POST: 2015-11-27T23:10:10+05:30

சேக்ஸ்பியர் படைப்புகள்
நினைவலைகளில் நீச்சலடிப்பவை 1-18

தொகுப்பாசிரியர் ஆங்கில மூலம்
பீட்டர் குயென்னெல்

சரியாக நானூறு (இன்றைக்கு நானூற்றைம்பது) ஆண்டுகளுக்கு முன்னர், 1564ஆம் ஆண்டு, ஏப்ரல் திங்கள் 22 அல்லது 23ஆம் நாள் ஜான் சேக்ஸ்பியருடைய மனைவி மேரி அவர்கள் இருவருக்குமான முதலாவது மகனை ஈன்றெடுத்தாள். சிறிது காலத்திற்குப் பின்னர் அவனை உள்ளூர் தேவாலயத்திற்குக் கொண்டு சென்று வில்லியம் என்கிற கிறித்தவப் பெயர் சூட்டப் பெற்றனர். சே க்ஸ்பியருடைய இல்லம் ஸ்ட்ரேட்ஃபோர்டு – மேலே – அவோன் என்றழைக்கப்பட்டது. வார்விக்சைர் அவர்களுடைய தாயகம். ஸ்ட்ரேட்ஃபோர்டினுடைய தலையாய குடிமகனாக ஜான் கருதப்பட்டார். வில்லியம் நான்கு வயதுச் சிறுவனாக இருந்த போது அவர் நகராண்மைக் கழகத்தின் தலைவரானார். உண்மை தான்! ஆனால், உடனேயே அவர் தனது செல்வத்தை இழக்கத் தொடங்கினார். மாட்சிமைக்குரிய நகராண்மைக் கழகத் தலைவர் பதவிநிலை அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. கடன் தொல்லைகளால் தான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று அஞ்சினார். அதனால் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தார். ஆனாலும் ஸ்ட்ரேட்ஃபோர்டு மக்களுக்கு அவரை மிகவும் பிடித்திருந்தது. பிற்காலத்தில் அவர் ‘குதூகலம் குடிகொண்டிருக்கும் வயசாளி’ என அழைக்கப்பட்டார். தன்னுடைய பெருமைக்குரிய மகன் வில்லியம் மிகச் சிறந்த நேர்மையாளன் என்றும் தன்னுடைய நகைச்சுவைத் துணுக்குகளை அவனிடம் வெடிப்பதற்கு ஒருபோதும் தான் அஞ்சியதில்லை என்றும் அவர் ஒருமுறை குறிப்பிட்டுள்ளார்.
நமது மாபெரும் ஆங்கிலக் கவிஞரும் நாடகாசிரியரு மானவருடைய தோற்றுவாய் அத்தகையது. இங்கே எனது உறுதிமிக்க கருத்து ஒன்றினைப் பதிவு செய்ய விழைகிறேன். வில்லியம் சேக்ஸ்பிருடைய ஆக்கங்களாக நிலவுகின்ற கவிதைகளும் நாடகங்களும் உண்மையாகவே ஜான் சேக்ஸ்பியருடைய மகனால் படைக்கப்பட்டவை. ஏன் அவற்றையெல்லாம் இயற்றியவர் அவரில்லை என்று கருதக் கூடாது என்கிற கூற்றினை நிறுவுவதற்கு வலுவான காரணங்கள் எதுவும் இல்லை. மற்றொரு கவிஞராலோ, பல கவிஞர்களாலோ படைக்கப்பட்டனவாக இருக்கக் கூடும் என்கிற கருத்தியலை நிலைநாட்ட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் திறனாய்வுத் தளத்திலும் வரலாற்றுப் புலத்திலும் இறுதியில் சொல்லொணா இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு தோல்வியுற்றன. ஸ்ட்ரேட்ஃபோர்டு ஈன்றெடுத்த நாடகசாரியராலேயே படைக்கப்பட்டவை என்று நேரடியாக ஏற்றுக் கொள்வதே சாலச் சிறந்தது என முடிவுகட்டப்பட்டது.

ஸ்ட்ரேட்ஃபோர்டு தேவாலயத்தில் ஞான நீராட்டு நிகழ்த்தப் பெற்றதற்கான பதிவேட்டுக் குறிப்பின் அச்சு நகல்

சேக்ஸ்பியரைப் பற்றி இவ்வளவு குறைவான செய்திகளை மட்டிலுமே நம்மால் அறிந்து கொள்ள முடிந்தது எனும் நிலைமை ஏமாற்ற மளிப்ப தென்னவோ உண்மை தான். அவருடைய சமகால நாடகாசிரியர்களைப் பற்றி இதைவிடக் குறைவாகவே அறிந்துள்ளோம். ஆனால், இது தொடர்பாக தற்காலத் திறனாய்வாளர்கள் பலர் குறிப்பிட்டுள்ளவற்றைக் காட்டிலும் மிகவும் விரிவாகவே அறிந்து கொண்டுள்ளோம். அவருடைய வாழ்க்கையைப் பற்றியும் பண்புநலன்களைப் பற்றியும் நாம் அறிந்துள்ளவை அனைத்தையும் ஓர் அஞ்சலட்டைக்குள் அடக்கிவிடலாம் என்று சொல்லப்படுகிறது. அப்படியானால், அவ்வாறு செய்வதற்கு அஞ்சலட்டையும் மிகப் பெரியதாக இருக்க வேண்டும், அதனை எழுதுவோர் நுண்ணேக்கியைக் கொண்டு படிக்கும் வகையில் ஆகச் சிறிய எழுத்து வடிவத்தைக் கையாள வேண்டும் என்று மட்டுமே நம்மால் பதிலிறுக்கக் கூடும். பொது வாழ்க்கையில் அவர் ஆற்றிய பணிகள் பற்றியும், அவருடைய தொழிலியல் வாழ்க்கை குறித்தும், நாடக ஆசிரியராகவும், நாடக நிறுவன உரிமையாளராகவும் வெற்றி பெற்ற அவர் தான் ஆட்டிய செல்வத்தை முதலீடு செய்த உடைமைகள் குறித்தும், தனது வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் அவர் வாழ்ந்த இடங்கள் குறித்தும் பெருமளவில் தெரிந்து கொள்கிறோம். அவருடைய தனிப்பட்ட பண்புநலன்கள் குறித்தும், பெருகிவந்த இலக்கியப் புகழ் குறித்தும் அறிந்திருந்த பலரும் அளித்துள்ள எண்ணற்ற குறிப்புகள் நமக்குக் கிடைத்துள்ளன. அவருடைய வாழ்நாளில், இலண்டனிலும் ஸ்ட்ரேட்ஃபோர்டிலும் வாழ்ந்த வில்லியம் சேக்ஸ்பியர், இறுதியில் முதல் தொகுப்பு (First Folio) எனும் பெயரில் திரட்டப்பட்ட நாடகக் களஞ்சியத்தின் ஆசிரியர் அல்ல என்று ஐயுறும் விதத்திலோ, ஐயுறுவதற்கான அணுவளவு ஆதாரத்தை அளிக்கும் விதத்திலோ எவரொருவரும் குறிப்பிட்டதில்லை.
அவருடைய இளமைப் பருவம் அறியப் படாததாக உள்ளது என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அவர் கல்வி பயின்ற இடத்தைப் பற்றி உறுதிபடக் கூறுவதற்கில்லை. ஸ்ட்ரேட்ஃபோர்டு நகராண்மைக் கழகத்தின் தலைவருடைய அரும்பெறல் என்கிற முறையில் அவர் உள்ளூர் இலக்கணப் பள்ளியில் பயின்றிருக்கக் கூடும்; கட்டணமில்லாக் கல்வி பெற்றிருக்கக் கூடும்; ஸ்ட்ரேட்ஃபோர்டு இலக்கணப் பள்ளி, எலிசபத் பேரரசி காலத்திய அதே போன்ற ஏனைய நிறுவனங்களைப் போலவே கிரேக்க மொழி என்றில்லாவிட்டாலும் இலத்தீன் மொழியினையும், இலக்கண நுணுக்கங்களையும், தருக்கவியலையும், பேச்சாற்றல் போன்ற நுண்கலைகளையும், எண்ணியல், வடிவியல், வானியல், இசை நுட்பங்கள் போன்றவற்றையும் சமச்சீராக அமையும் விதத்தில் வளமான பயிற்சி அளித்திருக்கக் கூடும் என்று மட்டுமே நம்மால் கூற முடிகிறது.
நாடகங்களின் ஆசிரியரான அவர் செவ்வியல் இலக்கிய மேதை அல்ல, அதனை அவர் தன்னுடைய போட்டியாரான பென் ஜான்சனுக்கு விட்டு விட்டார். ஆனால், நன்கு கல்வி பயின்றவர் என்பது மட்டும் தெளிவு; அவருடை வாழ்நாளின் ஒரு கட்டத்தில் அவர் சட்டம் பயின்றுள்ளார் என்பது வெள்ளிடை மலை. அதனால் தான் அவர் வளர்ந்த பின்னர், ஒரு வழக்கறிஞரிடம் பணியாற்றி வாழ்ந்தார் என்கிற கதை நமக்குக் கிடைத்துள்ளது. அதே சமையத்தில் அவர் கிராமப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார் என்று கருதுவதற்கும் இடமுண்டு. ஊகத்தின் அடிப்படையில் மூன்று கோட்பாடுகள் நிலவுகின்றன. இருப்பினும், 1582ஆம் ஆண்டு இறுதியில், அவர் ஸ்ட்ரேட்ஃபோர்டில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்திலேயே, அவசரக் கோலத்தில் ஒருவகையில் மதிப்பற்றதொரு மணப் பிணைப்பில் ஈடுபட்டார் அல்லது ஈடுபடுமாறு வலியுறுத்தப்பட்டார் என்பதை நாமறிவோம். அவருடைய மனைவி அன்னே ஆத்தவே அவரைக் காட்டிலும் எட்டு வயது மூத்தவர்; திருமணத்தின் பொழுது அவர் கற்பமுற்றிருந்தார். 1583ஆம் ஆண்டு மே மாதத்தில் அவள் தன்னுடைய முதல் குழந்தை சுசன்னவை ஈன்றெடுத்தாள்.
பதிவுகள் ஒரு குறிப்பிட்ட அளவு கால இடைவெளியைக் காட்டுகின்றன. 1585ஆம் ஆண்டு சனவரித் திங்களில் வில்லியமிற்கும் அன்னே சேக்ஸ்பியருக்கும் ஹேம்னெட், ஜூடித் என்கிற பெயர்கள் கொண்ட இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. பயன்குறைந்தது என்ற போதிலும் கதையொன்று நன்கு அறியப்பட்ட கதை ஒன்று நிலவுகிறது. அண்மையிலிருந்த பூங்காவிற்குள் வரம்பு மீறி நுழைந்து அங்கிருந்த மான்களோடு்ம் முயல்களோடும் அவர் போட்ட ஆட்டத்தால் களவுக் குற்றம் சுமத்தப்பட்டு ஸ்ட்ரேட்.போர்டையும் மனைவி மக்களையும் பிரிந்து இலண்டனில் தஞ்சம் புக வேண்டியநிலைமை ஏற்பட்டது.
சேக்ஸ்பியருடைய வாழ்க்கை குறித்து நாமறிந்துள்ள மெய்யான தகவல்கள் 1592ஆம் ஆண்டிற்குப் பிற்பட்ட காலத்திலிருந்தே துவங்குகின்றன. அந்தக் காலக்கட்டத்திற்குள் அவர் .லண்டனில் தனக்கென ஊரிடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். நடிகராகவும், நாடக ஆசிரியராகவும் பயிற்சி பெற்றார். பரவலான புகழ் பெற்ற வரலாற்று நாடகம் ஒன்றில் பணியாற்றும் வாய்ப்புப் பெற்றார். ஆறாம் ஹென்றி மன்னரின் அழிவு விளைத்த ஆட்சியை அந்நாடகம் தொகுத்தளித்தது. அந்நாடகத்தில் அவருடைய முயற்சிகள் சமகாலத்திய கவிஞருடைய மனவருத்தத்தையும் கடும் சினத்தையும் தூண்டுமளவிற்கு வெற்றியை ஈட்டித் தந்தது. இராபர்ட் கிரீன் என்கிற அக்கவிஞர் நோய்வாய்ப்பட்டிருந்த வயசாளி; மிகுந்த வெறுப்படைந்தார். தனது இறப்பிற்குப் பின் அவர் விட்டுச் சென்றிருந்த துண்டறிக்கையில், நாடக மேடைகளுடைய தீங்குகளைப் பற்றியும் அவற்றுடன் தொடர்பு கொண்டிருந்தோருக்கு அவற்றுள் பொதிந்திருந்த புதைகுழிகளைப் பற்றியும் எச்சரித்ததுடன், தனியொருவரைச் சுட்டிக் காட்டி ஆர்வக் கோளாறுமிக்கவனும் பழியஞ்சாதவனுமான அந்த இளைஞன் பிறருடைய கவிதைகளைக் சென்றதாகக் குறிப்பிட்டிருந்தார்: “நம்முடைய இறகுகளைக் கொண்டு தன்னுடைய சிறகுகளை அழகு படுத்திக் கொண்ட காக்கை…. எளிய கவிதை ஒன்றை உங்களுடைய மிகச் சிறந்த படைப்பாக மேம்படுத்திக் காட்டும் திறம்படைத்தவனாகத் தோ்றுகிறான். தன்னை முற்றிலுமாக மறைத்துக் கொண்டு மக்களுக்குக் காட்சிப் படுத்தத் தெரிந்த இந்நாட்டின் ஒரே ஏமாற்றுக்காரன்…’’
அந்தத் தாக்குதல் முக்கியத்துவம் வாய்ந்தது. அது வெளிக் கொணர்ந்த எதிர்வினை அதனைக் காட்டிலும் பெரிதும் முகாமை பெற்றது. கவிஞர் கீரீனுடைய வசைமாரியை அவருடைய இறப்பிற்குப் பின் வெளியிடும் பொறுப்பேற்ற ஹென்றி செட்டில் ‘கருணை உள்ளத்தின் கனவு’ (Kindherart’s Dream) எனும் தலைப்பில் மற்றொரு துண்டறிக்கையையும் வெளியிட்டார். அதில் வசைமாரிக்குத் தேவையான திருத்தங்களைப் புகுத்துவதற்குத் தன்னால் ஆனதைச் செய்தார். அவர் (சேக்ஸ்பியர்) வாழும் கவிஞர் ஒருவரை மனவருத்தமடையச் செய்தமைக்காக வருத்தம் தெரிவித்தார் என்று குறிப்பிட்டதுடன், ‘‘ஏனெனில், அவர் தன்னுடைய தொழிலில் கைக் கொள்கின்ற அதே நேர்த்தியான கண்ணியத்தையும் பண்புநலன்களையும் அவருடைய நடவடிக்கைகளிலும் நேரில் நான் கண்ணுற்றேன். மேலும், ஒருவரைப் போற்றுவதில் மனிதர்களிடையே உள்ள வேறுபாடு காரணமாக, அவர் தான் அறிந்த செய்திகளை வளைந்து கொடுக்காத தன்மையுடன் கையாண்டுள்ளார், அதில் அவருடைய கபடமற்ற நேர்மையும் அவருடைய கலைக்கு உரி்த்தான நையாண்டியின் நளினமும் மிளிர்கிறது.”
இருபத்தெட்டு வயது நிரம்பப் பெற்ற சேக்ஸ்பியருக்கு செட்லி சூட்டிய புகழாரத்தில் தொடுத்திருந்த ‘‘கண்ணியமிக்கவர்”, ‘‘வளைந்து கொடுக்காத் தன்மையர்”, ‘‘நேர்மையாளர்” போன்ற வாழ்த்து மலர்கள் அவருடைய வாழ்நாள் நெடுகிலும் மீண்டும், மீண்டும் பெற்ற புகழாரங்களிலும் அழகு சேர்த்தன. அவை எதிரொலித்துக் கொண்டே இருந்தன. எடுத்துக்காட்டாக, சேக்ஸ்பியரை பென் ஜான்சன் ‘‘நட்புப் பாராட்டுதற்குரியவர்”, ‘‘மென்மையானவர்”, ‘‘இனிமையானவர்” என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளதைக் காண்கிறோம். மேலும், ஜான்சன் உரக்க உலித்துள்ளார், ‘‘அவர் மனிதரை நேசித்தவர்…. அவர் உண்மையிலேயே நேர்மையானவர், வெளிப்படையாகக் கட்டற்று செயல்படக் கூடியவர். நேர்த்தியான கற்பனை வளமும், துணிச்சலான கருத்துக்களும், மென்மையாக வெளியிடும் பாங்கும் கொண்டவர்…” அத்துடன், சேக்ஸ்பியர் காண்போரைக் கவர்ந்திழுக்கும் கவின்மிகு உடலமைப்புக் கொண்டிருந்தார். பதினேழாம் நூற்றாண்டில் துணுக்குச் செய்திகள் எழுதி வந்த ஜான் ஆப்ரே குறிப்பிட்டுள்ளார், ‘‘அவர் ஓர் ஆணழகன். கட்டுறுதியான உடலமைப்புக் கொண்டவர். அறிவாற்றலை சுறுசுறுப்புடன் இனிமையாகவும் மென்மையாகவும் வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்கவர்.
அதுமட்டுமின்றி, சேக்ஸ்பியரைப் பற்றிய தனிப்பட்ட கருத்துக்களை உருவாக்குவதற்கு முற்படும் பொழுது, அவருடைய படைப்புகளிலிருந்து ஏராளமான சான்றுகளைப் பெறுகிறோம். அவர் இலண்டனைத் தனது இருப்பிடமாக ஏற்றுக் கொண்ட போதிலும், தான் பிறந்து வளர்ந்த நாட்டுப் புறத்தின் மீதும், நாட்டுப்புறத்தில் தனது குழந்தைப் பருவத்தின் மீதும் ஆழமான பிணைப்புக் கொண்டிருந்தார். அவர் சிறந்த குதிரைக்கான அம்சங்களைப் புரிந்து வைத்திருந்தார். வீனஸும் அடோனிஸும் என்கிற அவருடைய பாடலின் ‘‘நன்கு வடிவமைக்கப்பட்ட பரிமா” பற்றி விவரிக்கும் புகழ்பெற்ற வரிகளில் நம்மால் கண்டுகொள்ள முடிகிறது. அதே பாடலில், வேட்டை முயல் குறித்த அவருடைய விவரணை, சேக்ஸ்பியர் அதிகாலையில் எழுந்து வயல்வெளிகளில் முயல் கூட்டங்களைத் துரத்தித் திரிந்திருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது. விலங்கினங்கள் பறவையினங்களின் வாழ்க்கை குறித்த ஆழமான கற்பனைத்திறம் வாய்க்கப் பெற்றிருந்தார். வார்விக்சைர் நீர்நிலைகளின் காட்டுவாத்துக் கூட்டங்கள், நன்னீர்ப் பறவை வகைகள் அல்லது நீர்மூழ்கும் பறவையினங்கள், வைக்கோற் போர்களுக்கிடையே தென்பட்ட சாதுவான நத்தைகளைப் பற்றியும் கூட அவர் விவரித்துள்ளார்.
சேக்ஸ்பியர் பெண்கள் குழந்தைகள் மத்தியில் இருப்பதிலும், அவர்களுடன் உரையாடுவதிலும், அவர்கள் பேசுவதைக் கேட்பதிலும் பேருவகை கொண்டார். அவருடைய திருமண நிகழ்வு குறித்து நமக்கு எதுவுமே தெரியவில்லை என்று தான் கூற வேண்டும். ‘‘பொறுத்துத் தாங்கிக் கொள்கின்ற திருமணங்களே உள்ளன; இனிமை பயக்கக் கூடியவை எதுவுமில்லை” என்கிற, எதிலும் குறை காண்பதில் வல்லவரான பிரெஞ்சுக்காரர் லா ரோகேஃபோகால்ட் என்பவரின் கருத்தினை ஏற்றுக் கொண்டவராகவே காண்கிறோம். விருப்பமற்ற மணச்சிறையின் பேரச்சத்தை அவர் ‘‘ஆறாம் ஹென்றி – முதல் பகுதி” மற்றும் ‘‘புயல்” ஆகிய தனது இரு நாடகங்களில் விவரித்துள்ளார்.
‘‘வற்புறுத்தப்பட்ட மணச்சிறை நரகமன்றி வேறில்லை!
ஒத்திசைவின்றி வாழ்நாளெல்லாம் நிகழ்த்தப்படும் போராட்டம்”
இருந்தபோதிலும், அவர் பெண்களிடம், குறிப்பாக, இளமை ததும்பிய சிறுபிள்ளைத்தனமான பெண்களிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார் என்பது தெளிவு. கவர்ந்திழுக்கும் கருவிழிகள், வெல்வெட்டுப் போன்ற புருவங்கள், வானத்தின் வண்ணக் கோலங்கள் காட்டுகின்ற ஒளி ஊடுருவும் மேனி ஆகிய உடல் வனப்புகளில் உள்ளத்தைப் பறிகொடுத்தார். ஆனால், ஆற்றல்மிக்க செயலூக்கத்துடன் சுவைத்துக் களித்த போதிலும், உலக இன்பங்களில் குதித்துக் குளித்த போதிலும், ஆழ்ந்த சிந்தனையிலும் தற்சோதனையிலும் மூழ்கிவிடும் அறிவுத்திறம் வாய்க்கப் பெற்றிருந்தார். ஷெல்லியையும் பைரனையும் போல நீர்நிலைகளாலும் நீரோட்டங்களாலும் பெரிதும் கவர்ந்திழுக்கப்பட்டார். ஸ்ட்ரெட்ஃபோர்டில் பழமை வாய்ந்த புளோப்டன் பாலத்தின் கைபிடிச் சுவற்றின் மீது முழங்கைகளை ஊன்றியவாறு ஆவன் நதி நீரோட்டத்தில் மிதந்து சென்ற அன்னப் பறவைகளின் சிறகுகளில் தன்னை மறந்திருந்தார். வயசாளியாக தனது நாடக நிறுவனத்துடன் இலண்டனைச் சற்றி வந்த காலத்தில் மலைப் பாங்கான பகுதிகளைக் கண்டு களித்தார். அவற்றின் மீது நின்று ஆர்ப்பரித்த ஆழ்கடலையும் அமைதியான நேரத்தில் சிற்றலைகளின் சலசலப்புடன் நறநறத்த எண்ணிலடங்கா கூழாங்கற்களிலும் மெய்மறந்தார்.
சேக்ஸ்பியர் தன்னை நன்கு ஒழுங்கமைத்துக் கொண்ட சீர்மையாளர். செயலூக்கமும் சிந்தனைத்திறமும், அயரா உழைப்பும் சலிப்பறியாப் புலன் வேட்கையும் ஒருங்கே அமையப் பெற்றிருந்தார். அனைத்திற்கும் மேலாக அவர் நல்லூழின் நல்லாசிகளைப் பெற்றவர் என்றே சொல்ல வேண்டும். அவர் பெற்ற நற்பேறுகளுள் ஒன்றாக கிறிஸ்டபர் மார்லோவின் இளமை மரணத்தைக் குறிப்பிடலாம். ஏற்கனவே, 1587ஆம் ஆண்டில், ‘‘தாம்பர்லைன்” எனும் மார்லோவின் நாடகம் இலண்டன் நாடகச் சுவைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அவருடைய புலமை மிக்க வைர வரிகள் ஆங்கிலக் கவிதைக்கே பெருத்த மாற்றத்தை அளித்திருந்தது. ஆனால், 1593ஆம் ஆண்டு கிறிஸ்டபர் மார்லோவ் கொடுமையான மரணத்தைத் தழுவ நேர்ந்தது. அவருடைய மரணம் வெல்லவொண்ணாக் கவிதைப் போட்டியாளரை இலக்கிய அரங்கிலிருந்து அகற்றிவிட்டது. அவருடைய படைப்பாற்றல் திறமும் பண்புநலன்களும் மாற்றலரைக் கண்டு நடுங்கச் செய்யத்தக்கவை.
மார்லோவ் மரணமடைந்த அதே ஆண்டில் சேக்ஸ்பியர் செல்வாக்கு மிக்கதொரு புரவலரைப் பெற்றார். ஹென்றி செட்டில் தனது கருணை உள்ளத்தின் கனவு எனும் சிற்றேட்டில் குறிப்பிட்டிருந்த போற்றுதலுக்குரியவர்களுள் அவரும் ஒருவர் எனக் கொள்ளலாம். 1593ஆம் ஆண்டு, சேக்ஸ்பியர் தான் இயற்றிய ‘‘வீனசும் அடோனிசும்” எனும் அழகுமிளிர் கவிதையை இருபது வயது நிரம்பிய ஆணழகன் சௌத்ஹாம்ப்டன் பிரபு ஹென்றி விரையோத்ஸ்லிக்குச் சமர்ப்பித்தார். ஓராண்டிற்குப் பின்னர், (The Rape of Lucrece) எனும் தனது இரண்டாவது கவிதையையும் அதே கவர்ச்சிமிக்க இளம் பெருந்தகைக்கு மேலும் கூடுதல் அர்ப்பணிப்புணர்வுடனும் வாழ்த்துரைகளுடனும் சமர்ப்பித்தார்.
சேக்ஸ்பியர் தனது புரவலரை மிகுந்த அறிக்கூர்மையுடன் தெரிவு செய்தார். பேரரசி எலிசபெத்தினுடைய அன்பிற்குரியயோரான அறிவாற்றல் மிக்க இளைஞர்கள் பலருள்ளும் சௌத்ஹாம்ப்டன் பிரபு மிகச் சிறந்தவர் என்பது மட்டுமின்றி அவர் கவிஞர்களைப் பெரிதும் நேசித்துப் போற்றுபவர் என்று பெயர் பெற்றிருந்தார். அத்துடன், பேரரசி எலிசபெத் காலத்திய பெரும்புள்ளிகளுள் மிகுந்த வல்லமையும் அரசியின் பேராதரவும் பெற்றவராகக் கருதப்பட்ட எஸ்ஸெக்ஸ் பிரபுவுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார்.
1594ஆம் ஆண்டு வாக்கில் சேக்ஸ்பியர் இயற்றத் தொடங்கிய ஈரேழ் அடிப் பாக்களில் சொல்லப்பட்டுள்ள கதை ஒருபோதும் வெளிக்கொணரப் படவில்லை. கவிஞர் உருவகப்படுத்தியிருந்த அந்த இளைஞர் பெம்ரோக் பிரபுவாக இருக்கலாம் என்று திறனாய்வாளர்கள் நம்புகின்றனர். அந்தப் பொன்மனச் செம்மல் அவருடைய தொடக்க காலப் புரவலராக இருக்கலாம் என்றும், சௌத்ஹாம்ப்டன் பிரபு மூலமாக அவர் எஸ்ஸெக்ஸ் பிரபுவினுடைய அறிமுகம் பெற்றார் என்றும், எஸ்ஸெக்ஸ் பிரபுவினுடைய சரிவும் வீழ்ச்சியும் ஏற்படுத்திய அவலத்தின் விளைவாகவே, இருண்ட காலம் என்று சொல்லப்பட்ட காலத்திய நாடகங்களான ஜூலியஸ் சீசர், ட்ரோய்லஸும் கிரெஸெடாவும், ஹேம்லெட், அந்தோணியும் கிளியோப்பட்ராவும் போன்ற அவலச்சுவை ததும்பும் மிகச் சிறந்த நாடகங்களை யாப்பதற்கு இந்த நாடக ஆசிரியரை உந்தியது என்றும் நான் கருதுகிறேன்.
சேக்ஸ்பியருடைய பன்முகப்பட்ட, சிக்கலார்ந்த இயல்பின் ஒரு பகுதியினை மட்டிலும் இதுவரை ஆய்ந்தளித்துள்ளேன். நட்பாம் கிழமை பாராட்டிய சேக்ஸ்பியரையும், மென்மையான குணம் படைத்த சேக்ஸ்பியரையும், வாழ்வியலிலும் வெற்றி ஈட்டியவரும், குடும்பத்தின் வளத்தை மீட்டெடுத்தவரும், தந்தைக்குப் புத்தம் புதிய, மரபுவழிப்பட்ட, படைவீரர் செருக்குக் காட்டும் ஆடைவகைகளைப் பெற்றுத் தந்தவரும், திறமிக்க முதலீடுகளைச் செய்தவரும், ஸ்ட்ரேட்ஃபோர்டில் மிகப் பெரிய மாளிகையை வாங்கியவருமான கவிஞரைப் பற்றி ஆய்வு செய்தேன். சேக்ஸ்பியருடைய ஆக்கங்களின் முதற் தொகுப்பின் முகப்புப் பக்கத்தில் மிளிரும் ஓவியத்தைத் தீட்டிய ட்ரோஷவுட் எனும் ஓவியர் அத்தகைய சேக்ஸ்பியரைத் தான் வரைந்தளித்துள்ளார்.
அந்த ஓவியம் பரவலாக திறனாய்வுக்கு உட்படுத்தப் பட்டது. அது உருவ ஒற்றுமையை மிகச் சிறந்த முறையில், முழுநிறைவாக உள்ளடக்கி இருந்த போதிலும், உணர்ச்சியற்று சோர்வாகக் காணப்படுவதாக விலக்கப்பட்டது. ஓவியம் உயிர்வாழும் மனிதனுடையதாக இல்லை என்றும் கவிஞருடைய உண்மையான அடையாளத்தை மறைக்கும் வகையில் முகமூடி அணிந்துள்ள ஒருவருடைய முகமாகக் காட்சியளிப்பதாகவும் கூறுமளவிற்கு சேக்ஸ்பியர் எதிர்ப்பாளர் ஒருவர் துணிந்துள்ளார். இருப்பினும், மற்றொரு பரந்த நோக்கில் பார்த்தால், சேக்ஸ்பியர் உண்மையிலேயே ஒரு முகமூடியை அணிந்து கொண்டிருந்திருக்க வேண்டும். ஓவியர் நட்புப் பாராட்டும் சேக்ஸ்பியரைத் தனது கலையின் நாயகனாகக் கொண்டிருந்த போதிலும் அதன் அடி ஆழத்தில் அவருடைய பல்வேறு பான்மைகளும் நிழலாடி இருக்கலாம்.
அவர் புலன் உணர்வெழுச்சிக்கு ஆளாகக் கூடிவராகவும் மனச்சோர்வுடையவராகவும் வாழ்ந்தார் என்பது நிறுவத்தக்க உண்மை என்றில்லாவிட்டாலும் ஊகிக்கத்தக்க வாய்ப்பு உண்டு என்று கருதலாம். கற்பனை வளமிக்க மாபெரும் கலைப்படைப்புகள் பல ஒரு சில மறைந்திருக்கும் முரண்பாடுகளைத் தோற்றுவாயாகக் கொண்டவையாகத் தோற்றமளிக்கின்றன. சேக்ஸ்பியருடைய அவலப் படைப்புகளின் ஆசிரியர் எளியவராகவோ, எதிலும் எளிதில் மனநிறைவு கொள்ளக் கூடியவராகவோ இருந்ததில்லை. இங்கே, ஏனைய கருத்தாக்கங்களில் கையாண்டதைப் போல ஊகங்களையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. ஆனால், அவருடைய பிள்ளைப் பருவம் அவருடைய தந்தையின் நீண்ட காலப் பொருளாதாரப் போராட்ட மேகங்களால் இருளடைந்திருந்தது என்பதிலும் அந்நிலை அவருடைய ஆர்வத்துடிப்பு மிக்க மகனுடைய உள்ளத்தில் தந்தையின் பால் ஈடுபாட்டுணர்வும் தனது இலக்குகளை எய்த இயலாமையின் மனத்துயரங்களும் கலந்த உணர்வு ஏற்படுத்தியது என்பதிலும் ஐயமில்லை. நிகழ்வுப் போக்காக மற்றொன்றையும் கருத்திற் கொள்ள வேண்டும். அவருடைய தந்தை, தாய் இருவருடைய குடும்பப் பின்னணியில் அச்சுறுத்தத் தக்க சமூக முரண் நிலவியதை மறந்துவிடலாகாது. ஜான் சேக்ஸ்பியர் மிக எளிய நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். மேரி ஒப்பீட்டு முறையில் செல்வ வளமிக்க மேல்தட்டு ஆர்டென் மரபினர் வழித்தோன்றல்.
எவ்வகையிலேனும் அடிப்படை முரண் எழுந்தது. சேக்ஸ்பியர் கூர்மைமிக்க பிளவுகள் கொண்ட இயல்பு பெற்றார். குதூகலமானவராகவும், நல்லியல்பாளராகவும், அனைவருடனும் கூடி இணைந்திருப்பதில் ஆர்வம் கொண்டவராகவும் திகழ்ந்தார். ஆனால், அவருடைய அவலச்சுவைமிக்க படைப்புகளிலும், சில இன்பியல் படைப்புகளிலும் கூட, தனிநபருடைய தனிமையின் கொடுமை உணர்வு மேலோங்குகிறது. அது தொடக்க காலப் படைப்பான ‘‘மூன்றாம் ரிச்சர்ட்” நாடகத்திலிருந்தே தொடங்கிவிடுகிறது. அந்நாடகத்தில் ஒரு சமையம் சுய அன்பைத் தேடுகின்ற ஆவேசத்தாலும், மறு சமையம் வெறுப்புணர்வின் உச்சத்திலும் வதைக்கப்படுகின்ற கொடுங்கோலனைத் தீட்டியுள்ளார்:
ரிச்சர்ட் ரிச்சர்டை நேசிக்கிறான்; அதாவது நானே என்னை!
இங்கே யாரேனும் கொலையாளி உண்டா? இல்லை – ஆமாம், நான் தான்;
அப்படியானால், ஓடிவிடு. என்ன, என்னிலிருந்தா? காரணம் மிகப்பெரிது –
இல்லாவிடில் பழிவாங்கிடுவேன்! என்னை நானேவா?
ஐயோ, என்னை நேசிக்கிறேன்! என்ன நன்மை கருதி
எனக்கு நானே இவ்வாறு செய்து கொண்டேன்?
அதனைத் தொடர்ந்து அவர் உருவாக்கிய அவலம் மிக்க நாயகர்கள் அனைவரும் தனிமையில் தவித்தனர்; தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டனர்; சக மனிதர்களுடன் கட்டற்று உறவாட இயலாத நிலையை ஏற்படுத்திய ஏதோவொரு உணர்வெழுச்சியால் ஆட்டிப்படைக்கப்பட்டு துண்டாடப்பட்டனர். ஷைலக்கை அவலத்தின் மொத்த உருவமாகவும், மால்வோலியாவை நகைச்சுவைக் கண்ணோட்டத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்ட அவலமிக்க கதைமாந்தனாகவும் நான் கருதுகிறேன். ஹேம்லெட் அறிவாற்றலில் வலிமைமிக்கவனாகவும் நன்னெறியில் வலுவற்றவனாகவும் தன்னைக் கருதியதால் அத்தகைய உணர்வுக்குப் பலியானான்; ஒத்தெல்லோவும் அந்தோணியும் தமது கட்டுக்கடங்கா காவெறியால் அழிந்தனர்; மேக்பெத் சிறுகச் சிறுகச் சேர்த்துக் கொண்ட குற்ற உணர்வால் வீழ்ச்சியுற்றான்; கொரியோலேனஸ் தலைக்கனத்தால் தருக்குற்றுத் தாழ்வுற்றான். அவர்கள் ஒவ்வொருவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். ஒவ்வொருவரும் அவல நாடகத்தின் கதைப்போக்கில் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட தனிமையால் தான் சிறைப்படுத்தப்பட்டதாகவே உணர்ந்தனர். அவர்தம் ஆன்மா சமைய முறையிலான அமைதியையோ மேன்மையையோ அடைவதற்கான வாய்ப்பின்றி, அவர்களுடைய மரணம் தனிமையில் நிகழும் விதத்தில் விதிக்கப்பட்டது.
சேக்ஸ்பியர் கிறித்தவ மதத்தைத் தழுவினார் என்பதில் ஐயமில்லை. ஆனால், அவர் கிறித்தவ சமைய நெறிகளைக் கைக்கொண்டார் என்று உறுதியாகக் கூற இயலுமா? ஆன்மா அழிவற்றது என்கிற கொள்கையை அவர் ஏற்றுக்கொண்டவரா? ஹெம்லெட்டின் நண்பன் மரணத்தின் வாயில்களில் தனது இனிய இளவரசரை தேவதைகளின் கூட்டம் பின் தொடர்ந்து பறந்ததாக ஒரு கருத்தினை ஏற்படுத்துகிறான். ஆனால், ஹேம்லெட் ‘‘எஞ்சியது அமைதியே” என்று முழங்குகிறான். ஏனைய அவல நாடகங்களின் முடிவிலும் இதே போன்ற குழப்பத்திற்குப் பிந்தைய அமைதியைக் காண்கிறோம். சேக்ஸ்பியர் மாண்டேனின் மாணவர் என்பதை நாம் அறிவோம். அவருடைய ஆங்கில மொழிபெயர்ப்பாளர் ஜான் ஃப்ளோரியோ எஸ்ஸெக்ஸ் – சௌத்ஹாம்ப்டன் வட்டாரத்தில் ஓர் உறுப்பினர். அவருக்கென்று நன்னெறி மெய்யியல் இருந்திருக்குமானால், அது மாண்டேன் கற்பித்த பல தெய்வ வணக்கத்தைப் பின்பற்றும் இன்ப, துன்ப நடுநிலைக் கோட்பாடாகும். மனிதன் தனக்குத் தானே உண்மையானவனாக இருத்தல் வேண்டும்: ‘‘மனிதன் தாங்கிக் கொள்ள வேண்டும்…” ‘‘லியர் மன்னன்” நாடகத்தின் பிந்தைய காட்சிகளில் தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்ட இந்த போதனை, சேக்ஸ்பியருடைய தனிப்பட்ட ஒரே மெய்யியல் செய்தியாகும்.
மனித வாழ்க்கையைப் பற்றிய சேக்ஸ்பியருடைய தனிப்பட்ட மனப்பான்மை, அவருடைய படைப்புகளிலிருந்து நம்மால் வகுக்க முடிந்தவரை, ஆர்வமூட்டக் கூடிய வகையில் இருமுகப்பட்ட உணர்ச்சிப் போக்குக் கொண்டதாக உள்ளது. அவர் வாழ்க்கையை நேசிப்பவராகவும் அதே சமையத்தில் வாழ்க்கையைக் கண்டு அஞ்சி வெறுப்பவராகவும் தென்படுகிறார். புலனுணர்வு உலகின் புறத்தோற்ற அழகுகளை – குருதியும் தசையுமான மனித உடலமைப்பின் கவர்ச்சியை, பருவ கால மாற்றங்களின் கவின்மிகு ஊர்வலத்தை, விளைந்து வியப்பூட்டும் வயல்வெளிகளின், பூத்துக் குலுங்கும் மலரினங்களின் நேசத் திருநடனங்களை உணர்ச்சி கொப்பளிக்கும் எழுத்தோவிய மாக்கிய கவிஞர் அவரைப் போல வேறு எவருமில்லை. மனிதன் இயற்கையின் படைப்புகளில் உச்சம் என்கிற வகையில் மறுமலர்ச்சிக் கால மரியாதையையும் மனித இனத்தின் கண்ணியத்தின் பால் அளவுகடந்த மதிப்பும் கொண்டிருந்தார். இருப்பினும், மனிதன் ‘‘வலுவற்ற கை, கால்களைக் கொண்ட விலங்கு” என்றும் ‘‘நம்முடைய அருவருக்கத்தக்க கழிவானாலான” பாவை என்றும் வெறுப்பினை உமிழ்கிறார்.
அதன் பின்னர், சேக்ஸ்பியர், ஆவன் நாட்டுப்புறத்தையும் இலண்டன் நாடக அரங்குகளையும் சேர்ந்த சேக்ஸ்பியராக தனது இரு கால்களையும் தரையில் உறுதியாக ஊன்றி நிற்கின்ற அதே சமையத்தில், கவிஞராக பொருளியல் உலகத்தின் நிலைபேற்றினை ஐயுறுகிறார். வாழ்க்கை ஒரு கனவு என்கிற கருத்தியலால் அலைக்கழிக்கப்படுகிறார். நேசம் கொள்வதன் பல்வேறு போக்குகளை வெவ்வேறு வகைப்பட்ட மடத்தனங்களாகவும், பிறழ் உணர்வுகளாவும் வடித்துக் காட்டுகின்ற ‘‘‘‘நடுவேனில் இரவுக் கனவு” (Midsummer Night’s Dream) நாடகத்தைப் படைத்தது மட்டுமின்றி, ‘‘நெறி தவறி நடிக்கப்பட்ட நாடகமே மனித வாழ்க்கை” என்கிற மேக்பெத்தையும், தன்னுடைய உடலின் மெய்மையான புலனுணர்வுகளை இழக்கின்ற நேரமே இறக்கும் தருணம் என்று உணர்ந்த அந்தோணியையும் படைத்தார்:
வானத்தில் சிலசமையங்களில் காண்பதுண்டு
டிரேகானைப் போன்ற மேகம்,
கரடியாகவோ சிம்மமாகவோ தோன்றும் ஆவி,
கோபுரங்ளைக் கொண்ட கோட்டை,
மேற்கவிந்து தொங்கும் பெரும்பாறை,
பிளவுண்டு நீளும் மலைத் தொடர்,
நீல வண்ணக் கடற்பாறை….
இப்பொழுது குதிரையாகத் தோற்றமளித்தது,
நினைவிருக்கும் போதே மங்கி மறைகிறது,
தெளிவற்றுப் போகிறது,
நீருடன் நீராக…
என் சிறந்த வீரனே, ஈராஸ், உனது தளபதியின்
உடலும் அதைப் போலாகிவிட்டது!
அந்தோணி தான் நான்,
ஆனால், காணக் கூடிய உருவமாக என்னைக்
கட்டி வைக்க இயலவில்லை, என் வீரனே!
ஒரு நாடக ஆசிரியர் தனது நாடகத்தின் கதைமாந்தருக்குக் கொடுக்கக் கூடிய உரையாடலில் வெளிப்படுகின்ற செய்தியை அந்த நாடக ஆசிரியர் கொண்டுள்ள கருத்தாகக் கொள்வதென்பது ஆபத்தானதும் தவறானதுமாகும் என்று வாசகர்கள் மறுப்புத் தெரிவிக்கலாம். ஆனால், வாழ்க்கை ஆழ்ந்த அவலம் நிறைந்தது என்கிற கருத்தினை தன்னுடைய தனிப்பட்ட கண்ணோட்டமாகக் கொண்டிராத எந்தவொரு நாடக ஆசிரியராலும் மாபெரும் அவலப் படைப்புகளை இயற்ற இயலாது என உறுதியாகக் கூறலாம். சேக்ஸ்பியர் ஓய்வாகத் தனது தனிப்பட்ட வாழ்க்கையை மேற்கொள்வதற்கு முன்பு, அவருடைய மனநிலை பல்வேறு காரணங்களால் அலைக்கழிக்கப்பட்டது. 1596ஆம் ஆண்டு, ஆகத்து மாதத்தில் அவருடைய ஒரே மகன் ஹேம்னெத் தன்னுடைய பதினோறாவது வயதில் இறந்து போனான். அப்பொழுது அவர் இயற்றிக் கொண்டிருந்த ஜான் மன்னன் நாடகத்தில் ஒரு குழந்தையின் இறப்பு உணர்ச்சி வெள்ளத்துடன் காட்சிப்படுத்தப் பட்டது. ஜான் மன்னன் நாடகம் அவர் ஏனைய நாடகங்களில் விரிவுபடுத்திக் கொள்ளக் கூடி கதைக்கருவினை அறிமுகப்படுத்தியது. மனித வாழ்க்கை கொடூரமானதாகவும் பொருளற்றதாகவும் மட்டுமின்றி அலுப்புத்தட்டக் கூடியதாகவும் முக்கியத்துவ மற்றதாகவும் விவரிக்கப்பட்டுள்ளது:
வாழ்க்கை,
மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட கதையைப் போல
களைப்பூட்டக் கூடியது
அரைத் தூக்கத்தில் உள்ளவனின் சோர்வடைந்த காதுகளுக்கு
வெறுப்பூட்டக் கூடியது!
சேக்ஸ்பியருடைய தனிப்பட்ட வாழ்க்கையின் மற்றுமொரு நெருக்கடி அவர் இயற்றிய ஈரேழ் அடிப் பாக்களின் கமுக்கமான வரலாற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது. அத்தகைய புதிர் நிறைந்த பாடல்கள் நெடுங்காலமாகக் கிளப்பி வந்தனவும் இன்னமும் தொடர்பனவுமான முரண்பாடுகளுக்குள்ளோ, அவற்றைப் பதிப்பித்தவர் அடையாளம் தெரியாத ‘‘திருவாளர். டபிள்யூ.எச்.” என்பாருக்குச் சமர்ப்பித்தது பற்றிய விவாதத்திற்குள்ளோ புகுவதற்கு இது தருணமல்ல. இருப்பினும், அவை அழுத்தமாகத் தனிப்பட்ட நபரைக் குறித்துப் பாடப்பட்டவை என்பதிலும் கவிஞரின் தனிப்பட்ட வாழ்க்கையின் அழிவுமிக்க கொந்தளிப்பினை விவரிப்பவை என்பதிலும், கட்டழகு வாய்ந்த, கட்டுப்பாடற்ற, அளவுகடந்த இன்பத் துய்ப்பில் ஈடுபடுகின்ற இளைஞ னொருவனுடன், சௌத்ஹாம்ப்டன் பிரபு போல இளமை வாய்க்கப் பெற்ற ‘‘பொருத்தமான மேனிப் பொலிவு கொண்ட ஆள்” ஒருவனுடன் வரம்புமீறிய ஈடுபாட்டுணர்வு கொண்டிருந்தார் என்பதிலும், எவ்வித ஐயமும் இல்லை. அத்துடன், அதேசமையத்தில் அவர் கறுப்பு ஏமாற்று நாயகி ஒருத்தியுடனும் தொடர்பு கொண்டிருந்தார். அவளோ, அவர் மட்டு மீறிய அன்பு செலுத்தி வந்த நண்பருடன் உறவு பூண்டு அவரை வஞ்சித்தாள். அந்த இளைஞர் காதலுணர்வு மீதூரிய கற்பனைக் காதலின் அறிகுறி; கறுப்பு நாயகி புலனுணர்வு வேட்கையின் அடையாளம்; அதனை எதிர்த்துத் தான் அவர் இடையறாது போராடி வந்தார். ஆனால், ஒருபோதும் சற்றும் அதலிருந்து அவரால் தப்பிக்க இயலவில்லை.
அத்தகைய நிலைமை சேக்ஸ்பியருடைய வாழ்க்கையின் மத்திய காலத்தில், அவர் சௌத்ஹேம்ப்டன் பிரபுவுடன் தொடர்பு கொண்ட 1593ஆம் ஆண்டிலிருந்து அடுத்த நூற்றாண்டு வரை நிலவியது. அவர் சௌத்ஹேம்ப்டன் பிரபுவை நேசித்திருப்பின் எஸ்ஸெக்ஸ் பிரபுவையும் போற்றியிருக்க வேண்டும். அவர் ஹேம்லெட்டுடன் மிகுந்த ஒப்புமை கொண்டிருந்தார். கல்வியில் சிறந்தவரும், கவர்ச்சி மிக்கவரும், அனைத்து நலன்களும் வாய்க்கப் பெற்றவருமான அவர் அந்த டென்மார்க் இளவரசரைப் போலவே உணர்ச்சிக் கொந்தளிப்பில் தவிக்கக் கூடியவராகவும் தீர்மானிக்க இயலாதவராகவும் அல்லாடினார்; மிக உயர்ந்த குறிக்கோள்களும் சிறந்த கருத்துக்களையும் கொண்டிருந்த போதிலும் அவற்றை ஆக்கப்பூர்வமாகச் செயல்படுத்த தவறிவிட்டார். பேரரசி எலிசெபெத் ஆட்சியின் இறுதிக் காலங்களில், ஆங்கிலேயப் பேரரசின் வானில் இருள் மேகங்கள் திரண்டு கொண்டிருந்தன. உள்நாட்டில் பரவலாக வேலையில்லாத் திட்டாட்டம் தலைவிரித்தாடியது; அயல்நாட்டைப் பொறுத்த வரை அயர்லாந்து, பிரான்சு, இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகளும் அளவிறந்த பொருட் செலவில் முடிவற்ற போர்களில் ஈடுபட்டிருந்தன. பேரரசி எலிசெபெத்திற்கும் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தின் மக்களவைக்கும் முரண்பாடுகள் முற்றி வெடித்தன; பேரரசின் அடுத்த வாரிசு குறித்த பிரச்சினை தலைதூக்கியது – முதுமையடைந்து விட்ட பேரரசி எலிசெபெத் தனது அடுத்த வாரிசு யார் என்பதை அறிவிப்பதற்குப் பிடிவாதமாக மறுத்து வந்தமையால் அரசியல்வாதிகளின் நரம்புகள் புடைத்துத் தெறித்தன.
அத்தகைய துயரம் கவ்விய பின்னணியில் எஸ்ஸெக்ஸ் பிரபு நெஞ்சுரமும், நற்பேறும், பற்றற்ற பான்மையும் கொண்ட தலைவராக செம்மாந்திருந்தார். இளைஞர்களின் எழுச்சிக் குரலாகவும், பொதுமக்களுடைய போற்றுதலுக்குரிய மாவீரனாகவும், பேரரசிக்கு அடுத்த நிலையில் பொதுமக்களுக்கு காட்சிக்கெளிய பெருந்தகையாகவும், திகழ்ந்தார். சேக்ஸ்பியர் தனது ஐந்தாம் ஹென்றி நாடகத்தின் நாயகனாகப் போற்றினார். அயர்லாந்துப் போர்களில் வெற்றி வாகை சூடி மாவீரனாகத் திரும்புவார் என்று மக்கள் பேராவலோடு எதிர்பார்த்திருந்த வேளையில், கலகக்காரர்களை அடக்கி ஒடுக்குவதற்கு எஸ்ஸெக்ஸ் பிரபு மேற்கொண்ட முயற்சிகள் மானக்கேடான தோல்வியில் முடிந்தன. அவர் அவமானப்படுத்தப்பட்டு சிறைப்படுத்தப்பட்டார். அவருடைய விடுதலைக்குப் பிறகு, பேரரசியினுடைய பரிவாரங்களை எதிர்த்து ஆயுதமேந்திய கலகத்தைத் தொடக்கினார். மீண்டும் தோல்வியைத் தழுவிய அவர் மரணத்தையும் தழுவ நேர்ந்தது. அவருடைய சூழ்ச்சிக்குத் துணைநின்ற சௌத்ஹேம்ப்டன் பிரபு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். அதுவும் எஸ்ஸெக்ஸ் பிரபு தன்னுடைய செயலுக்குப் பாவமன்னிப்புக் கோரிய பின்னரே தண்டிக்கப்பட்டார். சௌத்ஹேம்ப்டன் பிரபு தனது நண்பரை வஞ்சித்து விட்டு உயிர்பிச்சை கோரி மண்டியிட்டதால் ஆயுள் தண்டனையுடன் தப்பினார்.
அவர்கள் இருவருடைய வீழ்ச்சிக்குப் பிறகு, கவிஞருக்கு உலகமே வெறுத்து ஒரே மாயை சூழ்ந்து கொண்டது. சிம்மம் வீந்தது; நரி பிழைத்துக் கொண்டது. அவர் பார்த்த இடங்களிலெல்லாம் கோழைத்தனமும், தன்னலப் போக்கும், அருவருக்கத் தக்க தற்புகழ்ச்சியும், பொருளியல் வெறியும் தலைவிரித்தாடியது. சேக்ஸ்பியர் எப்போதும் செயலூக்கமிக்க தீரமும் பேரழகும் படைத்த ஆடவரையே போற்றிப் புகழ்ந்து வந்தார். அவர்களிடம் அவர் கண்டு களித்தவை எல்லாம் அவரை நம்பிக்கை இழக்கச் செய்தன. அவர்கள் ‘‘டிரேகனைப் போன்ற மேகக் கூட்டங்கள்”, நிழலாட்டங்கள், பருண்மையற்ற ஆவி உருவங்கள்; அவர்களை மன்னர்களின் மாவீரர்களின் திடமான வடிவங்கள் என ஒருகாலத்தில் தவறாக உணரும் அளவிற்கு அவர் முட்டாளாக இருந்ததாக எண்ணி வெதும்பினார். இருண்ட காலத்தின் போது செயல் வீரன் என்று அவரால் விவரிக்கப்பட்ட ஒவ்வொருவரும் முடிவில் வஞ்சிக்கப்பட்டான் அல்லது தன்னைத் தானே வஞ்சித்துக் கொண்டான். அந்தக் காலக்கட்டத்தில் இயற்றப்பட்ட ட்ரோய்லசும் கிரெசடாவும் எனும் நாடகத்தில் ஆச்சிலெஸ், ஒரு காலத்தில் எஸ்ஸெக்ஸ் பிரபு அக்கதை மாந்தனுடன் ஒப்புமை கொண்டிருந்தார், முட்டாள்கள் போற்றிவணங்கும் சின்னமாகவும், தலைக்கனமும் தீய இயல்புகளும் கொண்ட மடையனாகவும் படைக்கப்பட்டான்.
இதுவரை சேக்ஸ்பியருடைய பண்புநலன்களுள், முற்றிலும் எதிர்மறையான கூறுகளை மட்டிலுமே விவரித்துள்ளேன். வாழ்க்கை குறித்த அவருடைய எதிர்மறைக் கண்ணோட்டம், அவருடைய பதட்டங்கள், அச்சங்கள் ஆகியவை விளக்கப்பட்டன. அவருடைய ஆழ்ந்த படைப்பு மேதமையைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. நேர்த்தியான அழகு கொழிக்கும் அவருடைய பாடல்களைப் பற்றியோ, இன்பியல் நாடகங்களில் அவர் வெளிப்படுத்தியுள்ள கவிதைத் திறத்தைப் பற்றியோ, மாபெரும் வரலாற்று நாடகங்களில் காணப்படும் கண்ணியத்தையும் வலிமையையும் பற்றியோ எதுவும் தெரிவிக்கவில்லை. சேக்ஸ்பியரை அனைத்துத் திறமைகளும் வாய்க்கப் பெற்ற ஒரே கவிஞர் என்று கொண்டாடுகிறோம் என்றால், அதற்குக் காரணம் அவர் எதிரும் புதிருமான இருவேறு மனநிலைகளுக்கு இடையே சீரானதொரு சமநிலையைப் பேணி வந்தார் எனும் கருத்தினை வலியுறுத்த விரும்புகிறேன். வாழ்க்கையின் குதூகலத்தையும் கொண்டாட்டத்தையும் புரிந்து கொண்டதைப் போலவே வாழ்க்கையில் எதிர் கொள்ளக் கூடிய கொடூரங்களையும் வாழ்வதில் உள்ள தாங்கொணா வலியையும் நன்கு புரிந்திருந்தார். ஏனைய நாடகங்களில், பிற்காலத்திய ஸ்வீடன் நாடக ஆசிரியரும் புதினப் புனைவாளருமான ஸ்ட்ரிங்பர்க் நாடகங்களைப் போன்றவற்றில், வாழ்க்கை குறித்த எதிர்மறைக் கண்ணோட்டம் வெளிப்படுத்தப்படாத போக்கினைக் காண்கிறோம். சேக்ஸ்பியருடைய துன்பியல் நாடகம் ஒன்றில்,மனித வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளும் மிகச் செழுமையாக வலிமையுடன் ஒன்றிணைத்துப் பின்னிப் பிணையப்பட்டு முழுமையானதொரு வெளிப்பாடாகக் காட்சிப்படுத்தப்படுகிறது. அதனால் தான் மிகவும் கொடூரமான காட்சியைக் காணும் போது கூட, ஒட்டு மொத்தமாக அது ஏற்படுத்தக் கூடிய தாக்கம் கம்பீரமாகவும் உந்து சக்தி அளிக்கக் கூடியதாகவும் அமைந்துவிடுகிறது. ஒரு காட்சியில் கூட நாம் மாந்தன் மீது கொண்டுள்ள நம்பிக்கையை இழப்பதில்லை. அவர் மறுமலர்ச்சி காலத்திய மனிதக் கண்ணோட்டம் கொண்டவர். என்னதான் தவறாக வழிகாட்டப்பட்டு தீய வழிகளில் இழுத்துச் செல்லப்பட்டாலும் இயற்கையின் படைப்புகளுள் மனிதனே உன்னதப் படைப்பு எனும் கொள்கையில் ஊறியவர்.
அவருடைய துன்பியல் நாடகங்களிலும் இன்பியல் நாடகங்களிலும் மனித மாண்பு உட்பொதிந்துள்ளது, அவர் உயர்த்திக் காட்டக் கூடிய கதைமாந்தர்கள் பெரும்பாலும் அவர் நாடகத்தை இயற்றத் தொடங்கிய கட்டத்தில் வசைபாடுவதற்காகவோ, கிண்டலடிப்பதற்காகவோ உருவாக்குவதாக எண்ணிப் படைக்கப்பட்டவர்கள். அவருடைய நாடகங்களில் மூல வடிவமைப்பின் கட்டுக்களை அறுத்துக் கொண்டு ஓடுகின்ற கதைமாந்தர்களே நிறைந்துள்ளனர். தீங்கிழைக்கக் கூடிய கொடியவனாக நுழைகின்ற சைலக் அவலச்சுவையின் கண்ணியத்தை வரித்துக் கொள்கிறான். நகைச்சுவை நடிகனான ஃபால்ஸ்டாப் முகாமை மாந்தர்களை மெல்ல, மெல்ல பின்னுக்குத் தள்ளிவிட்டு அரங்கின் மையத்தை ஆட்கொள்கிறான். கிறிஸ்டபர் மார்லோவைப் போல சேக்ஸ்பியர் புரட்சிக் கவிஞரல்ல. அவர் உறுதியான புதுமை மறுப்பாளராகவும், ஒவ்வொரு மனிதனுக்கும், ஒவ்வொரு விலங்கு, அல்லது பயிரினத்திற்கும் எல்லையற்ற அமைப்புமுறையில் ஓரிடம் முன்கூட்டியே வகுக்கப்பட்டுள்ளது என்கிற எலிசெபெத் காலத்திய படித்தரக் கோட்பாட்டினை ஏற்றுக் கொண்டவர். பதினாறாம் நூற்றாண்டைய அறிவியல் மேதைகளுடைய அரிய கண்டுபிடிப்புகளின் பால் சற்றும் அவர் அக்கறை கொண்டதில்லை. கோபெர்னிகசின் வானியல் கோட்பாடுகளையும் விண்கோள்களுக்கும் விண்மீன்களுக்கும் பெயரிட்டு அவற்றின் இயக்கப் போக்குகளை வரையறுத்த அறிவியல்முறையைத் தனது நாடகங்களில் கிண்டலடித்தவர்.
விண்ணுலகின் பேரொளி வீசும் நிலைத்த மீன்களுக்கு
மண்ணுலகின் காவலர்கள் தனித்தனியே பெயரிட்டனர்.
நகர்பவை சிலவற்றைக் காட்டிலும்
இரவுகளுக்கு ஒளியூட்டுபவை என்பதன்றி
அவை இன்னவென்று அறிந்தாரில்லை!
ஒருபுறம் நோக்கினால், சேக்ஸ்பியர் திறமைமிக்க வணிக நோக்குடைய நாடகவியலாளராகக் காட்சியளிக்கிறார். சமகாலத்தின் தேவைகளை நிறைவு செய்பவராக எழுதினார்; இரு பெரும் பாவியங்களை அத்தகைய பா வகைகள் புதுமையானவையாகக் கருத்பபட்ட காலத்தில் யாத்தார். அர்மடாவின் தோல்வி பேரரசி எலிசெபெத் காலத்திய படைப்பாளர்களுக்கு தம்முடைய தாயகத்தின் வரலாற்றின் மீது தணியாத வேட்கையைத் தோற்றுவித்த காலத்தில் உள்ளத்தில் தைக்கத் தக்க வரலாற்று நாடகங்களை நிரலாக இயற்றிக் குவித்தார். சௌத்ஹேம்ப்டன், எஸ்ஸெக்ஸ் பிரபுகளையும் அவர்களுடைய அவையினரையும் மகிழ்விக்கும் நோக்கத்துடன் உயர்குடிப் பிறந்த ஆரவாரமிக்க இளைஞர்களும், களியாட்டத்தில் திளைத்த விளையாட்டுத்தனமான பெண்களும் கதைமாந்தர்களாக உலவிய காதல் சுவை ததும்பும் இன்பியல் நாடகங்களை அரங்கேற்றினார்.
சேக்ஸ்பியரின் வெற்றிக்கான விந்தைகள் பல. அவர் தனது காலத்திய சிந்தனைக்குள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட போதிலும், தனது சுவைஞர்களுடைய அறிவாற்றலை விஞ்சி மேலெழுந்தார். தான் பெற்ற அறிவாற்றலின் போக்கில் செயல்படுவதற்கு அவரால் முடிந்தது. நடைமுறைப் பயன்களை உயர்ந்த அளவில் விளைவிக்கும் நோக்குடன் தனது திறமைகள் அனைத்தையும் வியக்கத்தக்க விதத்தில் கையாண்டார். சேக்ஸ்பியர் தனது காலத்திற்கு உரிய முறையில் கலைப்பணி ஆற்றினார் என்பதில் ஐயமில்லை. இருப்பினும், அவர் அக்காலத்தின் வரம்புகளைக் கடந்தும் செயல்பட்டு ‘‘என்றென்றும் வாழும்” கலைஞராகப் பரிணமித்தார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *