கலைஞர் 85ம் பிறந்தநாள் உரை – 03.06.2009
========================================
பத்மஸ்ரீ ஔவை நடராசன்
(பகுதி – 4)
—————-
இரண்டரை இலட்சம் பக்கங்கள் எழுதுவது என்றால், இலக்கியங்களின் கலை வடிவங்கள் எல்லாம் கதை, கவிதை, கட்டுரை, நையாண்டிக் குறிப்புக்கள், நாடகங்கள், திரைப்படத்திற்கு எழுதிய உரையாடல், திரைப்படத்திற்கு எழுதுகிற உரையாடல்களைச் சொன்னால், அந்த நாளில் படத்துறையின் திலகங்கள் சொல்வார்கள், “ஐந்து பக்கங்கள் எழுதினால் போதும் என்று சொன்னால், ஐம்பது பக்கங்கள் எழுதித் தருபவர் கலைஞர் அவர்கள்தான்” என்று. இப்படி எழுதித் தந்தவை மட்டுமின்றி, பதிப்பகத்தாரால் 400 நூல்கள் வெளிவந்திருக்கின்றன.
எப்போது தமிழக முதல்வருக்குக் கோபம் வரும் என்று கேட்டால், எனக்குத் தெரிந்தவரையில், தேடிய புத்தகம் கிடைக்கவில்லையென்றால் கோபம் வரும். ஒரு முறை சொன்ன தொடரைக் கேட்டுவிட்டு, நாங்கள் எல்லாம் மிரண்டுபோய் இருந்தபோது, இரவு 10 மணி இருக்கும்போது, நண்பர் சண்முகநாதன், “தலைவர் ஒரு தொடர் சொன்னாரே, அது என்ன புறநானூறா, கலிங்கத்துப் பரணியா” என்று கேட்டார். கேட்டால்தான் எனக்கு மறந்துபோகும். நான் சொன்னேன். “யார் பார்க்கப் போகிறார்கள், கார் நாற்பது என்று சொல்லிவிட்டால் என்ன?“ என்றேன். “நீங்கள் சொல்லிவிடுகிறீர்கள், யார் மறுநாள் அவரைப் போய்ப் பார்ப்பது” என்று கேட்டார் நண்பர் சண்முகநாதன்.
எனவே, அவருடைய வாழ்க்கையில் எழுத்தும், இலக்கியமும், பாட்டும், சிந்தனையும் ஒரு வடிவமாக அமைந்திருக்கிறது. 1974ல் தமிழுலகத்தில் 300 நூல்கள்தான் வெளிவந்தன அப்போது ஒருமுறை அலுவலக கோப்பு சென்றபோது, “300 நூல்கள் வந்திருக்கின்றன. எத்தனை நூல்களை வாங்குவது” என்றபோது, “300-ஐயும் வாங்கு” என்றார். ஆயிரம் நூல்களையும் வாங்குங்கள் என்று பதிப்பகத்து நண்பர்களைச் சொல்கிறேன். அந்த 1974-லேயே நூல்களை வாங்கி, எழுதுகிறவர்களை ஊக்குவித்தவர் நம்முடைய டாக்டர் கலைஞர் அவர்கள்தான்.

Add a Comment