POST: 2019-07-31T10:33:38+05:30

அழுத கண்ணீரோடு !
==================

பெருந்தகை விஜயன் அவர்கள், திருச்சியின் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் பெருமகன் திரு.இரங்கராஜன் குமாரமங்கலம் அவர்களால் 1998 ஆம் ஆண்டு மலேசியா தொழில் முனைவர் குமாருக்கும் எனக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். விஜயன் அவர்கள் ஆங்கிலம், தமிழிலும் மிகச் சிறப்பாக பிறர் உள்ளங்களைக் கவரும் வகையில் உரையாடும் திறனைப் பெற்றிருந்தார். இளமையில் இருந்தே திருச்சியில் படித்த பள்ளியில் நான் ஆங்கிலத் திறனைப்பெற்றேன் என்று அடிக்கடி கூறுவார். பெருமகன் இரங்கராஜன் குமாரமங்கலத்தை ரங்கா, ஐயா, அண்ணா என்று பலரும் அழைக்க, இவர் மட்டும் பாசத்தோடு தம்பி என்றே அழைப்பார். இந்த அழைப்பு இவர்களின் உண்மையான நட்பை வெளிப்படுத்தும்.

இவர், மலேசியா குமாருக்காகப் பல்வேறு தொடர்புகள், உடன்படிக்கைகள் ஏற்படுத்தியிருந்தாலும், காலச் சூழலால் எவையும் வெற்றிவாகை பெறவில்லை. அவர் எப்போதும் உயரிய உன்னத உடைகளையே அணிவதை வழக்கமாக கொண்டிருந்தார். மேலும், சிறந்த உணவுகளையே தேர்ந்து உட்கொள்வார்.மறந்தும் ஒரு படி தாழ்ந்த நிலை என்றும் கொண்டதில்லை. சீரடி சாய்பாபாவின் பக்தரான இவர், ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் சீரடி சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

15 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் அண்ணா நகரில் ஒரு பெரிய அலுவலகத்தை வாடகைக்கு எடுத்தபோது அவரது அழகியல் திறனால், ஒவ்வொரு அலமாரியும் மேசைகளும் நன்கு வடிவமைக்கப்பட்டன, குறுகிய காலத்திற்குள் அந்த அலுவலகம் மூடப்பட்ட பின்னரும் அந்தப் பொருள்களும் அறை கலன்களும் இன்றும் பயன்படுகின்றன.

அவருடைய செல்வப் புதல்வியர் அனு, நித்யா இருவரும் அவருக்குப் பக்கபலமாக விளங்கிய அருமைத் துணைவியார் பத்மினி அவர்களும் அவருக்கு வாய்த்த நற்பேறாகும். உள்ளதைப் பகிர்ந்து கொண்ட அன்பும் அரவணைப்பும், பரிவும் பாசமும் அளவிட முடியாதவை.

நீதியரசர்கள், முதுநிலை வழக்கறிஞர்கள், மாபெரும் வணிக நிறுவனங்களின் தலைவர்கள், உயர் அலுவலர்கள், ஊடக நண்பர்கள், அரசியல்வாணர்கள், மற்றும் குமாரமங்கலம் குடும்பத்தினர், மருத்துவமணிகள் இவ்வாறு அவருடைய நட்பு வட்டம் விரிந்து பரந்ததாகும். இத்தகைய இயல்போடு இன்னொருவரை என்னால் இப்போது எண்ணிப்பார்க்க முடியவில்லை. வெற்றிவாணர் விஜயன் அவர்கள் மறைவு திடுக்கிட வைக்கிறது.

அவரின் குடும்பத்தினரை நேரில் பார்த்து நான் என்ன ஆறுதல் கூற முடியும் ?

உளதாகும் சாக்காடு விஜயன் போன்ற வித்தகர்க்கு அல்லால் அரிது.

—- ந.அருள்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *