POST: 2016-03-12T13:18:43+05:30

ஸ்ரீராம் நிறுவனம் பாரதி இலக்கிய விழா – 6.2.2016
முனைவர் ஔவை நடராசன் அவர்களின் வரவேற்புரை- 1-11

ஆண்டுதோறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டி நடத்தி, அதில் பரிசு வழங்கி, கணக்கெடுத்துப் பார்த்தால் ஒரு மூன்று இலட்சம் மாணவர்கள் பாரதி பாடலை இப்போது அறிந்திருக்கிறார்கள். இது பாரதி கலை இலக்கியக் கழகம் ஆற்றிய ஒரு பெரும் பணி.
இன்றுதான் பாரதியாருக்கு பிறந்தநாள் என்று இல்லை. நாளும் பாரதியார் பிறந்தநாள்தான். பாரதி உணர்வுள்ளவர்களுக்கு ஒவ்வொரு கணமும் பிறந்தநாள்தான். அந்த வகையில் மழைதான் நாம் விரும்பிக் கேட்டோமே தவிர, வெள்ளத்தை யாரும் விரும்பிக் கேட்கவில்லை. ஆனால், வெள்ளம் புரண்டு வந்ததால், மாணவர்களையெல்லாம் ஒன்றாகத் திரட்டி போட்டி நடத்த முடியாமல் இந்த ஆண்டு சோர்ந்துவிட்டோம். இந்த சோர்வுக்கெல்லாம், ஒரு பெரிய மிகப்பெரிய சோர்வைத் தந்த நிகழ்வை நான் சொல்ல வேண்டும். 25 ஆண்டுகளுக்கு மேலாக எல்லா உழைப்பையும் தன்னுடைய தோளில் ஏற்றிக்கொண்டு போட்டிகளை நடத்துவதற்கும், விழாவை நடத்துவதற்கும் தன்னை ஆட்படுத்திக் கொண்டவர், அமுதசுரபியின் ஆசிரியராக பல்லாண்டுகள் இருந்ததோடு, இலக்கிய பீடத்தின் ஆசிரியராகவும், எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் இருந்த கண்ணெதிரிலேயே எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த மாபெரும் எழுத்தாளர் திலகம் விக்ரமன் அவர்கள் நம்முடைய கண்கள் இப்போது தேடினாலும், காணமுடியாமல் தற்போது மறைந்துவிட்டால் என்பது பெரும் துன்பம் தருவது என்றாலும் அவரது நினைவெல்லாம் இந்த விழாவிலேதான் இருக்கும். எனவே, விக்ரமன் அவர்கள் தொடர்ந்த பணியை பாரதி இலக்கியக் கழகம் தொடர்ந்து நடத்தும்.

பெருமக்களே வழக்கம்போல ஸ்ரீராம் நிறுவனங்கள் பெரிய தொழில் நிறுவனங்களாக திகழ்ந்தபோதும்கூட கலை இலக்கியங்களை வளர்ப்பதில் ஒரு தனி ஆர்வம் காட்டுகிற முயற்சியில் பாரதி விருதுகளை வழங்குவதும், திருவள்ளுவர் விருது வழங்குவதுமாக ஓர் அரும்பணியாற்றுகிறது. அந்த வகையிலேதான் இந்த பணியும் நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு தலைமை தாங்க வந்திருக்கும் நீதியரசர், நம்முடைய மனத்தைக் கொள்ளை கொள்வது மட்டுமில்லை நம்முடைய கண்களையும் கவர்கின்ற இளைஞராக அமர்ந்திருப்பது ஒரு பெரும் மகிழ்ச்சியாகும். அருமை நீதியரசர் சுந்தரேஷ் அவர்கள் உடம்பில் ஊர்கின்ற ஒவ்வொரு உதிரத்துளியும் நீதியும், நேர்மையும், வழக்காடுகின்ற வன்மையும் ஒவ்வோர் துளியுலுமே பளிச்சிடுகின்றது என்பதை இந்த நாடு நன்றாக அறியும்.
நீதியரசர் சுந்தரேஷ் அவர்கள் இந்த விழாவிற்கு நாங்கள் அழைத்தபோது மிக மகிழ்ந்து இசைந்தார்கள். அவ்வாறு இசைந்ததற்கு ஒரு காரணமும் சொன்னார். பாரதி இலக்கியக் கழகம் நடத்திய போட்டியில் பங்கு கொண்டு இன்று நாடறிந்த பேச்சாளர்கள், வழக்கறிஞர்கள் மிகப் பெரிய நிலையை விளக்குவது போல நீதியரசர் இராம சுப்பிரமணியம் கூட மாணவராக இருந்த போது இவ்விழாவில் பங்கு கொண்டவர் தான்.
நீதியரசர் அவர்கள் எனக்கு இன்று காலையிலே சொன்னார்கள். இந்த விழா நடைபெறுவதில் நானும் பங்கு கொள்வேன் என்று.
எனக்கு பெரிய மகிழ்ச்சி தருவது, என்னை விட இளையவராக இருக்கும் திரு.சுந்தரேஷ் அவர்கள் பங்கு கொள்வது தான். எனவே, நீதியரசரை நான் மகிழ்சியோடு வரவேற்கிறேன்.
பொதுமக்களே பாரதி விருது வழங்குவது என்பதை ஒரு சீரிய பணியாக பாரதி கலை இலக்கியக் கழகம் நடத்துகிறது.
உண்மையிலேயே ஒரு நெகிழ்ச்சியை சொல்வதென்றால், ஸ்ரீராம் நிறுவனங்களின் தலைவர் திரு.தியாகராஜன் அவர்கள் ஒரு மாபெரும் விருதை பாரதியாரின் பெயரில் வழங்க வேண்டும் என்ற பேரவாவில் இருக்கிறார். அவருக்கு தொழில் நிறுவனங்களை நடத்துகிறவர்களெல்லாம் அறப்பணிகளில் ஆரவாரமில்லாமல் பங்கு பெற வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர். அந்த வகையிலேயே இன்று வழங்குகின்ற விருதும், பாராட்டும்கூட எளியவகையில்தான் என்றாலும் கூட பாரதி பணிக்காக தன்னை ஆட்படுத்திக் கொள்கிறவர்களுக்கு ஸ்ரீராம் என்ற நேரத்திலும் கைகொடுக்கும் துணை நிற்கும் என்று நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

பெருமக்களே, நம்முடைய உள்ளத்தைக் கவர்ந்த்து மட்டுமில்லாமல் அரசியல் சிகரத்தில் இருந்தாலும், இலக்கியத்திற்கு தன்னை ஆட்படுத்திக் கொண்டு கட்சியை மறந்து, நட்பிற்காக இந்த உலகம் முழுவதையும் தன்பால் அரவணைத்துக் கொள்கிற பொற்றாமரை இயக்கத்தின் தலைவர் இல.கணேசன் அவர்கள். அவருக்கு பகை என்று யாருமே இல்லை. அவருக்கு உறவு இந்த உலகம் முழுவதும் உறவு. அவர் செல்லுமிடமெல்லாம் பாரதி புகழையும், பாரதத்தின் பெருமையையும் பாராட்டிச் சொல்வார்கள். ஒரு நிகழ்ச்சியை நான் நினைத்துப் பார்க்கிறேன். அருமை நண்பர் கணேசன் அவர்கள், நட்பை எவ்வளவு உயர்வாகச் சொல்வார் என்பதற்கு ஒரு சான்று சொல்வதென்றால், உங்களுக்குள் பூசல் இருந்தால், அதை நான் நண்பன் என்ற முறையில் சென்று போக்கிக்கொள்ள முடியும் என்பதை நினைத்து நான் நெகிழ்ச்சியடைகிறேன். ஒரு தொடர் ஒன்று உண்டு. ஒரு நிகழ்ச்சி நடந்தபோது, நீங்கள் எங்கள் அன்புக்குரியவர் என்றாலும்கூட உங்களைத் தாண்டித்தான் எங்களின் நெகிழ்ச்சி உண்டு என்று வாழ்க்கையில் எல்லோரும் பாராட்டி புகழ்கிறவர் என்ற பெருமை இல.கணேசன் அவர்களைச் சாரும். அவர்களுக்கு விருது வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். பாரதியார் விழாக்கள் எங்கே நடந்தபோதும், எப்போது நடந்தபோதும், எவர் அழைத்தபோதும் முதலில் பங்கு கொள்கிறவர், பொற்றாமரையை போற்றி வளர்ப்பதை தம் கடமையாகக் கொண்டிருப்பவர் என்ற வகையில் இல.கணேசன் அவர்களை நாங்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.
பாரதியார் பெயரைச் சொல்கின்றபோதே, கடந்த நாற்பது ஆண்டுகளாக தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், 1981ல் பாரதியார் நூற்றாண்டு விழாவுக்காக அப்போது அரசு ரூபாய் 3 இலட்சத்தை வழங்கி, பாரதி பாடல்களின் ஒரு பதிப்பை வெளியிட வேண்டும் என்று விரும்பினார்கள். திருத்தமான பதிப்பை தேடித் தேடி, ஓடி ஓடி, பாரதி அன்பர்களை நாடி நாடி ஒரு மாபெரும் பதிப்பை கொண்டு வருவதற்கு முயன்ற அந்த உழைப்புச் செம்மல், பாரதிக்கு தம்மை ஆட்படுத்திக்கொண்ட பெருந்தகை நண்பர் சீனி.விசுவநாதன்.
நாம் இரா.பத்மநாபன் அவர்களை நினைக்கிறோம். பரளி நெல்லையப்பரை நினைக்கிறோம். ஆனால், நம் கண் முன்னால் பாரதிக்கு தன்னை ஆட்படுத்திக்கொண்டு பாரதியின் கவிதைகளை தொகுதிகளாக அவர் வெளியிட்ட பெருமையை எண்ணிப்பார்த்தால், நான் ஒருமுறை சொன்னேன், உலக கவிக்கு வாய்த்த ஊ.வே.சா போல நீங்கள் பணியாற்றுகிறீர்கள். சீனி.விசுவநாதன் பெயரைச் சொன்னாலேயே போதும், அவர் பாரதியினுடைய ஒரு பெறாத மகனாக இருந்து அந்த பதிப்புகளை வெளியிட்டதைக் கண்டால் நம்முடைய மனம் உருகும், அவருக்கு விருது தருவதற்கு இவ்வளவு நாளாயிற்றா என்று நீங்கள் முணுமுணுப்பது என் காதில் விழுகிறது. இப்போதுதான் அவர்கள் பாடி முடித்திருக்கிறார்கள். நல்ல காலம் வருகிறது என்று.
சோபனா ரமேஷ் அவர்கள், ஓர் ஆடலரசு மட்டுமில்லை. பாரதியார் பாடல்களுக்கு தன்னை ஆட்படுத்திக்கொண்டு பாரதி பாடல்களுக்கு இசையமைத்ததுபோல, அதற்குரிய வகையில், ஆடல்கலைக்கு பொருந்திய பாடல்களை ஒரு நூறு பாடல்களுக்கு மேல் தேர்ந்தெடுத்து, உலகம் முழுவதும் சுற்றி வந்து பாரதி பாடல்களை ஒரு ஆடல் நிகழ்ச்சியாக பல நிகழ்ச்சிகளை நடத்திக்காட்டி, தன்னை ஆட்படுத்திக் கொண்டவர் சோபனா ரமேஷ் அவர்கள். சோபனா அவர்களுக்கு இன்னொரு பெருமையும் சொல்ல வேண்டும். அவருடைய தேசிய மனத்தைச் சொல்வதா ? அவருடைய புகழ் வாய்ந்த தந்தை, பல்லாண்டுகளுக்கு முன்னால், ஆட்சிப் பணியில் ஒரு சிகரமாகத் திகழ்ந்து ஓய்வு பெற்ற வேதநாராணயன் அவர்கள் இங்கே அமர்ந்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லை, சோபனா அவர்கள் தென்னாப்பிரிக்காவில், ஆஸ்திரேலியாவில் பல நாடுகளுக்குச் சென்று பாரதியாருக்கு, இந்த ஆடலுக்கு அழகு சேர்த்ததை நான் எண்ணிப் பார்த்து பெருமையடைகிறேன். அவருக்கு நாங்கள் இப்போது விருது வழங்குகிறோம்.

இந்த மூன்று பேருக்கும் விருது வழங்குவதை போற்றி இந்த நாளில் நம்முடைய நெஞ்சத்தை நெகிழவைக்கிற பேச்சாளர் என்று சொன்னால், இன்று நாடுமுழுவதும் அறிந்த நாகர்கோவில் பேராசிரியர் ராஜாராமைச் சொல்ல வேண்டும். அவர் எனக்கு பல்லாண்டுகளாகத் தெரிந்தவர். கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர். பட்டி மன்றங்களிலும், கருத்தரங்கங்களிலும், அவருடைய மனம் நாட்டுப் பற்றில் பதிந்த்து என்பதால், அவர் பேசும்போது நம்முடைய கண்களில் நீர் துளிர்ப்பதைப்போல நாட்டு உணர்வை எடுத்துப் பேசுகின்ற பேராசிரியர் ராஜாராம் அவர்கள் உரையாற்ற இருக்கிறார்கள்.

நீதியரசர் அவர்களே, தமிழில் ஒரு பழைய நிகழ்ச்சி உண்டு. கரிகால் வளவன் இளம் வயதிலேயே ஆட்சியில் அமர்ந்தவன். அந்த நீதி வழங்கப் போகிறார் என்று சொன்னவுடனே, இவ்வளவு இளம் வயதில் அவர் எப்படி நீதி வழங்குவார் என்று கேட்டார்கள். கரிகால் வளவன் போய், நரை முடியை தன்னுடைய தலையிலே அணிந்துக்கொண்டு வந்து இப்போது நான் நீதி வழங்குகிறேன், ஏற்றுக் கொள்கிறீர்களா என்று கேட்டார். ஆனால், நரையில்லாமலேயே, திறமை ஒன்றுக்காகவே, பெருமையைப் பெற்றிருக்கிறவர் அருமை நீதியரசர் சுந்தரேஷ் அவர்கள். அவர்கள் இன்னும் பல்லாண்டுகாலம் இந்த துறையிலே இருந்து புதுடில்லியினுடைய உச்ச நீதிமன்றத்திற்கு தலைமை தாங்குகின்ற அளவுக்கு அவருக்கு காலம் காத்திருக்கிறது என்பதை நான் மகிழ்ச்சியோடு சொல்ல விழைகிறேன்.

பொதுவாகவே, கவியரசர்கள், கவிதை எழுதுவார்கள். அதுவே வாழ்க்கியினுடைய ஒரு பொழுதாக முடியும். கவிதை எழுதுவது ஒரு கடமை. ஆனால், நாட்டுக்கு உழைப்பதுதான் என்னுடைய சிந்தனை. நாட்டு மக்களுக்கு நாட்டுப் பற்றை உருவாக்குவது மட்டுமல்ல. மொழிப்பற்றை உருவாக்குவது மட்டுமில்லை. அவர்களுக்கு இனப்பற்றும், எழுச்சிப் பற்றும், செயற்பற்றும் ஊட்ட வேண்டும் என்பதற்காக செயல் செயல் என்று சிந்தித்த ஒரு மாபெரும் கவியரசர் பாரதி. நமக்குத் தொழில் கவிதை. அதோடு பலபேர் நின்றுவிட்டார்கள். நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்ற மூன்று இலக்கணங்களையும் ஒன்றாகக் காட்டிய வகையில், நாம் கவிஞர்கள் பலரை அப்படி காண முடிவதில்லை.

பைரன் சட்ட மன்றத்திற்கு நின்றார் என்று ஒரு கருத்து உண்டு இங்கிலாந்து நாட்டில். பாரதியார் தேர்தலில் நிற்கவில்லையே தவிர, நாட்டை ஆளுகிற ஒரு பொறுப்புடையவரைப்போல பாட்டுத் திறத்தால் இந்த வையத்தை பாவித்திட வேண்டும் என்று ஒரு மாமன்னராகத் திகழ்ந்ததையும் நாம் எண்ணிப் பார்த்து மகிழ்கிறோம்.

இனிமையாக நிகழ்ச்சியை தொடங்க வேண்டும் என்பதற்காக, சென்னை முதியோர்களாக தோற்றமளித்தாலும், அவர்களின் பாடல்களில் இளமை ததும்புகிறது என்பதற்காக இளையோர் குழுவினர் சேர்ந்திசை பாடி நம்முடைய மனத்தையெல்லாம் உருக்கியிருக்கிறார்கள். அவர்கள் நல்ல காலம் வருது என்று கூறியதின்படி நல்ல காலம் வருது என்பதின் தொடக்கமாக நம்முடைய விழாவும் அமைகிறது என்று சொல்லி, உங்களையெல்லாம் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். இன்று நேற்றல்ல, முப்பதாண்டுகளாக நான் வரவேற்றபடிதான் இருக்கிறேன். காரணம் வரவேற்பதில் அவ்வளவு பெரிய மகிழ்ச்சியடைகிறோம். காரணம் நல்லவர்கள் வருக. நயமுடையவர்கள் வருக. பாரதி அன்பர்கள் வருக. இலக்கிய ஆர்வலர்கள் வருக. தமிழ் மக்கள் திரண்டு வருக. என்று அழைக்கின்ற வகையிலே உங்களுக்கெல்லாம் நல்வரவு கூறி, நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.

இந்த அமைப்பை அருமை நண்பர் சுந்தரேசன் அவர்கள் அதற்கு தலைவராகவும் இந்த அமைப்பில் பங்கு கொண்டவர். அறிஞர் பலபேர் வாழ்த்துரை அனுப்பியிருக்கிறார்கள். பல நிறுவனங்கள் வாழ்த்துரை அனுப்பியிருக்கிறார்கள். அருட்செல்வர் மகாலிங்கம் அவர்களுடைய மகன் பொறுப்பேற்றிருக்கிற சக்தி நிறுவனங்கள் சார்பில், அவர் வாழ்த்துரை அனுப்பியிருக்கிறார். திருவாரூரில், சீப் மேஜிஸ்டிரேட் என்ற பொறுப்பில் இருக்கும், நண்பர் சத்தியமூர்த்தி அவர்கள் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். “அருமை அவ்வை அவர்களுக்கு, நான் இப்போது ஒரு பதவியில் இருக்கலாம். உங்களுக்கு நினைவிருக்காது. 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் பாரதி விழாவில் பங்கேற்ற மாணவன் என்று அந்த சான்றிதழை அனுப்பியிருக்கிறார். இவையெல்லாம் எனக்கு பெரிய பெருமிதத்தையும், மகிழ்ச்சியையும் தருவதாகும் என்று சொல்லி, உங்களை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். விழா தொடங்குகிறது. இப்போது விருதுகள் வழங்குவதில் கூட, பாரதி மாமணி என்று திரு.இல.கணேசன் அவர்களுக்கும், பாரதி களஞ்சியம் என்று, களஞ்சியம் என்றால் பாரத மாமணி என்றால், பாரதத்தின் பற்றில் மாமணியாகவும், வாழ்க்கை முழுவதும் பாரதத்தின் வளர்ச்சியையே நினைக்கின்றவராகவும் திகழ்கின்ற வகையில், எங்களின் மாமணி என்று எப்போதும் அழைக்கப்படுவதற்கு உரிமையுடையவர். உ.வே.சா.விற்கு ஒரு பட்டம் உண்டு. தட்சிலார்த்த கலாநிதி என்பதாகும். தென்கலைச் செல்வர் என்று தமிழில் சொல்ல்லாம். அதுபோலதான் பாரதி களஞ்சியம் என்ற ஒரு விருதை வழங்குகிறோம் சீனி.விசுவநாதன் அவர்களுக்கு. அவர் எங்கே நடந்தாலும் பாரதி களஞ்சியம் நடக்கிறது என்று சொல்ல வேண்டும் என்பதற்காக இந்த விருதை தருகிறோம். பாரதி கலைச்சுடராக திகழ்கின்ற சோபனா ரமேஷ் அவர்களையும் வாழ்த்துகிறோம் என்று சொல்லி, பால சாண்டில்யன் இளமைக்கு இளமையும், வளமைக்கு வளமையும் தொழில் துறையில் நல்ல பொறுப்பில் திகழ்கிறவர் பால சாண்டில்யன் எழுத்தும் நாடறிந்தது, கருத்தும் நாடறிந்தது. அவர் இந்த நிகழ்ச்சியை நடத்து இருக்கிறார். நண்பர் சுந்தரேசன் அவர்கள் ஸ்ரீராம் நிறுவனத்தினுடைய ஒரு பெரிய பொறுப்பில் இருக்கிறார். பொறுப்பில் இருந்தபோதும் கூட பாரதி விழா என்பதற்காக ஒரு கணம் கூட விடாமல் சுற்றிச் சுழன்று வருகின்ற ஒரு பம்பரம்போல் அவர் பணியாற்றுவதைக் கண்டு எனக்கே நான் தளர்ந்து போய்விட்டேனோ என்று நான் நினைத்தபோது அவர் தந்த எழுச்சியையையும் நன்றியோடு போற்றுகிறேன் என்று சொல்லி, அனைவரையும் வருக என்று வரவேற்கிறேன். மகிழ்ச்சி.

—————-

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *