POST: 2015-09-19T19:40:09+05:30

தமிழ் இசைச் சங்கம்
ராஜா அண்ணாமலை மன்றம், சென்னை-600 108
பண் ஆராய்ச்சியின் நாற்பத்து நான்காம் கூட்டம்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்
துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
22 – 12 – 1993
தொடக்கவுரை-17`

தேவாரப்்பாடல்கள் இயல்வகையில் எந்தப் பிரிவைச் சேர்ந்தது என்பதே தனியாராய்ச்சியாகும். கலிப்பா என்று கூறப்படுகின்றது. ‘’கலிக்கோவை யாற் சந்தமே பாடவல்ல தமிழ் ஞானசம்பந்தன்’’ என்னும் தொடரால் இப்பாடல்கள் யாவும் கலிப்பா வகையைச் சார்ந்தவை (12 -11) எனத் தெளியலாம்.

‘’சந்தம்’’ என்ற தமிழ்ச்சொல் அழகு, கவியின் வண்ணம் என்னும் பொருளில் குறிக்கப்பெற்றுள்ளது. இச்சொல் `சந்தஸ்` என்னும் வடமொழிச் சொல்லின் திரிபாகவும் சிலர் கூறுவர். தமிழ் யாப்பும் ஆரியமும் கலந்த ஒருவித நடையைக் கொண்ட பாடல்கள் சந்தப்பாக்கள் என்று கூறலாம். இவ்வகைச் சந்தப் பாடல்களைத் திருஞான சம்பந்தரே முதன்முதலில் தம் பாடல்களில் இயைத்துப் பாடினார். சந்த விருத்தத்தில் பாடும்போது இசைக்கு வயப்பட்டு இயற்றமிழ் இலக்கணத்தை திருஞான சம்பந்தப் பெருமான் மறந்ததில்லை.

சான்றாகத் திருஞான சம்பந்தரின் நட்டராகப் பண்ணில் அமைந்த திருவிராகப் பாடல் வருமாறு, –

‘’அடுத்த டுத்த கத்தியோடு வன்னி கொன்றை கூவிளம்
தொடுத் துடன் சடைபெய்தாய் துருதி யாய்ஓர் காலனை
கடுத் தடிப் புறத் தினால் நிறத் துன்தத்த காரணம்
எடுத் தெடுத் துரைக்கு மாறு வல்லம் ஆகில் நல்லமே’’
(98 – 2)

இச்சந்த விருத்தத்தில் ஏழாவது சீராக கூவிளச்சீரை அமைத்துக்காட்டி, இசைக்காக இயற்றமிழ் இலக்கணத்தை இழக்கலாகாது என்னும் கருத்தை வெளிப்படுத்தினார். இந்நாளில் இசைப்பாடல் இயற்றுவோர் இதனை மனத்துட்கொள்ளவேண்டும். இசைக்காக இலக்கணம் வழுவிய கொச்சைச் சொற்களையும் வழுச்சொற்களையும் பயன்கொள்ளலாகாது. இந்நாளில் இயற்-கொலைக்கு இசைக்கலை இடந்தருகிறதே என்ற அவலம் நம்மனத்தை வருத்துகிறது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *