POST: 2015-11-23T16:52:14+05:30

சேக்ஸ்பியர் படைப்புகள்-நினைவலைகளில் நீச்சலடிப்பவை
தொகுப்பாசிரியர்
ஆங்கில மூலம்
பீட்டர் குயென்னெல்
அறிமுகம்-14
– பீட்டர் குயென்னெல்

அத்தகைய துயரம் கவ்விய பின்னணியில் எஸ்ஸெக்ஸ் பிரபு நெஞ்சுரமும், நற்பேறும், பற்றற்ற பான்மையும் கொண்ட தலைவராக செம்மாந்திருந்தார். இளைஞர்களின் எழுச்சிக் குரலாகவும், பொதுமக்களுடைய போற்றுதலுக்குரிய மாவீரனாகவும், பேரரசிக்கு அடுத்த நிலையில் பொதுமக்களுக்கு காட்சிக்கெளிய பெருந்தகையாகவும், திகழ்ந்தார். சேக்ஸ்பியர் தனது ஐந்தாம் ஹென்றி நாடகத்தின் நாயகனாகப் போற்றினார். அயர்லாந்துப் போர்களில் வெற்றி வாகை சூடி மாவீரனாகத் திரும்புவார் என்று மக்கள் பேராவலோடு எதிர்பார்த்திருந்த வேளையில், கலகக்காரர்களை அடக்கி ஒடுக்குவதற்கு எஸ்ஸெக்ஸ் பிரபு மேற்கொண்ட முயற்சிகள் மானக்கேடான தோல்வியில் முடிந்தன. அவர் அவமானப்படுத்தப்பட்டு சிறைப்படுத்தப்பட்டார். அவருடைய விடுதலைக்குப் பிறகு, பேரரசியினுடைய பரிவாரங்களை எதிர்த்து ஆயுதமேந்திய கலகத்தைத் தொடக்கினார். மீண்டும் தோல்வியைத் தழுவிய அவர் மரணத்தையும் தழுவ நேர்ந்தது. அவருடைய சூழ்ச்சிக்குத் துணைநின்ற சௌத்ஹேம்ப்டன் பிரபு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். அதுவும் எஸ்ஸெக்ஸ் பிரபு தன்னுடைய செயலுக்குப் பாவமன்னிப்புக் கோரிய பின்னரே தண்டிக்கப்பட்டார். சௌத்ஹேம்ப்டன் பிரபு தனது நண்பரை வஞ்சித்து விட்டு உயிர்பிச்சை கோரி மண்டியிட்டதால் ஆயுள் தண்டனையுடன் தப்பினார்.

அவர்கள் இருவருடைய வீழ்ச்சிக்குப் பிறகு, கவிஞருக்கு உலகமே வெறுத்து ஒரே மாயை சூழ்ந்து கொண்டது. சிம்மம் வீந்தது; நரி பிழைத்துக் கொண்டது. அவர் பார்த்த இடங்களிலெல்லாம் கோழைத்தனமும், தன்னலப் போக்கும், அருவருக்கத் தக்க தற்புகழ்ச்சியும், பொருளியல் வெறியும் தலைவிரித்தாடியது. சேக்ஸ்பியர் எப்போதும் செயலூக்கமிக்க தீரமும் பேரழகும் படைத்த ஆடவரையே போற்றிப் புகழ்ந்து வந்தார்.

அவர்களிடம் அவர் கண்டு களித்தவை எல்லாம் அவரை நம்பிக்கை இழக்கச் செய்தன. அவர்கள் ‘‘டிரேகனைப் போன்ற மேகக் கூட்டங்கள்”, நிழலாட்டங்கள், பருண்மையற்ற ஆவி உருவங்கள்; அவர்களை மன்னர்களின் மாவீரர்களின் திடமான வடிவங்கள் என ஒருகாலத்தில் தவறாக உணரும் அளவிற்கு அவர் முட்டாளாக இருந்ததாக எண்ணி வெதும்பினார். இருண்ட காலத்தின் போது செயல் வீரன் என்று அவரால் விவரிக்கப்பட்ட ஒவ்வொருவரும் முடிவில் வஞ்சிக்கப்பட்டான் அல்லது தன்னைத் தானே வஞ்சித்துக் கொண்டான். அந்தக் காலக்கட்டத்தில் இயற்றப்பட்ட ட்ரோய்லசும் கிரெசடாவும் எனும் நாடகத்தில் ஆச்சிலெஸ், ஒரு காலத்தில் எஸ்ஸெக்ஸ் பிரபு அக்கதை மாந்தனுடன் ஒப்புமை கொண்டிருந்தார், முட்டாள்கள் போற்றிவணங்கும் சின்னமாகவும், தலைக்கனமும் தீய இயல்புகளும் கொண்ட மடையனாகவும் படைக்கப்பட்டான்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *