POST: 2019-02-05T11:09:21+05:30

திசை எட்டும் – மொழியாக்கக் காலாண்டிதழ்
(அக்டோபர் – டிசம்பர் 2018)
=========================================

மொழிபெயர்ப்பின்றி எதுவும் நடவாது!
*****************************************************
– ஒளவை அருள்
இயக்குநர்,
மொழிபெயர்ப்புத்துறை,
தமிழ்நாடு அரசு.

செப்டம்பர் 30 உலக மொழிபெயர்ப்பு நாள். ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித்துறை வாயிலாக, சிறப்பாக நிகழ்வுகள் அரசின் சார்பில் நடைபெற்று வருகிறது.

மொழிபெயர்ப்பைப் பற்றி நூறு உவமைகளையாவது அறிஞர்கள் அடுக்கியிருப்பார்கள்!.” மொழியாக்கத்தை யாரே முடியக்கண்டார்” என்று நாமும் கூறலாம். மொழிபெயர்ப்பு ஒரு கம்பள விரிப்பின் மறு பக்கம் போல என்பார்கள். அதே நூல், வண்ணம், வடிவமைப்பு இருந்தாலும் முன்பக்கம் இருப்பது போலக் கம்பளத்தின் பின்பக்கம் இருப்பதில்லை. மின்னும் பொன்னுக்கு மெருகூட்டிப் பித்தளையாக மாற்றுவது மொழிபெயர்ப்பாகும் என்ற பழியுரையும் உண்டு.

ஆங்கிலத்தில் ஜான் பனியன் எழுதிய புனிதப் பயணத்தின் முன்னேற்றம் என்ற நூல் 1793 ஆம் ஆண்டில் “ஒரு பரதேசி இந்த லோகத்தை விட்டு மறுமைக்கு நடந்தேறியது சொப்பனம்” என்ற தலைப்பில் தமிழில் வெளி வந்த முதல் மொழிபெயர்ப்பு நூலாகும். இந்த நூல்தான் நாம் அறிந்த இரட்சணிய யாத்திரையாகும். தமிழ்நாட்டில் மொழிபெயர்ப்புக்கென்று அரசு சார்பில் தலைமைச் செயலகத்தில் பொதுத்துறையின் ஓர் அங்கமாக 1670 ஆம் ஆண்டு முதல் ஆங்கிலேய அரசு காலத்திலிருந்து இயங்கி வந்து, பிறகு 1984 ஆம் ஆண்டு முதல் தமிழ் வளர்ச்சித் துறையின் ஒரு பிரிவாக இயங்கி வருகிறது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்புக்கென்று தனித்துறை உள்ளது. தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனம் உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றி வருகிற பெரும் பேராசிரியர்கள் மற்றும் தமிழ் வல்லுநரோடு குழுவினராக இருந்து தமிழுக்குப் புதிய துறை நூல்களைப் படைத்து வருகின்றனர்.

மொழிபெயர்ப்பைப் பற்றி பழங்காலத்திலேயே தொல்காப்பியத்தில் “தொகுத்தல், விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல்” என நான்கு வகையாகப் பிரித்தனர் எனக் குறிக்கப்பட்டுள்ளது.

மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்குக் கருத்து, நடை, சூழல் உணர்ச்சி, பொருண்மை முதலியவற்றைப் பெயர்த்து வழங்குவதனால் அதனை அறிவியல் சார்ந்த துறை என்றே சொல்ல வேண்டும். அதே வேளையில் மொழித் தொடர்பான அழகு பொலிவதால் அதனைக் கலை சார்ந்த துறை என்றும் அழைக்கலாம். ஒரு மொழியில் (பேச்சுமொழியிலோ, எழுத்துமொழியிலோ) கூறப்பட்ட கருத்துகளை மற்றொரு மொழியில் வெளிப்படுத்திக்காட்டிய நிலையில் திறன் வாய்ந்த ஒரு படைப்பாக்கம் என்றும் கருதலாம்.

அரசின் நடைமுறை, அறிக்கை, அறிவிக்கை, செய்தி, விரைவுத்தகவல், தனியாணை முதலியவற்றை ஆங்கிலத்திலிருந்து தமிழிலும், தமிழிலிருந்து ஆங்கிலத்திலும் உடனடி மொழியாக்கம் செய்யும் தனிப்பட்ட நிலையுடையது. அரசுப் பணியில் சேர்ந்தவர்கள் பொது நிலையில் பல்வேறு பாடங்களில் கல்வி பெற்றவர்கள். அரசின் தேர்வில் வெற்றிபெற்ற திறனாளர்கள். எனினும் இளங்கலை முதுகலையில் தமிழைத் தனிப்பாடமாகக் கற்பதில்லை. தாமே வளர்த்துக்கொண்ட முயற்சியாலும், பயிற்சியாலும் தமிழில் மொழி பெயர்க்கும் வகையில் முற்பட்டுள்ளனர். மொழி மரபு, இலக்கண வழுவின்மை, வனப்பு வாய்ந்த கலைச்சொல் தெளிவும், தெரிவும் நாம் எதிர்பார்ப்பதற்கில்லை. விரைவு மொழிபெயர்ப்புக்கும், இலக்கியப் பாங்கு நிறைந்த கலை, பண்பாடு, கற்பனை, பாடநூல், அறிவியல் சால் மொழிபெயர்ப்புக்கும் வேறுபாடு உண்டு. இந்நிலையில் விரைவு மொழி பெயர்ப்பாளர்கள் இலக்கிய மொழிபெயர்ப்பாளர்களாக மாறுவது என்பது கடினமான பணியாகும்.

இலக்கிய மொழி பெயர்ப்பாளர்கள், உயர்நிலை மொழி பெயர்ப்பாளர்கள் ஆவர். நிகர்மொழி யாக்கம், நிலைமொழி ஆக்கம், நோக்குமொழி ஆக்கம், ஆக்க மொழியாக்கம், அரசு மொழிபெயர்ப்பு, தனியார் மொழிபெயர்ப்பு என்று வேறுவேறாகப் பிரிந்துள்ளது. எழுத்தருக்கும் எழுத்தாளருக்கும் உள்ள வேறுபாடு தான் இவையாகும்.

ஒரு மொழியில் உள்ள ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் இருக்கலாம். அதாவது பல பொருள் குறித்த ஒரு சொல்லாகவும் இருக்கலாம். மற்றொரு மொழியில் அச்சொல்லின் ஒவ்வொரு பொருளுக்கும் வெவ்வேறு சொற்கள் இருக்கலாம். எடுத்துக்காட்டாக, பச்சை என்ற சொல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது பச்சைச் சேலை – green saree; பச்சைக் காய்கறி- fresh vegetables; பச்சை உடம்பு – flaccid body; பச்சைக் குழந்தை – new born baby என வேறுவேறு பொருளில் வரும்.

மூளையால் மேற்கொள்ளும் மொழிசார்ந்த பணிகளுக்குத் தற்போது கணினியைப் பயன்படுத்தும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளன. நமது சிந்தனையில் உள்ள நமது மொழியறிவைக் கணினிக்கு ஊட்டி, அதனடிப்படையில் நமது மொழிசார்ந்த பணிகளை மேற்கொள்கின்றனர். சொற்பிழை திருத்தி, இலக்கணப்பிழை திருத்தி, எழுத்து–பேச்சு மாற்றிச் செயலிகள், பேச்சு-எழுத்து மாற்றி, இயந்திர மொழிபெயர்ப்பு வடிவிலான பணிகள் பல நிலைகளில் மேற்கொள்ளப்படுகின்றன. கூகுள் (Google), யாகூ (Yahoo) போன்ற தேடல் பொறிகளில் மொழிபெயர்ப்பு வசதிகள் அளிக்கப்படுகின்றன. கணினித் தொழில்நுட்பத்தின் இன்றைய விரைவு வளர்ச்சி இதற்கு வழிகோலியுள்ளது. கோடிக்கணக்கான சொற்களைக்கொண்ட மொழித்தரவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அறிவியல் தமிழ் வளர்ச்சிக்குக் கலைச் சொல்லாக்கம் தேவை. இதுவரை சிறியனவும், பெரியனவுமாக 200 தொகுப்புகள் வெளிவந்திருப்பதாகவும், அவற்றில் ஏறத்தாழ 2,00,000 சொற்கள் இடம்பெற்றிருக்கிறது. ஓர் ஆங்கிலச்சொல் நம்மிடையே பழக்கத்துக்கு வந்து மூன்று நாள்களுக்குள் தமிழ்ச்சொல் அமையவில்லை என்றால் அயற்சொல் நிலைத்துவிடும். இன்று 10 இலட்சம் சொற்கள் ஆங்கிலத்தில் உள்ளன. முயன்று ஐந்து இலட்சம் சொற்களே தமிழில் கண்டறியப்பட்டுள்ளன. தொழில்நுட்பச் சொற்களை மொழி பெயர்க்கும்போது, மூல மொழியின் தன்மை கெடாதபடி சொற்களை உருவாக்க வேண்டும். ஏற்ற சொற்கள் கிடைக்கவில்லை எனில் பொருள் நிலையில் மிகவும் நெருக்கமான சொற்களைப் பயன் கொள்ளலாம்.

எப்போதும் ஒரு சொல்லுக்கு உடனே மொழியாக்கம் கேளாமல் மாற்றி மூன்று தொடர்களில் அச்சொற்கள் எப்படி ஆளப்படலாம் என்பதை அறிவுறுத்துவதே மொழியாக்கத்திற்கு முழுமையாகப் பொருள் தரும்.

தமிழில் எந்தச் சொல்லும் நான்கெழுத்தை விஞ்சியதேயில்லை. நூற்றுக்குத் தொண்ணூறு சொற்கள் மூன்றெழுத்திலேயே முடியும். ஆங்கிலச் சொல்லை மொழியாக்கும்போது ஓர் எழுத்து குறைந்தால்தான் தமிழ் என்று கருதலாம்

நோபல் பரிசைத் தவிர்த்து, அடுத்த பெரிய விருதான புக்கர் விருதின் பரிசுத் தொகை மூல ஆசிரியருக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் 2015 ஆம் ஆண்டு முதல் பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பது மொழிபெயர்ப்புக்கு அளிக்கப்பட்ட உலகளாவிய சிறப்பாகும்.

இலக்கிய வகைப்பாட்டில் 25 நோபல் பரிசு பெற்ற வெற்றியாளர்களில் ஒன்பது பேர் தான் தங்களுடைய ஆக்கங்களை ஆங்கிலத்தில் படைத்திருக்கிறார்கள். மீதமுள்ள 16 பேரும் தங்கள் சொந்த மொழியில் எழுதியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பிறகுதான் நோபல் பரிசுத் தகுதி பெற்றிருக்கிறார்கள். இதிலிருந்தே மொழிபெயர்ப்பின் வளத்தை அறிந்துகொள்ளலாம்.

தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித்துறை வாயிலாக, ஆண்டுதோறும் பத்துச் சிறந்த மொழிபெயர்ப்பாளர்களுக்கு ரூ.1 இலட்சம் காசோலையுடன் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகள் வழங்கி வருகிறது. மேலும், அறிஞர் ஜி.யு.போப் பெயரில் ரூ.1 இலட்சம் காசோலையுடன் பொற்கிழியுடன் மொழிபெயர்ப்பாளர் விருதும் வழங்கப்பெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.

தேமதுரத் தமிழோசை உலகமெங்கும் பரவும் வகை செய்தல் வேண்டும் என்ற முழக்கத்திற்கேற்பத் தமிழ் வளர்ச்சித்துறை வாயிலாகத் திருக்குறளைச் சீனம், அரபு, கொரிய மொழிகளில் மொழிபெயர்த்து நூல்களாக வெளியிட்டுள்ளது. அவ்வண்ணமே பாரதியாரின் தெரிவு செய்யப்பட்ட பாடல்களையும், பாவேந்தர் பாரதிதாசனின் தெரிவு செய்யப்பட்ட பாடல்களையும் சீனம், அரபு மொழியில் மொழிபெயர்த்து நூல்கள் வெளியிட்டுள்ளது.

ஔவையாரின் ஆத்திசூடி சீன, அரபு மொழியில் மொழியாக்கம் செய்து நூல்களாக வெளியிட்டுள்ளது.

செல்பேசியில் மொழிபெயர்ப்புச் செயலிகள்
———————————————————————–

செல்பேசியில் செயல்படும் மொழிபெயர்ப்புச் செயலிகள் (Mobile Apps for Translation) பற்றிச் சியாட்டில் டைம்ஸ் நாளிதழில் அண்மையில் ஒரு கட்டுரை படித்தேன். டாம் சாமில்ஜன் (Tom Samiljan) என்பவர் எழுதியது. மென்பொருள் சந்தையில் பல்வேறு மொழிபெயர்ப்பிகள் உலா வருகின்றன. இவையனைத்தும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. நாளுக்கு நாள் இவற்றின் திறன் மேம்பட்டுக் கொண்டே வருகிறது. இவற்றுள் எந்தவொரு மொழிபெயர்ப்பியும் 100% துல்லியமானது என்று சொல்ல முடியாது. என்றாலும், அவற்றுள் சில அண்மைக் காலங்களில் பயனர்களுக்கு வியத்தகு வசதிகளை வழங்கி வருகின்றன. ஃபிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளில், அன்றாட நடைமுறையில் கடந்த எட்டு மாதங்களாகப் பல்வேறு மொழிபெயர்ப்புச் செயலிகள் பரிசோதிக்கப்பட்டதில், ஐந்து மொழிபெயர்ப்பிகள் முன்னணி இடம் வகிக்கின்றன என்கிறார் டாம். ஐந்துக்கும் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் ஐஓஎஸ் செல்பேசிகளுக்கான பதிப்புகள் இலவசமாகக் கிடைகின்றன என்பது இவற்றின் சிறப்புக்கூறு.

அவற்றுள், 2006-ஆம் ஆண்டு முதலே பயன்பாட்டில் உள்ள கூகுள் மொழிபெயர்ப்பி முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து அது மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மேலும் புதிய மொழிகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. தற்போதைக்கு, இணையம்வழியாக நிகழ்நிலையில் (online) தமிழ் உட்பட 103 மொழிகளுக்கும், இணையமின்றி அகல்நிலையில் (offline) 59 மொழிகளுக்கும் பயன்படுத்த முடியும். செல்பேசிக் கேமரா மூலம் 38 மொழிகளுக்கான மொழிபெயர்ப்பை உடனுக்குடன் பெற முடியும். 93 மொழிகளின் கையெழுத்தையும் புரிந்து கொண்டு மொழிபெயர்த்துத் தரும். பிற செயலிகளுடன் இணைத்துப் பயன்படுத்த முடியும். எடுத்துக்காட்டாக, நமக்கு வரும் எஸ்எம்எஸ் செய்தியை நகலெடுத்தாலே அதன் மொழிபெயர்ப்பு திரையில் தோன்றும். உரை வடிவத்துக்கு மட்டுமின்றி உரையாடலுக்கும் இச்செயலியைப் பயன்படுத்த முடியும். உரையாடும்போதே இருவழி நிகழ்நேர (real-time) உடனடி மொழிபெயர்ப்பு 32 மொழிகளுக்குச் சாத்தியம். கூகுளின் மொழிபெயர்ப்புத் தொழில்நுட்பமானது, உலகனைத்துமுள்ள மென்பொருள் நிரலர் எவரும் தத்தம் மென்பொருள்களில் உள்ளிணைத்துக் கொள்ளும் வகையில் ஏபீஐ வடிவிலும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத் தக்க செய்தியாகும்.

முன்பெல்லாம் தொழில் நிமித்தமாக அல்லது சுற்றுலாவுக்காக ஜெர்மனி, ஃபிரான்ஸ், சீனா, ஜப்பான், ரஷ்யா, கொரியா போன்ற நாடுகளில் பயணம் செய்வோர் அந்நாட்டின் மொழி தெரியாமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவர். ஆனால், இப்போதெல்லாம் இந்த நாடுகளுக்குப் பயணம் செய்த நண்பர்கள், செல்பேசியிலுள்ள கூகுள் மொழிபெயர்ப்புச் செயலியின் மூலம் உணவகங்களில், தங்கும் விடுதிகளில், அங்காடிகளில், டாக்சி ஓட்டுநர்களிடம் மொழிப்பிரச்சினையை மிக எளிதாகச் சமாளிக்க முடிகிறது என்று கூறக் கேள்விப்பட்டுள்ளேன்.

மைக்ரோசாஃப்ட் மொழிபெயர்ப்பி நிகழ்நிலையில் தமிழ் உட்பட 60+ மொழிகளுக்கும், அகல்நிலையில் 40 மொழிகளுக்கும் மொழிபெயர்ப்பு வசதியைத் தருகிறது. கேமரா மூலம் படவடிவிலான விவரங்களையும் மொழிபெயர்க்கிறது. கையெழுத்தில் உள்ளவற்றையும் மொழிபெயர்க்கும். மொழிபெயர்த்த தகவலைக் குரல்வழியாகவும் வெளியிடும். இருவரின் இருமொழி உரையாடலை மட்டுமின்றி, ஒரே உரையாடலில் நூறு பேர்வரை கலந்து கொண்டு பல மொழிகளில் உரையாடும் பேச்சுகளையும் உடனுக்குடன் மொழிபெயர்த்துத் தரும் என்பது இதன் சிறப்புக்கூறாகும். நூறுபேர் வரை உரையாடலில் கலந்துகொண்டு பேசலாம். ஒரு நிறுவனத்தில் நடைபெறும் நிர்வாகக் குழுக் கூட்டத்திலோ, ஒரு விருந்து மேசையிலோ வெவ்வேறு மொழிபேசுவோர் கலந்து கொள்ளும்போது, ஒவ்வொருவர் பேசுவதையும் மற்றவர்களின் மொழியில் உடனுக்குடன் மொழிபெயர்த்து அவரவரின் செல்பேசியில் இச்செயலி தரும். ரோம் நகரில் மதுபான விடுதியொன்றில் பல்வேறு மொழி பேசுவோர் குழுமியிருந்த போது, ஒவ்வொருவரும் வேண்டிய பானங்களைப் பரிந்துரைத்ததையும், ஒவ்வொருவரும் தத்தம் கதைகளைப் பரிமாறிக் கொண்டதையும், அனைவரும் அவரவர் மொழியில் புரிந்து கொள்ளும்படி வியக்கத்தக்க அளவுக்குத் துல்லியமாக மொழிபெயர்த்துத் தந்தது இச்செயலி. மேலும், ஒவ்வொரு மொழியிலும் அம்மொழிக்கே உரிய உணர்வுபூர்வமான தருணங்களுக்குரிய வாக்கியங்களுக்குக்கூட சிறப்பான மொழிபெயர்ப்பை இது வழங்குகிறது. இவையனைத்தும் இலவசமாகவே கிடைக்கிறது என்பதே இதன் சிறப்பு.

வெளிநாடுகளில் பயணிப்போருக்கு மொழிபெயர்ப்புச் சேவை மட்டுமின்றி வேறுபல சேவைகளையும் வழங்கக்கூடியது டிரிப்லிங்கோ (TripLingo) என்னும் செயலியாகும். 42 மொழிகளுக்கு உரைவழி மொழிபெயர்ப்பையும், 19 மொழிகளுக்குக் குரல்வழி மொழிபெயர்ப்பையும் வழங்குவதுடன், அந்தந்த நாடுகளின் பண்பாடு, பழக்கவழக்கங்கள் பற்றிய உதவிக் குறிப்புகளையும் தருகிறது. அங்காடிகளில், உணவகங்களில், தங்கும் விடுதிகளில் தருகின்ற ரசீதுகளை செல்பேசிக் கேமரா மூலம் உடனுக்குடன் மொழிபெயர்த்துத் தருவதுடன் அவற்றை PDF கோப்பாகச் சேமித்துக் கொள்ளவும் முடியும் என்பது இதன் சிறப்புக்கூறாகும். தொழில்முறைப் பயணம் மேற்கொள்வோருக்கு மிகவும் உகந்த செயலி இது. சில அடிப்படை வசதிகள் இலவசம் என்ற போதிலும், உடனடிக் குரல்வழி மொழிபெயர்ப்புக்கு நிமிடத்துக்கு 3 டாலர் கட்டணம் உண்டு. மாதச் சந்தா செலுத்தியும் இவ்வசதியைப் பெறலாம்.

ஜப்பானிய, கொரிய, சீன மொழிகளுக்கான பிரத்தியேகமான மொழிபெயர்ப்பி வேகோ (Waygo) ஆகும். இது வெளியிடப்பட்டு நான்கு ஆண்டுகளே ஆகின்றன. சீன மொழியின் ஹன்ஸி, ஜப்பானிய மொழியின் கஞ்சி, கொரிய மொழியின் ஹஞ்சா எழுத்துகளுக்கு மிகவும் உகந்தது வேகோ. இந்த மொழிகளின் வாக்கியங்கள் மேலிருந்து கீழாகச் செங்குத்தாகவோ, இடமிருந்து வலமாகக் கிடைமட்டமாகவோ இருந்தாலும் இந்த மொழிபெயர்ப்பி மிகத் துல்லியமாக மொழிபெயர்க்கும். கேமரா மூலம் பிடிக்கப்படும் வாக்கியங்களைச் சிறப்பாக மொழிபெயர்த்துத் தரும். இச்செயலி, உணவு தொடர்பான விவரங்களுக்குத் தனிச்சிறப்பான திறன் கொண்டது. சொற்களை மொழிபெயர்த்தபின் அதற்கான படத்தையும் அருகில் காண்பிக்கும். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மென்பொருள் அல்காரிதங்கள் ஆசியாவில் பயன்படுத்துவதற்கெனப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டவை. இதன் பெரும்பாலான வசதிகள் இணையமின்றி அகல்நிலையில் கிடைக்கின்றன என்பது இதன் சிறப்பு. இலவசப் பதிப்பில் ஒரு நாளைக்கு 10 மொழிபெயர்ப்புகள் மட்டுமே பெறலாம். வரம்பின்றிப் பயன்படுத்தக் குறைந்தபட்சப் பதிப்பின் விலை 7.99 டாலர். அதிக விலைக்கு மேம்பட்ட பதிப்புகளும் கிடைக்கின்றன.

சாதாரண உரையாடல்களுக்கு உகந்த மொழிபெயர்ப்பி ஐ-டிரான்ஸ்லேட் (iTranslate) ஆகும். 100-க்கு மேற்பட்ட மொழிகளில் நீங்கள் டைப் செய்யும் எதையும் மொழிபெயர்த்துத் தரும். அனைத்து மொழிகளுக்குமான அகராதியும், சொற்களஞ்சியமும் உள்ளடக்கம். 24 மொழிகளுக்கு உரைவடிவத் தகவல்களை குரல்வடிவில் மாற்றித் தரும். ஆண் அல்லது பெண் குரலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். இதன் நிகழ்நிலைப் பதிப்பு இலவசம் என்ற போதிலும் அகல்நிலையில் செயல்படுத்த, மேம்பட்ட பதிப்பை விலைகொடுத்து வாங்க வேண்டும். செயலி மூலமாக இணைய தளப் பக்கங்களை நிகழ்நிலையில் மொழிபெயர்க்க மாதம் 4.99 டாலர் சந்தா செலுத்த வேண்டும். ஐ-டிரான்ஸ்லேட், ஆப்பிள் செல்பேசிப் பயனர்களுக்குத் தனிச்சிறப்பான வசதிகளை வழங்குகிறது. 32 மொழிகளில் அகல்நிலை மொழிபெயர்ப்பு சாத்தியம். ஒரு படத்தை அடையாளம் கண்டு அதன் பெயரை நீங்கள் விரும்பும் மொழியில் தரும் வசதி இதன் தனிச்சிறப்பு. உரையாடலின் போது ஒவ்வொருவரின் பேச்சையும் நிகழ்நேரத்தில் மொழிபெயர்த்துத் தரும் வசதியும் ஐ-ஃபோன் செயலியில் மட்டுமே உண்டு. மேலும், ஆப்பிள் கடிகாரத்துடன் ஒத்தியைந்து செயல்படும். ஐ-டிரான்ஸ்லேட் வழங்கும் பல வசதிகளைக் கூகுள் செயலியும், மைக்ரோசாஃப்ட் செயலியும் இலவசமாகவே வழங்குகின்றன என்ற போதிலும், ஐ-டிரான்ஸ்லேட்டில் பல்வேறு மொழிபெயர்ப்புத் தொழில்நுட்பங்களையும் கலந்து பயன்படுத்தியுள்ளதால், பிற செயலிகளைக் காட்டிலும் அதிகத் துல்லியமான மொழிபெயர்ப்பை வழங்குகிறது.

வருங்காலத்தில் மொழிபெயர்ப்புத் தொழில்நுட்பங்கள் மென்மேலும் மேம்படுத்தப்படும். காதில் ஒரு சிறு கருவியைப் பொருத்திக் கொண்டு, எந்த மொழி பேசுவோரும் வேறு எந்த மொழி பேசுவோருடனும், அவரவர் மொழியிலேயே சர்வ சாதாரணமாய் உரையாடக்கூடிய நாள் விரைவில் வரும். இந்த மொழி படித்தால்தான் அந்த நாட்டில் வேலை கிடைக்கும், அந்த மொழி தெரிந்தால்தான் இந்த நாட்டில் வாழ முடியும் என்கிற பிரச்சினைகளை எல்லாம் நவீனத் தொழில்நுட்பம் தீர்த்து வைக்கும். ஒவ்வொருவரும் அவரவர் தாய்மொழியில் ஒழுங்காகப் பேசினால் போதும், உலகில் எங்கு வேண்டுமானாலும் சென்று மொழிச்சிக்கலின்றிப் பணியாற்றலாம், வாழலாம் என்கிற நிலை உருவாகும்!

இன்றைய காலச் சூழ்நிலையில், கல்லூரி மாணவர்கள் இருமொழிப் புலமையை பெரிதும் வளர்த்துக்கொள்ள வேண்டும். மொழியாக்கத்தில் ஆற்றல் பெற்றிருந்தால் அரசுத் துறைகளிலும், ஊடகத் துறையிலும், தனியார் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பை பெறுவதோடு, மேலும் உயர் பதவிகளை அடையலாம்.

“ஒன்றே உலகம், ஒருமையே இலக்கியம்!” என்பதை மொழிபெயர்ப்பு உறுதி செய்கிறது. மொழி, நாடு, இன வேற்றுமைகள் கரைந்து, அறிவின் எல்லை நாளும் விரிவடைந்து பல்கிப் பெருகி வரும் நிலையில் மொழி பெயர்ப்பு ஒரு பெரும் தூணாக மொழியைத் தாங்கி நிற்கிறது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *