POST: 2017-04-03T12:55:32+05:30

எம்.ஜி.ஆர். – ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரி

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா

11 ஜனவரி 2017

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை
==========
பகுதி-6
———

நான் தொடக்கத்திலேயே சொல்லியிருக்கிறேன். சென்னைக்கு வந்து ஐந்தாறு ஆண்டுகள் கழித்து, அரசுத்துறையில் நான் பணியாற்றத் தொடங்கினேன். அது 1977 என்று எண்ணுகிறேன். மொழிபெயர்ப்புத்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டு, புரட்சித்தலைவர் ஆட்சிக்கு வந்து விட்டார். அவர் ஆட்சிக்கு வந்த பிறகு, அலுவலர்கள் எல்லாக அவரைப் பார்த்து வணங்குகிற ஒரு வழக்கம் இருந்தது.

அந்த வகையில், நானும் ஆர்வத்தோடு போனேன். அந்த ஆர்வத்திற்கு ஒரு காரணம் இருந்தது. ஏனென்றால், பச்சையப்பன் கல்லூரியில் ஆனர்ஸ் படித்து கொண்டிருந்த காலத்தில் இருந்தே புரட்சித்தலைவரை எனக்கு நன்றாகத் தெரியும். கல்லூரியில் மாணவர் தலைவனாக இருந்தபோது மன்ற விழாக்களில் கலந்து கொள்ளச் செய்வதற்காக, எம்ஜிஆர் அவர்களைச் சந்திக்கப் போவோம். அவரும் எங்களோடும் அமர்ந்துகொண்டு, மகிழ்ச்சியாகப் பேசுவார்.

அந்தச் சமயத்தில் என்னுடன் படித்த நண்பர் ஒருவருக்கு, கல்லூரிச் சம்பளம் கட்ட முடியாமல் போய் விட்டது. “அண்ணா நீங்கள் தான் உதவ வேண்டும்” என்று என்னிடம் வேண்டினார். உடனே எம்ஜிஆருக்குக் கடிதம் எழுதினேன். ஐந்து நாட்களுக்குள் எம்ஜிஆர் அலுவலகத்தில் இருந்து ஒருவர் வந்து, அந்த நண்பரின் கல்லூரி மற்றும் விடுதிச் சம்பளத்தைக் கட்டி விட்டு, அந்த ரசீதுகளை வாங்கிப் போனார். அப்போது அந்த நபர் என்னைச் சந்தித்து, “நீங்கள்தானே அவ்வை நடராஜன்’ என்று கேட்டார். ஆமாம் என்றேன். “நீங்கள் எழுதிய கடிதத்தைப் பார்த்த பின்புதான், அண்ணன் இந்த உதவியைச் செய்தார். உங்களை ரொம்பவும் விசாரித்ததாகச் சொன்னார்’ என்றபோது, நான் நெகிழ்ந்து போனேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *