POST: 2015-11-16T16:58:31+05:30

சேக்ஸ்பியர் படைப்புகள்-நினைவலைகளில் நீச்சலடிப்பவை
தொகுப்பாசிரியர்
ஆங்கில மூலம்
பீட்டர் குயென்னெல்
அறிமுகம்-11
– பீட்டர் குயென்னெல்

ரிச்சர்ட் ரிச்சர்டை நேசிக்கிறான்; அதாவது நானே என்னை!
இங்கே யாரேனும் கொலையாளி உண்டா?
இல்லை – ஆமாம், நான் தான்;
அப்படியானால், ஓடிவிடு. என்ன, என்னிலிருந்தா?
காரணம் மிகப்பெரிது –
இல்லாவிடில் பழிவாங்கிடுவேன்! என்னை நானேவா?
ஐயோ, என்னை நேசிக்கிறேன்! என்ன நன்மை கருதி
எனக்கு நானே இவ்வாறு செய்து கொண்டேன்?

அதனைத் தொடர்ந்து அவர் உருவாக்கிய அவலம் மிக்க நாயகர்கள் அனைவரும் தனிமையில் தவித்தனர்; தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டனர்; சக மனிதர்களுடன் கட்டற்று உறவாட இயலாத நிலையை ஏற்படுத்திய ஏதோவொரு உணர்வெழுச்சியால் ஆட்டிப்படைக்கப்பட்டு துண்டாடப்பட்டனர்.

ஷைலக்கை அவலத்தின் மொத்த உருவமாகவும், மால்வோலியாவை நகைச்சுவைக் கண்ணோட்டத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்ட அவலமிக்க கதைமாந்தனாகவும் நான் கருதுகிறேன். ஹேம்லெட் அறிவாற்றலில் வலிமை மிக்கவனாகவும் நன்னெறியில் வலுவற்றவனாகவும் தன்னைக் கருதியதால் அத்தகைய உணர்வுக்குப் பலியானான்;

ஒத்தெல்லோவும் அந்தோணியும் தமது கட்டுக்கடங்கா காமவெறியால் அழிந்தனர்;
மேக்பெத் சிறுகச் சிறுகச் சேர்த்துக் கொண்ட குற்ற உணர்வால் வீழ்ச்சியுற்றான்;
கொரியோலேனஸ் தலைக்கனத்தால் தருக்குற்றுத் தாழ்வுற்றான்.

அவர்கள் ஒவ்வொருவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். ஒவ்வொருவரும் அவல நாடகத்தின் கதைப்போக்கில் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட தனிமையால் தான் சிறைப்படுத்தப்பட்டதாகவே உணர்ந்தனர். அவர்தம் ஆன்மா சமைய முறையிலான அமைதியையோ மேன்மையையோ அடைவதற்கான வாய்ப்பின்றி, அவர்களுடைய மரணம் தனிமையில் நிகழும் விதத்தில் விதிக்கப்பட்டது.

சேக்ஸ்பியர் கிறித்தவ மதத்தைத் தழுவினார் என்பதில் ஐயமில்லை. ஆனால், அவர் கிறித்தவ சமைய நெறிகளைக் கைக்கொண்டார் என்று உறுதியாகக் கூற இயலுமா? ஆன்மா அழிவற்றது என்கிற கொள்கையை அவர் ஏற்றுக்கொண்டவரா? ஹெம்லெட்டின் நண்பன் மரணத்தின் வாயில்களில் தனது இனிய இளவரசரை தேவதைகளின் கூட்டம் பின் தொடர்ந்து பறந்ததாக ஒரு கருத்தினை ஏற்படுத்துகிறான். ஆனால், ஹேம்லெட் ‘‘எஞ்சியது அமைதியே” என்று முழங்குகிறான். ஏனைய அவல நாடகங்களின் முடிவிலும் இதே போன்ற குழப்பத்திற்குப் பிந்தைய அமைதியைக் காண்கிறோம்.

சேக்ஸ்பியர் மாண்டேனின் மாணவர் என்பதை நாம் அறிவோம். அவருடைய ஆங்கில மொழிபெயர்ப்பாளர் ஜான் ஃப்ளோரியோ எஸ்ஸெக்ஸ் – சௌத்ஹாம்ப்டன் வட்டாரத்தில் ஓர் உறுப்பினர். அவருக்கென்று நன்னெறி மெய்யியல் இருந்திருக்குமானால், அது மாண்டேன் கற்பித்த பல தெய்வ வணக்கத்தைப் பின்பற்றும் இன்ப, துன்ப நடுநிலைக் கோட்பாடாகும். மனிதன் தனக்குத் தானே உண்மையானவனாக இருத்தல் வேண்டும்: ‘‘மனிதன் தாங்கிக் கொள்ள வேண்டும்…” ‘‘லியர் மன்னன்” நாடகத்தின் பிந்தைய காட்சிகளில் தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்ட இந்த போதனை, சேக்ஸ்பியருடைய தனிப்பட்ட ஒரே மெய்யியல் செய்தியாகும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *