தினமணி நாளிதழில் 26.07.2019 அன்று இடம் பெற்ற கட்டுரை
**********************************************************************
சிந்தை கவர்ந்த சிகாகோ மாநாடு
===============================
உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் சார்பில் தனிநாயக அடிகளாரின் தனிப்பெரும் முயற்சியால் கோலாலம்பூரில் கோலாகலமாகத் தொடங்கப்பட்டது முதல் மாநாடு. அந்த வரிசையில் பத்தாம் உலகத்த தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிகாகோ மாநகரில் கடந்த ஜூலை 4-ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் நடைபெற்றன.
கலை மிளிரவும் ஆர்வலர்கள் அலை பெருகவும் சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் ஐம்பதாவது ஆண்டு விழா, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் 32 ஆவது ஆண்டு விழா, பத்தாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஆகிய மூன்று அமைப்புகளும் தத்தம் விழாக்களோடு இணைத்து ஆராய்ச்சி மாநாட்டை நடத்தி முடித்தது.
சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் பொன் விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட மலரில் சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா, சிங்கப்பூர், குவைத், இந்தியா, இலங்கை, மோரிசு, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, சுவிட்சர்லாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, நார்வே முதலிய பல நாடுகளிலிருந்தும் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்குப் பேராளர்கள் வருகை புரிந்து, ஆய்வுக்கட்டுரைகள் வழங்கினர். 6,000-த்துக்கம் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்திலிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டு ஆய்வுக்கட்டுரை படைத்தனர். மலேசிய எழுத்தாளர் சங்கம் சார்பில் முப்பதுக்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்துகொண்டனர்.
மாநாட்டில் தமிழ் இலக்கிய, இலக்கண ஆராய்ச்சிகளுடன் குமரிக்கண்ட ஆய்வு, சிந்துவெளி ஆய்வு, பூம்புகார்க் கடலாய்வு, கீழடி அகழாய்வு, தமிழ் எழுத்துகள் குறித்த ஆய்வுகளை முன்வைத்து அறிஞர்கள் ஆய்வுக்கட்டுரை வாசித்தனர். பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள், தனி அமர்வுகள், தொழில் முனைவோர்க்கான கூட்டங்கள் என்று நான்கு நாளும் அமெரிக்கத் – தமிழர்கள் கலந்துகொண்ட மிகச் சிறந்த மாநாடாக உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றது. அமெரிக்கத் தமிழர்களின் கரை கடந்த ஆர்வத்தினால் தான் இந்த மாநாடு நிறைவேறியது.
சிகாகோ மாநகரை இந்தியா எப்போதும் பெருமையாகக் கருதும். 125 ஆண்டுகளுக்கு முன்னர்ச் சமயச்சான்றோர் பேரவையில் சமய நல்லிணக்கச் சங்கநாதத்தை வீரத்துறவி விவேகானந்தர் சிகாகோவில்தான் முழங்கினார். அதை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது.
சிகாகோ பல்கலைக்கழகத்தில் தெற்காசிய மொழியும் பண்பாடும் ஆய்வுப் பொருளாக ஒரு துறை தொடங்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1959 ஆம் ஆண்டில் அமெரிக்க அரசின் நிதியுதவியுடன் சிகாகோ பல்கலைக்கழகத்தில் தெற்காசிய மொழிகளின் வட்டார மையம் தொடங்கப்பட்டது.
1962 ஆம் ஆண்டில் பல்கலைச்செல்வர் தெ.பொ.மீ அவர்கள் தமிழ் மொழி வரலாறு, தமிழிலக்கிய வரலாறு என்ற இரு பொழிவுகளை நிகழ்த்தினார்.
அன்று நிகழ்த்திய உரைகள் தான் பின்னாளில் அரியநூல்களாக தமிழகத்தில் வெளிவந்தன. தமிழறிஞர் தெ.பொ.மீ. அளித்த ஊக்கத்தினால்தான் நினைவில் வாழும் அறிஞர் ஏ.கே.இராமானுஜன், அதே பல்கலைக்கழகத்தில்தான் சங்க இலக்கிய மொழியாக்கங்களை உலகுக்கு வழங்கினார். அவருடைய தொண்ணூறாவது ஆண்டும் இந்த வேளையில் இணைந்து வருவது நமக்குப் பெருமை தருகின்றது. மாநாட்டில் குடும்பம் குடும்பமாக தமிழர்கள் நிரம்பி இருந்தார்கள். அயல்நாட்டினர் தமிழ் பேசிய இனிமை செவி குளிரச் செய்தது.
நீல விதானத்தில் நித்திலப் பூம்பந்தர் இருப்பதைப்போல அரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது. ஒளவையார், மாமன்னர் இராசராசன் ஆளுயுர படிமச் சிலைகள் கண்களுக்கு விருந்து. கூரை வீடும், கட்டை வண்டியும் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருந்தன. கீழடி நம் தாய்மடி எனத் தொன்மைக்கு ஆக்கம் ஊட்டியிருந்தனர்.
சொற்குவைத் திட்டத்தை உலகோர் வியக்க அமைச்சர் க.பாண்டியராஜன் அறிமுகம் செய்ததோடு தமிழர்கள் எங்கிருந்தாலும் ஒரு புதிய சொல்லைப் புனைய வேண்டும். ஆங்கிலத்துக்கு நிகரென வாழ்கிறேன் என்று சிறப்பு செம்மொழிக்கு ஏற்பட வேண்டும். தமிழக அரசு தமிழ் வளர்ச்சிக்காக ஆற்றிவரும் பணிகளை அவர் பட்டியலிட்டுப் பேசியது அனைவரையும் வியப்படையச் செய்தது. அயல்நாடுகளில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளுக்கு தமிழ்நாடு அரசால் நிதியுதவி ஏதும் வழங்கப்படவில்லை. ஆனால், முதன் முறையாக 10 ஆவது உலகத் தமிழ் மாநாட்டிற்கு உலகத்தமிழாராய்ச்சி மன்றத்திற்குத் தமிழக அரசின் நிதியுதவியாக ரூ.1 கோடி நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டது.
தமிழர்கள் புலம்பெயர்ந்த நாட்டில் தமிழாய்வை விடக் கலையார்வமே பெரிதாக இருப்பது இயல்பு. கலையும் தமிழும் கலந்து புகழொளி பரப்பிய மாநாடாக நிறைவெய்தியது. மேலும், அமெரிக்க வாழ் குழந்தைகளின் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள் சிறப்பான அமைந்தது. புலம் பெயர்ந்த நாட்டில் தமிழ் மொழியைத் தொடர்ந்து பேணிக்காத்து வரப் பெற்றோர்கள் எடுக்கும் பெரு முயற்சி இந்த மாநாட்டில் பளிச்சிட்டது.
இம்மாநாட்டிற்கு 1200 ஆய்வுக் கட்டுரைகள் வரப்பெற்றன. அவற்றில் 250 கட்டுரைகள் தெரிவு செய்யப்பட்டு, 90 கட்டுரைகள் மாநாட்டில் படிக்கப்பட்டன. இவ்வரங்கில் 20 தமிழறிஞர்கள் தலைமை வகித்த்து குறிப்பிடத்தக்கது.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நிறைவு பெறும் நாளில் அடுத்த மாநாடு நிகழ்வதைப் பற்றி அறிவிப்பது வழக்கம். அந்த நிலையில் பேராசிரியர் அரங்க பாரி முன்மொழியப் பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அழகுற நடைபெறும் என அறிவித்திருக்கிறார்கள்.
……………………………

Add a Comment