POST: 2018-05-08T11:12:58+05:30

ஒப்பியல் இலக்கணத்தின் ஒளிவிளக்கான இராபர்ட் கால்டுவெல் அவர்களின் பிறந்த திருநாளை முன்னிட்டுப் பொதுமக்களின் பல்கலைக்கழகமாகிய தினத்தந்தியில் வெளிவந்த என் கட்டுரை (07.05.2018)
===============================================
முனைவர் ந.அருள்,
இயக்குநர் (மொழிபெயர்ப்பு),
தலைமைச் செயலகம்.
—————————————————-

தமிழ் மொழியின் இலக்கிய – இலக்கணங்கள், கலை வடிவங்கள் அனைத்துமே வட மொழியிலிருந்து பிறந்தவை எனும் கருத்தினை 17-ம் நூற்றாண்டில் இலக்கண ஆசிரியர்கள் இழிவாகப் பரப்பினார்கள்.

தமிழ் மொழியையும் வடமொழி எழுத்தையும் அடுக்கிப்பார்த்து ற,ன, ழ, எ, ஒ என்ற எழுத்துகள் மட்டுமே தமிழெழுத்துகள் என்றும் இந்த 5 எழுத்துகளினாலேயே தமிழ் வாழ்கிறது என்றும் துணிவாக எழுதினார்கள். பன்னிருபாட்டியல் என்னும் இலக்கண நூலில் எழுத்துகளைச் சாதி முறையில் அந்தண எழுத்துகள், சத்திரிய எழுத்துகள் மற்றும் வைசிய எழுத்துகள் என்றும் தமிழுக்கே உரியத் தனிச்சிறப்பான ழ, ள என்னும் எழுத்துகளைச் சூத்திர எழுத்துகள் என்றும் எழுதினர்.

கயமையான காரிருளில் கலங்கித்தவித்த நிலையில் கலங்கரை விளக்கமாக, மேலைக் கதிரவனாகக் கால்டுவெல் தமிழகத்துக்கு வந்தார். வாழ்ந்தார். ஒப்பிலக்கணத்தை வரைந்த ஒப்பிலாத் திலகமாக ஒளிர்ந்தார்.

தமிழ் முதலிய திராவிட மொழிகளுக்கும், இந்திய மொழிகளுக்கும் தாய் சமஸ்கிருதமே எனப் பலரும் நம்பியிருந்த காலத்தில், அதனை மறுத்துத் திராவிட மொழிகளின் தொன்மையையும், தனித்தன்மையையும், வளமையையும் சான்றுகளுடன் நிறுவித் தமிழ் மொழியின் தனிப்பெருமையை உலகுக்கு உணர்த்திய தனிப்புகழ் இவரைச் சாரும்.

சமஸ்கிருதத்துக்குப் புறம்பான தனியான ஒரு மொழிக் குடும்பம் உண்டு என்றதோடு தமிழில் சமஸ்கிருதமும், பிற இந்திய ஆரிய மொழிகள் பலவும் கூடச் சொற்களைக் கடன் வாங்கியுள்ளன என்று அவர் எழுதிய திராவிட மொழி களின் ஒப்பிலக்கண நூல் எடுத்துக் காட்டியது.

தென்னிந்திய மொழிகள் திராவிட மொழிக் குடும்பம் என அழைக்கப்பட்டது. திராவிடக் குடும்பத்தின் மொழிகளைத்திருந்திய மொழிகள், திருந்தா மொழிகள் எனப் பாகுபாடு செய்து தமிழ்மொழி தான் தலைமை தாங்கும் தனித்தன் மையும், எந்த வகையிலும் வடசொற்களை ஏற்காத வளமையையும் உடையதென ஆராய்ந்து முடிவு காட்டினார்.

அயர்லாந்தில் பிறந்து, ஸ்காட்லாந்து நாட்டில் கல்வி பயின்று, இங்கிலாந்து நாட்டில் பயிற்சி பெற்றுத் தமிழகத்தில் 53 ஆண்டுகள் இருந்து அளவில்லாத அரும்பணிகளை ஆற்றினார். அவரது மொழிப்பணி வியக்கத்தக்கது. தமிழ்நாட்டு கோழியைப்பற்றிய ஆராய்ச்சியும் குறிப்பிடத்தக்கதாகும். மத்திய ஆசியாவில் வழங்கும் சிந்தி மொழியில் கோழியைக் கோரி என்ற சொல்லால் குறிக்கின்றார்கள். கோரி என்பது கோழி என்ற தமிழ்ச் சொல்லின் சிதைவே என்று கால்டுவெல் காட்டினார். தமிழில் சிறப்பெழுத்தாக வழங்கும் ழகரம் பிறநாட்டார் நாவில் எளிதாக நுழைவதில்லை. சோழ மண்டலக் கரையைக் கோர் மண்டலக் கரையாகச் – சிதைத்தனர் மேலை நாட்டார். தமிழகத்தைத் தமரிக்கா என்று குறித்தனர் கிரேக்க ஆசிரியர்கள்.

ஆசிய மொழிகளிலும் கோழி என்பது கோரியாயிற்று. தமிழ்நாட்டில் வான்கோழி என்னும் ஒரு வகைக் கோழி உண்டு. கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி என்ற பாடல் அனைவரும் அறிந்ததாகும். கால்டுவெல் அதைப்பற்றிக் கூறியபோது வான்கோழி ஐரோப்பிய நாடுகளிலிருந்து பதினாறாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. வான்கோழியைப் பற்றிய குறிப்பு மூதுரை நூலில் காணப்படுவதால் அந்நூல் பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்னே எழுதப்பட்டிருக்க முடியாது என்று அவர் கருதினார். கால்டுவெல் இளமையிலேயே மேலை நாட்டுச் செம்மொழிகளாகிய கிரேக்கமும், லத்தீனும் கற்றிருந்தார். கிறிஸ்தவச் சமய நுண் பொருளை அறிய ஏபிரேய மொழியைப் படித்தார். தமிழ்நாட்டுக்கு வந்த பின்னர் வடமொழியையும், தமிழையும் ஆர்வத்தோடு பயின்றார். ஜெர்மானிய அறிஞர்கள் இந்திய மொழிகளைக் குறித்து எழுதிய ஆராய்ச்சி நூல்களைப் பயில ஜெர்மானிய மொழியைக் கற்றார். இவ்வாறு பதினெண் மொழிகள் அறிந்த பல்கலை சிறப்பு பெற்றார்.

தமிழகம் வந்ததும் பழந்தமிழ்ச் சொற்களைப் பழங்கன்னடச் சொற்களோடும், ஆதி ஆந்திரச் சொற்களோடும் கால்டுவெல் ஒப்புநோக்கி நூற்றுக்கணக்கான சொற்களின் வேர்கள் மும்மொழிகளிலும் ஒன்றுபட்டிருக்கக் கண்டார். மேலை நாட்டு மொழி நூல்களில் கண்ட ஆராய்ச்சி முறையைக்கொண்டு தென்னிந்திய மொழிகளை ஒப்பிட்டார். அவ்வாராய்ச்சியின் பயனாகத் திராவிட மொழிகளின் இலக்கணக் கூறுகளும், சொல்லாக்க முறைகளும் அடிப்படையான ஒற்றுமையுடையன எனக் கண்டார். தென்னிந்திய மொழிகளுள் மலையாளம், தமிழோடு நெருங்கிய தொடர்புடையதாய் நெடுங்காலம் தாயை விட்டகலாத
சேய் போல் ஒத்து வாழ்ந்ததென்றும், பிற்காலத்தில் வட சொற்களையும் போக்குகளையும் தழுவிய தன்மையால் தற்கால மலையாளம், முற்கால மலையாளத்தினின்று வேறுபட்டு வழங்குகிறது. வட சொற்களை அளவின்றிச் சேர்த்துக் கொண்டதால் தற்காலத் தெலுங்கும், கன்னடமும், வட மொழியின் உதவியின்றித் தனித்தியங்கும் ஆற்றலிழந்து விட்டன என்றும் குறித்துள்ளார். – நான் ஐம்பத்து மூன்று ஆண்டுகள் தமிழகத்திலேயே வாழ்ந்தேன். இத்தனைக் காலமும் இந்தியத் தமிழர்களுக்காகவே இருந்தேன். இன்னும் உயிர் உள்ள வரையிலும் தமிழர்களுக்காகவே உழைப்பேன். தமிழ்மண்ணின் மடியிலேயே மடிவேன் என்று உருக்கமாகப் பேசிய கால்டுவெல் நாடு முழுவதும் நடைப் பயணமாக நடந்ததால் வெப்பம் தணியக் கொடைக்கானலில் தங்கியிருந்தபோது உயிர் நீத்தார். – மறைந்த அவர் உடலைத் தாயகமாக அவர் கருதிய திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இடையன்குடிக்கு எடுத்துச் சென்று அவர் கட்டிய கோவிலில் அடக்கம் செய்தார்கள்.

இடையன்குடியில் கால்டுவெல் கண்ணீரும் செந்நீரும் கொட்டி வளர்த்த திருக்கோவிலின் மேலே வைக்கப்பட்டுள்ள நான்கு மணிகளின் மற்றொரு தொகுதி லண்டன் மாநகரில் மட்டுமே உள்ளதாம். இடையன்குடியில் மீளா உறக்கத்தில் இருக்கும் ஒப்பிலக்கணத்தந்தை பேராயப்பெருந்தகை கால்டுவெலின் புகழொளியும் மணியோசையும் என்றும் இசைத்துக் கொண்டிருக்கின்றன. – இன்று (மே 7-ந்தேதி) கால்டுவெலின் 204-வது பிறந்த தினம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *