POST: 2016-05-31T11:12:56+05:30

புகழ் பூத்த தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்கள், அண்மையில் முத்து விழா கண்டுள்ளார். 80 வயது நிறைந்து, 81ஆம் ஆண்டில் நுழைந்துள்ளார். கனிந்த வயதில், நிறைந்த வாழ்வில், செறிந்த அனுபவங்கள் கொண்ட அவருடன் அண்ணாகண்ணன், 2016 மே 2ஆம் நாள் நிகழ்த்திய தொலைபேசி உரையாடல்.
————————————–
ஔவை 81 – முத்து விழா
————————————–
பகுதி-8

இராமலிங்கர் பணி மன்றத்தின் நிகழ்ச்சிகளெல்லாம், ஏ.வி.எம். திருமண மண்டபத்தில்தான் நடைபெறும். அந்த இனிய மண்டபத்தில் நிகழ்ச்சிகள் நடைபெறும்போது, தமிழ் நாட்டுச் சான்றோர்கள் அனைவரையும் அந்த நிகழ்ச்சிக்கு அழைப்பது வழக்கம். அப்படி அழைத்த வகையிலேதான் பேரறிஞர் அண்ணா வந்திருக்கிறார்கள். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வந்தபோதுதான், நான் அவருக்கு ஒரு வரவேற்புரை ஆற்றினேன். வரவேற்புரை ஆற்றும்போது அவர் சொன்னார், “ஔவை நடராசனை நான் மாணவனாக இருக்கும்போதே அறிவேன். அவரைப் போன்றவர்கள் எனக்குத் துணையாக ஆலோசிக்க வருவார்களானால், அது மிகப் பெரிய ஊக்கத்தை தரும்” என்று சொன்னது ஒரு பெரிய ஆரவாரத்தை கூட்டத்திற்கு வழங்கியது.

அருட்செல்வரின் மனம் முழுமையாக இசைந்தது என்று நான் சொல்ல மாட்டேன். அதற்காக கசந்தது என்றும் நான் சொல்ல மாட்டேன். அவர் “சரி, ஆலோசிக்க உங்களை அழைக்கிறபோது நீங்கள் சென்று வாருங்கள்” என்று சொன்னார்.

நான் அந்த நிலையிலேதான் செய்தித்துறைக்கு துணை இயக்குநராகவும், பிறகு சில திங்களில் மொழிபெயர்ப்புத் துறையின் இயக்குநராகவும் பணியாற்றினேன். மொழிபெயர்ப்புத்துறையின் இயக்குநராக நான் பணியாற்றியதால், என்ற புதுமை என்று சொன்னால், அரசின் சார்பாக வருகின்ற பெருமக்களையெல்லாம், சான்றாக திரு.ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்கள் வந்தபோதும், இந்திய நாட்டின் தலைமை அமைச்சர்கள் வந்தபோதும், அவர்கள் பேசிய உரைகளுக்கெல்லாம் நான் தமிழ் மொழியில் மொழியாக்கம் செய்வது, உரைபெயர்ப்பு செய்வது என்கிற பொறுப்பும் எனக்கு அமைந்தது, எனக்கு பெரிய இன்பமாக இருக்கிறது இப்போது நினைத்துப் பார்த்தாலும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *