POST: 2017-07-17T11:42:49+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
=============================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
======================================
பகுதி-79
————-

06.02.1978 அன்று, மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவிற்கு டாக்டர் ஔவை நடராசன் அவர்கள் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் டாக்டர்.கா.காளிமுத்து அவர்களுக்கு எழுதிக்கொடுத்த பட்டமளிப்பு உரைப் பகுதியின் தொடர்ச்சி…. (பகுதி-IV)

உடல் அமைப்புக் காரணமாக ஆடவர், மகளிர் என்ற வேறுபாடுகளைக் காட்டி, உயர்வு சிறப்பு என்ற பேதங்களைச் சொல்லி வீட்டினில் பெண்களைப் பூட்டிவைத்தவர்களும், மாதர் தம்மை இழிவு செய்த மடமைகளும் கொடுமைகளும் இப்போது புதைந்து மறைந்து விட்டன. இவர்கள் மும்தாஜுக்குத் தாஜ்மகாலையும் கட்டுவார்கள். உயிரோடு இருக்கும் அனார்கலிக்கு கல்லறைகளையும் கட்டுவார்கள் என்று சொல்லும்படி ஏட்டிலே பெண்களைத் தெய்வம் என்றும் வீட்டிலே பேய்கள் என்றும் விரட்டும் இரட்டை நாடகப் போக்கும் இருபதாம் நூற்றாண்டில் கலைந்து வருகிறது.

“அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள்” என்றும், “கல்வியில்லாத பெண்கள் களர் நிலம், அந்நிலத்தில் புல் விளைந்திடலாம் நல்ல புதல்வர்கள் விளைவதில்லை”, “படியாத பெண்ணினில் தீமை? என்ன பயன் விளைப்பாள் அந்த ஊமை”, “படியாத பெண்ணாயிருந்தால் கேலி பண்ணுவார் ஊரார் தெரிந்தால்”, “கடல் சூழ்ந்த இத்தமிழ்நாடு, பெண்கல்வி பெண்கல்வி என்கின்ற தன்போடு”, என்ற பாவேந்தரின் பாட்டு வரிகள், பழைய சமுதாயத்தின் மீது வீசிய சாட்டை வரிகளாகப் படிந்து மெல்ல மெல்ல இப்போது புதிய சமுதாயத்தை நம்முன்னே பூக்கச் செய்து வருகிறது.

ஆயிரம் நிலாவைப் போல அறிவாலயங்களிலிருந்து இன்று முதல் நீங்கள் அணிவகுத்து நடத்தப்போகும் இந்த வெற்றி உலா தமிழகத்துக்கு இணையில்லாத பெருமிதத்தை ஏற்படுத்த வேண்டும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *