மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
=============================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
======================================
பகுதி-79
————-
மாண்புமிகு முன்னாள் அமைச்சர் டாக்டர்.கா.காளிமுத்து அவர்களின் பட்டமளிப்பு உரை தொடர்ச்சி…. (பகுதி-XIII)
———-
தத்தம் துறையில் அறிவும் ஆற்றலும் பெற்ற ஒவ்வொருவரும் தமக்குத் தாமே வேலை தேடிக் கொள்ள முடியுமா என்று காண்பதும், அது இயலாத நிலையில் பிறரைச் சேர்த்துக்கொண்டு பார்க்க இயலுமா என்பதை எண்ணுவதும், அதுவும் இயலாத நிலையில், தனியார் துறையில் வேலை கிடைக்குமா என்று பார்ப்பதும் அதுவும் இயலாத நிலையில் அரசுத் துறையில் வேலை கிடைக்குமா என்று முயல்வதும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்’ என்ற கருத்தை உங்கள் முன் படைக்கிறேன்.
யான் எனது என்னும் செருக்கு என்பார்களே அதைத் தொலைத்து யாம், எமது என்னும் கூட்டுப் பொறுப்பை எல்லோரும் சுமந்து கொண்டு உழைக்கும் திருப் பணிக்கு நீங்கள் முற்படவேண்டும். வாழ்வுப் பயணத்தின் தலை வாயிலில் முதற்படியில் அடி எடுத்துவைக்கும் பட்டதாரிகளாகிய உங்கள் பயணம் சிறக்கட்டும் கனவுகள் பலிக்கட்டும் உங்கள் அறிவுத்திறமையும், ஆற்றல் அருமையும் நாட்டு நிலையை உயர்த்த வேண்டும் மானிட சமுதாயத்தின் மகத்துவத்துக்கு மேலும் ஒளியூட்ட வேண்டும் என் இனிய நண்பர் திரு.நா.காமராசர் எழுதுவாரே, “அனைவருமே மனிதர் என்னும் சமநீதி தழைக்கட்டும் அதுவரைக்கும் ஐக்கிய நாட்டுக்கொடி அரைக் கம்பத்திலேயே பறக்கட்டும்’ என்பது போன்ற இலட்சியத்திலும், கடைசி மனிதனுக்கும் கடைத்தேற்றம் நல்கும், உள்ளத்து உணர்வுகள் ஓங்கவும், எல்லாருடைய வாழ்விலும் இன்பம் மலரவும் உங்கள் பணிகள் வெல்க என்றும், உங்கள் வாழ்வு வெற்றிப் பெருமிதத்தோடு விளங்கவேண்டும் என்றும் வாழ்த்தி அன்னையும் ஆசானும் ஆருயிரைக் காப்பானும் என்னும்படி அமைந்தீர் இப்படியே பெண்ணுலகம் ஆகும் நாள் எந்நாளோ அந்நாளே துன்பமெலாம் போகும் நாள்.

Add a Comment