POST: 2015-10-04T08:30:42+05:30

அறிவியலில் தமிழ்வழிக்கல்வி -2
குழந்தை நலத் துறை
டாக்டர் தாரா நடராசன் எம்.டி., டி.சி.எச்.,
முன்னாள் முதல்வர், மதுரை மருத்துவக் கல்லூரி,
மதுரை

1947 ஆம் ஆண்டில் இந்தியாவில் குழந்தை மருத்துவப் பிரிவுகள் தொடங்கப்பட்டன.

குழந்தைகள் வளர்ந்த மனிதர்களின் சிறுவடிவங்களல்ல.

குழந்தைகளுக்குத் தேவையான தாய்ப்பால், வளர்ச்சிக்குத் தேவையான உணவுச் சத்துக்கள், அவர்களுக்கு ஏற்படும் பல நோய்கள், குழந்தைகளின் மனவளர்ச்சி போன்றவற்றையெல்லாம் மனத்தில் கொண்டு அவர்களுடைய பிறப்பு, உடல், மனவளர்ச்சி, கல்வி போன்றவற்றில் பலவித நலத்திட்டங்கள் குழந்தைகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் குழந்தை மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்

குழந்தை பிறக்கும் முன்

இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தான் குழந்தை நலத்துறை தொடங்கப்பட்டாலும், நம் நாட்டின் மக்கள்தொகையில் 40 விழுக்காடு குழந்தைகளாக இருப்பதை அறிந்து அவர்களுடைய வாழ்வைச் செழுமையாக அமைக்கவேண்டும் என்பதில் கவனம் கொண்டு குழந்தை நலத்துறை மிக வேகமாக முன்னேறியுள்ளது.

மரபுவழி நோய்களைத் தவிர்ப்பதற்காக நெருங்கிய உறவில் திருமணம் செய்யலாகாது என்பதைத் தெளிவாக மருத்துவம் சுட்டிக் காட்டுகிறது.

தாய் கருவுற்றபின் சத்துள்ள உணவை உட்கொள்ளவேண்டும். தாய்க்கு இரணஜன்னி தடுப்பூசியையும், இரத்த சோகையைத் தடுக்க இரும்புச் சத்து மருந்தையும் அளிக்கவேண்டும். தாயின் மனநிலை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் திகழ வேண்டும். மருத்துவ மனைக்குச் சென்று சோதனை செய்துகொள்வது, மகப்பேற்று மருத்துவர், தாதியர் உதவியுடன் மகப்பேற்றைத் தொடர்ந்து கண்காணிப்பதையும் இன்றைய அறிவியல் வலியுறுத்துகிறது.

குழந்தை பிறக்குமுன் சோதனைகளும் சிகிச்சைகளும்.
தொடக்கத்திலேயே அல்ஒலிச்சோதனை (Ultra Sonography) மூலம் குழந்தையின் வளர்ச்சிநிலை, நஞ்சுப்பையின் நிலைமை, குழந்தையின் உடலமைவு ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.

மிகச்சிறிய பிறவிக் குறைகளைக் கூட இந்த வகையில் கண்டறிய முடியும். உயிருக்கு ஊறான குறைபாடு என்றால் பெற்றோர்களுக்கு விளக்கிச் சொல்லிக் கருவைக் கலைத்துவிடலாம். சிகிச்சை அளிக்கலாகும் குறைபாடுஎன்றால் குழந்தை பிறந்ததும் தேவையான சிகிச்சை முறைகளை மேற்கொள்ளலாம். இன்னும் ஒரு படி மேலே போய் – கருவில் உரு வடிவாகும் குழந்தைக்குக்கூட வேண்டிய மருத்துவ சிகிச்சையானாலும், அறுவை சிகிச்சையானாலும் இப்போது செய்ய முடியும். கருப்பையிலிருக்கும் சிசுவை ஒரு நோயாளியாக நினைப்பதே அண்மைக்காலக் கருத்தாகும். தாய்க்குக் கொடுக்கும் மருந்துகளின் மூலம் குழந்தைகளைப் பற்றும் சில நோய்களைத் தவிர்க்க முடியும்.

கருவில் அறுவைச்சிகிச்சை

1. சிறுநீர்க் குழாயில் அடைப்பை நீக்குதல்
(Pulverisation for Posterior Urethral Valve)

2. மூளை வெண்டிரிக்கிளில் உள்ள மூளை மண்டல நீர் மிகுந்துகொண்டு போனால் இந்த மூளை மண்டல நீரைச் சிறுகுழாய் இணைப்பு (Shunt for Hydrocophalus) மூலம் பனிக்குட நீரில் வடியச் செய்யவேண்டும்.

3. சில இதய நோய்களுக்கான அறுவைச் சிகிச்சை (Atrial Septostomy for certain congenitalal heart diseases)

பிறக்கும் குழந்தைகளை இறப்பிலிருந்து தடுப்பது மட்டுமல்லாது அவர்களின் நீண்டகால நலவாழ்க்கைக்கு இவ்வித மருத்துவ வசதிகள் அடிகோலுகின்றன.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *