POST: 2019-01-25T14:08:10+05:30

நாளிதழில் வெளியான கட்டுரைக்கு வரப் பெற்ற வாழ்த்துகள்
============================================
(வாழ்த்து – 101)

அன்புமிக்க டாக்டர் அருள்!

வணக்கம்.

வளர்பிறை மகனாகிய உங்கள் ‘அருளுணர்வும் அஞ்சாமையும்’ கட்டுரையை தினமணியில் கண்ணுற்றேன்.

இத்தனை கோடி உயிர்கள் சுவாசித்த பிறகும் காற்று மிச்சமிருப்பதுபோல, எத்தனையோபேர் எழுதித் தீர்த்த பிறகும் காந்தியடிகள் மிச்சமிருப்பதை உங்கள் கட்டுரை காட்டுகிறது.

உத்தமர் காந்தியடிகளின் பெருமைகளின் தரவுகள் வியப்பில் ஆழ்த்தின. உண்மையை உறுதியாகத் தேடும் திண்மை என்று சத்தியாகிரகத்தை மொழிபெயர்த்து இளைய தமிழர்களுக்குத் தெளிவு தந்திருக்கிறீர்கள்.

விரிந்த எண்ணம் – பரந்த பார்வை – செறிந்த மொழி – சிறந்த வடிவம் என்பனவற்றால் உங்கள் கட்டுரை உயர்ந்து விளங்குகிறது.

குருதியில் வெள்ளையணுக்களும் சிவப்பணுக்களும் வினைப்படுவதுபோல, தாத்தாவின் தந்தையின் மரபணுக்கள் உங்கள் குருதி ஓட்டத்தில் கலந்தோடுகின்றன.

தமிழால் புகழ்பெற்ற மூன்று தலைமுறையைக் காண்பதரிது; உங்கள் குடும்பத்தைக் காண்கிறேன். தமிழ் நீளும்; நாளை உலகை ஆளும் என்ற நம்பிக்கை பெறுகிறேன்.
வாழ்த்துகள்.

—– வைரமுத்து

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *