POST: 2018-07-19T07:06:30+05:30

எப்போதோ படித்தேன் !
=========================

—– பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், இல்லம் திரும்பி வரும் தலைவன், தேரோட்டியைப் பார்த்து, மரங்கள் செடி கொடிகள் அடர்ந்த இந்தச் சாலையில், மெல்லச் செல்க பூக்களில் வண்டுகள் மொய்த்து இணையாக இருந்து முரல்கிற நேரமிது. வண்டுகள் மனத்துக்கு வருத்தம் தர வேண்டாம் என்று ஒரு பாடல் இருக்கிறது.

(அகநானூறு பாடல்-4)
•••••••••••••••••••••••••••••••••••••

முல்லை வைந்நுனை தோன்ற இல்லமொடு
பைங்காற் கொன்றை மெல்பிணி அவிழ,
இரும்பு திரித்தன்ன மாஇரு மருப்பின்,
பரலவல் அடைய, இரலை தெறிப்ப,
மலர்ந்த ஞாலம் புலம்புபுறக் கொடுப்ப,
கருவி வானம் கதழுறை சிதறிக்
கார்செய் தன்றே, கவின் பெறு கானம்;
குரங்குகளைப் பொலிந்த கொய்சுவற் புரவி,
நரம்பு ஆர்த்தன்ன, வாங்குவள்பு அரிய,
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாதுண் பறவை பேதுறல் அஞ்சி,
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்,
உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்,
கறங்கிசை விழவின் உறந்தைக் குணாது,
நெடும்பெருங் குன்றத்து அமன்ற காந்தட்
போதவிழ் அலரின் நாறும்-
ஆய்தொடி அரிவை! – நின் மாணலம் படர்ந்தே.

பிரிந்து போகிற சகுந்தலை தன் மேல் சரிந்து விழுந்த மல்லிகைக் கொடிகளை மெல்ல கையாலெடுத்து போய் வருவேனென்று புலம்பினாளாம். அவள் உனக்குத் தங்கை அந்த நாவல் மரத்தடியில் என்னைத் தொட்டுப் பேசாதீர்கள். இது நாடறிந்த நற்றிணைப் பாடல்.

(நற்றிணை பாடல்-172)
••••••••••••••••••••••••••••••••••••••

விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய
நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே
அம்ம நாணுதும் நம்மொடு நகையே
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க நீ நல்கின்
இறைபடு நீழல் பிறவுமார் உளவே
பகற்குறி வந்த தலைமகனைத் தோழி
வரவு கடாயது குறிபெயர்த்தீடும் ஆம்

கலிபோர்னியாவில் என் நண்பர் வாங்கிய வீட்டில் ஏறத்தாழ 300 ஆண்டுகள் முதிர்ந்த மரம் ஒன்று இருக்கிறது. அந்த மரத்தைக் காத்து வருவதற்கு 60 விழுக்காட்டுச் செலவை அரசே வழங்குவதாகச் சொல்லியிருக்கிறார்கள். அது அரசின் சொத்தாம். மரங்கள், தங்களை வாழ்விப்பதற்காகவாய்த்த வரங்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

கனடாவில் அணில்கள் கரிய நிறமானவை. அணில்களின் இனம் மெல்லக் குறைந்து அரிய விலங்காக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சாலையோரங்களில் நடப்பவர்களோ ஓடுபவர்களோ பத்துக் கிலோ மீட்டர் வேகத்தைத் தாண்டினால் அணில்களுக்கு அதிர்வு ஏற்பட்டு ஆணும் பெண்ணுமாக இணையாமல் பிரியுமாம். இதற்கெனக் கனடாவில் சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது.

பின்னர் எழுதிய இரண்டும் அறிஞர் அ .முத்துலிங்கம் கண்டும் கேட்டும் எழுதியவை.

இவற்றில் இழையோடுகிற பரிவுணர்ச்சியின் நெகிழ்ச்சி நம் மனத்தைப் பிழிகிறது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *