நாளிதழில் வெளியான ஔவை நடராசன் அவர்களின் கட்டுரைக்கு வரப் பெற்ற வாழ்த்துகள்
============================================
(வாழ்த்து – 100)
அன்புமிக்க டாக்டர் அருள்!
வணக்கம்.
வாஞ்சைமிக்க உங்கள் தந்தையின் கட்டுரையை தினமணியில் கண்ணுற்றேன்.
மூளைக்குள் பெய்த மழையில் இருதயம் நனைந்தது.
வள்ளலார் குறித்த தந்தையாரின் கட்டுரை, 500 பக்க நூல் ஒன்றை அரைப்பக்கத்தில் வாசித்த அனுபவத்தை அள்ளி வழங்கியது.
தந்தையாரின் மொழிநடையில் வெய்யிலில் வைத்த வெண்ணெய்போல் உருகியது உள்ளம்.
பசிப்பிணியின் குணங்களை விரித்துச் சொல்லும் தந்தையார், பசியால் பஞ்சடைந்து குழிந்து போகின்ற கண்கள், காது கும்மென்று செவிபடுகின்றது; நா உலர்ந்து வறளுகின்றது; மூக்கு குழைந்து அழல்கின்றது; தோல் மெலிந்து உணர்ச்சி கெடுகின்றது; வாய் உளறுகின்றது; பற்கள் தளருகின்றன என்றெல்லாம் எழுதிச்செல்லும்போது தமிழ்ப்பசிக்கு விருந்து கிட்டுகின்றது.
வள்ளலாரை அன்றாட வாழ்வின் தளத்திலேயே உணர்ந்துகொள்ளச் செய்யும் உத்தியைத் தந்தையார் கையாண்டிருக்கிறார். பழையை தலைமுறைக்கும் புதிய தலைமுறைக்குமுடையே பாலமிட்டு அந்த வெள்ளைப் புரட்சியை நடமாட விடுகிறார்.
தந்தையார் அவ்வை அவர்களுக்கு என்
வணக்கம்.
—– வைரமுத்து

Add a Comment