POST: 2015-11-21T16:02:33+05:30

சேக்ஸ்பியர் படைப்புகள்-நினைவலைகளில் நீச்சலடிப்பவை
தொகுப்பாசிரியர்
ஆங்கில மூலம்
பீட்டர் குயென்னெல்
அறிமுகம்-13
– பீட்டர் குயென்னெல்

வாழ்க்கை,
மீண்டும் மீண்டும்
சொல்லப்பட்ட கதையைப் போல
களைப்பூட்டக் கூடியது
அரைத் தூக்கத்தில் உள்ளவனின்
சோர்வடைந்த காதுகளுக்கு வெறுப்பூட்டக் கூடியது!

சேக்ஸ்பியருடைய தனிப்பட்ட வாழ்க்கையின் மற்றுமொரு நெருக்கடி அவர் இயற்றிய ஈரேழ் அடிப் பாக்களின் கமுக்கமான வரலாற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது.
அத்தகைய புதிர் நிறைந்த பாடல்கள் நெடுங்காலமாகக் கிளப்பி வந்தனவும் இன்னமும் தொடர்பனவுமான முரண்பாடுகளுக்குள்ளோ, அவற்றைப் பதிப்பித்தவர் அடையாளம் தெரியாத ‘‘திருவாளர். டபிள்யூ.எச்.” என்பாருக்குச் சமர்ப்பித்தது பற்றிய விவாதத்திற்குள்ளோ புகுவதற்கு இது தருணமல்ல.

இருப்பினும், அவை அழுத்தமாகத் தனிப்பட்ட நபரைக் குறித்துப் பாடப்பட்டவை என்பதிலும் கவிஞரின் தனிப்பட்ட வாழ்க்கையின் அழிவுமிக்க கொந்தளிப்பினை விவரிப்பவை என்பதிலும், கட்டழகு வாய்ந்த, கட்டுப்பாடற்ற, அளவுகடந்த இன்பத் துய்ப்பில் ஈடுபடுகின்ற இளைஞ னொருவனுடன், சௌத்ஹாம்ப்டன் பிரபு போல இளமை வாய்க்கப் பெற்ற ‘‘பொருத்தமான மேனிப் பொலிவு கொண்ட ஆள்” ஒருவனுடன் வரம்புமீறிய ஈடுபாட்டுணர்வு கொண்டிருந்தார் என்பதிலும், எவ்வித ஐயமும் இல்லை. அத்துடன், அதேசமையத்தில் அவர் கறுப்பு ஏமாற்று நாயகி ஒருத்தியுடனும் தொடர்பு கொண்டிருந்தார்.

அவளோ, அவர் மட்டு மீறிய அன்பு செலுத்தி வந்த நண்பருடன் உறவு பூண்டு அவரை வஞ்சித்தாள். அந்த இளைஞர் காதலுணர்வு மீதூரிய கற்பனைக் காதலின் அறிகுறி; கறுப்பு நாயகி புலனுணர்வு வேட்கையின் அடையாளம்; அதனை எதிர்த்துத் தான் அவர் இடையறாது போராடி வந்தார். ஆனால், ஒருபோதும் சற்றும் அதலிருந்து அவரால் தப்பிக்க இயலவில்லை.

அத்தகைய நிலைமை சேக்ஸ்பியருடைய வாழ்க்கையின் மத்திய காலத்தில், அவர் சௌத்ஹேம்ப்டன் பிரபுவுடன் தொடர்பு கொண்ட 1593ஆம் ஆண்டிலிருந்து அடுத்த நூற்றாண்டு வரை நிலவியது.
அவர் சௌத்ஹேம்ப்டன் பிரபுவை நேசித்திருப்பின் எஸ்ஸெக்ஸ் பிரபுவையும் போற்றியிருக்க வேண்டும். அவர் ஹேம்லெட்டுடன் மிகுந்த ஒப்புமை கொண்டிருந்தார்.

கல்வியில் சிறந்தவரும், கவர்ச்சி மிக்கவரும், அனைத்து நலன்களும் வாய்க்கப் பெற்றவருமான அவர் அந்த டென்மார்க் இளவரசரைப் போலவே உணர்ச்சிக் கொந்தளிப்பில் தவிக்கக் கூடியவராகவும் தீர்மானிக்க இயலாதவராகவும் அல்லாடினார்; மிக உயர்ந்த குறிக்கோள்களும் சிறந்த கருத்துக்களையும் கொண்டிருந்த போதிலும் அவற்றை ஆக்கப்பூர்வமாகச் செயல்படுத்த தவறிவிட்டார். பேரரசி எலிசெபெத் ஆட்சியின் இறுதிக் காலங்களில், ஆங்கிலேயப் பேரரசின் வானில் இருள் மேகங்கள் திரண்டு கொண்டிருந்தன. உள்நாட்டில் பரவலாக வேலையில்லாத் திட்டாட்டம் தலைவிரித்தாடியது;

அயல்நாட்டைப் பொறுத்த வரை அயர்லாந்து, பிரான்சு, இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகளும் அளவிறந்த பொருட் செலவில் முடிவற்ற போர்களில் ஈடுபட்டிருந்தன. பேரரசி எலிசெபெத்திற்கும் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தின் மக்களவைக்கும் முரண்பாடுகள் முற்றி வெடித்தன; பேரரசின் அடுத்த வாரிசு குறித்த பிரச்சினை தலைதூக்கியது – முதுமையடைந்து விட்ட பேரரசி எலிசெபெத் தனது அடுத்த வாரிசு யார் என்பதை அறிவிப்பதற்குப் பிடிவாதமாக மறுத்து வந்தமையால் அரசியல்வாதிகளின் நரம்புகள் புடைத்துத் தெறித்தன.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *