ஸ்ரீராம் நிறுவனங்கள் நடத்தும் மகாகவி பாரதியார் 124-வது பிறந்தநாள் விழா
நாள் 05.02.2006
வரவேற்புரை முனைவர் ஔவை நடராசன்-5
பெருமக்களே
பாலச்சந்தரைப் பற்றி, அவர்தான் இந்த உலகத்தில் எல்லோரையும் அறிமுகப்படுத்துபவர். சொல்வார்கள் அவர் தொட்டால் பொன்னாகும் என்று. மண்ணைத் தொட்டால்கூட அது எப்படி நடிக்கும் என்பதை பாலச்சந்தரைக் கேட்டால் தெரியும்.
அவருடைய எழுத்துத் திறமை, எண்ணத் திறமை, எதிலும் புதுமை காண்பது, காலத்திற்கு ஏற்ற கோலங்களைக் சொல்கிறபோது அதிலும் நளினங்கள், நேர்மை, அழகு என்றெல்லாம். ஓர் ஆற்றல் வாய்ந்த இயக்குநரை தமிழகம் கண்டு அது உலகத்திற்கு வழங்கியது என்றால் அது பாலச்சந்தர்தான்.
அவர் தான் நினைத்த கருத்தை எப்படிப் பரப்புகிறார் என்பதற்கு ஒரு சான்று,
பாரதியார் பாடல்களை நாம் இசையரங்கத்தில் பாடுகிறோம். ஆராய்ச்சியாளர்கள் கட்டுரைகளாக எழுதுகிறார்கள். விடுதலை வீரர்கள் அந்தப் பாடலை ஆவேசமாக பாடுவார்கள். இந்த மூன்றையும வறுமையின் நிறம் சிவப்பு என்ற படத்தைப் பார்த்தால் எழுந்து வருகின்றவர்கள் மட்டுமல்ல, பாரதியார் நூல் எங்கே கிடைக்கும் என்று கேட்டுவிட்டுத்தானே வந்தார்கள்.
இப்படிக் கோடிக்கணக்கான மக்களுக்கு கொள்கை முழக்கம் செய்வதிலும், உண்மையான சமுதாயம் எப்படி அமைய வேண்டும் என்று காட்டுவதிலும் உன்னால் முடியும் தம்பி என்பது ஒரு தொடர் அல்ல அது வாழ்க்கையின் நிழல் என்று காட்டிய பெருமை பாலச்சந்தரைத்தான் சாரும்.
அவர்கள் இங்கே வந்திருப்பதில் ஒரு பெருமை என்னவென்றால் டாக்டர் பட்டம் பெற்ற பசுமை மாறாமல் இங்கே வந்திருக்கிறார்.
பாலச்சந்தர் அவர்கள் அவ்வளவு எளிதில் யாருக்கும வசப்படுபவர் அல்ல. எத்தனை தொலைபேசி போட்டாலும், சுழன்றாலும் கண்டுபிடிக்க முடிவதில்லை. நாங்களும் முயலாதவர்கள் இல்லை. மிகப்பெரிய நட்சத்திரங்களை வைத்துக்கொண்டு முயன்றோம். அவர்கள் சொன்னார்கள், எங்களால் அவரைப் பிடிக்க முடியவில்லை விட்டுவிடுங்கள் என்று. ஆனால், மெல்ல ஒரு நாள் அவரிடத்தில் உரையாடியபோது, பாரதியார் விழாதானே நான் வருகிறேன் என்று சொல்லி வைத்தார்கள். பிறகு நான் அவரைப் பார்க்கவேயில்லை, சரியாக வந்து சேர்ந்தார்கள். அதை நினைத்துப் பார்த்து நாங்கள் பெரிய மகிழ்ச்சி அடைகிறோம்.
ஸ்ரீராம் நிறுவனங்களின் தலைவர் பெருந்தகை தியாகராஜன் அவர்கள் இந்த விழா தொடங்குவதற்கு முன்னால் என்னிடம் சொன்னார், விழா வெற்றி பெற்றுவிட்டது, ஏனென்றால், பாலச்சந்தர் வருகிறார். எனவே, உங்களை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.

Add a Comment