ஸ்ரீராம் நிறுவனங்கள் நடத்தும் மகாகவி பாரதியார் 124-வது பிறந்தநாள் விழா
நாள் 05.02.2006
வரவேற்புரை முனைவர் ஔவை நடராசன்(1-9)
இன்றைய விழாவிற்கு பொலிவூட்ட வந்திருக்கும் பெருமக்களாகிய பெருந்தகை சேசாயி அவர்களே, இயக்குநர் சிகரம் என்றும் திரை உலகத்தின் தேயாத ஒரே முழு நிலவு என்று பாராட்டப்படுகின்ற டாக்டர்.பாலச்சந்தர் அவர்களே, பாராட்டுப் பெறுவதற்காக வருகை புரிந்திருக்கும் பாரதி அன்பர்களே மூவர் வந்திருக்கிறார்கள். பாரதி சீனிவாசன் அவர்கள் தன்னுடைய வாழ்வெல்லாம் பாரதியின் பாடல்களைப் பரப்புவதிலும், அந்த நெறிகளை உலகுக்கு எடுத்துரைப்பதிலும், பழுத்த எழுத்தாளராக திகழ்கிற பாரதி சீனிவாசன் வந்திருக்கிறார்.
இளமைக்கு இளமையோடு சாதனா இராதாகிருஷ்ணன் அவர்கள் கோவையிலிருந்து சென்ற ஆண்டு ஸ்ரீராம் நிறுவனங்கள் வெளியிட்ட பாரதி அமுதத்தில் பாரதியார் எழுதிய பாப்பா பாட்டு பற்றி ஓர் ஆழ்ந்த கட்டுரை எழுதிய சாதனா இராதாகிருஷ்ணன் அவர்களும் விருது பெற வந்திருக்கிறார்கள். நான் ஒரு இரண்டு திங்களுக்கு முன்னால் லண்டன் மாநகரம் சென்றபோது எனக்கு லண்டனில் உள்ள ஒருவர் ஒரு புத்தகத்தைக் கையில் கொடுத்தார்.இதைப் பாருங்கள் என்று.அந்தப் புத்தகம் வந்து ஒரு ஐந்து ஆண்டுகள் இருக்கும்.அப்போதுதான் அந்த நூலை நான் புரட்டிப் பார்த்தேன்.பாரதியாரின் குயில் பாட்டின் தத்துவ மர்மம் என்பதாகும் அந்த நூல். எனக்கு ரொம்ப வியப்பாக இருந்தது. பாரதியாரின் குயில் பாட்டின் தத்துவ மர்மம் என்று ஒரு நூலாக எழுதி வெளியிட்ட கவிஞர் கருணாநந்த ராஜா அவர்கள் லண்டன் மாநகரத்திலிருந்து இங்கு வந்திருக்கிறார்கள்.
ஆக ஸ்ரீராம் நிறுவனங்கள் பாரதியாரின் புகழ் பரப்பும் பெருமக்களை எப்படியெல்லாம் தேடி அழைத்து வந்து சிறப்புச் செய்கிறார்கள் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் அதை குறிப்பிட விரும்புகிறேன்.
ஸ்ரீராம் நிறுவனங்கள் வணிகத்தை முதன்மையாகக் கொண்ட நிறுவனம்தான்.ஆனால் வாழ்வியலில், பண்பாட்டில் மக்களின் நடைமுறை வாழ்க்கைக்கு பல வகையில் பெயர் சொல்லாமல் பணியாற்றுவது என்ற வழக்கத்தை பல்லாண்டுகளாக நடத்தி வருகின்ற ஒரு மாபெரும் நிறுவனமாகும்.
