POST: 2018-01-04T10:27:32+05:30

திருப்பாவை பேருரை
••••••••••••••••••••••••••••••••
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
==================================
பாடல் – 20
=========

“மார்பினை நப்பின்னைப் பிராட்டிக்குத் தந்தாலும் வாய்திறந்து ஒரு வார்த்தையை யாவது எங்கட்குத் தரக்கூடாதா“- என்று வந்தவர்கள் முன்னர் கண்ணபிரானை நோக்கிக் கூறினார்கள் இல்லையா? அதற்கு எந்தப் பதிலையும் அவன் வாய்திறந்து பேசவில்லை. காரணம் நப்பின்னைப் பிராட்டி கண்ணைக் காட்டிச் சாடைசெய்தது தான் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அதன் காரணம் அவர்கட்குக் பிறிதுஒன்றாகவும் இருக்கக் கூடும் என்று மனதில் பட்டது. நப்பின்னைப்பிராட்டியை, ‘துயில் எழஒட்டாய், பிரிவு ஆற்றகில்லாய், தத்துவம் அன்று, தகவும் அன்று“ என்றெல்லாம் தங்களது ஆற்றாமையால் கூறியவை. கண்ணன் மனதைப் புண்படுத்தி இருக்கலாமோ? என்று, அக்கருத்தாலே, நப்பின்னைப் பிராட்டியின் தேக குணங்கள், ஆத்ம குணங்கள் பற்றி எல்லாம் பெருமையுறப் பேசுவோம். அது இருவருக்குமே மனவமைதி அளிக்கும். அதுகேட்டு எழுந்த போது, இருவர் சேர்த்தியிலே நம் குறையை விண்ணப்பிப்போம் என்று தோன்றிற்று. தோன்றவே நப்பின்னைப் பிராட்டியின் அழகு குணம் செயல் பலவற்றையும் பின்வருமாறு சொல்லுகிறார்கள். “செப்பன்ன மென்முலை செவ்வாய், சிறு மருங்குல் நப்பின்னை நங்கை‘
என்று !

செப்பு அன்னமென்முலை செப்புப்போன்ற வடிவமைதியை உடைய தளம் என்று பொருள். அரும் பொருள்களை இட்டு வைக்கும் இடம் செப்பு. கண்ணனே வைத்தமா நிதியாக செல்வத்துட் செல்வமாக இருப்பவள். அவனை தன் பொருளாக்கி உள்ளடக்கி வைத்த்தில்லையா? நப்பின்னையின் தனம். “நப்பின்னை கொங்கைமேல் வைத்துக்கிடந்த மலர்மார்பா“ என்னும்படி அல்லவா அவனிருப்பு இருந்தது! மேலும் செப்புக்குள்ளே பொதிந்து வைத்த ஆபரணம் நினைத்தபோது எவருக்கும் பூணக் கிடைக்காது. அதுபோல அவனும் நமக்கு நினைத்தபோது நினைத்த இடத்தில் கிட்டான் என்றபடி “மாகடல் நீருள்ளான். மாபலராமன் தனத்துள்ளான் என்று பாசுரம். இப்படி, பிரியாதிருக்கும் இருப்பால் ஆற்றாமையை அறியாத தளங்கள்- ஆகவே மென்மையது ஆயிற்று. மேலான பண்டக்ஙளை இட்டு வைக்கும் செப்புப் போன்றவள் கண்ணன். அதாவது செல்வத்துட் செல்வமானவள் என்றால், அவள் தன்னை உள்ளடக்கும் தனங்கள் நப்பின்னையது. “சுடர்வான் கலன் பெய்தது ஓர் செப்பினை திருமங்கை மணவாளனை“ என்று இவனது பெருமைக்குப் பாசுரம். இவ்வளவு பேசியது இருவரும் கேட்டுமகிழுகைக்காக.

அடுத்து சொல்லுகிறார்கள். “செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய்“ என்று, ‘சிவந்த வாயையும் நுண்ணிய இடுப்பினையும், நப்பின்னை என்னும் திருநாமத்தையும் உடைய குணபூர்த்தி உடையவளே“- என்றுஇதற்குப் பொருள். செவ்வாய் சிவந்துள்ள வாய், மலைமீது இருப்பார் தேனும் களியும் அருந்துவது போல அவன் அதரபானம் செய்யும் இடம் அது. “தொண்டையம் செங்கனிவாய் நுகர்ந்தான்“ என்று பாசுரம். “செம்பவளத் திரள்வாயன் என்று கண்ணனுக்குப் பெருமை. அவனும் தோற்று, மகிழும்படி, இதழும் மூரலும் கொண்டது அவளது வாய். இப்படி உதடுகளையும் புன்சிரிப்பும் கண்டுமயங்கியே நப்பின்னை பொருட்டால் ஆள்விடைகள் ஏழையடர்த்து வென்றான் என்பர். “கோவை வாயால் பொருட்டு தளவேழ் முறுவல் பிள்ளைக்காய். ஏறுகள் ஏழு பொருது“ என்று பாசுரம். சிறு மருங்குல் நுண்ணியதான இடை. அவள் மேலே இருந்தால் இருக்கிறதோ அல்லது முறிகிறதோ என்று அஞ்சும்படி செய்யுமாம் அவளது இடை. அப்படி பயங்கொள்ளச் செய்யும்படி நுண்ணியது என்று கருத்து. அது மட்டும் இல்லை. மேலும் கீழும் கண்டு இவளுக்கு நடுவுண்டு என்று ஊகித்து அறியும்படி உள்ள இடை என்றுமாம். “ஒசிந்த நுண் இடைமேல் தன் கையை வைத்து“ என்கிறபடி, இடை ஒடியாதபடி கண்ணனும் தன் கைவைத்துப் பிடித்துக் கொண்டே போவனாம். இவ்வருணனையாலும் இருவரும் மகிழ இடம் தருமில்லையா?

கிராட்டி நம்மை ஈன்று எடுத்த தாய் போல. தாய் ஒருநிலையில் குழந்தையது தொட்டிலையும் பற்றி அரவணைப்பள். மறு சமயம் கணவன் உறங்கும் கட்டிலையும் பற்றி நின்று அரவணைப்பள். இவ்விருவகை நிலையும்தாய்க்கு உண்டு. அதேபோல, சரண்புகும் வேளையில் பிராட்டி நம்முன் சேர்ந்தும். பலன் தரும் வேளையில் எம் பெருமானோடு கூடியும் அருள் புரிவள். இவ்விருவகை உறவு நிலையும் வெளிப்படுமாறு “நப்பின்னை நாங்காய்“ என்று பெயர் சொல்லியும், எம்பெருமானோடு கூடிய நிலையில் திருவே என்று தகுதி குறிப்பிட்டும் மகிழுகிறார்கள். ஆடவர்களுள் எல்லாக் குணங்களும் நிறைவுற்றுப் பூர்த்தி உடையவன் நம்பி. அதற்குப் பெண்பால் நங்கை என்பது. குணநிறைவு உடையவள் என்று பொருள். “கேசவ நம்பி‘ என்பதற்கு ஏற்ப, நிறை குணமுடையவள் நப்பின்னை நங்கைதான் இல்லையா? இதனாலேயே, நப்பின்னை என்றதற்கு மேலும் நங்காய் எனச் சிறப்புறப் பேசுகிறார்கள்.

நப்பின்னைப் பிராட்டியைத் “திருவே“ என்றதில் பல கருத்து நயங்களுண்டு. கண்ணபிரானுக்கு, அழகு அவளாலே. நீர்மை அவளாலே. குணங்கள் அவளாலே. மேன்மை அவளாலே. அருங்கக் கூறினால் அடங்கலும் அவளோடு தோய்தலாலேயே இருக்கும். “பிள்ளை நெடும்பனைத் தோள் வீடு“ என்று பாசுரம் பேசும். எல்லாமும் வல்ல மேலோளான இறைவனைக் குறிக்கும் போதும் “தரு“ என்று இவள் பெயரிட்டே சொல்லும் வழக்குண்டு. திருமால் என்றே சொல்லிவருகிறோம் இல்லையா?“ திருவில்லாத் தேவரைத் தேறேன் மின்“ என்று ஒரு பெரியார் திருவாக்கு. நப்பின்னையை நோக்கி “திருவே துயில் எழாய்“ என்றால் – அவள் பேர் படைத்த நீ செய்கையாலும் அவளைப் போன்றிருக்க வேண்டாவோ! சீதா பிராட்டியாக அவதரித்த காலத்தில் அடியார்கட்காக உறங்காதிருந்த அவள்படி உனக்கும் உண்டாக வேண்டும். பெண்ணின் வருத்தமறியாத ஆண்களை ஒத்து நீ உறங்கலாமா? பெண்ணாய்ப் பிறந்த நீ விரைந்தெழுந்து வந்து எங்கள் பேற்றுக்கு உதவு“ என்று எல்லாம் கருத்து.
நப்பின்னை கண்ணன் இருவரும் சேர்ந்த சேர்த்தி காண, வந்தவர்கட்கு ஆசை. கண்டு இருவர் முந்நிலையிலுமாகத் தங்கள் வேண்டுதலைச் சொல்லவேண்டும் என்பதும், அவர்களது நினைவு. அதற்காகவே, முதலில் கண்ணனையே எழுப்பினார்கள். அவளை எழுப்பும்போது சொன்னார்கள். “முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே. செல்லம் உடையாய் திறனுடையாய் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா, துயில் எழுய்“ என்று தேவர்கட்கு ஒரு துன்பம் வரும் என்று தெரிந்தால் அதற்கு முன்னே சென்று துயர் துடைப்பவனே. அடியார்கள் திறத்தில் தன்னைத் தாழவிட்டுப் பரிமாறுபவனே! விரோதிகட்குப் பயாக்னியை உண்டாக்குபவனே! துயில் எழு. என்று எல்லாம் இதற்குப் பொருள். இதனால்,ரக்ஷிதா “ஜிவலோகய்யா“- என்று உலகத்தால் அனைவர்க்கும்உதவி உலகரிக்கும் கணத்தையும் “ஸ்வ ஜனய்யசரக்ஷிதா“ என்று அடியார்க்கு எளியனாய் உதவும் பாங்கையும் சொல்லி எம்பெருமானை எழுப்பியபடி சொல்லிற்று. அனைவரையும் காக்கும் ராமான்ய குணத்தை நீ இழந்தாலும், அடியாரைக் காக்கும் விசேஷ குணத்தை நீ இழக்கலாகாது என்று கருத்து.
அமரர் தேவர்கள் அவர்கள் துயரப்படுவதற்கு முன்கூட்டியே செல்பவன் நீ. முன் சென்று என்பதற்குப் பொருள். கப்பம் அல்லது நடுக்கம், மனக்குலைவு, கலி பெருமிடுக்கு உடையவன், இத்தகைய நீ தேவர்கட்கும் எங்கட்கும் உள்ள வாசியை அறிந்து அடியார்களாகிய எங்கட்கு முற்பட உதவ வேணும் என்கிறார்கள். தேவர்களோ வலிமை மிக்க ஆண்கள். நாங்கள் அபலையான பெண்கள். அவர்கள் “நாம் தேவர் என்பார்“ என்கிறபடி காரியம் பற்றி நின்றபிறகு தருக்கித் திரிபவர்கள். நாங்கள் “அடிக்கியோம் தலை0மிசை நீ அணியாய்“ என என்றுமே வேண்டிநிற்கும் அடியவர்கள். சவா வரம் பெற்றவர்கள் அவர்கள். நாங்கள் உன்னைப் பிரியில் தரியாத இயல்புடையவர்கள். தேவர்கள் உன்னைப் பற்றி நின்று அதனால் பிறிதொன்றைப் பயனாக வேண்டுபவர்கள். நாங்களோ அப்படியில்லை. உன்னை அடைந்து உன்னையே பெற நினைப்பவர்கள். நீள் நகர் நீள் எரி வைத்தருளாய்“ என உன்னையே எழுப்பி அம்புக்கு இலக்கு ஆக்குபவர்கள் தேவர்கள். நாங்களோ, அதற்கு மாறாக எழுப்பி உன் அழகு காண ஆசைப்படுபவர்கள். இந்த வேறுபாடுகளை உணர்ந்து எங்கட்கு உதவ வேண்டும் என்கிறார்கள். இதனால்! என்றும் சாதல் இல்லாத அமரர்கட்கு நோவு வருதற்கு முன்னரே சென்று காக்கவல்ல நொந்து வெந்து நிற்கின்ற எங்களது துயரைக் கண்டறிந்த பின்னராவது காத்துஅருள்புரியல் ஆகாதா? என்பது கருத்து.
இனி, செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலன்“ என்றது எம்பெருமான் அடியார்க்கு அருளும் பாங்கு குறித்தது. சென்றார் என்றால் பகைவர்கள் என்று பொருள். “ஸுஹ்ருதம் ஸர்வ பூதா நாம்“ என்றிருப்பவன் பகவான். அவனுக்கு என்று தனியாகப் பகைவர்கள் கிடையாது. ஆனாலும், தன் அடியார் திறத்து தீங்கு புரிவோரைத் தனக்குப் பகைவர் என்றிருப்பவன் அவன். பல அவதாரங்களை எடுத்துப பகை முடித்தது எல்லாம் சிஷ்டபரிபாலனத்திற்கே. “எம்பெருமான் அவதரித்துச செய்த ஆணைத்தொழில்கள் எல்லாம் பாகவதாபசாரம் பொறாமையாலே!“- என்று, அவதாரகசியம், மலம் குற்றம், விமலன் குற்றமற்றவன் என்று பொருள். போர் என்று எழுந்து – அதற்கு முன் நின்று உதவினாலும் சரி. இல்லை உடன் சென்று உதவினாலும்,, பின்னர் துணையாகி உதவினாலும் சரி. இது எல்லாம் நிறைவுடையது ஆகாது. எதிரிடம்உள்ள போருக்குக் காரணமான தீய நினைவுகளையே அறமாய்ப்பது மிக மிக நல்லது. பின்னர் என்றுமே போர் எழ வழியுமிராது. அடியவர்கட்கு அங்ஙனம் உதவுபவன் எம்பெருமான். எதிரிகளது தீய எண்ணத்தையே அழித்து பயாக்னியை எழுப்பி மாற்று அழிக்க வல்ல திறத்தையே – செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலன் என்று குறிப்பிடுகிறார்கள். “பிறரைத் தீங்கு நினைத்த கஞ்சன் வயிற்றில் நெருப்பு என்ன நின்ற நெடுமாலே“ – என்றல்லவா ஆண்டாளும் பேசினாள். “உன்னைப்பிரிந்து வருந்தும் எங்கள் திங்கையும் போக்கு“ என்று இதன் உட்பொருள்.
வந்தவர்கள் கண்ணனைப் பார்த்துக் கூறியவைஎல்லாம் – நப்பின்னைக்கும் தெரியும். தெரிந்து, அவர்களது ஆற்றாமைக்கு மிகவும் வருந்தினாள். வருந்தியதோடு மட்டும் இன்றி வந்தவர்களைப் பார்த்து சொன்னாள். நீங்கள் வந்த காரியமும் பட்ட வருத்தமும் யாவும் எனக்கு நன்கு புரியும். உங்கள் ஆற்றாமையால் “த்த்துவம் அன்று. தகவும் அன்று, என்று கூறினீர்கள். நான் புருஷகார தத்துவத்தை மறந்தவள்இல்லை. பெண்களின் வருத்தம் அறியாதவளுமில்லை. தக்க சமயம் பார்த்து எம்பெருமானிடம் சொல்லி உங்கள் காரியம் முடிக்கவே இருந்தேனே தவிர வேறு புறக்கணிப்பு இல்லை. இப்போது நான் எழுந்து செய்யவேண்டியது என்ன சொல்லுங்கள்? என்று! உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனோடு எம்மை நீராட்டவேணும்“ –இங்ஙனம், வந்தவர்கள் நப்பின்னையிடம் கூறிஅவளரளை வேண்டி நின்றார்கள்.
உக்கம் என்பத அலவட்டம். அதாவத விசிறி. விசிறிக் கொள்ளுவதனால் . வரிநடந்த வந்த களைப்பும் இளைப்பும் நிங்கும். கண்ணுக்கு இனிய தோற்றம் தரம். தட்டொளி யாவத மகம்பார்க்கும் கண்ணாடி “காறை புணும் கைவளை திரத்தம் கண்ணாடி காணும்“ என்கிறபடி தங்கள் ஒப்பனையைக் கண்ட அகுகாண உதவும். இதன்படி, மதலில் இவ்விரண்டினையும் தர வேண்டகிறார்கள். வந்தவர்கள், தங்களத தோற்றத்தையும் பொலிவினையும் இப்படி மிகைப்படத்திக் கொள்ளுகிறார்களே என்று கேட்கத் தோன்றும். இதல் தவறு எதவும் இல்லை. தங்களது தோற்றமும் பொலிவும் தாங்கள் விரம்பும் கண்ணனுக்கு உகந்ததாக இருக்கிறதா என்று கண்ட மகிவே தான்! “உண்ணும் சோறும் பருகும் நீரும் எல்லாம் கண்ணன்“ – என்றே இருக்கும் இயல்புடையவர்கள் இவர்கள். “தனக்கே ஆக என்னைக் கொள்ளும் இதே, எனக்கே ஆக யான் கண்ணனைக் கொள்ளுமாறே“ – என்று பாசுரம். இறைவன் உகப்புக்குத் தாங்கள் உரியவர்களாக வேண்டும் என்று அடியார்படும் ஆசைக்கு ஏற்றபடி இவர்கள் கருதியது மிகவும் தகும். இல்லையா? நோக்புக்கு வேண்டும் துணைப்பொருள்கள் பல. அவற்றுள். உக்கமும் தட்டொளியும் முன்னோடியாகுபவை.
நப்பின்னைப் பிராட்டியை நோக்கி- “கண்ணனோடு இப்பொழுதே எம்மை நீராட்டு“ என்று இல்லையா சொல்லி வேண்ட வேண்டும். அப்படி இல்லாமல் “உன் மணாளனோடு நீராட்டு“ என்கிறார்கள். இதனடியாகப் பல கருத்து நயங்கள் உண்டு. கண்ணன் பரம்பொருளாய் –“லோக பர்த்தாரம்“ என்கிறபடி உலகத்துயிர்கட்கு எல்லாம் நாயகனாகிய பரம புருஷன். அவனை இப்பிறவியில் நப்பின்னை கேள்வன்“ என்று அனைவரும் அழைத்து மகிழும்படி தனதுரிமையாகப் பெற்ற தகுதி நோக்கிப் பேசி மகிழ்ந்தபடி, மேலும், சீதாபிராட்டியின் பால் சீரிய குணநலங்களும் வடிவழகும் அமைந்து சிறந்திருந்தாலும் இராமபிரான் ஐயர் செய்த திருமணம்“ என்று பெருமைப்பட உகந்திருப்பராம். அதேபோல கண்ணனையும் இவர்கள் நப்பின்னை தந்த கண்ணன் என மகிழ்ந்து களிக்குமாறு அவன் தந்தருள வேணும்“ என்ற கருத்தும் உண்டு. “உன் மணவாளன் என்றதற்கு உன் கருத்தறிந்து நடப்பவன் என்றும் குறிப்பு. நீ எங்களோடு அவனை கூட்டிவைத்து மகிழவேணும் என்று கருதினால் உன் புருவ நெறிப்பிலே உன் கருத்துக்கு இசைய வந்து எங்களைக் கூடி மகிழ்வன் என்றும் கருத்துண்டு.
கண்ணபிரானது பிரிவாற்றாது வருந்தும் எங்களை என்பதற்குப் பதிலாக – அப்படிச் சொல்லாமல், தங்களது நோவுதின்று மெலிந்து நலிந்த உடலைக்காட்டி, எம்மை நீராட்டு என்கிறார்கள். இப்பொழுதே நீராட்டி மகிழவேணும். இல்லை சிறிது காலங்கழிந்தால் நாங்கள் தரித்திரோம்- என்பது சுட்டி இப்போதே நீராட்டு என்று வேண்டுகிறார்கள். இந்நோன்பு கழிந்தால் ஊரார் கோபவிருத்தர்கள் கண்ணனைக் காணவும் பேசவும் விடமாட்டார்கள் இல்லையா? அந்த அச்சம் தலைக்கொண்டு பேசுகிறார்கள். இப்பொழுதே என்று நீராட்டு என்பதற்கு கண்ணனோடு கூடச் செய்து மகிழவை என்று கருத்து.

உறக்கம் – விழிப்பு- நீராட்டம் என்பதற்கு எல்லாம் வெளிப்படைப் பொருள்கள் மட்டும் கொள்ளுதல் தகாது. உட்பொருள் கொண்டு உயிரான தத்துவங்களை அறிதல் வேண்டும். ஆணவம், கன்மம் மாயை என்கிற உலகியல் சூழலில் சிக்கி மயங்கும் மெய் மறதியே இங்கு உறக்கம். தேகமே ஆன்மா போகமே புருஷார்த்தம்“ என்கிற மயக்கம் நீங்கி, யான் யார்? என் உள்ளம் யார், என்னை ஆட்கொண்ட நாயகன் யார்? என்றெல்லாம் தெளிவுற்று எழுதவே துயல் எழல். நின்ற நிலை. செய்தொழில், நினைத்தகுறி, வழிபாடு, எல்லாம் உணர்ந்து பதம் கடந்த பரம்பொருளோடு கூடி அவன் அருளாகிய நீரில் முழுகிப் பேரின்பமுற்றுக் களித்தலே நீராட்டம் என்பது. “பொங்கும் மல இருள் உற்று உறங்காமல் இறைவன் அருட்சலத்தில் மூழ்க வருக“ என்பதுவே பாவை என்னும் சைவம். இதற்கேற்பவே வைணவமும் இறைவனோடு கூடி இன்புறுதலை“ அப்பன் அருட்சலம் மூழ்கின்ன்“ என்று கூறும். ஆக இங்கு “எம்மை நீராட்டு“ என்பதற்கு இறைவனோடு சேர்த்து வைத்து எங்களைமகிழ வைத்து நீயும் மகிழுவாயாக என்றே உள்ளுரைப் பொருள். இவர்கள் இங்ஙனம், வேண்டியபிறகு நப்பின்னைப் பிராட்டியும் நோற்று வருபவரோடு கூடிச் சேர்ந்து வேண்டுவன செய்கிறாள்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *