POST: 2018-12-13T13:22:42+05:30

இளங்கோவை இழந்த துயரம் – இடியாய் விழுந்ததே !
============================================

பகுத்தறிவுச் செம்மலாக வாழ்ந்த பொறியாளர் திலகம் திருஞானசம்பந்தன் திருமகன் என்ற பெருமையும் இலால்குடி செந்தமிழ்ச் செம்மல் கனகசபை பிள்ளை மருகன் என்ற அருமையும் வாய்ந்த எங்கள் அருமை நண்பர் இளங்கோ, அண்ணா நகரில் எங்கள் இல்லத்தின் அருகிலேயே வாழ்ந்தார் .

வாரத்திற்கு ஒருமுறையேனும் இளங்கோவும், அருமைத் தங்கை கலியாணியும் ஆர்வத்தோடு எங்கள் நலம் விசாரித்துச் சென்றதையும்,இந்த உணவை உங்கள் அருமைத் தங்கை கொடுத்து வாருங்கள் என்று அனுப்பினாள் என்று கூறியதையும் எண்ணி எண்ணி மலேசிய நண்பரோடு , அருள் மின்தொழில் தொடங்கிய போது இளங்கோ தான் தொழில்நுணுக்கத்துக்கு வழி காட்டினார் என்று அருள் ஆயிரம் முறை சொல்வார் .

உருகுகிறோம் .பெற்ற மகனைப் போல பெரிய பரிவு காட்டி உற்ற உறவை எப்படி இழப்போம் .

நேற்றிருந்தார். என் அருகில் வீற்றிருந்தார். நாளைப் பாற்றெளிக்க வம்மின் , என்ற அழுகை வரிகளைத்தான்
எண்ணி உதிர்க்கின்றேன் .

அன்பும், பண்பும், பண்பாடும்,பரிவும் ,உண்மையும் ,திண்மையும் என்று எத்தனை நலங்கள் உண்டோ அத்தனை நலங்களையும் அவருக்கு அடுக்கிச் சொல்லலாம்.

69 அகவை நிரம்பிய அவரைக் காண்பவர்கள், எவரும் ஐம்பது வயது இளைஞர் என்றே அழைப்பார்கள். நாங்கள் அயல்நாடுகள் சென்றபோதெல்லாம் எங்கள் இல்லத்தையும் சீருந்தையும் அவரிடத்தில் தான் ஒப்படைத்துச் செல்வோம்.

புகழ் வாய்ந்த பெருமிதமான குடும்பத் தலைவன் என்ற வகையில், அவர் மைந்தர் குமணனையும் , மகள் ஆதிரையையும் போற்றிப் புகழாத நாளில்லை.

தமிழறிவும், சிவம்பெருக்கும் சீலமும் கொண்ட திருமதி கலியாணிக்கு நான் எப்படி ஆறுதல் கூற முடியும் ? இளங்கோவை இழந்த துயரம், இராஜசேகரின் கண்களில் நீராய் வழிந்தது.

நெருநல் உளனொருவன் இன்று இல்லை என்ற திருக்குறள் சொல்லை நம்மால் வெல்லவே முடிவதில்லை. நாளை இளங்கோ என்னை எப்படிக் காண வருவார் ?

இளங்கோவை இழந்த துயரம் , வழிந்தோடும் என் கண்ணீர் வற்றியா முடியும் ?

– ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *