சரியாக நானூறு (இன்றைக்கு நானூற்றைம்பது) ஆண்டுகளுக்கு முன்னர், 1564ஆம் ஆண்டு, ஏப்ரல் திங்கள் 22 அல்லது 23ஆம் நாள் ஜான் சேக்ஸ்பியருடைய மனைவி மேரி அவர்கள் இருவருக்குமான முதலாவது மகனை ஈன்றெடுத்தாள். சிறிது காலத்திற்குப் பின்னர் அவனை உள்ளூர் தேவாலயத்திற்குக் கொண்டு சென்று வில்லியம் என்கிற கிறித்தவப் பெயர் சூட்டப் பெற்றனர். சே க்ஸ்பியருடைய இல்லம் ஸ்ட்ரேட்ஃபோர்டு – மேலே – அவோன் என்றழைக்கப்பட்டது. வார்விக்சைர் அவர்களுடைய தாயகம்.
ஸ்ட்ரேட்ஃபோர்டினுடைய தலையாய குடிமகனாக ஜான் கருதப்பட்டார். வில்லியம் நான்கு வயதுச் சிறுவனாக இருந்த போது அவர் நகராண்மைக் கழகத்தின் தலைவரானார். உண்மை தான்! ஆனால், உடனேயே அவர் தனது செல்வத்தை இழக்கத் தொடங்கினார். மாட்சிமைக்குரிய நகராண்மைக் கழகத் தலைவர் பதவிநிலை அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. கடன் தொல்லைகளால் தான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று அஞ்சினார். அதனால் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தார். ஆனாலும் ஸ்ட்ரேட்ஃபோர்டு மக்களுக்கு அவரை மிகவும் பிடித்திருந்தது. பிற்காலத்தில் அவர் ‘குதூகலம் குடிகொண்டிருக்கும் வயசாளி’ என அழைக்கப்பட்டார்.
தன்னுடைய பெருமைக்குரிய மகன் வில்லியம் மிகச் சிறந்த நேர்மையாளன் என்றும் தன்னுடைய நகைச்சுவைத் துணுக்குகளை அவனிடம் வெடிப்பதற்கு ஒருபோதும் தான் அஞ்சியதில்லை என்றும் அவர் ஒருமுறை குறிப்பிட்டுள்ளார்.

Add a Comment