ஆங்கிலப் பெருங்கவிஞர் ஷேக்ஸ்பியரின் 455வது பிறந்த நன்னாளை முன்னிட்டு தமிழ் இந்து நாளிதழில் வெளிவந்த என் கட்டுரை
===============================================
****************************************
ஷேக்ஸ்பியரிடமிருந்து
கற்றுக்கொள்ள
வேண்டியது
என்ன ?
****************************************
இலக்குகளை எட்டும் பேராவல், கையறுநிலை, பொறாமை, பேராசை, வீரம் செறிந்த காதல், மகிழ்ச்சி, துயரம் என்று மனித உணர்வெழுச்சிகளைப் பற்றிய தனது நுண்ணிய பார்வை காரணமாகவே உலக மாமேதைகளுள் ஒருவராகக் கருதப்படுபவர் ஷேக்ஸ்பியர். அவருடைய நாடகங்களில் காண முடியாத மனித உணர்வெழுச்சி, செயல்பாடு, சூழமைவு என்று எதுவுமே இல்லை என்றும்கூட சொல்லலாம்.
அதைப் போலவே, ஆங்கில சொற்களஞ்சிய வரலாற்றிலும் ஷேக்ஸ்பியருக்கு முக்கிய இடமுண்டு. ஏறத்தாழ பத்து லட்சம் சொற்களால் அவர் தமது நாடகங்களைப் புனைந்துள்ளார். இந்த எண்ணிக்கை கி.பி.1623 வரையிலும் ஆங்கில மொழிக்குக் கிடைத்திருந்த சொல்வளத்தின் 40%. இத்தனைக்கும் அவரிடம் ஓர் அகராதிகூட இருந்ததில்லை. ஆங்கில இலக்கிய வரலாற்றிலேயே மிகப் பெருமளவில் எடுத்தாளப்பட்டது ஷேக்ஸ்பியருடைய எழுத்தாக்கங்கள்தான். அவருடைய நாடகங்கள் 50 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆக்ஸ்போர்டு மேற்கோள்கள் தொகுப்பில், 60 பக்கங்களில் (10%) தனியாட்சி புரிகிறார். ஆங்கில மொழிக்கு அவர் 1,700 புதிய சொற்களை உருவாக்கிக் கொடுத்துள்ளார். இன்று ஆங்கிலத்தில் புழக் கத்திலிருக்கும் அரசியல் படுகொலை (assassination), படுக்கையறை (bedroom), ஆபாசம் (obscene), பயனற்றது (useless) போன்ற 28 சொற்களை முதன்முலாக ஆங்கில மொழியில் பயன்படுத்தியவரும் அவர்தான்.
அவர் உருவாக்கிய, “சொர்க்கத்தை முத்தமிடும் நரகம்’, ‘முடிவற்று நீளும் நாட்கள் கொண்ட உலகம்’, ‘பெருமை வண்ணக் கோல் ஏப்ரல்’ என்பன போன்ற சொற்றொடர்கள் இன்றைக்கும் புழக்கத்தில் உள்ளன. “பொறாமை உணர்வு (green-eyed), எள்ளி நகையாடத்தக்கது” (laughing stock), ‘கல் மனம்’ (stony heart) போன்ற ஏராளமான இணைச் சொற்களையும் வடித்தார். இவை போன்ற பற்பலத் தொடர்கள் அவருடைய நாடகங்களிலும் கவிதைகளிலும் சிதறிக்கிடக்கின்றன. அவ்வாறு அவர் கையாண்ட தொடர்களில்’ சில, புகழ்வாய்ந்த நூலாசிரியர்களால் தமது நூல்களுக்குத் தலைப்புகளாகப் பெருமையுடன் சூட்டப்பட்டுள்ளன. ஷேக்ஸ்பியரது கவித்துவத்தின் தனிச்சிறப்பு ஆங்கில மொழியிலுள்ள அனைத்து அணி வகைகளையும் உள்ளடக்கியுள்ளது. அத்தகைய அணி நயங்கள் ஷேக்ஸ்பியரால் மட்டிலுமே அறியப்பட்டவையாகத் தென்படுகின்றன. சுருங்கக் கூறி விளங்க வைக்கும் முதுமொழி (Aphorism), மறைமுகமாகக் குறிப்பிடுதல் (Allusion), சொல்வரிசைகளைத் தலைகீழாக மாற்றிக் கூறல் (Anastrophe), முரண் தொடை (Irony) என்று அதன் பட்டியல் மிக நீளமானது. அவற்றில் சில தெளிவற்றவையும்கூட. இன்னமும்கூட, ஷேக்ஸ்பியருடைய நூல்களைக் கற்றுத் துறை போகிய மேதைகளும், இலக்கண வல்லுநர்களும் அத்தகைய சிக்கலான அணிநலன்களைப் புரிந்து கொள்வதில் மூளையைக் கசக்கிக் கொண்டிருக்கின்றனர்.
ஒரு இலக்கியப் படைப்பு, மனித உணர்ச்சிகளின் இயல்பை இன்னும் அணுக்கமாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. கூடவே, அந்தப் படைப்பு எந்த மொழியில் எழுதப்படுகிறதோ அந்த மொழியை அடுத்த கட்டத்தை நோக்கியும் அழைத்துச்செல்கிறது. ஷேக்ஸ்பியரின் படைப்புகளை, நாடகக் காட்சிகளை, கவிதை வரிகளை ஆங்கிலேயர்கள் கொண்டாடி வரவேற்றார்கள்.
முக்கியமாக, அவர் அறிமுகப்படுத்திய புதுப்புது – வார்த்தைப் பிரயோகங்களை, சொற்றொடர்களை ஏற்றுக்கொள்ளவும் செய்தார்கள். சில ஆயிரம் சொற் களை மட்டுமே கொண்டிருந்த ஆங்கிலோ-சாக்ஸன் மொழியிலிருந்து உருவெடுத்த ஆங்கிலம் இன்று உலகு தழுவிய மொழியாக இருப்பதற்கு இது முக்கியக் காரணம். ஆனால், இன்னும் அடி முடி காண முடியாத தொன்மையைக் கொண்டிருக்கும் தமிழ் மொழியில் ஒரு புதிய சொற்சேர்க்கை வந்தாலும், அதை ஏற்றுக்கொள்ள நம் மனம் தயாராக இருப்பதில்லை. ஏற்கெனவே தெரிந்த சொற்களின் வழியாக மட்டுமே எதையும் அறிந்துகொள்ளவோ வெளிப்படுத்தவோ வேண்டும் என்று கறார் காட்டுகிறோம், இலக்கியத்தை மட்டுமல்ல, மொழியியலிலும் ஷேக்ஸ்பியரிட மிருந்து நாம் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது!
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
ந.அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு.
ஏப்ரல் 23, 2018
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

Add a Comment