தமிழ் இசைச் சங்கம்
ராஜா அண்ணாமலை மன்றம், சென்னை-600 108
பண் ஆராய்ச்சியின் நாற்பத்து நான்காம் கூட்டம்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்
துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
22 – 12 – 1993
தொடக்கவுரை-16`
தாளம். – பாட்டின் கால அளவை அளந்து, கையினாலோ இசைக்கருவியினாலோ, தட்டிக் கணக்கிடுவது தாளம் ஆகும். தள்ளியிடுவது – தாளால் இடுவது என்றும் பொருள்படும். இஃது பாணி என்றும் கூறப்படும். கொட்டு, அசை, தூக்கு, அளவு என்னும் கால மாத்திரைகளை உடையது.
‘‘கொட்டு மசையுந் தூக்கு மளவும்
ஒட்டப் புணர்ப்பது பாணியாகும்.’’
(சிலப். 14 வரி. 150-உரை)
பண்ணாராய்ச்சிக்குத் தேவாரப் பாடல்கள் எத்துணை இன்றியமையாதனவோ, அவ்வாறே தாள ஆராய்ச்சிக்கு 15 ஆம் நூற்றாண்டு இயலிசைத் தவப் பெருஞ்செல்வராகிய அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ்ப் பாடல்கள் இன்றியமையாதன.
பண்ணாராய்ச்சி மாநாடுகளில் 1968 ஆம் ஆண்டு முதல் திருப்புகழ் காட்டும் சந்தங்கள் அவற்றின் வழிப்பட்ட தாளங்கள் ஆகியனவும் ஆராயப்பட்டு இவ்வாராய்ச்சி இன்றளவும் நடைபெறுவது போற்றத்தக்கது.
செய்யுட்களில் அமைந்த யாப்பும் தாளமும் ஒன்றோடொன்று தொடர்புடையன. பதிற்றுப்பத்து என்னும் பழந்தமிழ்ப் பாட்டில் வண்ணமும் தூக்கும் வகுக்கப்பட்டுள்ளன. வண்ணம் என்பது செய்யுட்களின் சந்தம் என்பர். தூக்கு என்பது தாளவகை என்று சிலப்பதிகார உரையின் மூலம் அறியலாம்.
தாளத்தில் எடுக்குங்காலம் `பாணி` என்றும், நிகழும் நிலை `தூக்கு` என்றும் முடியும் நிலை `சீர்` என்றும் சொல்லப்படுகிறது. `சீர்` என்று சொல்லும்போது தாளம் என்று பொருள். சீரமைதி தாள அமைதிக்கு ஒத்தது. யாப்பு விகற்பம் பற்றி ஆராய்ந்தால் தாள வேறுபாடுகள் எல்லாம் அதனுள் அடங்கிவிடுதல் புலனாகும். இவ்வகையில் விபுலானந்தர் தம்முடைய யாழ்நூலில் – தேவார இயலில் கட்டளை என்பது யாப்பு விகற்பமா? சீர் எண்ணிக்கையைக் கொண்டு தாளம் அமைக்க முடியுமா? என்றெல்லாம் கருதுவதைத் தொடர்ந்து ஆராய வேண்டும்.

Add a Comment