மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-116
—————-
==========================
கவியரசர் கண்ணதாசன்
==========================
ஒருமுறை காரைக் குடியிலிருந்து சென்னைக்கு அவரோடு பயணம் செய்த இனிய நினைவு என் நெஞ்சில் இன்றும் நிலைத்திருக்கின்றது. பிறிதொரு முறை பொள்ளாச்சிக்கு அவரை அழைத்துச் சென்ற இனிய அனுபவமும் எனக்குக் கிடைத்தது. அன்றைக்கு அவர் உதிர்த்த சரமான கதைகளையும் துணுக்குகளையும் இன்றும் நினைத்து மகிழ்கின்றேன்.
கவியுலகத் தமிழ்த் தென்றலாக விளங்கிய அவர் எழுத்துலகின் எல்லாத் துறைகளிலும் தன் தனி மாட்சியைக் காட்டியவர்.
சின்னஞ்சிறிய கதைகளால் சிந்தனையைக் கிளறும் செவ்வி படைத்தவர்!
இலக்கிய நெடுவானில் தளர்தலும் வளர்தலும் இல்லாத
தண்மதியம்!
கவிதைச் சோலையில் உதிர்ந்து விழாத
புன்னகை புதுமலர்!
மாதங்களில் மார்கழியாய் மலர்களில் மல்லிகையாய்
காலங்களில் வசந்தமாய்க் கவிதையுலகில்
தேனூற்றாய் இன்றும் விளங்குபவர்!
காலம் அவரை வென்றதில்லை கவித்திறனால்
காலத்தை வென்ற கவியரசர் அவர்தான்!
சங்கப் புலவர்களின் சான்றாண்மை,
கம்பரின் கவித்திறம்
பாரதியின் தேசியம்
பாவேந்தரின் தன்மானம்
அனைத்தும் சேர்ந்த பெருங்கவிஞர் அவர்!
போற்றுதலையும் தூற்றுதலையும்
பொருட்படுத்தாத கவியரசர்!
நாமார்க்கும் குடியல்லோம் என முழங்கிய
நாவரசர்!

Add a Comment