நேற்றைய இந்து நாளிதழை நீங்கள் பார்த்தால் தெரிந்திருக்கும். I for industry, I for inspiration, I for integration என்று எழுதியிருக்கிறார்கள்.வணிகம் என்பது பொருளாதாரத்தை மட்டும் பொருளாகக் கொண்டதில்லை.வாழ்க்கைக்கு ஆதாரமாக பொருள் மட்டுமில்லை.இலக்கியம் பண்பாடு, கலை, மொழி என்பவற்றையெல்லாம் உணர்ந்து நடந்துக்கொள்கிற நிறுவனங்கள் என்பதைப் பார்த்தால் தமிழகத்தில் விரல் விட்டு எண்ணிவிடலாம்.அப்படி நிரம்பி வழிகின்ற நிறுவனங்களில் ஒப்பற்ற பணி செய்யும் நிறுவனமாக ஸ்ரீராம் நிறுவனம் உள்ளது என்பதற்கு இங்கு நிரம்பி வழியும் கூட்டமே சான்றாகும்.
பெருமக்களே
இன்றைய விழாவிற்குவழகை தந்துள்ள தலைவரைப் பற்றி நான் சொல்ல வேண்டும். சேசசாயி அவர்கள் தன் தந்தையின் புகழால், தாயின் புகழால் தனக்கென அமைந்த தனிப் புகழால் மூன்று மடங்கு புகழ் வாய்ந்தவர் சேச சாயி அவர்கள். அவருடைய அன்னையார் எழுத்துலகத்திற்கு நன்றாகத் தெரிந்த திருமதி.வசுமதி ராமசாமி அவர்கள்.வசுமதி ராமசாமி அவர்கள் எழுதியுள்ள கதைகளை, கட்டுரைகளை ஏராளம்பேர் படித்திருப்பார்கள்
.ஒருவர் படித்து, வசுமதி அவர்கள் நீங்கள் தொடர்ந்து வேதியல் கடிதங்கள் என்பதை எழுதினால் இந்த நாட்டு இளம் பெண்களும், தாய்மார்களும் பயன்பெறுவார்கள் என்பதை சொன்னவர் ராஜாஜி.அப்படிப்பட்ட புகழ் வாய்ந்தவர் வசுமதி ராமசாமி அவர்கள்.தந்தை வழக்கறிஞர் துறையில் மாபெரும் புகழ் வாய்ந்தவர். இப்படிப்பட்ட தந்தை தாயின் புகழைச் சுமந்துக்கொண்டு நண்பர் சேசசாயி அவர்கள் தன்னுடைய நிர்வாகத் திறமையால், தன்னுடைய ஆற்றலினால் இன்று மாபெரும் நிறுவனமான அசோக் லேலேண்ட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக திகழ்கிறார் என்பது இந்திய நாட்டின் இளைஞர்களின் சாதனையாளர் என்பது நண்பர் சேசசாயி அவர்களுக்கு பொருந்தும்.அவர் இந்த விழாவிற்கு வந்திருப்பது நமக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.
இந்த விழாவைத் தொடங்கும்போதே எவ்வளவு மகிழ்ச்சியோடு நாம் தொடங்குகிறோம் என்று சொன்னால், ஒரு தலைமுறைதான் சிறப்பாக இருக்கும்.ஆனால், கலைமுறை என்ற வகையில் மூன்று தலைமுறை சிறப்பாக இருக்கும் என்பதை இசை உலகின் முடிசூடா வேந்தர் லால்குடி அவர்கள் இங்கு வந்திருக்கிறார்.அவருடைய திருமகளார் இங்கு உருக்கமாக பாடிய பாடலை நாம் கேட்டு லயித்திருக்கிறோம்.இதில் என்ன பொருத்தமென்றால் அருமை பெருந்தகை சேசசாயி அவர்கள் உரையாற்ற அழைத்தது மட்டும் இல்லை.அப்படி உரையாற்றவில்லை என்றால் அவரைப் பாடிச் சொன்னால் அவரைப்போல இசையோடு பாடுபவர் எவருமில்லை.எனவே, பாடவும் தெரிந்து, நிர்வாகத் திறமையும் உள்ளவர் என்பது எளிதல்ல.
நீங்கள் படித்திருக்கலாம், ஐன்ஸ்டீனுக்கு சோர்வு வருகிறபோதெல்லாம் வயலினைக் கையில் எடுத்துக்கொண்டு வாசிக்கக் கற்றுக்கொண்டு வாசிப்பதாலேதான் தனக்கு ஊக்கமே வந்தது என்று சொல்வார்கள். அது வேண்டுமென்றால் ஐன்ஸ்டீனுக்குப் பொருந்தும்.ஆனால், இப்போதும் இனிய இசையைக் கேட்டபடி நிர்வாகம் செய்வது என்றால் அது சேது சாயிக்கு பொருந்தும்.
பெருமக்களே
பாலச்சந்தரைப் பற்றி, அவர்தான் இந்த உலகத்தில் எல்லோரையும் அறிமுகப்படுத்துபவர்.சொல்வார்கள் அவர் தொட்டால் பொன்னாகும் என்று.மண்ணைத் தொட்டால்கூட அது எப்படி நடிக்கும் என்பதை பாலச்சந்தரைக் கேட்டால் தெரியும்.அவருடைய எழுத்துத் திறமை, எண்ணத் திறமை, எதிலும் புதுமை காண்பது, காலத்திற்கு ஏற்ற கோலங்களைக் சொல்கிறபோது அதிலும் நளினங்கள், நேர்மை, அழகு என்றெல்லாம்.ஓர் ஆற்றல் வாய்ந்த இயக்குநரை தமிழகம் கண்டு அது உலகத்திற்கு வழங்கியது என்றால் அது பாலச்சந்தர்தான்.அவர் தான் நினைத்த கருத்தை எப்படிப் பரப்புகிறார் என்பதற்கு ஒரு சான்று, பாரதியார் பாடல்களை நாம் இசையரங்கத்தில் பாடுகிறோம்.
ஆராய்ச்சியாளர்கள் கட்டுரைகளாக எழுதுகிறார்கள்.விடுதலை வீரர்கள் அந்தப் பாடலை ஆவேசமாக பாடுவார்கள். இந்த மூன்றையும வறுமையின் நிறம் சிவப்பு என்ற படத்தைப் பார்த்தால் எழுந்து வருகின்றவர்கள் மட்டுமல்ல, பாரதியார் நூல் எங்கே கிடைக்கும் என்று கேட்டுவிட்டுத்தானே வந்தார்கள். இப்படிக் கோடிக்கணக்கான மக்களுக்கு கொள்கை முழக்கம் செய்வதிலும், உண்மையான சமுதாயம் எப்படி அமைய வேண்டும் என்று காட்டுவதிலும் உன்னால் முடியும் தம்பி என்பது ஒரு தொடர் அல்ல அது வாழ்க்கையின் நிழல் என்று காட்டிய பெருமை பாலச்சந்தரைத்தான் சாரும். அவர்கள் இங்கே வந்திருப்பதில் ஒரு பெருமை என்னவென்றால் டாக்டர் பட்டம் பெற்ற பசுமை மாறாமல் இங்கே வந்திருக்கிறார்.பாலச்சந்தர் அவர்கள் அவ்வளவு எளிதில் யாருக்கும வசப்படுபவர் அல்ல.எத்தனை தொலைபேசி போட்டாலும், சுழன்றாலும் கண்டுபிடிக்க முடிவதில்லை.நாங்களும் முயலாதவர்கள் இல்லை.மிகப்பெரிய நட்சத்திரங்களை வைத்துக்கொண்டு முயன்றோம்.அவர்கள் சொன்னார்கள், எங்களால் அவரைப் பிடிக்க முடியவில்லை விட்டுவிடுங்கள் என்று.ஆனால், மெல்ல ஒரு நாள் அவரிடத்தில் உரையாடியபோது, பாரதியார் விழாதானே நான் வருகிறேன் என்று சொல்லி வைத்தார்கள்.பிறகு நான் அவரைப் பார்க்கவேயில்லை, சரியாக வந்து சேர்ந்தார்கள்.அதை நினைத்துப் பார்த்து நாங்கள் பெரிய மகிழ்ச்சி அடைகிறோம். ஸ்ரீராம் நிறுவனங்களின் தலைவர் பெருந்தகை தியாகராஜன் அவர்கள் இந்த விழா தொடங்குவதற்கு முன்னால் என்னிடம் சொன்னார், விழா வெற்றி பெற்றுவிட்டது, ஏனென்றால், பாலச்சந்தர் வருகிறார். எனவே, உங்களை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.
நண்பர்களே
இந்த பாரதி விழாவில் ஒரு நுட்பம் என்னவென்பதை, நான் சொல்ல விரும்புகிறேன். தலைவர் அவர்களே, தமிழகத்தில் நாலாயிரம் கல்லூரி மாணவர்களும், உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் கடந்த ஒரு மாதமாக பாரதியார் பேச்சுப் போட்டியில் பங்கு பெறுவதற்காக பேசி பழகி பேசியிருக்கிறார்கள். நாலாயிரம் இளைஞர்கள் பேசியதில் நாலாயிரம் பேர் என்று கணக்கெடுத்துக்கொண்டால், இது பத்தொன்பது ஆண்டு என்று கணக்கெடுத்தால், நாலாயிரம், மூவாயிரம், இரண்டாயிரம் என்று கணக்கெடுத்தால், தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளில் ஏறத்தாழ ஒரு இலட்சம் இளைஞர்களுக்கு பாரதியார் பாடல் வரிகள் தெரிகிறதென்றால், ஸ்ரீராம் நிறுவனம் நடத்தும் பாரதி விழாவால்தான்.
இன்று அதற்கு நீதிபதியாக அமர்ந்திருப்பவர் டாக்டர்.பூவண்ணன், என்ற பேராசிரியர் கோவையில் கல்லூரியில் பேராசியராக இருப்பவர், அவர் ஒரு நீதிபதி அவர் சொன்னார், இந்தப் பிள்ளைகள் வாய் திறந்து பேசினால், ஒருவர் கூட கையில் குறிப்பு வைத்துக்கொள்வதில்லை. அதுவும் வாய் திறந்தால் 100 வரிகள் 150 வரிகள் தடைபடாமல் சொல்கிறார்கள்.அதுவும், இந்தக் கலை இவர்களுக்கு எப்படி வந்தது என்று கேட்டார்.
இந்தக் கலை எப்படி வந்தது என்றால் நான் காரணம் சொல்கிறேன்.ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு மேடையில் நின்று பேசிய சுதா என்ற சிறுமி வாய்திறந்து பேசிய தமிழைக் கேட்டு அவ்வளவு பேரும் வியந்து ஆ என்றார்கள்.அந்த சுதா டாக்டர் ஆகி அதுவும் எம்.எஸ். பட்டத்தில் முதல் பரிசு பெற்று அதுமட்டுமில்லை தனக்கு மருத்துவம் மட்டுமில்லை ஆன்மிக மகத்துவமும் தெரியும் என்று இன்று மேடைகளில் சுற்றிச் சுழன்று பேசுகின்ற டாக்டர்.சுதா சேஷையன் இந்த பண்ணையில் விளைந்தவர்தான்.
இவைகளெல்லாம் எவ்வளவு பெரிய மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் தருகிறது என்று பார்த்தால் இதை நடத்துகிறவர்களைப் பற்றியும் நான் இரண்டு குறிப்பு சொல்ல வேண்டும். சான்றாக இந்த மாணவர்கள் அனைவரையும் எப்படியாவது திரட்டுவது, அவர்களின் பெற்றோர்களையும் அழைப்பது, இங்கு அமர வைத்தது, அவர்களுக்கு விருந்து தருவது என்று அவர்கள் இந்த விழாவில் கலந்துக் கொள்வதில் ஒரு பெரிய மகிழ்ச்சி தருகின்ற வகையில் நான் சொல்லுகின்ற வார்த்தை சுழலும் பம்பரமாக நம்முடைய சுந்தரேசன் அவர்கள்தான் இந்த ஆட்சிப் பொறுப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவற்றுக்கெல்லாம் மேலாக தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் இன்னும் சொன்னால் எழுதுகிறவர்களுக்கு அகரமாகவும், எழுத்துலகத்தின் சிகரமாகவும் திகழ்கின்றவர் நண்பர் விக்ரமன் அவர்கள்.
எனவே, இந்த விழாவை எப்படி நடத்துவது என்கிற அழகு காட்டுகின்ற வகையில் பெருமிதமாக ஸ்ரீராம் நிறுவனங்கள் இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றது. எத்தனையோ நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் நடந்தாலும், மனம் கனிந்து மகிழ்ச்சி தருகின்ற நிகழ்ச்சிகள் என்று சிலவாகத்தான் இருக்க முடியும். அந்த நிகழ்ச்சிகளில் ஸ்ரீராம் நிறுவனம் நடத்தும் இந்த பாரதியார் விழா அத்தகைய புகழ் வாய்ந்தது.இந்த விழாவின் பெருமைக்காக எதிரே அமர்ந்திருக்கிற பெருமக்களைக் காணும்போது எனக்கு வியப்பாக இருக்கிறது. பாரதி நாவலர்கள், இசைக்காவலர்கள், இசைப் பெரும்புலவர்கள், தொழில் மேதைகள், எல்லாவற்றிற்கும் மேலாக கலை, இசை எங்கிருந்தாலும், வந்து அமர்கின்ற நம்முடைய நீதியரசர் பக்தவச்சலம் என்று பார்க்கின்றபோது உங்களையெல்லாம் நான் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். இந்தி விழாவிற்கு செலவேற்பதுதான் கடினமே தவிர வரவேற்பது சுலபம் என்று நான் நினைக்கிறேன்.எனவே, உங்களை வருக வருக என மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.வந்திருக்கிற பெருமக்களுக்கெல்லாம், பாரதியாரும், மகாத்மாவும் என்ற நூல் பரிசாக தரப்படவிருக்கிறது.
பாரதியார் கருத்துக்களை பரப்புகின்ற வகையில், பாரதியாருடைய பெருமிதத்திற்கு ஒரு சான்று சொல்வதென்றால், கவிதை பாடுவார்கள், கற்பனையாகச் சொல்வார்கள், தங்கள் மனத்தில்படுகின்ற காட்சிகளைச் சொல்வார்கள். ஆனால், இரண்டையும் ஒன்றாக இணைப்பதற்கு ஒரு தொடர் பாருங்கள்.கலை வளர்ப்போம், கொல்லன் உலை வளர்ப்போம் இப்படி சொல்ல முடியுமா?கலை வளர்ப்பது ஒரு பணியாக இருக்கட்டும். அந்த பணி முடிந்த பின்னர் நாட்டின் வளத்தை வளர்க்கும் பணி உலையாக இருக்கட்டும், ஆலையாக இருக்கட்டும், தொழிலாளர்களாகட்டும், தொழில் வளர்ச்சியாகட்டும் என்று கலையும், தொழிலும் இரண்டு கண்களாக அமைய வேண்டும் என்பதை ஒரு கவியரசர் பாடுவது என்பதை நாம் பெரும்பாலும் கேட்டதில்லை.
காரணம் அதற்கு முன்னால் கவியரசர்கள் பலர் இருந்தாலும், அவர்களுக்கு தொழில் வளம் என்பதைப் பற்றி தெரிந்துக்கொள்வதற்குரிய சூழல் இல்லை. ஆனால், பாரதியார் யாரோ சொன்னது போல அவர் ஒரு Poet as well as a planner and a philosopher என்று சொன்னார்.
எனவே, இந்த மூன்று முறைகளையும் பொலிந்து காட்டிய அந்தப் பெருந்தகை பாரதியாரை நினைக்கின்றபோதெல்லாம் இந்த நாடு வளம் பெற வேண்டும், இந்த நாடு உயர்வடைய வேண்டும், இந்த நாடு சிறப்படைய வேண்டும் என்பதற்குரிய வகையில்தான் மாணவ மணிகள் எப்படி இந்த போட்டியில் பங்குபெற்றார்கள் என்பதை நாங்கள் மகிழ்ந்து போற்றுகிறோம்.
இந்த வகையில் பண்பாட்டினுடைய புலத்தை ஒரு அங்குலம் உயர்த்திய பெருமை ஸ்ரீராம் நிறுவனத்தைச் சாரும் என்று சொல்லி உங்களையெல்லாம் நான் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.
வணக்கம்.

Add a Comment