POST: 2017-07-14T20:40:10+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
=============================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
======================================
பகுதி-79
————-

மாண்புமிகு முன்னாள் அமைச்சர் டாக்டர்.கா.காளிமுத்து அவர்களின் பட்டமளிப்பு உரை …. (பகுதி-I)

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பாக, என்னுடைய அறைக்கு திடுமென இனிய இளவல் மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சர் காளிமுத்து வந்து, “ஐயா, என்னை மதுரை மீனாட்சி மகளிர் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றுமாறு கல்லூரி முதல்வர் அழைத்துள்ளார்; இதுதான் என் முதல் பட்டமளிப்பு உரை, எனக்காக ஒரு சீரிய உரையை நீங்கள் தயாரித்து தர வேண்டும்” என்றார்.

உடனே, என் அலுவலக தட்டச்சர் துளசிராமனுக்கு நான் சொல்லச் சொல்ல தட்டச்சு செய்து செப்பமாக அன்று மாலையே அமைச்சர் பெருந்தகையிடம் வழங்கினோம். உள்ளாட்சித்துறை அமைச்சரின் அந்த சீரிய உரையைக் காண்க :-

அன்பார்ந்த கல்லூரி முதல்வர் அவர்களே! பேராசிரியப் பெருமக்களே! போற்றுவதற்குரிய புலமைக்கலை பொலிய விளங்கும் பட்டதாரிச் செல்வியர்களே!

இவ்வாண்டு இங்கு நடைபெறும் இக்கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பங்குபெற்று உரையாற்றும் இனிய வாய்ப்பினை – அரிய வாய்ப்பினை வழங்கிய பொறுப்பாளர்களுக்கு என் மனங்கனிந்த நன்றியையும் வணக்கத்தையும் உரியதாக்கி மகிழ்கிறேன்.

“பட்டங்கள் ஆள்வதும்,
சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்;
எட்டும் அறிவினில் ஆணுக்குப்
பெண்ணிங்கு இளைப்பில்லை காண்”

என்ற பாட்டு வரிகளுக்கு உயிர்ப்பட்டங்களாக, மாதர்கள் பேதையர்களல்லர், அவர்கள் மேதைகள் என்று மேதினிக்கு விளக்கும் வகையில் மதுரை மீனாட்சி கலைக்கல்லூரியில் விஞ்ஞானம், கலை, இலக்கியம் ஆகிய பலதுறைகளில் நீங்கள் கற்ற கல்வியையும், பெற்ற பயிற்சியையும் தாழ்ந்து கிடக்கும் நமது மக்களுக்கும், வீழ்ந்து கிடக்கும் கலை உணர்வுகளுக்கும் உற்ற வழிகளில் எல்லாம் ஊக்கமூட்டி, உதவி, உயர்த்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு ஒளிரும் சுடர்களாகத் திகழும் உங்களைப் பாராட்டுவதிலும், எதிர்காலத்தைப் புதிர்காலமாக அல்ல – உதிர்காலமாக அல்ல – ஒளிமிகுந்த கதிர்களைக் காணும் காலமாக – பொற்காலமாக மாற்றிக்கொள்ளவும், பல்வேறு துறைகளிலும் நெறிகளிலும் வளமான வாழ்க்கையை நீங்கள் வகுத்துக்கொள்ளவும், கல்வி வீட்டைக் கடந்து, சமுதாய வீதிக்குப் பணியாற்ற நீங்கள் தொடங்கும் இந்தப் புனிதமான பொன்னாளில் உங்களை வாழ்த்தவும் வரவேற்கவும் கிடைத்த வாய்ப்பாகவே இதனைக் கருதுகிறேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *