மூவர் மனங்கள் !
===================
அருந்தவச் செல்வர் அரிராம்சேட் பற்றிய திரு.சின்னராசும், முத்தப்பாவும் ஆர்வத்தோடு இணைந்து எழுதிய நூலைப் படித்து மகிழ்ந்தேன்.
நான் மூன்று முறை கலைச்செல்வரும் தொழிலதிபருமாக விளங்கிய அரிராம் சேட் இசையரங்கைக் கண்டு கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்.
நீண்ட வாழ்வு வாழ்ந்து இன்னும் பெரும் பணிகளைச் செய்து பார்ப்பதற்குத் தமிழகத்திற்கு வாய்ப்பில்லாமல் போயிற்று.
ஆயிரம் நறுக்குகளைக் கொண்ட இந்த நூலில், என்னைக் கவர்ந்த ஒரு செய்தியைப் பற்றி எழுதுகிறேன்.
வேலைக்காரி திரைப்படத்தின் இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமி ஒருமுறை தமது இல்லத்துக்கு நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமியை அழைத்து வந்தாராம். அந்த நேரம் பார்த்து, கலைச்செம்மல் அபிராம்சேட் தான் புதிதாக வாங்கியிருந்த கெடிலாக் காரில் வந்திருக்கிறார். நடிப்பிசைப்புலவர், அந்தக் காரைப் பார்த்து வியந்து, தான் வாங்க வேண்டும் என்று நினைக்காமல், தம் தலைவர் பேரறிஞர் அண்ணா சுற்றுப்பயணம் செய்வதற்கு வசதியாக ஒரு கெடிலாக் கார் வாங்க வேண்டும் என்று நினைக்கிறேன்… நீங்கள் அளிப்பீர்களா? என்று கேட்டார்.
சேட் அவர்கள், மனதார இசைந்து, வாங்கி ஒருமாதம் தான் ஆயிற்று. இன்னும் மூன்று மாதங்கள் கழித்து அண்ணாவின் பெயரைக் கூறியதால் மகிழ்ந்து அளிப்பேன் என்றாராம். ஆனால், பேரறிஞர் அண்ணா, கே.ஆர்.ஆர். விலைக்கு வாங்க இருந்த அந்தக் கெடிலாக் காரைப் பற்றிச் சிரித்துக் கொண்டே , இருக்கிற கார், எட்டடி நகர்ந்தால் போதும், இப்படிப்பட்ட ஆடம்பரக் காரை வாங்குவது பற்றி எள்ளளவும் எண்ணிக்கூடப் பார்க்கக்கூடாது என்று கடிந்து கொண்டாராம். பிறகு, நடிப்பிசைப் புலவர், சேட் அவர்களைப் பார்க்கவுமில்லை. கேட்கவுமில்லை. தன் தலைவருக்கு எப்படிப்பட்ட காரை வாங்க நினைத்த நடிப்பிசைப் புலவரின் உருக்கம், அளித்ததற்கு இசைந்த சேட் அவர்களின் உள்ளத்தையும் ,வேண்டாமென்று மறுத்த அண்ணாவின் மனத்தையும் படித்து , நான் அமைதியானேன்.
நடிப்பிசைப் புலவரால்தான் நடிகர்களின் அணியே அண்ணாவின் பக்கம் வந்து சேர்ந்தது. அந்த அணி, தொடர்வதற்குத் தலைமை தாங்கிய தன்னிகரற்றவர் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ஆர். தான்.
நடிப்பிசைப்புலவரைப் பற்றி நான் 2015 ஆம் ஆண்டில் முகநூலில் குறித்திருந்ததை என் மகன் ஒளவை அருள் நினைவூட்டி எடுத்துக்காட்டியதை மீண்டும் அதனை இங்கு பதிவிடுகிறேன்.
அகராதி பேரறிஞர் சாமூவேல் ஜான்சன், எழுத்துத்திலகம் ஆலிவர் கோல்ட்ஸ்மித், நடிப்புச்சுடர் டேவிட் கார்ரிக் -மூன்று பேரும் தான் இணைப்பிரியாமல் இருந்த இலக்கிய மூவர்.அதுப்போல திராவிட இயக்கம் வேர் விடுவதற்கு பேரறிஞர் அண்ணா, சிரிப்புச் சிந்தனையாளர் சீ வீ ராஜகோபால் நடிப்பிசைப்புலவர் கே ஆர் ஆர் ஆகிய மூவரையும் குறிப்பிடவேண்டும். நாடகயுலகத்தில் அண்ணா அவர்கள் பங்கேற்ற போதே அவரைத் ஆரத்தழுவி நான் எப்போதும் உங்களுக்கு தூண்,நீங்கள் இட்ட ஏவலை செய்வேன் என்று அண்ணாவை ஒப்பில்லாத அறிஞராக மாற்றிய சிறப்பு நடிப்பிசைப்புலவர்க்கு உண்டு. கழகத்திற்காக தன்னை இழந்தவர்;பொருளை இழந்தவர் கே ஆர் ஆர். அண்ணா சொர்கவாசல் எழுதியது ஆர் ராமசாமிக்கே! கே ஆர் ஆர் தான் மான் பிடிக்கப் போனால் மந்தையையே ஒட்டி வருவார் என்று ஒரு முறை அண்ணா சொன்னார்.அது வேறு ஒரு பொருளில் கூறியது;ஆனால் கழகத்திற்கு நடிகர் திலகம் சிவாஜியிலிருந்து நடிகர் படை கொண்டு வந்தது கே ஆர் ஆர் தான் இந்த வாளே! வழக்கு மன்றம் இந்த கையே சட்டம்! கத்தியைத்தீட்டாதே!புத்தியைத்தீட்டு! ஏழைகளின் கண்ணீர்-இது எளியோர்களின் வியர்வை ;ஏமாளிகளின் இரத்தம், பராசக்தி! பன்னிரண்டு கண்கள் உனக்கு இருக்கிறதாமே உன் கண் இரண்டும் இதை காண முடியாதா? என்று அம்மன் கோயில்களில் ஆர்ப்பரித்தது கே ஆர் ஆர் ன் 1940களில் நாடகங்களில் வசனங்களாக ஒலித்தது
—– ஔவை நடராசன்

Add a Comment