் செய்தார். அந்தக் கனவுதான் சென்னை தரமணியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமாக உருவாக்கப் பட்டுள்ளது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் பிரெஞ்சு மொழியில் மொழியாக்கம் செய்வது தொடர்பான நுண்ணாய்வுக் கூட்டத்துக்கு அரசு முறைப் பயணமாக நான் அண்மையில் பிரான்ஸ் சென்றிருந்தபோது பிரெஞ்சு அகாதெமியைப் பார்வையிட்டு மகிழ்ந்தேன்.
‘எத்திசையும் புகழ்மணக்க இருந்த சீரிளமைத்திறம் குன்றாத தமிழணங்கே’ என்று நாம் போற்றுவது போலவே, பிரெஞ்சு மொழியைப் பேரழகு ததும்பும் பெண்ணரசியாக இலக்கிய வித்தகர் விக்டர் யூகோ எழுதியது வியப்பில் ஆழ்த்தியது. ‘பிரெஞ்சு மொழி ஒரு பெண். இந்தப் பெண் மிக அழகானவள், மிக அடக்கமானவள், மிகத் துணிவானவள், மிக உணர்ச்சியானவள், கற்புள்ளவள், மிக உயர்வானவள், மிகப் பழக்கமானவள், மிக அறிவானவள்; அவளை நேசிக்கும் நாம், அவளுக்கு நன்றி ஊட்டுபவளாக ஒருபோதும் முயன்றதில்லை என்று அறிஞர் அனடோல் பிரான்ஸ் குறிப்பிட்டது நினைவுகூரத்தக்கது.
கோவேந்தர்களும் குறுநில மன்னர்களும் கோமான்களும் வேளிர்களும் பிரெஞ்சுப் புரட்சிக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்திருந்த நாடு, எனவே காணும் இடமெல்லாம் அவர்கள் கட்டியிருந்த மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், அரண்மனைகள், கோட்டை கொத்தளங்கள், வளமனைகள், ஒப்பற்ற பூங்காக்கள், ஓங்கிய மரங்கள் சூழ்ந்த விடுதிகள், வாவிகள், சோலைகள், எங்கு பார்த்தாலும் எழிலார்ந்த சிற்பங்கள், உன்னத ஓவியங்கள், நீல விதானம் போன்ற திரைச் சீலைகள், நித்திலப் பந்தர், கால் பதிக்கக் கூசும் கம்பள விரிப்புக்கள், அணிகள், அறைகலன், பால்நிலப் பளிங்கால் அமைத்த தரைகள் எனக் கற்களின் காவியங்களையே எங்கும் காண முடிகிறது.
இத்தகைய அரண்மனைகளும் மாளிகைகளும் நூலகங்களாகவும் ஆய்வு மாடங்களாகவும் சிந்தனையாளர் மேடைகளாகவும் அருங்காட்சியகங்களாகவும் தொல்பொருள் களஞ்சியங்களாகவும் இருபதுக்கு மேற்பட்ட மாளிகைகள் பிரெஞ்சு நிறுவனத்துக்கு பரிசளிக்கப்பட்ட உரிமையானவை.
” வல்லவன் ஆக்கிய சித்திரம் போலும்,
வண்மைக் கவிஞர் கனவினைப் போலும்,
நல்ல தொழிலுணர்ந் தார்செய லேன்றே
நாடு முழுதும் புகழ்ச்சிகள் கூறக்

கல்லையும் மண்ணையும் பொன்னையும் கொண்டு
காமர் மணிகள் சிலசில சேர்த்துச்
சொல்லை யிசைத்துப் பிறர்செயு மாறே
சுந்தர மாமொரு காப்பியஞ் செய்தார் ” .

பாரதியார் தீட்டிய ஓவியம் தான் மனநிறைவைத் தரும். ஏறத்தாழ மைசூரும்,ஜோத்பூரும் என் நினைவுக்கு வந்தன .
மூவேந்தர்களும் அமைத்த தமிழ்ச்சங்கம் கூட மாடங்கள் நிரம்பிய மாமதுரையில் ஒரு மாபெரும் கலைக்கோயிலாக அமைந்திருக்கும் போலும்.

எனக்கொரு நினைவு வருகிறது அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்களோடு என் தந்தையார் ஒருமுறை பாரிசு சென்றபோது அங்கே இருந்த நண்பர் சிவசண்முகம் அருட்பெருஞ்சோதி அன்பராவார் .
இங்கே ஒரு இராமலிங்கர் பணிமன்றம் அமைக்கலாம், அதற்கு இங்கே ஒரு இடம் பார்க்கலாம். இடமா அது கல்லால் அமைந்த ஒரு குறுங்கோட்டை அதற்கு மேலிருந்த இராமகிருஷ்ண பணிமன்றத்தையும் காட்டினார்கள்.
விலைபேசிக் கொண்டிருந்த நிலையில் அந்தத் திட்டம் நிறைவேறாமல் போயிற்று. எங்கு பார்த்தாலும் கல் அரங்கள் அமைந்த பழங்கால வளமனைகள் இருந்தன.

எட்மாண்ட் ரோஸ்டண்ட்-ஐ பிரெஞ்சு நிறுவனத்திற்கு
அறிமுகம் செய்தல், நாள்: 4.06.1903 (செவ்வாய்)
மூலம்:14.06.1903ஆம் நாள் பெட்டிட் இதழின் இணைப்பு (n 656)

1793ஆம் ஆண்டில் பிரெஞ்சு புரட்சியில் முக்கிய பங்காற்றிய ஏப் கிரிகாயிர் (abbe Gregoire) முடியாட்சியின் எஞ்சிய பகுதிகளை அரசகுல அமைப்புகளை அவமதித்தார். அவர்களின் அடக்குமுறையால் உருவான இடைவெளியை நிரப்புவதற்காக, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், ஆண்டு III ஏற்படுத்தப்பட்டதன் விளைவாக 25.10.1795 அன்று இந்நிறுவனம் உருவாக்கப்பட்டது. ”புதிய கண்டுபிடிப்புகளைச் சேகரித்து, கலைகளையும் அறிவியல்களையும் செம்மையாக்குவது” இந்நிறுவனத்தின் பணியாகும். அறிவு, திறமை மற்றும் நம்பிக்கைக்குப் பாத்திரமான ரோமானியப் பெண் தெய்வமான மினர்வா (Minerva) இந்நிறுவனத்தின் சின்னமாகும்.

தொடக்கத்தில், லோவேரில் (Louvre) நிறுவப்பட்ட இந்த “ அறிஞர் சபை” 1805ஆம் ஆண்டு மார்ச்சு திங்களில், இந்நிறுவனத்தின் உறுப்பினரான முதலாம் நெப்போலியன், முந்தைய குவாட்டர்- நேஷன்ஸ் கல்லூரிக்கு மாற்றினார். பிரான்சு நாட்டுடன் புதிதாக இணைந்த நான்கு நாடுகளைப் (பிக்நெரோல், ஆல்சேஸ், ஆர்டாயிஸ் மற்றும் ரெளசில்லான்) சேர்ந்த இளைஞர்களை வரவேற்பதற்காக, 1661ஆம் ஆண்டு கார்டினல் மசாரின் விருப்பத்தின்படி இந்நிறுவனம் உருவாக்கப்பட்டது. அரை நிலா வடிவில், செயின் (Seine) நதியை நோக்கி அமைந்த கட்டடமும், வெளிப்புறத்தில் வட்டமாகவும் உட்புறத்தில் நீள்வட்ட வடிவிலும் அமைந்துள்ள அக்கட்டடத்தின் இரட்டை மாடமும் லூயிஸ் லி வோ (Louis Le Vau) என்னும் கட்டடக் கலை வல்லுநரின் அளப்பரிய திறமைக்குச் சான்றாக இன்றும் சிறந்து விளங்குகிறது.

அரண்மனைக்குள் இந்நிறுவனம் வந்தபோது, அந்தோனி வாதோயர் (Antoine Vaudoyer) அதன் வழிபாட்டறையை விவாத அறையாக மாற்றினார். ஒலியைக் குறைப்பதற்கும் ஒலியியல் பிரச்சனைகளைக் களைவதற்கும் ஒரு போலி மர மாடம் பயன்படுத்தப்பட்டது. சொற்பொழிவு மாடங்களும் 1200 நபர்களுக்கு இருக்கை வசதிகளும் செய்யப்பட்டன.

1950 ஆம் ஆண்டுகளில் கட்டடக் கலைஞர் ஆண்ட்ரே வண்ணம் தீட்டப்பட்டுச் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த ஓரளவு சேதமடைந்த அலங்காரங்களைப் புதுப்பிக்கக் கருதாமல், லீ வா-வின் (Le Vau) மீண்டும் கண்டறியப்பட்ட கட்டடக் கலையின் ஒரு அங்கமாக, கட்டடக் கலைஞர் ஆண்ட்ரே கட்டான் என்னும் கட்டடக் கலைஞர் அக்கட்டடத்தில் சில மாற்றங்களைச் செய்தார். 19ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்ட மாற்றங்கள் பற்றி அடிக்கடி கடுமையாக விமர்சிக்கப்பட்டன. முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டன. வாதோயாரால் உருவாக்கப்பட்ட அமைப்புகளுள் மீதமிருப்பது தலைவர் சொற்பொழிவு மாடம் மட்டுமே ஆகும்.

பிரான்சு கல்வி நிறுவனம், 1816 மற்றும் 1832 ஆகிய ஆண்டுகளுக்கிடையேயான காலத்தில் மறுசீரமைக்கப்பட்டது முதல், அதில் இடம்பெற்றுள்ள ஐவரும் குடியரசு தலைவரின் பாதுகாப்பின் கீழுள்ள பொதுச் சட்டத்தின் கீழ் வரும் சிறப்பு நிலை சட்டமுறை நபர்களாவர். எவ்விதக் கட்டுப்பாடுமின்றி, சுதந்திரமாகத் தன்னைத்தானே நிருவகித்துக் கொள்ளும் இந்த நிறுவனங்கள், மனிதநேயம், அறிவியல் மற்றும் கலைகளைச் செம்மைப்படுத்திப் பரப்புவதில் ஆதாயம் ஈட்டும் செயலில் ஈடுபடுவதில்லை அல்ல.

இந்நிறுவனம் மத்திய நிருவாக ஆணையம் மற்றும் அவ்வாணையத்தால் மூன்றாண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் வேந்தரின் அதிகாரத்தின் கீழ் உள்ளது. அந்நிறுவனத்திலுள்ள கல்வியாளர்களுள் இருந்து ஒருவர், ஓர் ஆண்டுக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். பொது விழாக்களில், அந்நிறுவனத்தின் சார்பாக அந்தத் தலைவர் கலந்து கொள்வார். மேலும், பொதுக் கூட்டங்களுக்கும் முறையான அவைகளுக்கும் அவர் தலைமையேற்பார்.

பிரெஞ்சு நிறுவனம்

இந்தப் பிரெஞ்சு நிறுவனம் கார்டினல் டி ரிச்சிலி அவர்களால், 1635ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது, அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்ட பிரான்சு நிறுவனத்தை இன்று கொண்டுள்ள ஐந்து நிறுவனங்களுள் முதல் நிறுவனமாகும்.. ”நமது மொழிக்கு உறுதியான விதிகளை வரையறை செய்வதும், அதனைத் தூய்மையானதாகவும் சொல் திறன் மிக்கதாகவும் ஆக்கி, கலை மற்றும் அறிவியல் ஆகிய இரண்டையும் எடுத்துரைக்க இயலும் வகையில் அதனை உருவாக்குவதால்” இந்நிறுவனத்திற்கு முதலில் வழங்கப்பட்ட பணியாகும். இதன் அடிப்படையில், பிரெஞ்சு அகராதி வெளியீட்டின் வாயிலாகப் பிரெஞ்சு மொழியை இந்நிறுவனம் கண்காணித்துப் பிரெஞ்சு மொழி பேசும் உலகைப் பாதுகாக்கிறது. இதில், 40 சட்டப்படியான உறுப்பினர்கள் உள்ளனர்.

கல்வெட்டு எழுத்துகள் மற்றும் பெல்லீஸ் எழுத்துகள் நிறுவனம்

கால்பெர்ட் என்பவரின் முயற்சியால் 1663ஆம் ஆண்டு இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. வரலாறு குறித்த தகவல்கள், மொழிகள் மற்றும் நாகரிகங்களுடன் தொடர்புடைய கலை, மொழியியல் மற்றும் மனிதநேயங்களின் வரலாறு ஆகியவற்றின் வளர்ச்சியை ஊக்குவிப்பதும் இவை குறித்த தகவல்களைப் பிறருக்குக் கொண்டு செல்வதும் இதன் நோக்கமாகும்.(பழங்காலம் முதல் வகுப்பு வாரியான காலம் வரை) வரலாற்று அறிவியல்களுடன் (வெட்டெழுத்தியல், காசியல், தந்திரவியல் முதலியவை) தொடர்புடைய தலைப்புகளின் மீதும் இந்நிறுவனம் கவனம் செலுத்துகிறது. சட்டப்படி இதில், 55 உறுப்பினர்களும், 40 அயல்நாட்டு நிருவாகிகளும் 100 பிரெஞ்சு மற்றும் அயல்நாட்டு நிறுவனப் பேராளர்களும் உள்ளனர்.

அறிவியல் நிறுவனம்

கால்பெர்ட் 1666ஆம் ஆண்டு கால்பர்ட் இந்நிறுவனத்தைத் தொடங்கினார். அறிவியல் மற்றும் அதன் பயன்பாடுகளின் வளர்ச்சி மற்றும் அதன் பரவலாக்கத்திற்கெனத் தொடங்கப்பட்டதாகும். இந்நிறுவனம் மேற்கொள்ளும் ஆய்வுகளும், விவாதங்களும் கலந்துரையாடல்களும் சமுதாயக் கட்டமைப்பிற்கு வகை செய்வதுடன் குறிப்பாக அரசு சார்ந்த அமைப்புகளுக்கு நிபுணத்துவம், ஆலோசனை மற்றும் எச்சரிக்கை கட்டமைப்புடன் வகை செய்கிறது. வாழ்க்கை அறிவியலை ஊக்குவிப்பதும், அறிவியல் கற்பித்தலை வளர்க்கவும், அறிவு பரிமாற்றமும், இவை குறித்த பன்னாட்டு இணைவாக்கத்தை ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும். இந்நிறுவனம், 273 உறுப்பினர்களையும், 124 அயல்நாட்டு நிருவாகிகளையும் 76 நிறுவனப் பேராளர்களையும் கொண்டுள்ளது.

கவின் கலை நிறுவனம்

1816ஆம் ஆண்டிலிருந்து முதல், கவின் கலை நிறுவனம் என அறியப்படும் இந்நிறுவனம், 17ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட இசை மற்றும் கட்டடக்கலையின் ஓவியம் மற்றும் சிற்பக்கலையின் அரச குல நிறுவனத்தின் வழிதோன்றலாகும். பல்வேறு போட்டிகளை நடத்துதல், பரிசுகளை வழங்குதல், கலைஞர்களின் குடியிருப்புகளுக்கு நிதியளித்தல் உதவித்தொகை அளித்தல் ஆகியவற்றின் வாயிலாக ஒவ்வொரு வெளிப்பாடுகளிலும், கலைநயமிக்க படைப்புகளை வெளி கொண்டு வருவதற்கு இந்நிறுவனம் ஊக்குவிக்கிறது. மேலும், பிரெஞ்சு பண்பாட்டு பாரம்பரியம் பாதுகாக்கப்படுவதையும் இது கண்காணிக்கிறது. இது பொது அதிகாரிகளுக்கான ஒரு ஆலோசனை அமைப்பாகும். கலை சார்ந்த விவகாரங்களையும் இது கருத்தில் கொள்கிறது. இன்று, சட்டப்படியான 59 உறுப்பினர்களையும், 16 அயல்நாட்டு நிருவாகிகளையும் 59 நிறுவனப் பேராளர்களையும் இந்நிறுவனம் கொண்டுள்ளது.

அறிவியல் ஆற்றல் மற்றும் கொள்கைக்கான நிறுவனம்

1795ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், 1803ஆம் ஆண்டில் கலைக்கப்பட்டு, கியுசாயிட் (Guizot) – இன் முயற்சியால், 1832ஆம் ஆண்டு மீண்டும் புத்துயிர் பெற்றது. மனிதநேயத்துடன், சட்டம் மற்றும் பொருளாதாரக் கொள்கையின்படி சமூகப் பிரச்சனைகளுக்கு இந்நிறுவனம் தீர்வு காண்கிறது. இந்நிறுவனம் சட்டப்படியான 50 உறுப்பினர்களையும், 12 அயல்நாட்டு நிருவாகிகளையும் 60 நிறுவனப் பேராளர்களையும் இந்நிறுவனம் கொண்டுள்ளது.

கல்வியாளர்கள் (கல்வி நிறுவனங்களின் உறுப்பினர்கள்) நிரந்தரமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். நெப்போலியன் காலத்திலிருந்து, அவர்கள் பச்சை நிற ஆடையணிந்து ( “habbit vert”) உரிமையாளரின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் குறியீடுகள் பொறிக்கப்பட்டிருக்கும் கலை வேலைப்பாடுகள் நிறைந்த வாளினைக் கையில் ஏந்தி வருகிறார்கள். இம்மாடத்தில் நடைபெறும் பின்வரும் முறைப்படியான கூட்டத் தொடர்களில், இந்த உடை அணியப்படுகிறது. அவையாவன:

⦁ நிறுவனம் தொடங்கப்பட்ட நாளான அக்டோபர் மாதம் 25 ஆம் நாள் நெருக்கத்தில் வரும் செவ்வாய் கிழமை அன்று நடைபெறும் ஐந்து நிறுவனங்களின் ஆண்டு பொதுக் கூட்டத்தொடர் ( அல்லது “இலையுதிர் காலக் கூட்டத்தொடர்”). இக்கூட்டத்தொடரில் ஒவ்வொரு நிறுவனத்திலிருந்தும் வருகை தரும் சிறப்புப் பிரதிநிதிகள் ஒரு பொதுவான தலைப்பில் உரையாற்றுவர்;
⦁ ஐந்து நிறுவனங்கள் ஒவ்வொன்றின் இலையுதிர் காலக் கூட்டத்தொடர்.
⦁ ஜூன் மாதம் இரண்டாவது புதன் அன்று நடைபெறும், பிரான்சு கல்வி நிறுவனம் துவங்கப்பட்டதையொட்டி அளிக்கப்படும் மாபெரும் பரிசு வழங்கும் விழா;
⦁ நிறுவனத்தின் இருநூறாம் ஆண்டினைக் கொண்டாடுவதற்காக, 1995ஆம் ஆண்டு நடைபெற்ற விழா, 2005 ஆம் ஆண்டில் மாநிலத்திலிருந்து தேவாலயத்தைத் தனியாகப் பிரித்துச் சட்டம் இயற்றப்பட்ட நூறு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற நூற்றாண்டு விழா அல்லது 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற அறிவியல் கல்வி நிறுவனத்தின் 250ஆவது ஆண்டு விழா போன்ற விதிவிலக்கான கூட்டத்தொடர்கள்.
⦁ பிரெஞ்சு நிறுவனம், அறிவியல் நிறுவனம், கவின் கலை நிறுவனம் மற்றும் அறிவியல் ஆற்றல் மற்றும் கொள்கைகளுக்கான நிறுவனம் ஆகியவற்றின் புதிய உறுப்பினர்களை வரவேற்பதற்காக நடைபெற்ற நிகழ்வுகள்.

சிறிய மற்றும் பெரிய கூட்டத்தொடர் அவை அறைகளில், நடைபெறும் வாராந்திரக் கூட்டத்தொடர்களின் போது கல்விப் பணிகள், விவாதங்கள், சமுதாயப் பிரச்சனை குறித்த கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள் மற்றும் பரிசுகள் மற்றும் நிறுவனங்கள் குறித்த ஆலோசனைகள் அல்லது பிரெஞ்சு கல்வி நிறுவனத்திற்கான அகராதியைத் தொகுத்தல் ஆகியவை நடைபெறும்.

சிறிய கூட்டத்தொடர்கள் நடைபெறும் அறையில், ஒவ்வொரு வியாழன் அன்றும் பிரெஞ்சு நிறுவனத்தின் கூட்டம் நடைபெறும் அறிவியல் நிறுவனம், அறிவியல் ஆற்றல் மற்றும் கொள்கைக்கான நிறுவனத்தின் வாராந்திரக் கூட்டத்தொடர்களும் (திங்கட்கிழமை தோறும்) இங்கு நடைபெறும்.

பெரிய கூட்டத்தொடர்கள் நடைபெறும் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமைகளில் அறிவியல் நிறுவனத்தின் கூட்டமும், ஒவ்வொரு புதன் கிழமைகளில் கவின் கலை நிறுவனத்தின் கூட்டமும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் கல்வெட்டு எழுத்துகள் மற்றும் பெல்விஸ் எழுத்துகள் நிறுவனக் கூட்டமும் நடைபெறும்.

நூலகங்கள்

நிறுவன மாளிகை, (The Palais de I’Institut), விலைமதிப்பில்லாப் புத்தகங்களைக் கொண்டுள்ள இரண்டு நூலகங்களின் தாய் வீடாகும்

மெசாரின் நூலகம் (The Mazarine Library)

மெசாரின் நூலகம், பிரான்சு நாட்டின் மிகப் பழமையான பொது நூலகமாகும். மேலும், அந்நாட்டின் பாரம்பரியமிக்க நூலகங்களுள் ஒன்றாகும். இடைப்பட்ட காலம் தொடங்கி 20ஆம் நூற்றாண்டு வரையிலான காலங்களில் உள்ள ஏறத்தாழ 5,000 கையெழுத்துப்படிகளையும், 500,000 அச்சிடப்பட்ட புத்தகங்களையும் (அவற்றுள் 2,300 புத்தகங்கள் 1501ஆம் ஆண்டிற்கு முன்னர் அச்சிடப்பட்டவையாகும்) பல்வேறு கலைப் பொருட்களையும் இந்நூலகம் கொண்டுள்ளது. தொடக்கத்தில் இது, பேரறிஞர் கேப்ரியல் நாடே (Gabriel Naude) (1600-1653) அவர்களால் சேகரிக்கப்பட்ட கர்தினால் மெசாரின் (1602-1661) என்பவரின் தனிப்பட்ட தொகுப்பே ஆகும். 1643 ஆம் ஆண்டு முதல், கர்தினால் காலத்தின்போது, பொது மக்களுக்கு இந்நூலகம் திறந்துவிடப்பட்டது. என்றென்றும் இந்நூலகம் நிலைத்திருக்க வேண்டி, அதனைக் குவாட்டர்-தேசிய கல்லூரியுடன் இணைக்க மெசாரின் முடிவு செய்தார். அவர் இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்னர், இக்கல்லூரியை அவர் தோற்றுவித்தார். பிரெஞ்சு புரட்சி முழுவதிலும், இந்நூலகம் செயல்பாட்டில் இருந்தது. பொதுமக்களுக்கு இந்நூலகம் திறந்து விடப்பட்டதால், இந்நூலகம் மிகச் சிறப்பான புத்தகங்களைக் கொண்டிருப்பதற்கு ஏப் லெப்லாண்ட் (Abe Leblond) எனும் பெயரால் அறியப்படும் இதன் நூலகர் காஸ்பர்ட் மைக்கேலுக்கு (Gaspard Michel) மிகப் பெரிய நன்றி. அன்று முதல், குறிப்பாக வரலாற்று துறையில் புத்தகங்களை வாங்குதல் மூலம் அல்லது நன்கொடையாகப் பெறுவதன் வாயிலாக இந்நூலகம், அதன் ஆதாரங்களைத் தொடர்ந்து மேம்படுத்தி வந்துள்ளது.

உண்மையில், இன்று, இது அனைவரும் பயன்படுத்தக்கூடிய கல்வி மற்றும் ஆய்வு நூலகமாக உள்ளது. 1647ஆம் ஆண்டில் பைரி லீ மியூட் (Pierre Le Muet) அவர்களால் வடிவமைக்கப்பட்டு, மரப்பலகைகள் மற்றும் தூண்களால் தனித்துவமிக்க வகையில் அலங்கரிக்கப்பட்ட மிகச் சிறப்பானதொரு பயிலும் அறையில், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் அடுத்தடுத்து அமர்ந்து அவரவர் பணியை மேற்கொள்கின்றனர்.

நிறுவன நூலகம்

இந்நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலைய உறுப்பினர்களின் உதவியால், வெளி ஆராய்ச்சியாளர்களுக்கும், அனுமதியின் பேரில், இந்நிறுவனத்தின் நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நிறுவனம் துவங்கப்பட்ட அன்றே தொடங்கப்பட்ட இந்நூலகம், தொடக்கம் முதலே, பல்வேறு துறைகளைச் சார்ந்த நூல்களைக் கொண்டுள்ளது. இந்நிறுவனத்தைச் சார்ந்தோர்களின் நினைவுகளை என்றும் நிலைபெற்றிருக்கச் செய்வதும், நிறுவன உறுப்பினர்களுக்கு அவர்தம் பணி குறித்துத் தேவையான ஆவணங்களைக் கிடைக்கச் செய்வதும் இந்நூலகத்தின் நோக்கமாகும். இந்நிறுவனங்களின் செயல்பாடுகளினாலும், நிறுவனங்கள் பெற்றிருந்த புகழாலும், உலகம் முழுவதிலுமிருந்து வரப்பெற்ற கல்வி சார்ந்த எண்ணற்ற ஆவணங்களை இந்நூலகம் கொண்டுள்ளது.

இந்நூலகத்திலுள்ள பழமையான மற்றும் நவீன, விலைமதிப்பில்லா நூல்களும், பிரான்சு நிறுவனத்தின் மீது நம்பிக்கை கொண்ட புத்தகம் சேகரிப்பவர்களால் பரிசளிக்கப்பட்ட நூல்களும், இந்நூலக வளமைகோர் காரணமாகும். உலகளவில், பால்சாக்-இன் கையெழுத்துப்படிகளை அதிகளவில் இந்நூலகம் கொண்டுள்ளது.1913ஆம் ஆண்டு, சார்லஸ் டீ சுபோல்பெர்க் டீ லோவெஞ்சோல் (Charles de Spoelberch de Lovenjoul) அளித்த நன்கொடைக்கு நன்றி. நிறுவன உறுப்பினர்கள் படிப்பதற்காக, போனபார்டே (Bonaparte)-வால் இத்தாலியிலிருந்து மீண்டும் கொண்டு வரப்பட்ட, லியானார்டோ டீ வென்சி அவர்களால் கைப்பட எழுதப்பட்ட அறிவியல் சார்ந்த பன்னிரண்டு குறிப்பேடுகள், இந்நூலகத்தின் மிகப்பெரிய பொக்கிஷமாகும்.

இந்நூலகத்தில் 600,00 அச்சிடப்பட்ட புத்தகங்கள், 7,000 பருவ இதழ்கள் மற்றும் 10,000 கையெழுத்துப்படிகள், தனியார் பெட்டகங்கள் மற்றும் ஆய்வு அறிக்கை உள்ளது. ஆய்வுப் பணிகளுக்கு இவை மிகவும் இன்றியமையாதவைகளாகும். பொறித்தல் வேலைப்பாடுகள், ஓவியங்கள், 40,000 பழைய புகைப்படங்கள், சித்திரங்கள், பதக்கங்கள் மற்றும் இந்நிறுவன உறுப்பினர்களின் மார்பளவு உருவச்சிலை மற்றும் அவர்களின் வாள்கள் போன்ற பல்வேறு வகையிலான பொருட்களையும் இந்நூலகம் கொண்டுள்ளது. இங்குக் கவின் கலை நிறுவனச் சிற்பிகளுக்காக, அண்மையில் ஒரு அச்சு அறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

1886ஆம் ஆண்டில், ஆமேல் அரசர் (Duke of Aumale), சாண்டில்லி தோட்டம் (Chantilly estate) முழுவதையும் பிரான்சு நிறுவனத்திற்கு அன்பளிப்பாக அளித்தார். பின்னர், அந்நிறுவனம் இந்நிறுவனம் மற்றும் கல்வி நிலையங்களிடம், இத்தகைய ஆச்சரியமிக்க மரபுரிமைச் சொத்துகள் ஒப்படைக்கப்பட்டன. மரபுரிமைச் சொத்துகளைப் பாதுகாக்கும் புதிய பணியைக் கையிலெடுத்துக் கொண்டது. மேலும், பலராலும், இத்தகைய அன்பளிப்புகள் தொடரப்பட்டன. நிறுவனத்தின் மதிப்புமிக்க காப்பாளர்கள், நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்ட சொத்துகளைச் சீர்செய்து, வளமூட்டிப் பொது மக்களுக்குத் திறந்து விட்டனர்.

சாண்டில்லி தோட்டம் (ஆமேல் நிறுவனம்)

மாண்ட்மோரென்சி குடும்பத்தால், 16ஆம் நூற்றாண்டு முதல், இந்த அரண்மனை புதுப்பிக்கப்பட்டு நவீனமயமாக்கப்பட்டது. 17ஆம் நூற்றாண்டு முதல் கொண்டே (Conde) குடும்பம் அதன் உரிமையாளரானது. இன்று, இது, பிரெஞ்சு பாரம்பரியத்தின் அணிகலன்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. நீண்ட நாட்களுக்குப் பின்னர்த் தாயகம் திரும்பியபோது, விலைமதிப்பில்லாப் பல புத்தகங்களையும், சித்திரங்களையும் (பழங்கால ஓவியங்களின் சிறப்பு தொகுப்பு, லாவோருக்கு மட்டுமானது) கலைப் பொருட்களையும் ஒன்றாகக் கொண்டுவந்து, அரண்மனையை மீண்டும் பெரிதாக உருவாக்கிய சிறப்புமிக்க, ஆமேல் அரசர் (Duke of Aumale), ஹென்றி டீ ஓர்லியன்ஸ்-க்கு (Henri d’ Orleans) நன்றி.1830ஆம் ஆண்டு, தனது எட்டாவது அகவையில், காண்டேவின் (Conde) கடைசி இளவரசரும், தனது ஞானத் தந்தையுமானவரிடமிருந்து இந்த அரண்மனையை அவர் பெற்றார். 1886ஆம் ஆண்டில், நேரடி வாரிசு யாருமில்லாததால், அந்நேரத்தில், பிரான்சில் நிலவிய அரசியல் நிலையற்ற தன்மையை அறிந்து, ஏறத்தாழ 8,000 எக்டேர் பரப்பளவிலுள்ள இந்த மிகப்பெரிய தோட்டத்தைப் பிரான்சு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்க அவர் முடிவு செய்தார். (25.10.1886 ஆம் நாள் நன்கொடை காடிசில்ஸ் நிறைவு செய்யப்பட்டது)

ஆமேல் நிறுவனத்தில், காண்டே அருங்காட்சியகத்தின் நூலகமும், ஆவணக் காப்பகமும் உள்ளன. அங்கு ஆமேல் அரசால் சேகரிக்கப்பட்ட விலைமதிப்பில்லா எழுத்துப்படிகளும் ஆவணங்களும் உள்ளன. புத்தகங்களும் வரலாற்றுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட இந்நூலகத்தில் இன்று ஏறத்தாழ 60,000 தொகுதிகளும், 8,000 வரைபடங்கள் மற்றும் திட்டங்களும், 81,000 கடிதங்களும் உள்ளன.

அப்பேதியா அரண்மனை – ஆய்வுக்கூடம் (ஆண்டோனி டீ அப்பேதி நிறுவனம்)

பாஸ்கியூ (Basque) நாட்டில், ஹெந்தாயே (Hendaye) பகுதிக்கு மேலே, டியூக்ஸ்-ஜூமாக்ஸ் (Deux-Jumeaux) பாறைக்கு எதிர்ப்புறமுள்ள வனப் பகுதியில், பெருங்கடலைப் பார்த்த வண்ணம் நிற்கும், அப்பேதியா அரண்மனை – ஆய்வுக்கூடமானது, அதனை உருவாக்கிய அனைத்திலும் முன்னோடியான கல்வியாளர், புவியியல் ஆய்வாளர், வானியல் ஆய்வாளர், மொழிவாணர் மற்றும் இனவியலாளர் ஆண்டோனி டீ அப்பேதி (1810-1897)-யைப் போன்றே பன்முகங்களைக் கொண்டுள்ளது. 1864 மற்றும் 1884ஆம் ஆண்டுகளுக்கிடையில், யூகீன் வையிலட் லீ டக் (Eugene Viollet le Duc) என்பவர் இந்தக் கோட்டையைக் கட்டினார். அவரின் அனைத்துப் படைப்புகளுள், அப்பேதியா, உண்மையில் தனிச் சிறப்பான மற்றும் முழுமையான படைப்பாகும். நியோ-கோதிக் (neo-gothic) கட்டடக்கலை வடிவில் கட்டப்பட்ட இக்கோட்டை, இடைக்கால அரண்மனைகளின் தாக்கத்தைப் பெற்றுள்ளது. இதன் உள் அலங்காரத்தில், கட்டடக்கலை வல்லுநரின் முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. 1895ஆம் ஆண்டில், அறிவியல் நிறுவனத்திற்கு மொத்த இடத்தையும் நன்கொடையாக அளித்தவரின் வாழ்க்கை மற்றும் பண்பாட்டு குறிப்பையும் இது கொண்டுள்ளது. இக்கோட்டையின் வடபுறத்தில் அரிதான வானியல் ஆய்வுக்கூடம் அமைந்துள்ளது. பதின்ம அளவீடு வட்டத்துடன் கூடிய தீர்க்கரேகைக் கருவி மிகவும் இவ்விடத்திற்கு ஒரு தனித்துவமிக்க பரிமாணத்தை அளிக்கிறது.

ரே-செஸ்ரெட் கோட்டை (காடின் டீ லேபினே நிறுவனம்)
(Ry-Chazerat Chateau (Godin de Lepinay Foundation)

ஜோர்னெட் மற்றும் மாண்ட்மாரில்லன் (Journer and Montmorillon) நகராட்சிகளில் பொய்டோ (Poi Tou) கிராமத்தின் மத்தியில் அமைந்துள்ள 1,100 ஹெக்டேர் பரப்பளவிலான ரே-செஸ்ரெட் பண்ணையச் சுற்றி ஒரு சிறிய கோட்டை அமைந்துள்ளது. பாதுகாப்பு அரண்களுடன் கூடிய இக்கோட்டை மெல்லக் மெல்ல குடியிருப்புப் பகுதியாக மாறிவருவதற்கான சான்றுகள் புலப்படுகின்றன. இக்கட்டடத்தின் தரம், வெவ்வேறு காலத்தைச் சார்ந்த கட்டுமானப் பணிகளை வெளிப்படுத்துகிறது. மேலும், 19ஆம் நூற்றாண்டின் முடிவு வரையில் இக்கட்டடத்தில் யாதொரு மாற்றமும் புலப்படவில்லை. அடோல்ஃபி காடின் டீ லிபினே (Adolphe Godin de Lepinay) 1897ஆம் ஆண்டில், அறிவியல் நிறுவனத்திற்கு இதனை வழங்கினார். சூயஸ் கால்வாய்க்கொரு பெர்டிணாண்ட் டீ லெசெப்ஸ் போன்று பனாமா கால்வாய்க்கான அறிவார்ந்த பொறியாளர் அடோல்ஃபி காடின் டீ லிபினே ஆவார். வேளாண்மை மற்றும் பயிர் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு, அறிவியல் நிறுவனத்தின் உறுப்பினர்கள் சில காலத்திற்கு இக்கோட்டையிலேயே வசிக்க வேண்டுமென்பது இவரின் பேரவா ஆகும்.

லாஞ்சியேஸ் கோட்டை ( ஜாக்வேஸ் சிக்பிரைட் நிறுவனம்)
Langeais Castle (Jacques Siegfried Foundation)

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், ஆஞ்ஜோவில் வாழ்ந்த குறிப்பிடத்தக்க நபர்களுள் ஒருவரான பால் நேரா (Foulque Nerra) என்பவரால் லாஞ்சியாசின் பாறைகளின் மீது கட்டப்பட்ட கோட்டை, பின்னாளில் வலிமையான சுவர்களைக் கொண்டு கட்டி முடிக்கப்பட்டது. நூறாண்டு காலப் போரின்போது, இக்கோட்டை அழிக்கப்பட்டது. இக்கோட்டையில் எஞ்சிய பாகங்களைக் கொண்டு, 15ஆம் நூற்றாண்டில் இக்கோட்டையைப் புதுப்பித்த லூயிஸ் XI-க்கு நன்றி. அவரின் மகன் சார்லஸ் VIII, 1491ஆம் ஆண்டு, அங்கு ஆனி டீ பிரிடாக்னே-வை திருமணம் செய்து கொண்டார். கோட்டையின் வெளிப்புறத்தில் மீண்டும் அமைக்கப்பட்ட வரைபாலம், அக்கோட்டைக்குக் குறிப்பிடத்தக்கதொரு தோற்றத்தை அளிக்கிறது. கோட்டையின் உட்புறப்பகுதி, அதன் பங்கிற்கு, காண்போர்க்குப் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. பிரான்சு நகரில் (10ஆம் நூற்றாண்டு) மீதமுள்ள பழங்காலச் சதுரக் கல் கோட்டையின் இடிபாடுகளினால் உருவாக்கப்பட்ட தோட்டம் ஒன்று அங்குள்ளது. லூயிஸ் XIII ஆம் அரசரின் காலம் வரையில், அரசர்களின் உடைமையாக இருந்த இக்கோட்டை, பின்பு, விற்கப்பட்டு அதன்பின்னர்ப் பலரின் கைகளுக்கு மாறியது. 1886ஆம் ஆண்டு, தொழிலதிபர் ஜாக்வேஸ் சிக்பிரைடு இக்கோட்டையை விலைக்கு வாங்கினார். 15ஆம் நூற்றாண்டின் இறுதியில், தேவ இல்லம் வடிவில் இவர் இதனை மாற்றியமைத்தார். 1904ஆம் ஆண்டு, பிரான்சு நிறுவனத்திற்கு இவர் இதனை நன்கொடையாக அளித்தார்.

டோஸ்னே-தியர்ஸ் நிறுவனம் –தியர்ஸ் நூலகம்
Dosne-Thiers Foundation-Theirs Library

பாரீஸ் நகரின் 9-ஆவது மாவட்டமான புனித ஜார்ஜ் இடத்தில் அமைந்துள்ள டோஸ்னே-தியர்ஸ் மாளிகை, அடோல்ஃப் தியர்ஸ் மற்றும் அவரின் மனைவி எலிஸ் டோஸ்னே குடியிருந்த மாளிகையாகும். ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியைத் தடுத்து நிறுத்தியதற்காக அப்போதைய அவை தலைவரான அடோல்பி தியர்ஸ்-ஐ தண்டிப்பதற்காகப் பாரீஸ் பொது மீட்புக் குழுவின் ஆணைகளின் பேரில், 1871ஆம் ஆண்டு முதலாவது மாளிகை அழிக்கப்பட்டது. விக்டோரியா வீதியில் அமைந்துள்ள கிராண்ட் சைனோக்-ஐ (Grand Synagogue) வடிவமைத்த புகழ் பெற்ற கட்டடக் கலைஞரான ஆல்பிரட்-பிலிபர்ட் என்பவரால் மீண்டும் உருவாக்கப்பட்ட ஒரு மாளிகையை அடோல்ஃப் தியர்ஸ் வைத்திருந்தார். அவ்வுடைமைகளுக்கு ஒரே வாரிசான தனது மைத்துனர் அடோல்ப் தியர்ஸ் மறைவிற்குப் பின்னர், ” ஒரு நவீன நூலகத்தை உருவாக்கப் பயன்படுத்திக் கொள்வதற்காக, குறிப்பாக, பிரான்சு வரலாறு குறித்த நூலகம் உருவாகுவதற்காக” இம்மாளிகையை 1905ஆம் ஆண்டு, பெல்சி டோஸ்னே, பிரான்சு நிறுவனத்திற்கு அன்பளிப்பாக அளித்தார்.

ஜாக்மார்ட்-ஆண்ட்ரே அருங்காட்சியகம் (ஜாக்மார்ட்-ஆண்ட்ரே நிறுவனம்)
Jacquemart-Andre Museum-Paris ( Jacquemart-Andre Foundation)

கட்டடக்கலை வல்லுநர் ஹென்றி பேரண்ட்-இன் திட்ட வரைபடங்களைக் கொண்டு 1869 மற்றும் 1875ஆம் ஆண்டுகளுக்கிடையேயான காலங்களில் கட்டப்பட்ட பாரீசில் உள்ள ஜாக்மார்ட்-ஆண்ட்ரே அருங்காட்சியகமானது, உண்மையில், எட்வார்ட் ஆண்ட்ரே-வின் தனி மாளிகையாகும். இவர், இரண்டாம் பேரரசின் மிகப்பெரிய செல்வந்தர்களுள் ஒருவரும் அவரது மனைவியான ஓவியர் நீலி ஜாக்மார்ட் (1841-1912) ஆகியோரின் வாரிசு ஆவார். இவர்கள் இருவரும் எண்ணற்ற பொருட்களைச் சேகரித்துள்ளனர். தம்பதியர் இருவருமாய்ச் சேர்ந்தும், பின்னர், நீலி ஜாக்மார்ட் தனித்தும், குறிப்பிடத்தக்க பல பொருட்களைச் சேகரித்துள்ளனர். குறிப்பாக, பண்டைய ஆட்சிமுறைகளின் இறுதி காலங்களிலிருந்து 15ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இத்தாலியக் கலை மற்றும் பிரான்சு கலைப் பொருட்களை இவர்கள் சேகரித்துள்ளனர். 1912ஆம் ஆண்டு, நீலி ஜாக்மார்ட் மறைவின்போது, அந்த அரண்மனையையும் கலைப்பொருட்களையும் பொது மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டுமென்ற நிபந்தனையுடன் அவற்றைப் பிரான்சு நிறுவனத்திடம் வழங்கினார். இன்று, இந்த அருங்காட்சியகம் பாரீசில் உள்ள மிக முக்கியமான தனியார் அருங்காட்சியகங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது, மேலும், நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களைக் கவருகின்ற தற்காலிகக் கண்காட்சிகளும் இங்கு நடத்தப்படுகிறது.

சாலிஸ் திருக்கோயில் (ஜாக்மார்ட்-ஆண்ட்ரே நிறுவனம்)
Chaalis Abbey (Jacquemart-Andre Foundation)

சாலிசின் பழைய சிஸ்டெர்சியான் திருக்கோயில் (Old Cistercian abbey of Chaalis), பாரீஸ் நகரத்திலிருந்து சுமார் நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள, வாலாயிஸ் பகுதியில், ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான நிலத்தில் அமைந்துள்ளது, இது, 1137ஆம் ஆண்டு, அரசர் லூயிஸ் VI லீ கிராசால் தோற்றுவிக்கப்பட்டது. இது தோற்றுவிக்கப்பட்ட ஆறு நூற்றாண்டுகளுக்குப் பின்னர், பிரெஞ்சு புரட்சியின்போது, தேசியச் சொத்தாக இத்திருக்கோயில் விற்பனை செய்யப்பட்டது. 19ஆம் நூற்றாண்டின்போது, முந்தைய தேவாலயம் மற்றும் சிற்றாலயங்களின் இடிபாடுகளின் நிழலில், அங்குள்ள பிரிமாடைஸ் (Primatice) சித்திரங்களுடன் பொழுதுபோக்கு அரண்மனையாக இது மாற்றப்பட்டது. 1902ஆம் ஆண்டில், நீலி ஜாக்மார்ட்-ஆண்ட்ரே-வின் தேசிய இல்லமாக இத்திருக்கோயில் மாறியது. அவரது பெருமளவிலான சேகரிப்புகள், இங்கு வைக்கப்பட்டிருந்தன. காதல் உணர்வு நிரம்பிய பூங்காக்களும், ஏரிகளும் அருங்காட்சியகத்தை மேலும் அழகாக மாற்றின. பண்டைய கால மார்பளவு உருவச் சிலைகள், கோதி மறுமலர்ச்சி பேழைகள்,12 முதல் 16ஆம் நூற்றாண்டு (Giotto, Bellegambe) ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் மற்றும் 17ஆம் நூற்றாண்டு முதல் பேரரசு காலம் (Philippe de Champaigne, Boucher, Houdon…) வரையிலான ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் அனைத்தும் சேர்ந்து வியத்தகு தொகுப்பாகக் காட்சியளித்தன. அபூர்வமான “இந்திய மற்றும் பர்மிய அறை” மற்றும் மேடம் ஆண்ட்ரே-வின் தனி அறைகள் ஆகியவை நம் பயணத்தை முழுமையடையச் செய்கின்றன. ”Jean-Jacques Roussseau Space” –இல் தத்துவ அறிஞருடன் தொடர்புடைய பல்வேறு பொருட்கள் உள்ளன. இவர், திருக்கோயிலிலிருந்து மிகத் தொலைவில் அல்லாமல், அப்பே (abbey) அருகிலுள்ள எர்மெனான்வில்லி கோட்டையில் (Ermenonville Chateau) தனது வாழ்வை முடித்துக் கொண்டார்.

இலண்டனில் உள்ள மெய்சான் டீ பிரான்சு நிறுவனம் (எட்மாண்ட் டீ ரோத்ஸ்சைல்ட் நிறுவனம்)
Maison de I’Institut de France in London (Edmond de Rothschild Foundation)

1919ஆம் ஆண்டு, எட்மாண்ட் டீ ரோத்ஸ்சைல்ட், பிரெஞ்சு மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்காக, அரசியர் நுழைவாயிலிலுள்ள (Queen’s Gate) பிரமாண்டத் தனியார் மாளிகை ஒன்றைப் பிரெஞ்சு நிறுவனத்திற்குப் பரிசளித்தார். எனினும், இரண்டாம் உலகப் போர் குண்டுவெடிப்புகளில், இம்மாளிகை முற்றிலுமாக அழிந்துபோனதால், இத்திட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இதனை ஈடு செய்யும் வகையில், அரசியர் நுழைவாயிலின் மேல்தளத்தில் (Queen’s Gate Terrace) இருந்த ஒரு குடியிருப்பு கட்டடத்தை நிறுவனம் பெற்றுக் கொண்டது. அக்கட்டடம் தான் தற்போது, இலண்டனில் உள்ள பிரான்சு நிறுவனத்தின் மெய்சன் டீ நிறுவனமாகும். இந்நிறுவனம் இலண்டனில் பணியாற்றுகிற பிரெஞ்சு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு, அவர்களின் துறை எதுவாக இருப்பினும், தரமான தங்குமிடத்திற்கு வகை செய்கிறது.

கெராசான் தோட்டம் (ஏஸ்டர் நிறுவனம்)
The Kerazan Manor (Aster Foundation)

கெராசான் தோட்டம் என்பது, பிரிட்டானியின் லாக்டுடியில் அமைந்துள்ள ஒரு மிகப் பெரிய தோட்டமாகும். இத்தோட்டம், 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டு, 18ஆம் நூற்றாண்டு வரையில் பல ஆண்டுகளாக மாற்றம் செய்யப்பட்டது. 1793ஆம் ஆண்டு, புரட்சிகரமான கெம்பர் (Quimper) தீர்ப்பாயத்தால் கைப்பற்றப்பட்டது. இத்தோட்டம் 46,000 பவுண்டுகளுக்கு, ஏலத்தில் விற்கப்பட்டு 1850 ஆம் ஆண்டில் குடும்பத்தை அடையும் வரை, பல்வேறு கரங்களுக்கு இடம் மாறியது. ஜோசப்-ஜார்ஜஸ் ஏஸ்டாருக்கு, வாரிசு யாரும் இல்லாத காரணத்தால்,1928ஆம் ஆண்டு மரணமடைந்தபோது, பிரான்சு நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டது. இத்தோட்டம் இன்றியமையாப் பெருமளவிலான பல பொருட்களின், குறிப்பாகப் பிரித்தானியர்களைக் கவர்ந்த ஓவியங்களின் (Maurice Denis, Auguste Goy, Desire Lucas, Lucien Simon, Charles Cottet…) இருப்பிடமாகத் திகழ்கிறது. இவற்றுடன், பண்டைய பார்க்குவர் தொழிற்சாலையிலிருந்து (old Porquier factory) கொண்டு வரப்பட்ட கெம்பர் சீனா துண்டுகளும் இங்குள்ளன. கோடை காலங்களின்போது, பொது மக்கள் பார்வைக்காக, இத்தோட்டம் திறந்து விடப்படுகிறது.

கெரிலாஸ் இல்லம் (தியோடோர் ரெய்னாச் நிறுவனம்)
Kerylos Villa (Theodore Reinach Foundation)

Beaulieu-sur-Mer(06)-இல் அமைந்துள்ள கெரிலாஸ் இல்லம், பண்டைய கிரேக்க வரலாற்றின் மீது, மனிதன் கொண்டிருந்த பற்றின் அடையாளமாகத் திகழ்கிறது.1902ஆம் ஆண்டு, தியாடோர் ரெய்னச் என்பவரால் இது உருவாக்கப்பட்டது. இவர் ஒரு தொல்பொருள் ஆய்வாளரும், பண்டைய கிரேக்க ஆதரவாளரும் ஆவார். கல்வெட்டு எழுத்துகள் மற்றும் பெல்லீஸ் எழுத்துகள் கல்வி நிறுவன உறுப்பினர் ஆவார். கி.மு.2 ஆம் மற்றும் 1 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க வீடுகளின் வடிவ அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டு, கவின்கலை உறுப்பினராகக் கட்டடக்கலை வல்லுநர் இமானுவேல் பாண்டிரிமோலியால் (Emmanuel Pontremoli) வடிவமைக்கப்பட்ட இந்தக் கெரிலாஸ், மீண்டும் புதிதாக்கப்படவில்லை, மாறாக இது மீண்டும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம். 1928ஆம் ஆண்டு, தியாடோர் ரெய்னாச் மறைந்த பின்னர், பிரான்சு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஓராண்டிற்குப் பின்னர், தியோடோர் ரெய்னாச் நிறுவனம் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அவர் பிள்ளைகளின் சார்பாக அவர்களிடமிருந்து உரிமை பெற்ற நபர்கள், 1967ஆம் ஆண்டு வரையில் அங்கு வசித்தனர். அதன் பின்னர், பிரெஞ்சு நிறுவனம் இந்த விளக்கங்களின் உடமை உரிமையைப் பெற்றது. அன்று முதல், பொது மக்கள் பார்வைக்காக இவ்வில்லம் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், தொன்மை ஆய்வுடன் தொடர்புடைய பல்வேறு நிகழ்வுகளின் இருப்பிடமாக இது திகழ்கிறது

மார்மொட்டான் மோனெட் அருங்காட்சியகம் மற்றும் மார்மொட்டான் நூலகம் ( பால் மார்மொட்டன் நிறுவனம்)
Marmottan Monet Museum and Marmottan Library ( Paul Marmottan Foundation)

1882ஆம் ஆண்டில், வால்மி அரசக் குடும்பத்திற்குச் சொந்தமான, பாரீசின் 16ஆவது மாவட்டத்திலுள்ள முந்தைய வேட்டையாடும் விடுதியை ஜூல்ஸ் மார்மொட்டான் கைப்பற்றினார். இது வால்மி அரசருக்குச் சொந்தமானதாகும். அவரது மகன் பால், அதனை அவருடைய இல்லமாக மாற்றி, முதலாவது பேரரசிடமிருந்து அவர் சேகரித்த கலைப் பொருட்கள் மற்றும் ஓவியங்களை வைப்பதற்காக அவ்விடத்தை மேலும் விரிவாக்கினார்.1932 ஆம் ஆண்டில், அவர் மறைந்தபோது, அவர் சேகரித்த அனைத்தையும், தனது தனி இருப்பிடத்துடன் கவின் கலை நிறுவனத்திற்கு அளித்தார். அந்த இடம் தான், 1934 ஆம் ஆண்டில், மார்மொட்டான அருங்காட்சியகமாக மாறியது. மேலும், Boulogne-ல் இருந்த அவரின் வசிப்பிடம், தற்போது, மார்மொட்டான நூலகமாக விளங்குகிறது.1957ஆம் ஆண்டில், விக்டோரைன் டொனோப் டீ மான்சி (Victorine Donop de Monchy) தொகுப்பை மார்மொட்டன் அருங்காட்சியகம் அன்பளிப்பாகப் பெற்றது. ஓவியரின் இரண்டாவது மகன், மைக்கேல் மோனெட், கிவெர்னெவில் உள்ள அவரது உடைமையை, அவருடைய தந்தையிடமிருந்து அவர் பெற்ற ஓவியங்களுடன் , மார்மொட்டன் அருங்காட்சியகத்திற்காக, கவின்கலை நிறுவனத்திற்கு 1966ஆம் ஆண்டு நன்கொடையளித்தார். டேனியல் வைல்டென்ஸ்டீன், 1980ஆம் ஆண்டு, தனது தந்தை சேகரித்த தனித்துவமிக்க ஒளி அலங்காரப் பொருட்களை மார்மொட்டன் அருங்காட்சியகத்திற்கு அளித்தார். அதன் பின்னர், பல்வேறு எண்ணற்ற பொருட்கள் அருங்காட்சியகப் பொருட்களுடன் சேர்க்கப்பட்டன.

எஃப்ருசி டீ ரோத்ஸ்சைல்ட் இல்லம் (எஃப்ருசி டீ ரோத்ஸ்சைல்ட் நிறுவனம்)
Ephrussi de Rothschild Villa (Ephrussi de Rothschild Foundation)

இந்த இல்லம், புனித-ஜீன் – கேப்- பெராட்டில் உள்ள(Saint-Jean-Cap-Ferrat) இத்தாலிய மறுமலர்ச்சிகால கட்டடக்கலையால் உருவாக்கப்பட்டது. இது, 1934ஆம் ஆண்டு, பரோனெஸ் பெட்ரைஸ் எஃப்ருசி டீ ரோத்ஸ்சைல்ட் என்பவரால் கவின்கலை நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. இந்த வீட்டின், வரவேற்பு அறைகளிலும், தனி அறைகளிலும் எண்ணற்ற கலை வேலைப்பாடுகள் நிரம்பியுள்ளன. மேலும், கடலை பார்த்த வண்ணம் அமைந்துள்ள ஏழு மிகப்பெரிய தோட்டங்களால் சூழப்பட்டுள்ளது. ஒவ்வொரு காலத்தைச் சார்ந்த கலைப்பொருட்களும் இடம் பெற்றுள்ளன: இங்கு, லா செவோனேரிலிருந்து கொண்டு வரப்பட்ட அரசகுல தரைவிரிப்புகள், பிளாண்டர்ஸ் அல்லது புதிய இத்தாலியிலிருந்து கொண்டுவரப்பட்ட திரைச்சீலைகள் மற்றும் கலைப்பொருட்கள், தூரக் கிழக்கு தேசத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கலைப்பொருட்கள் அறை முழுவதும், செவர்ஸ், சாக்ஸ் மற்றும் மெய்சன் ( Sevres, Saxe and Meissen)- இல் இருந்து அரிய பீங்கான் பொருட்கள், பிராகோனார்டின் மை-அழி (ink-wash) படைப்புகள், பிரான்காய்ஸ் பொளச்சரின் படைப்புகள், காய்பல் மற்றும் டைபோலாவின் மேற்கூரை அலங்காரங்கள் மற்றும் 17ஆம் மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளின் பேழை செய்யும் மிகச் சிறந்த வல்லுநர்களால் உருவாக்கப்பட்ட அறைகலன்கள் உள்ளன.

”லெஸ் பின்சன்ஸ்” இல்லம் (டப்ரைன் நிறுவனம்)
Villa “Les Pinsons” (Dufraine Foundation)

1942ஆம் ஆண்டு, லூயிஸ் டப்ரைன் அவர்கள், சார்ஸ்,-வால்-டி’ஓயிஸ்-இல் இருந்த அவரின் உடைமையைக் கவின் கலை நிறுவனத்திற்கு அளித்தார். டப்ரைன் அமைப்பான ”வில்லா லெஸ் பின்சன்ஸ்” , ஓவியர்கள், சிற்பிகள், செதுக்குனர்கள், கட்டடக்கலைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்குக் குடியிருப்புகளை வழங்குகிறது. பூங்கா மற்றும் சமையலறைத் தோட்டத்தால் சூழப்பட்ட இவ்வில்லத்தில், தங்குமிடங்களும் பதினைந்து கலைக்கூடங்களும் உள்ளன. அங்கு வசிக்கின்ற கலைஞர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ள நிறுவனம் அனுமதிக்கிறது.

கிளவுட் மோனெட்டின் இல்லமும் கிவெர்னியிலுள்ள தோட்டமும் (கிளவுட் மோனெட் அமைப்பு)

கிளவுட் மோனெட், கிவெர்னியில் உள்ள அவரின் இல்லத்தில் 1883ஆம் ஆண்டு முதல் 1926ஆம் ஆண்டு வரையில், அதாவது ஏறத்தாழ நாற்பத்து-மூன்று ஆண்டுகள், வாழ்ந்தார். தோட்டங்களின் மீதுள்ள பற்றின் காரணமாக, தன் வாழ்நாளின் இறுதி காலம் வரையில், கிவெர்னியிலுள்ள அவரின் தோட்டத்தின் மீது மிக அதிகமாகக் கவனம் செலுத்தினார். அவர் தோட்டப் பணியை மேற்கொண்டதுடன் அவரின் ஏழு தோட்டப் பணியாளர்களின் பணியையும் கண்காணித்து வந்தார். அவரின் மிகப் பெரிய குடும்பமும் அத்தோட்டப்பணியில் ஈடுபட்டது. 1966ஆம் ஆண்டில், கலைஞரின் இளைய மகனான, மைக்கேல் மொனாட்டின் முயற்சியால், புகழ்பெற்ற வாட்டர் லில்லி தொடர்கள் உருவாவதற்குக் காரணமான வீடு, கலைக்கூடங்கள், தோட்டங்கள் ஆகியவற்றைக் கவின்கலை நிறுவனத்திற்கு வழங்கினார். முக்கிய சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், 1980ஆம் ஆண்டில், பொது மக்கள் பார்வைக்காக, கிவெர்னி தோட்டம் திறந்துவிடப்பட்டது.

லா காலாம்பீர் (மார்குயிஸ் டீ நெராஸ் நிறுவனம்)
La Colombiere (Marquise de Narros Foundation)

பிரெஞ்சு சிற்பக்கலை வல்லுநர் கஸ்டேவ் பிமெண்டா(Gustave Pimienta) (1888-192), இரண்டாம் உலகப் போர் முடிவில், தான் ஓய்வெடுப்பதற்காகவும் கற்பனைத்திறனை மேம்படுத்துவதற்காகவும் ஒன்றைக் கண்டறிந்தார். லாயிர் நதிக்கரையில் (இன்று, Maine-et-Loire-இல் உள்ள Gennes-Val de Loire நகராட்சியில் உள்ளது) அமைந்துள்ள பாரம்பரியமிக்க (லா கொலம்பியர்: வன்பரல் வகை கல் வீடு) ஸ்பானியக் கணவரின் கைம்பெண் துணைவியான மார்க்யூஸ் டீ நெரோஸிடம் இவர் அதனைப் பகிர்ந்து கொண்டார். 1970ஆம் ஆண்டு, பிரான்சு நிறுவனத்திற்கு அவர் அவ்விடத்தை அன்பளிப்பாக அளித்தார். அவர்களின் மறைவிற்குப் பின்னரும் கூட அவ்விடத்தைப் பாதுகாத்துப் பேணுவதற்காக அவ்விடத்தை அவர் வழங்கினார். 1982ஆம் ஆண்டில், கஸ்டேவ் பிமெண்டா மறைந்த பின்னர், நிறுவனம் கலைஞர்களின் குடியிருப்பிற்காக அவ்வீட்டை அர்ப்பணித்தது.

லூயிஸ் பாஸ்டரின் இல்லம் (லூயிஸ் பாஸ்டரின் இல்ல நிறுவனம்)

1992ஆம் ஆண்டு ஆமிஸ் டீ பாஸ்டர் சங்கம், அறிவியல் நிறுவனத்திடம் லூயிஸ் பாஸ்டரின் வீட்டினை வழங்கியது. 1935ஆம் ஆண்டு அவ்வறிஞரின் வழித்தோன்றல்களிடமிருந்து அச்சங்கம் அவ்வீட்டைப் பெற்றது. லூயிஸ் பாஸ்டரின் தந்தை, ஜீண் ஜோசப் பாஸ்டர், அரசிடம் படைவீரனாகப் பணியாற்றுவதற்கு முன்னர், தோல் பதனீட்டாளராக இருந்தார். இவர், 1830ஆம் ஆண்டு, ஜூரா பகுதியிலுள்ள ஆர்பாயிஸ் நகருக்கு வந்தார். இந்த வீட்டில் தான், லூயிஸ் பாஸ்டர், தனது குழந்தை பருவத்தைக் கழித்தார். பின்னர், பல்கலைக்கழகம் மற்றும் அறிவியல் சார்ந்த கல்வி கற்றலின்போது, அவரது குடும்பத்துடன் கோடை காலத்தைக் கழிப்பதற்காக, ஒவ்வொரு ஆண்டும் அவர் அங்குச் செல்வார். 1865ஆம் ஆண்டு, அவரின் தந்தை மறைவுக்குப் பின்னர், லூயிஸ் பாஸ்டர். தனது குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அவர்களின் எளிமையான குடியிருப்பை, வளமையான குடியிருப்பாக மாற்றினார். அவர் வாழ்நாள் முழுவதும் அவர் அங்குச் சென்று வந்தார். அவ்வீட்டில், அவர் ஒரு ஆய்வகத்தை நிறுவினார்.இன்று வரை எவ்விதச் சேதமுமின்றி நிலைபெற்றிருக்கிற அறிஞரின் ஆய்வகம் இது ஒன்று மட்டுமே ஆகும். 1895 ஆம் ஆண்டில், பாஸ்டர் மறைந்தது முதல், எந்தவொரு மாற்றமும் இல்லாமல், அவர் வாழ்ந்த நினைவுகளைச் சுமந்து கொண்டிருக்கும் உண்மையான பாஸ்டர் சரணாலயம் இது. ஆர்பாயிஸ் நகரிலுள்ள இவ்வீடு பார்வையாளர்களுக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும், “குடும்பப் பட்டறைகளும்” இங்கு நடைபெறுகிறது.

Simone & Cino Del Duca Foundation
சைமன் & சினோ டெல் டியூகா நிறுவனம்

1975ஆம் ஆண்டு, சைமன் டெல் டியூகாவால் இந்நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது. அவரது கணவர் சினோ டெல் டியூகாவால் தொடங்கப்பட்ட மனிதநேயமிக்க செயல்களைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமென்பதே இந்நிறுவனத்தின் நோக்கமாகும். 1952ஆம் ஆண்டு மறைந்த இவர், இரண்டு பெரிய இலக்கியக் கொடைகளை உருவாக்கினார். அவரின் நிறுவனத்திற்கான இருக்கைகளை உருவாக்குவதற்காக, பாரீசின் 8-ஆவது மாவட்டத்தில், பார்க் மான்க்யூ-விற்கு (Parc Monceau) அருகிலுள்ள பிரையர் குடியிருப்பை (Pereire Mansion) சைமன் டெல் டியூகா வாங்கினார். எமிலி II பிரையரில் ஆணையின்பேரில் 17ஆம் மற்றும் 18ஆம் பிரெஞ்சு நூற்றாண்டின் வடிவமைப்புகளுக்கு ஒத்த வகையில், பாரம்பரியமிக்க வடிவில், கட்டடக்கலைஞர் வில்லியம் பெளவென்ஸ்-இன் திட்டவரைபடத்தின்படி, 1879 மற்றும் 1881ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இக்குடியிருப்பு கட்டப்பட்டது. சைமன் டெல் டியூகாவின் விருப்பங்களின்படி, இன்று, இது கூட்டங்கள் மற்றும் விவாதங்கள் நடைபெறும் இடமாக உள்ளது. 2004ஆம் ஆண்டில், அவரின் மறைவுக்குப் பின்னர், பிரான்சு நிறுவனத்திடம் அளிக்கப்பட்டது. இங்கு முறையான பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மெய்சன் லர்கட் (ஜீன் மற்றும் சைமன் லர்கட்)
Maison Lurcat (Jean & Simone Lurcat)

2001ஆம் ஆண்டு, முதன்முதலில் அளித்த நன்கொடையைத் தொடர்ந்து, ஓவியத்திரை கலைஞர் ஜீன் லர்காட்டின் (இவர் நிறுவனத்தின் ஓர் உறுப்பினராவார்) கைம்பெண் மனைவியான சைமன் லர்காட், அக்கலைஞரின் வீடு-கலைவினையரங்கம் ஆகியவற்றை 2008ஆம் ஆண்டு, கவின்கலை நிறுவனத்திற்கு அளித்தார். பாரீசின் 14-ஆம் மாவட்டத்திலுள்ள வில்லா சூரட் டில் (Villa Seurat) அமைந்துள்ள கலைநயமிக்க இந்த Chef-d’oeuvre, 1925ஆம் ஆண்டு, ஆண்ட்ரே லர்காட்டால் (ஜீன்னின் சகோதரர்) கட்டப்பட்டது. இவர், லீ கார்பூசியர், பெரட் மற்றும் மாலய்-ஸ்டீவென்ஸ் உடன் போருக்குப் பிந்தைய நவீன இயக்கத்தின் முக்கிய உறுப்பினராவார். இவரின் படைப்புகளை நிறுவனம் பாதுகாத்து வளர்க்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இக்கலைஞரின் படைப்புகளும் அவர் பேணி காத்த பொருட்களும் இந்நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

அமைப்புகள்

பிரெஞ்சு நிறுவனமும் நிலையங்களும், தனி நபர்களாலும் மற்றும் அவர்களின் தொழில்களாலும் உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அமைப்புகளின் இருப்பிடமாகத் திகழ்கின்றன. அவர்கள் அளித்த பரிசுகள், மானியங்கள் மற்றும் நல்கைகளுக்காக, எங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களைத் தொடர்ந்து ஆதரிப்பதில், இந்த நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.
ஒவ்வொரு ஆண்டும், பிரெஞ்சு நிறுவனங்களுக்குப் பல மில்லியன் யூரோக்கள் மதிப்புடைய பரிசுகளும் நல்கைகளும் வரப்பெறுகின்றன.

நிறுவனர்களின் விருப்பத்திற்கு எப்பொழுதும் மதிப்பளிக்கும் வகையில், பின்வரும் பல்வேறு இனங்களில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவையாவன:

⦁ அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி
⦁ மனிதநேயமிக்க செயல்பாடுகள்
⦁ பாரம்பரியத்தைப் பேணுதல்
⦁ பண்பாட்டு மற்றும் கலைநயமிக்க பொருட்கள் உருவாக்கம்
⦁ கல்வி மற்றும் பயிற்சி
⦁ நீடித்த வளர்ச்சி
⦁ பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள்

பிரெஞ்சு நிறுவனம் மற்றும் கல்வி நிலையங்களுக்கு நன்கொடைகளையும், கொடைப்பொருட்களையும் பெறுவதற்கு, அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு 01 44 41 44 95 என்ற எண்ணை அழைக்கவும்.

(கட்டுரையாளர் தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறையின் இயக்குநர்)
———-

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *