கொல்கத்தா பாரதி மன்றத்தின் தலைவர் திரு.மு.சீனிவாசன் அவர்கள் 23.08.2017 அன்று தன்னுடைய 89வது அகவையில் மறைந்தார்.
——————————————————————————-
பல்கலைவித்தகர் – பாரதி வாரிதி மு.சீனிவாசன்
மறைந்தாரே!
=============================================
பல்கலை வித்தகர் மு.சீனிவாசன் அவர்கள் காலத்தால் முதுமையுற்று கனிந்த நிலையில் அவர் பிரிந்து சென்றதை இந்த உலகில் இயல்பான ஒன்று என்று கருதி நிலைகொள்ள முடியவில்லை.
மேற்கு வங்க மாநிலத்தின் கலை வளரும் தலைநகராகிய கொல்கத்தா மாநகரத்தில் சிறந்த வணிக நிறுவனத்தில் ஆட்சியாளராக இருந்து அவர் ஆற்றிய அலுவல் பணிகள் ஒருபுறம்.
அந்தி வந்தால் பாரதி மன்றம் வந்து, பாரதி கலைக்கழகத்தை வளர்த்ததையும் மேற்கு வங்க மாநிலமே கண்டு வியப்படையும் அளவுக்குப் பாரதி மன்றம் ஆற்றிய பணிகளை எவரும் மறப்பதற்கில்லை.
ஆங்கிலத்தில் பாரதியார் கவிதைகளை மொழியாக்கம் செய்த முதல்வர் என்று மூவரை எண்ணினால் மு.சீ. அவர்களுக்குச் சிறப்பான இடம் உண்டு.
வாய்ப்பு வரும்போதெல்லாம் மகாகவி பாரதியாரின் பாடல்களின் மொழியாக்கங்களைப் பற்றி எண்ணியதோடு வங்கம், இந்தி, வடமொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஈடில்லாப் புலமையோடிருந்தார்.
கொல்கத்தா மாநகரத்தில் அவர் நடத்திய விழாக்களுக்கு மேற்கு வங்க முதல்வர் நினைவில் வாழும் திரு.ஜோதிபாசு அவர்கள் ஆர்வத்தோடு வந்ததை நானறிவேன்.
தமிழக அரசு பாரதியார் நூற்றாண்டு விழாவை நினைவுகூர்ந்து, மகாகவி பாரதிக்குச் சிலை நிறுவ வேண்டும் என்று முற்பட்டதற்கு முதற்காரணம் மு.சீ. அவர்களே.
இராசுபிகாரி அவென்யூ தமிழ் மணக்கும் பாரதி வளாகமாகத் திகழ்ந்தது. அறிஞர் பேனா அப்புசாமி, தெ.பொ.மீ., மு.வ., ஆகிய அறிஞர் பெருமக்கள் கொல்கத்தாவிற்கு வந்தால் மு.சீ. அவர்களின் இல்லத்தில்தான் விரும்பித் தங்குவார்கள்.
மு.சீ. அவர்கள் பதிப்பு பிழம்பாகப் படிமம் கொண்டவர். தளர்ந்த நிலையில், சென்னை மாநகருக்கு வந்து தங்கியிருந்தபோது, பேராசிரியர் சீனிவாசராகவன் நூற்றாண்டு விழாவை நாடெங்கும் நடத்த வேண்டும் என்று அவர் முயன்றதையும் எழுத்துகளைத் தொகுத்ததையும் பலர் அறிவர்.
நான் ஒரு முறை நினைவில் வாழும் திரு.வெள்ளையாம்பட்டு சுந்தரத்தை அறிமுகம் செய்த நிலையில், வடமாநிலங்களின் பத்திமைக் கவிஞர்கள் திருக்கோயில்கள் பற்றி தாம் எழுதிய கட்டுரைகளின் களஞ்சியமான நூல்களைத் தந்தார்.
எவர் மறந்தாலும், சென்னையில் இருந்தவரை நாங்கள் இருவரும் உரையாடி மகிழ்ந்தோம்.
மகாகவி பாரதிக்கே தன்னை ஆட்படுத்திக்கொண்ட பல்கலை வித்தகரின் மறைவு என்னாலும் நம்முடைய உணர்வை நெகிழ வைப்பதாகும்.
—– பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்

Add a Comment