பாரதியார் பதில்கள் நூறு நூலுக்கு, ஸ்ரீராம் நிறுவனங்கள் தலைவர் திரு.சுந்தரேசன் அவர்களின் பதிப்புரை
பதிப்புரை
==========
நாட்டுக்குப் பெருமையூட்டும் உயர்ந்த தொழில் நிறுவனமான ஸ்ரீராம் குழுமத்தின் பாரதி கலை இலக்கியக் கழகத்தினர் முப்பது ஆண்டுகளுக்கு மேலாகப் மகாகவி பாரதியார் படைப்புகளைப் பரப்பும் முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனர்.
பாரதியாரின் பல்வகைச் சிறப்பைப் பல பரிமாணங்களில் கொண்டாடி பேச்சால், எழுத்தால், தொண்டால் பரப்பி வரும் பாரதி ஆர்வலர்கள், தக்க அறிஞர்கள் பலருக்குப் பரிசுகள் அளித்துப் பாராட்டுகிறோம்.
பாரதியார் பதில்கள் நூறு எனும் இந்நூல் எளிய இனிய தமிழில் பள்ளிப் பிள்ளைகளும் படித்து மகிழத் தக்க வகையில் வெளியிடப்பெறுகிறது. இந்நூலினை எங்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஒளவை அருள், பாரதியார் எனும் கடலில் மூழ்கி நூறு கேள்விகளையும் – பதில்களையும் தேடித் தொகுத்துள்ளார். இந்த நூல் பாரதியாரைப் பற்றிய உணர்வையும், எழுச்சியையும் தெளிவையும் உருவாக்கும் என்பது எங்கள் நம்பிக்கையாகும். அயர்வில்லாமல் அல்லும், பகலும் என்னோடு உடன் உழைத்து இந்த நற்பணிக்குப் பொலிவூட்டிய செயற் செம்மல் திரு. பிரதாப்புக்கு என் நல்வாழ்த்துக்கள் பாரதி இலக்கியக் கழகத்தில் அவர் தொண்டு தொடர்ந்து வளமூட்டுகிறது.
மகாகவி பாரதியாரின் 137-ஆம் பிறந்த நாள் நினைவாக ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம், கேள்வி – பதில் வடிவத்தில் வெளியிடப்படும் இந்நூல் விலையில்லாமல் விருந்தினர் அனைவருக்கும் கையுறையாக வழங்கப்பெறும்.
“காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்
கலை வளர்ப் போம் சொல்லருளை வளர்ப்போம்
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம்
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்”
– பாரதியார்
ஸ்ரீராம் நிறுவனங்கள் ஜி.சுந்தரேசன்
சென்னை தலைவர்

Add a Comment