POST: 2017-06-06T11:05:14+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
=============================================

பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை

=================================================

பகுதி-52
————-

நான் மொழிபெயர்ப்புத்துறையில் இருந்தபோது, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட, நூற்றுக்கணக்கான ரகசிய அறிக்கைகளைத் தமிழாகத் தருவார்கள். புரட்சித்தலைவர் எந்த அளவிற்கு, நுணுக்கமாகச் செயல்படுவார் என்பதற்கு, அது ஒரு சான்று. திருச்செந்தூர் கோவிலில் ஒரு கொலை நடந்தது பற்றி, உங்களுக்குத் தெரியும். அது பற்றி விசாரிப்பதற்கு, நீதிபதி பால் தலைமையில், ஒரு கமிஷன் நியமிக்கப்பட்டது. நீதிபதி பால் கமிஷன் என்று, அதற்குப் பெயர். பால் கமிஷனின் முடிவு எழுதித் தரப்பட்ட ஒரு வாரத்திலேயே, மொழிபெயர்ப்புத்துறைக்கு வந்துவிட்டது. அந்த நேரத்தில், அது ஒரு பரபரப்பான சம்பவம் பற்றிய அறிக்கை.
உடனடியாக, அதனைத் தமிழில் மொழிபெயர்த்தோம். மொத்தமாக, மூன்று படிகள் இருக்கும். ஒரு படி முதலமைச்சரிடத் திலும், இன்னொரு படி தலைமைச் செயலாளரிடத்திலும் இருக்கும். மூன்றாவது படி, மொழி பெயர்ப்புத்துறை இயக்குனரிடத்தில் இருக்கும்.

மொழியாக்கம் செய்யப்பட்ட அரசின் இரகசிய அறிக்கையானது, சட்டமன்றத்தில் வெளியிடுவதற்கு முன்பே, செய்தித்தாளில் வெளியானது.
எப்படியும் மொழிபெயர்ப்புத்துறையைத் தவிர, வேறு எங்கிருந்தும் அறிக்கை வெளியாவதற்கு வழியில்லை. காவல் துறையினர் இந்த அறிக்கையின் தாங்களே பெற்றுதான் அந்த ஆங்கிலத்தை மொழிபெயர்த்திருப்பார்களோ என்று ஐயுற்றார்கள்.

என் மனத்தில் ஒரு குறையுமில்லாததால், செய்தித்தாளில் வெளியான இந்த மொழிபெயர்ப்பு எங்களுடையதுதான் என்று சொன்னேன். எங்கள் அலுவலகத்தில், துணை இயக்குநர், உதவி இயக்குநர், மொழிபெயர்ப்பு அலுவலர் என்று மூவரிடத்திலும் இந்த அறிக்கை மொழியாக்கம் செய்வதற்காக பகிர்ந்தளிக்கப்பட்டது. எனினும், ஊரார் பழி சொல்வதற்கு என் பெயரை பயன்படுத்தினர். ஆனால், “ஔவையைப் பற்றி எனக்குத் தெரியும். இது எங்கிருந்து எப்படி போனது என்பது எங்களுக்குத் தெரியும்” என்று சொல்லி அதன் மேல் உரிய நடவடிக்கை எடுத்த பெருந்தன்மை எம்.ஜி.ஆர்.-ன் உறுதியான நம்பிக்கையை காட்டியது.
என் உள்ளம் உருகி நெகிழ்ந்தது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *