POST: 2018-04-16T10:49:13+05:30

சான்றாண்மைக்கு ஒரு சா.க.
===========================

மேயர் சா.கணேசன், தனது கனிந்த முதிர்ந்த 90வது அகவையில் மறைந்தார் என்ற செய்தி மாளாத் துயரத்தைத் தருகிறது.

பச்சையப்பர் கல்லூரியில், நான் மாணவனாக இருந்த 1955-1956களிலேயே என்னோடு நேயத்தோடு பழகிய நண்பராவார்.

கழகக் கருத்தில் ஊறித் தோய்ந்து நரம்பெல்லாம் இரும்பாகி நனவெல்லாம் உணர்வாகி மான மறவராக இருந்த மாட்சியுடையவர் சா.கணேசன் அவர்கள்.

கழகத் தொண்டராக, படை வீரராக, பணியாளராகத் தன்னைக் கரைத்துக் கொண்ட ஒப்பில்லாத சா.க, சென்னை மாநகராட்சி மேயராக இருந்து, பதவிக்குப் பெருமிதம் சேர்த்தார்.

இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் இல்லத்தில்தான் அவரை நான் பலமுறை கண்டிருக்கிறேன். பேராசிரியர் தேர்தலில் நின்றபோது, தேர்தல் பணி ஒதுக்கீடுகளைச் செய்த திறமையும் அவருக்கு இருந்தது.

எப்போதும் கழக அன்பர்கள் புடைசூழப் பகுத்தறிவு எண்ணங்களைப் பரப்பியவர். 90 வயது என்பது, தளர்ச்சி நிறைந்து வரும் அகவைதான்.

அவர் தோளில் அணிந்த சிவந்த துண்டும், ஒற்றை நாடியான உடலும் கொண்டு அவர் ஓடியாடித் திரியாத மேடைகள் இல்லை.

கழக மாளிகையின் ஒரு தூண் சாய்ந்துவிட்டது. அவருடைய உசாவல் ஓய்ந்துவிட்டது.

சான்றாண்மைக்கு வடிவம் வேண்டுமானால், சா.க.-வின் உருவத்தைத்தான் வரைந்து காட்ட வேண்டும்.

—— பத்மஸ்ரீ ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *