POST: 2019-03-19T10:27:00+05:30

=================================================
முதுபெரும் புலவர் மயிலம் வே.சிவசுப்பிரமணியன்
மகாவித்துவான் மறைவு !
=================================================

முதுபெரும் புலவர் மயிலம் வே.சிவசுப்பிரமணியன் அவர்களின் மறைவு காலத்தினால் நேர்ந்த பேரிழப்பாகும். தொண்ணூறு அகவைத் தாண்டிய உடலைச் சுமக்க முடியாமல் உயிர் தடுமாறித் தவறுகிறது. அறிஞர் சிவசுப்பிரமணியன் இலக்கணமும் இலக்கியமும் எழுத்தறக் கற்றவர்.

நுண்பொருள் கூறிக் கேட்டாரை மகிழ வைக்கும் திண்மை வாய்ந்தவர். வாகீச கலாநிதி அவர்களோடு உடனிருந்து பல்லாண்டுகள் தமிழாய்விலும், தமிழ் மேடைகளிலும் இருவரும் இணைந்து ஒளிர்ந்தனர். மயிலம் கல்லூரியின் திருவிளக்காகத் திகழ்ந்ததோடு மனச்சோர்வில்லாமல் எப்போதும் தான் கற்ற பொருண்மைகளை மற்றவர்க்குக் கூறி மகிழ்வதில் இன்புற்றுச் சிறப்பெய்தி இருந்தார்.

பேராசிரியரும் நானும் காஞ்சியிலிருந்தும் கடலூரிலிருந்தும் பேசிவிட்டு நள்ளிரவெல்லாம் தமிழ் விருந்தை நுகர்ந்தபடி சென்னைக்குப் பலமுறை திரும்பியதை எண்ணிப் பார்த்து

“எங்கினி இவரைக் காண்பேன்”
என்று ஏங்கி அரற்ற வேண்டி இருக்கிறது.

காஞ்சியில் மகாவித்துவான் விருதளித்த போது நான் பங்குகொண்டு உரையாற்றினேன். மயிலத்தைப் பாராட்ட ஒளவையார்க்குப்பம் வந்திருக்கிறது என்று பேசி குப்பம் என்பது முருகன் உகந்த இடம் என்றும் குப்பன் என்ற பெயரும் முருகனைக் குறிக்கும் என்று நயம்பட உரையாற்றியதை என்னால் மறக்க முடியவில்லை.

துரைசாமி என்ற பெயரும் முருகனுக்கு அமைந்த நற்பெயர்தான் அதனால் என் தந்தையாரின் உடன்பிறந்தவர்கள் மயிலாசனம், முத்துக்குமாரசாமி, சுப்பிரமணியன் ,துரைசாமி என்ற பெயர்கள் அமைந்தன.

துரைசாமி என்று பெயரை தலைமைக் கடவுள் என்ற பெயரில் வைணவரும் இடுவது உண்டே என்று இடை மறித்தேன். தம் மாணவப் பருவத்தையும் எங்கள் குடும்பத்தையும் நினைவு கூர்ந்தார். பெருந்தமிழ்ப் புலமை வாய்ந்த பேராசிரியர் வாழ்ந்த வரையிலும்

“சான்றோர் சிலர் யான் வாழும் ஊரே”
என்று கொண்டிருந்த பெருமிதம் குலைந்துவிட்டது .

குடும்பத்தாருக்கு என் ஆறுதல்.

—– ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *